திங்கள், 28 ஜூலை, 2014

பயணங்கள் முடிவதில்லை.....




என்னுடைய வலைப்பூவினை தொடர்ந்து படித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ஃப்ரூட் சாலட், மனச் சுரங்கத்திலிருந்து, தலைநகரிலிருந்து போன்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதி வந்திருந்தாலும், பயணம் என்ற தலைப்பில் இது வரை எழுதிய பதிவுகள் – 141 – அதில் தொடராக எழுதிய பதிவுகள் மொத்தம் 106.

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது (27 பதிவுகள்), ரத்த பூமி (10 பதிவுகள்), மஹா கும்பமேளா (8 பதிவுகள்), ஜபல்பூர் – பாந்தவ்கர் (12 பதிவுகள்), சபரிமலை (13 பதிவுகள்), காசி அலஹாபாத் (16 பதிவுகள்) மற்றும் ஏரிகள் நகரம் (20 பதிவுகள்) என தொடர்ந்து நான் பயணித்த இடங்கள் அங்கே கிடைத்த அனுபவங்கள் என எழுதி வந்திருக்கிறேன்.  தொடர்ந்து பயணக் கட்டுரைகள் எழுதுவதனால் படிக்கும் பலருக்கு அந்த இடங்கள் பற்றிய விவரங்களைத் தருகிறோம் என்ற மனமகிழ்ச்சி கிடைத்தாலும், சலிப்பு வந்து விடுமோ என்ற எண்ணமும் மனதுக்குள் வந்து போகிறது.

கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக, நான் எழுதுவதும் கணிசமாக குறைந்திருக்கிறது.  அதே மாதிரி மற்றவர்களின் பதிவுகளை படித்து கருத்திடுவதும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மற்ற பதிவர்களின் பதிவுகளை மொத்தமாக படிக்க முடிகிறது.  அலுவலகத்தில் தொடர்ந்து கணினி முன் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் – ஆணிகள் கிலோ கிலோவாக கொட்டி வைத்திருக்கும் உணர்வு – பிடுங்க வேண்டிய ஆணிகள் அதிகமாகிவிட்டது – ஒரு பக்கமாக ஆணி பிடுங்கிய படி செல்ல, பின்னாலேயே வேறொருவர் ஆணி அடித்த படி இருக்கிறார் – ஆக பிடுங்க வேண்டிய ஆணி குறையாதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.

பணி முடிந்து வீடு திரும்பிய பின் மற்ற வேலைகளுக்கு நடுவில் வலைப்பக்கம் வருவது கணிசமாக குறைந்திருக்கிறது.  அதனால் தான் ஃப்ரூட் சாலட்-100 பதிவில் “ஃப்ரூட் சாலட் தொடர்ந்து தரவா, இல்லை வேண்டாமா? என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!என்ற கேள்வி எழுப்பினேன்.  கூடவே எனது பதிவுகள் சலிப்பு தருகிறதோ என்ற எண்ணமும் தான். 

சூழல் இப்படி இருக்க, இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணமும் முனைப்பும் குறையவில்லை.  எழுத வேண்டிய விஷயங்கள் என பல மனதுக்குள் இருக்கின்றது.  சென்று வந்த பயணங்களும் உண்டு.  முக்கியமாக சில பயணங்கள் இங்கே.


 மலைப்பாதையில் நடந்து செல்லும் போது காணக்கிடைக்கும் மலைகள்.....


மலைச்சாரலோ?  பாபா [dh]தன்சர் எனும் குகைக் கோவில் அருகில் உள்ள அருமையான இடம்...

மாதா வைஷ்ணவ தேவி – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் ஒரு மலைக்கோவில்.  தில்லியிலிருந்து ஜம்மு வரை ரயிலில் சென்று அங்கிருந்து ஐம்பது கிலோ மீட்டர் சாலை வழியே பயணித்தால் கட்ரா எனும் இடம்.  சமீபத்தில் கட்ரா வரை ரயில் பாதையும் அமைக்கப்பட்டு ரயில் பயணிக்கிறது. கட்ராவிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் மலைப்பாதையில், நடந்தோ, குதிரை சவாரி மூலமோ, பேட்டரி கார் மூலமோ, இல்லை ஹெலிகாப்டர் மூலமோ பயணிக்கலாம்.  மலை மேல் சென்று ஆங்கே குடிகொண்டிருக்கும் அன்னையை தரிசிக்கலாம்.  இங்கே சென்று வந்த அனுபவங்களைத் தொடராக பதிவு செய்யும் எண்ணம் இருக்கிறது.


கிருஷ்ண ஜன்ம பூமி - நுழைவாயில்...


 ராதையின் குளம்! - விருந்தாவன்

மதுரா – விருந்தாவன் – [G]கோவர்த்தன்: கிருஷ்ண ஜன்மபூமி, கிருஷ்ணர் வளர்ந்த இடம், அவர் பல லீலைகள் செய்த இடங்கள் என நிறைய விஷயங்கள் கதை கதையாக கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். அந்த நிகழ்வுகள் நடந்த இடங்களாகக் கருதப்படும் மதுரா, விருந்தாவன், [G]கோவர்த்தன் ஆகிய இடங்களுக்கு பல முறை சென்றதுண்டு. சமீபத்தில் ஒரு நாள் பயணமாக சென்று வந்த அனுபவங்கள் இன்னமும் பதிவு செய்யவில்லை. அவையும் மனதுக்குள் பொக்கிஷமாக!


கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பசுமை....


 அம்மா வழி குலதெய்வமான பச்சையம்மன்.....

அய்யூர் அகரம் - ஒறையூர்- கோலியனூர்: சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த போது, எங்களது குலதெய்வம் கோவில்களுக்கும், அம்மா வளர்ந்த கிராமத்திற்கும், பக்கத்தில் இருந்த சில கோவில்களுக்கும் சென்று வந்தோம். கிராமத்திற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் சுகமானவை – அங்கிருக்கும் மக்கள், பல வருடங்களுக்குப் பிறகு அம்மாவையும் பெரியம்மாவையும் பார்த்த அவர்கள் காட்டிய பாசம், ஓடி ஓடி கொண்டு வந்த பொருட்கள், அம்மா மற்றும் பெரியம்மா தாங்கள் வளர்ந்த, சிறு வயதில் ஓடியாடிய தெருக்கள் பார்த்து சந்தோஷப்பட்ட தருணங்கள் என மிகவும் அற்புதமான ஒரு பயணம்.  கிராமத்தில் பார்த்த கன்னியம்மாவும் பச்சையம்மனும் இன்னும் கண்களுக்குள்.....  


மலை மீது இருக்கும் மரங்கள் யார் வரவுக்காக அணிவகுத்து நிற்கின்றனவோ?


மழையில் நனைந்து குளிரில் நடுங்கும் குடும்பம்!
 
ஏழைகளின் ஊட்டி:  தமிழகத்தில் சேலம் அருகே இருக்கும் ஏற்காடு – இந்த மலை வாசஸ்தலத்தினை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கிறார்கள். மே மாதத்தின் கடுமையான கோடையின் தாக்கத்திலிருந்து ஒரு நாளாவது தப்பிக்க எண்ணி குடும்பத்துடன் சென்ற இடம் இந்த ஏற்காடு. நாங்கள் சென்ற அன்று எங்களை வரவேற்கவே வந்த மழை – அடாது மழை பெய்தாலும் விடாது பார்த்து ரசித்த சுற்றுலா தலங்கள், இயற்கையின் அழகில் அகமகிழ்ந்த தருணங்கள் என மிகவும் ரசித்த ஒரு நாள் அது. இந்த பயணம் பற்றிய தகவல்களும், படங்களும் உங்களுடன் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை.

இப்படி பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருந்தாலும், மேலே சொன்ன இடைவெளியில்லாத வேலைச் சுமையின் காரணமாக எனது பதிவுகள் வருவதில் தாமதம்! நான் தொடர்ந்து வாசிக்கும் தளங்களுக்கு வருவதும் முடியாத விஷயமாக இருக்கிறது. எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது மீண்டும் தொடர்ந்து வலையுலகில் உலா வருவது நிச்சயம். தற்போதைக்கு ஒரு இடைவேளை!

முதல் பத்தியில் சொன்னது போல, இதுவரை எனது பதிவுகளைப் படித்து ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. என்னையும் எனது பதிவுகளையும் மறந்து விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு! அதை பொய்யாக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்!

சின்னதாய் ஒரு வாக்கெடுப்பு நடத்தலாமா? இந்த பயணங்களில் எந்த பயணம் பற்றிய கட்டுரை உங்களுக்கு முதலில் வேண்டும் என்பதை சொல்லுங்களேன்.  உங்கள் ஓட்டு எந்த கட்டுரைக்கு என்பதை வலது பக்கத்தில் இருக்கும் கருத்துக் கணிப்பின் மூலம் சொல்லுங்களேன்.... 

மீண்டும் சந்திப்போம்.......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

முந்தைய பதிவு - நாளைய பாரதம்-6 பார்த்து விட்டீர்களா?

60 கருத்துகள்:

  1. படங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் கதைகளைச் சொல்கின்றன ஐயா
    அதிலும் அந்த குரங்குக் குடும்பப் படம் மனதை என்னவோ செய்கிறது
    நன்றி ஐயா
    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. ஆடி மாதம் எங்கும் அம்மன் பதிவுகள், நீங்கள் சென்ற வைஷ்ணவதேவி, அல்லது உங்கள் அம்மாவழி தெய்வம் பச்சையம்மனைப்பற்றி பகிரலாம்.

    படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  3. நான் இன்னும் போகாத இடமான வைஷ்ணவ தேவிக்கு த்தான் என் வோட்டு !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  4. அம்மாவழி குலதெய்வக் கோயில் பயணக்குறிப்புகளை எழுதுங்கள். மற்றவர்களுக்குக் கிடைத்திராத வேறெங்கும் வாசித்திராத புதிய அனுபவமாக வாசகர்களுக்கு இருக்கும் என்பது என் கருத்து. படங்கள் அனைத்தும் மனதுக்கு இதம். அந்த மலைச்சாரல் ஆஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி.

      நீக்கு
  5. கண்ணுக்கு அழகான படங்கள்.
    மாதா வைஷ்ணவ தேவியைப் பற்றி அறிந்திட ஆவல்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ,

      நீக்கு
  6. எனக்கும் உங்களுக்கு இருக்கும் சூழ்நிலை போன்றுதான் உள்ளது. வேலையில் இருந்த போதாவது எனக்கு ஓய்வு கிடைத்தது. பணிஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஓய்வே இல்லை.

    பல பதிவுகளை படிக்கத்தான் முடிகிறது. ஆனால் முன்பு போல கருத்துரைகள் எழுத நேரம் கிடைப்பதில்லை. அதிலும் தொடர் பதிவுகளை விட்டுப் போகாமல் படிக்கலாம் என்றால் வெளியூர் சென்று விட்டால் அந்த தொடர் பதிவே விட்டுப் போகிறது. எனவே தாங்கள் தங்கள் கட்டுரைகளை நீண்டதாக இருந்தாலும் பரவாயில்லை, ஒரே கட்டுரையாக இருந்தால் படித்து விட்டு கருத்துரை சொல்ல ஏதுவாக இருக்கும். இப்போது சமீப காலமாக வலைப் பக்கம் எனது கருத்துரைகளை முன்போல் எழுத முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், கடுமையான முதுகுவலிதான்.

    இந்த விஷயத்தில் திரு வை.கோபால கிருஷ்ணன் அவர்களைப் பாராட்டலாம். தனது பதிவுகளுக்கு வருபவர்களுக்கு மறுமொழிகளும், மற்றவர் பதிவுகளுக்கு கருத்துரைகள் தருவதிலும் விடாமல் செய்து வருகிறார்.

    (ஒரு நீண்ட கருத்துரையை உங்கள் பதிவில் எழுதி விட்டேன் என்று நினைக்கிறேன். தொந்தரவிற்கு மன்னிக்கவும்.)
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு நீண்ட கருத்துரையை உங்கள் பதிவில் எழுதி விட்டேன் என்று நினைக்கிறேன். தொந்தரவிற்கு மன்னிக்கவும்.//

      தொந்தரவு ஒன்றுமில்லை தமிழ் இளங்கோ ஐயா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பாபா தன்சர் குகைக்கோவில் கவனத்தை ஈர்த்தது...அருமை தொடருங்களேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  8. எனக்கு மிகவும் பிடித்தது ப்ருட் சாலட் தான். உங்களின் பயணக்கட்டுரைகளில் சபரிமலை கட்டுரைகளை மட்டும் படித்து இருக்கிறேன். காரணம் சபரிமலை அனுபவங்கள் எனக்கும் பிடிக்கும் என்பதால்தான். சிறுவயதில் நான் பயணக்கட்டுரைகளை அதிகம் படித்து இருக்கிறேன் ஆனால் இப்போது அதை படிக்கும் ஆர்வம் அதிகம் இல்லை .ஒவ்வொருத்துவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும் அதுக்காக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு என்ன பிடிகிறதோ அதைப்பற்றி தொடர்ந்து எழுதிவாருங்கள். நீங்கள் மற்றவர்களிடம் கருத்து கேட்காதீர்கள் அப்படி கேட்டு எழுதினால் நீங்கள் உங்கள் சுயம் இழந்துவிடுவீர்கள்..

    நீங்கள் தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எழுதி வாருங்கள் அது புதிதாக பயணம் செய்யவிரும்புவோர்களுக்கு மிகவும் உதவும். முடிந்தால் அதை புக்காக போடலாம் அப்படியும் போட இஷ்டமில்லை என்றால் ebookகாக போடுங்கள். இதை சொல்லக் காரணம் உங்கள் எழுத்தின் தரமும் உங்கள் சிந்தனைகளும் மிக அருமை என்பதால்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  9. என்னைக் கேட்டால் ஏற்காடு என்பேன், ஏனென்றால் அது தான் நான் சென்று வரும் தூரத்தில் உள்ளது.. எப்படியும் அனைத்தையும் நீங்கள் எழுதுவீர்கள் என்பதால் எனக்கு உள்நாட்டு சாய்ஸ் :-)

    அப்புறம் எழுதுவதன் ஆர்வமும் முஸ்தீப்பும் குறையவில்லை என்றீர்களே... பொறாமையா இருக்கு சார் :-) தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  10. Agaram kovil padam yedhavadhu irukkum yena parththen. Anaththu padangalum nandraga irundhadhu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகரம் கோவில் படம் சில உள்ளன. பிறகு பகிர்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  11. கண்டிப்பாகத் தொடருங்கள் சார். அதுதான் டீசர் கொடுத்து விட்டீர்களே இங்கே. ஆவலாக உள்ளது சார் வாசிக்க! அதுவும்

    //மலைச்சாரலோ? பாபா [dh]தன்சர் எனும் குகைக் கோவில் அருகில் உள்ள அருமையான இடம்...// ஆஹா இது அப்படியே மனதைக் கொள்ளை கொள்கின்றது! என்ன ஒரு அழகு!!!! இயற்கையே இயற்கைதான்! அந்த அன்னைக்கு நிகர் யாரும் இல்லை!

    மழையில் நனைந்து நடுங்கும் அந்தக் குடும்பம் அழகோ அழகு!

    தாமதித்தாலும் பரவாயில்லை சார்.....எழுதவேண்டும் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  12. சில சமயங்களில் வேலைகளுக்கு நடுவில் பதிவு எழுதுவது சிரமமாகத்தான் இருக்கிறது. முதல் இரண்டு படங்களும் மிகவும் கவர்கின்றன. அது சம்பந்தமான பயணக்கட்டுரையே முதலில் வரலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. அடடா.... அவ்வளவு ஆணியா.....?
    எனக்கு இங்கே வீட்டிலேயும் நிறைய ஆணிகள் தான்.....)))

    கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு நாளையிலிருந்தே மலைச்சாரல் பதிவைக்
    கொடுத்தால் நன்றாக இருக்கும்.... நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  14. //ஒரு பக்கமாக ஆணி பிடுங்கிய படி செல்ல, பின்னாலேயே வேறொருவர் ஆணி அடித்த படி இருக்கிறார் – ஆக பிடுங்க வேண்டிய ஆணி குறையாதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.//

    ஹா ஹா எனக்கும் இதே தான் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  15. எல்லாமே சுவை தான். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பயணங்கள் அத்தனையுமே என் மட்டில் வாய்ப்பு இல்லாப் பயணங்கள். ஏற்காடு வேண்டுமானால் சுலபமாகலாம்.
    சற்று ஓய்வெடுத்துக் கொண்டு தொடருங்களேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  16. பயணங்கள் தொடரட்டும்! வேலைப்பளு குறைந்தபின் தொடரும் வரை காத்திருக்கிறோம்! தமிழக பயண அனுபவம்தான் என் சாய்ஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  17. ஒரு ட்ரெயிலர் ஓட்டி இருக்கிறீர்கள். உங்கள் மனசுக்குப் பிடித்தவாறு எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு

  18. தங்கள் பயணக் கட்டுரைகள் அனைத்தும் அருமை. அடுத்து மாதா வைஷ்ணவ தேவி கோவில் சென்று வந்தது பற்றிய பயணக்கட்டுரையை முதலில் எழுதலாம் என நான் வாக்களிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  19. ஒவ்வொரு படமும் அருமை.

    கண்டிப்பாக எழுதுங்கள். அதான் சொல்லிவிட்டீர்களே, எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் மனதிற்குள் இருக்கிறது என்று. அப்புறம் என்ன எழுதுங்கள். வாசிக்க நாங்கள் இருக்கிறோம்.

    அப்புறம் நீங்க எந்த தொடரை எழுதினாலும் எனக்கு சம்மதமே, அதனால் சீக்கிரம் ஏதாவது ஒரு தொடரை ஆரம்பியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  20. நீங்கள் எழுதிய பயணக்கட்டுரைகள் அனைத்தும் அருமை! தொடருங்கள்! காத்திருக்கிறோம் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  21. அந்த இரண்டாவது படம் வெகு அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  22. படங்கள் பேசுகின்றன! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  23. எல்லாம் நன்றாகத்தான் இருக்கு. (கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கு. இடங்களையெல்லாம் பார்த்துவிடமுடியும். பாஷை? வாழ்க திராவிடக் கட்சிகள்). எல்லாம் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      ஹிந்தி மொழி கற்றுக் கொள்வது அப்படி ஒன்றும் கடினமல்ல... முயன்றால் நீங்களும் கற்றுக் கொள்ளலாம்!

      நீக்கு
  24. நீங்கள் ரசித்ததைப் பகிர்ந்திருக்கிறீர்கள் வெங்கட். எதை முதல் எதைக் கடைசி என்பது. இருந்தாலும் மத்யப் பிரதேச சுற்றுலா எனக்குப் பிடித்த்வைகளில் ஒன்று.படங்களும் கட்டுரையும் வெகு அழகு. முடிந்த போது தொடருங்கள். இவ்வளவு வேலையா என்று கவலையாக இருக்கிறது. எங்கள் மாப்பிள்ளையிடம் சொன்னால் வேலை இருக்கேனு சந்தோஷப் படணும் அம்மா என்பார். நன்றாக இருங்கள்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது நிச்சயம் தொடர்வேன் வல்லிம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  25. உண்மையே! ஆனால் அவ்வப்போது ஒரு சின்ன இடைவெளி வேண்டித்தான் இருக்கு. தினமும் மனசுக்குள் எழுதிக்கொண்டேதான் என் நாட்களும் நகர்கின்றன. மீண்டும் வரணும்தான்!

    வந்துகொண்டிருக்கின்றேன்:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்....

      நீங்களும் விரைவில் எழுதிட வேண்டும்..... நானும் எழுதுவேன்!

      நீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

      நீக்கு
  27. அருமை. பயணக் கட்டுரைகள் எப்போதுமே வாசிக்க இனிமையாக இருக்கும். அதனால் தொடர்ந்து எழுதுங்கள். ஆனால் நான் எதற்குமே வாக்களிக்கப்போவதில்லை. காரணம், நான் இலங்கை என்பதால் நீங்கள் குறிப்பிடும் எந்த இடத்தையும் நான் அறியேன். நமது வலைத்தளம் : சிகரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

      நீக்கு
  28. படங்கள் வெகு அழகு அண்ணா!
    ஏன் இவ்ளோ நாளா பதிவை காணோம்? நலம் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதிவில் சொன்னது போல, அலுவலகத்தில் ஆணி அதிகம்! மீண்டும் விரைவில் பதிவுகள் வரும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

      நீக்கு

  29. உங்களுக்கு அலுவலக வேலை காரணமாக யார் பதிவுக்கும் போக முடியலை. எனக்குப் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாய்ப் போக முடியலை. உங்க பதிவுக்கே ரொம்ப நாட்கள் கழிச்சு இன்னிக்குத் தான் வரேன். :))))நான் போனாலும் போகாட்டியும் எனக்கு வருபவர்கள் குறைவு தான். ஆகவே அதுக்காக எல்லாம் பதிவு எழுதறதுக்கு ஓய்வு கொடுத்துடறதில்லை. :))))விட மாட்டோமுல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு

  30. எல்லாப் பயணக் கட்டுரைகளும் வரிசைப் படுத்திக் கொண்டு எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதிடலாம்..... விரைவில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....