வெள்ளி, 15 டிசம்பர், 2017

கஜ்ஜியாரிலிருந்து டல்ஹவுஸி – காலாடாப்பில் என்ன இருக்கிறது?


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 19

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காலை நேரத்தில் கஜ்ஜியார்....

நடைப்பயணத்தினை முடித்துக் கொண்டு தங்குமிடம் திரும்பிய பின் சிறிது ஓய்வு. ஓய்வுக்குப் பிறகு தங்குமிட சிப்பந்தி இரவு உணவு தயார் என்ற அழைப்போடு வர, தரைத் தளத்திற்குச் சென்றோம். சிறிது நேரம் காத்திருந்த பிறகு நாங்கள் சொல்லி இருந்த உணவு வந்து சேர்ந்தது. சப்பாத்தி, சப்ஜி, தால், சலாட் என சொல்லி இருந்த அனைத்துமே நன்றாக இருக்கவே ரசித்து ருசித்து சாப்பிட ஒரு மணி நேரம் ஆனது – கூடவே அரட்டையும் இருந்தது. பயணத்தில் இதுவரை பார்த்த இடங்கள் பற்றிய அரட்டையும், நாளை பார்க்கப் போகும் இடங்கள் பற்றிய திட்டமிடலும் ஸ்வாரஸ்யமாகச் செல்ல, நேரம் போனதே தெரியவில்லை. இரவு உணவுக்குப் பிறகு வெளியே நடக்கலாம் என்றால், மேலே இருந்து சாலையைப் பார்க்க, சாலையில் ஈ, காக்கா இல்லை! இப்படி இருக்கையில் நடப்பது சரியாக இருக்காது என்பதால், தங்குமிடத்திலேயே கொஞ்சம் நடந்தோம். சிப்பந்திகள் விறகுகளை எரித்து குளிர்காய்ந்து கொண்டிருக்க, அங்கே நாங்களும் சங்கமித்தோம்.   


பயணத்தில் கண்ட காட்சி....

குளிர் பிரதேசங்களில் இப்படி விறகுகளை போட்டு எரித்து குளிர் காய்வது வழக்கம். அடிக்கும் குளிருக்கு, அப்படி குளிர் காய்வது ஒரு சுகானுபவமாக இருக்கும். ஆனால் அதில் ஒரு பிரச்சனை – தோல் சீக்கிரம் வறண்டு விடும் – அரிப்பும் வரலாம்! தகுந்த Cream தடவிக்கொள்ளாவிட்டால் ரொம்பவே கஷ்டமாகி விடும்.  சிறிது நேரம் அங்கே நின்று அரட்டை அடித்த பிறகு அறைக்குத் திரும்பினோம். அன்றைய நிகழ்வுகளைப் பற்றி குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு, அன்றைய கணக்கு வழக்கு [ஒவ்வொரு நாளும் இரவில் குழுவினரின் செலவை எழுதி வைப்பது நண்பர் பிரமோத்-இன் வேலை! அவர் மறந்ததை எல்லாம் நினைவுபடுத்தும் வேலை எனக்கு!] பார்த்த பிறகு உறக்கத்தினை தழுவினோம்.  பயணத்தில் இன்னுமொரு தினமும் கழிந்தது. அடுத்த நாள் காலா டாப் போக வேண்டாம், முன்னரே திட்டமிட்டபடி டல்ஹவுஸி செல்லலாம் என முடிவு செய்திருந்தோம்.

காலாடாப்பில் என்ன இருக்கிறது?


பயணத்தில் கண்ட காட்சி....

பரந்து விரிந்திருக்கும் இந்த Kalatop Wildlife Sanctuary மிகவும் ரம்மியமான இடம். கஜ்ஜியாரிலிருந்தும் டல்ஹவுசியிலிருந்தும் செல்ல முடியும் என்றாலும், டல்ஹவுஸியிலிருந்து வெகு அருகில் இருக்கிறது இந்த இடம். Trekking-ஐ விரும்புபவர்கள் இங்கே சென்று தங்களுக்கு விருப்பமான பல இடங்களை நடந்து சென்று ரசிக்க முடியும். ராவி நதியின் மூலம் கிடைக்கும் தண்ணீரில் இந்தப் பகுதிகள் பச்சைப்பசேலென மரங்கள் அடர்ந்து காட்சியளிக்கின்றன. சரணாலயத்தில் பல்வேறு பறவை இனங்களும், Black Bear வகைகளும் மற்ற விலங்குகளையும் பார்க்க முடியும். இங்கே வாகனங்கள் மூலம் Jungle Safari-உம் செய்ய வசதி உண்டு. தவிர, இங்கே தங்குவதற்கு வனத் துறையினரின் தங்குமிடமும் உண்டு. கஜ்ஜியார் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அப்படியே காலாடாப்-உம் சென்று வருவது நல்லது. நல்ல ஒரு அனுபவமாக இருக்கும்.

டல்ஹவுஸி நோக்கி:


புல்வெளி புல்வெளி...
பயணத்தில் கண்ட காட்சி..


பஞ்ச் புல்லாவில் மரப்பாலம்....

நாங்கள் கஜ்ஜியாரிலிருந்து புறப்பட்டு சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டல்ஹவுஸி செல்ல சுமார் ஒரு மணி நேரம் ஆனது. மலைப்பாதை என்பதால் இப்படி குறைவான தூரத்தினைக் கடக்கவும் நேரம் அதிகமாகவே ஆகுமே. நாங்கள் செல்லும் வழியில் தான் காலாடாப் சரணாலயம் இருந்தது என்றாலும் அங்கே செல்லாமல் நேராக டல்ஹவுஸி நோக்கி பயணித்து, முதலில் சென்ற/பார்த்த இடம் – பஞ்ச்புல்லா! ஹிந்தி மொழியில் புல் என்றால் மேம்பாலம்! பஞ்ச்புல்லா – ஐந்து பாலங்கள் – ஏதோ பெரிய இடம் என நினைத்து விடாதீர்கள், போகும் வரை எங்களுக்கும் அப்படியான எண்ணம் தான் இருந்தது. அங்கே சென்ற பிறகு தான் தெரிந்தது அப்படி ஒன்றும் பிரமாதமாக அங்கே இல்லை என்பது! பஞ்ச்புல்லாவில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்! நாங்கள் அங்கே சென்ற போது மழைத் தூறல் இருக்க, வாகனத்தினை விட்டு வெளியே வராமல் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். சற்றே மழை விட்ட பிறகு கொஞ்சம் சுற்றி வந்தோம்.


பஞ்ச் புல்லா....


சர்தார் அஜித் சிங்...


சாலையோர சிறு உணவகம்....


உணவகத்திலிருந்து பார்த்த காட்சி ஒன்று....

சின்னச் சின்னதாய் அருவிகளும், வனப் பகுதியுமாக இருக்கும் இந்த இடத்தில், சர்தார் அஜித் சிங் என்பவருடைய நினைவிடம் மற்றும் பூங்கா இருக்கிறது. சில உணவகங்களும் அங்கே உண்டு. காலை நேரத்திலேயே நாங்கள் அங்கு சென்று விட்டதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அவ்வளவாக இருக்க வில்லை. சில கடைகளும் உணவகங்களும் இருந்தாலும் அப்போது தான் கடைகளை திறந்து கொண்டிருந்தார்கள்.  சின்னச் சின்ன பாலங்கள், நினைவிடம் ஆகியவற்றில் சில நிமிடங்கள் இருந்து, ஒரு சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  காலையிலிருந்து ஒன்றும் சாப்பிட வில்லை என்பதால், அடுத்த இலக்கினை அடைவதற்கு முன்னர் ஏதாவது சாப்பிடலாம் என ஓட்டுனரிடம் சொல்ல, சாலையோர உணவகம் – சிறிய உணவகம் தான் – ஒன்றின் முன் நிறுத்தினார்.  அங்கே கிடைத்த பராட்டா, ப்ரெட் ஸ்லைஸ் போன்றவற்றுடன் தேநீர் அருந்தி பசியாறினோம்.


பஞ்ச்புல்லா அருகே மலைப்பாதை....


அங்கிருந்து நாங்கள் சென்ற இடம், இந்தப் பயணத்தில் எங்களுக்கு மிகவும் பிடித்த இடங்களில் இரண்டாவதாக இருந்தது – முதலாவது கஜ்ஜியார் தான். அந்த இடம் என்ன இடம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அந்த இடத்திற்குப் பயணித்த பாதை மிகவும் அபாயகரமானது என்று கூட சொல்லலாம்! மலைப்பகுதிகளில் சுற்றிச் சுற்றி சென்று சேர்ந்தோம் – மறக்க முடியாத அனுபவம் அது.

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

12 கருத்துகள்:

  1. படங்கள் அருமை. அனுபவங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாவ். பஞ்ச் புல்லா. அடுக்கு விவசாயம். படங்கள் அருமை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  4. படங்கள் அருமை....தகவல்களும்...

    அடுத்த பகுதி அறிய தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  5. அருமையான படங்கள், அனுபவங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. குளுகுளு படங்களுடன் இனிய பதிவு..

    நேற்று மாலை தங்கள் தளம் திறப்பதில் பெரும் பிரச்னை..
    இணையமும் ஒத்துழைக்கவில்லை..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....