திங்கள், 4 டிசம்பர், 2017

லக்ஷ்மி நாராயண் மந்திர் – பத்தாம் நூற்றாண்டு – இராஜாவின் இழப்பு


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 15

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....

ஜோத் என்ற மலைச்சிகரத்திலிருந்து புறப்பட மனதே இல்லாமல் புறப்பட்ட நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் chசம்பாவிற்கு. இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் சில உண்டு என்பதால் அங்கே தான் பயணம் செய்தோம். முதலாக நாங்கள் சென்ற இடம் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு அற்புதமான கோவில். கோவிலின் பெயர் லக்ஷ்மி நாராயண் மந்திர். கோவில் அருகே வாகனம் செல்லாது என்பதால் சற்றே தள்ளி வாகனத்தினை நிறுத்தி எங்களை இறக்கி விட்டார் ஓட்டுனர். கோவில் பார்த்ததும் அலைபேசியில் அழைத்தால், அதே இடத்திற்கு வாகனத்தினை கொண்டு வருவதாகச் சொல்லி அவர் புறப்பட்டார்.


லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா.... 


லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....
நண்பர் எடுத்த படங்களில் ஒன்று....

கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்து சில நிமிடங்கள் கூட ஆகி இருக்காது, குழுவில் ஒருவர் – இரவினில் ஆட்டம் போட்டவர் – மருந்து கடை கிடைத்தால் எனக்கு மருந்து வேண்டும் என்றார். தனக்கு நடக்க முடியவில்லை என்றும், தான் அப்படியே எங்காவது அமர்ந்து கொள்வதாகவும் மற்றவர்கள் கோவிலுக்குச் சென்று வாருங்கள் என்றும் சொல்லி விட்டார். அவருக்கு சில மாத்திரைகளும் தண்ணீரும் வாங்கிக் கொடுத்து மூடிக்கிடந்த ஒரு கடையின் வாயிலில் அமர வைத்து விட்டு கோவிலை நோக்கி முன்னேறினோம். சற்று தொலைவில் இருந்தே கண்ணுக்குத் தெரிந்த கோவில் கோபுரம் பிரம்பிக்க வைக்கும் வடிவத்தில் இருந்தது. பனிப்பொழிவு ஏற்படும் பகுதியாக இருப்பதால், அதற்குத் தகுந்த மாதிரி, கோபுரங்களை வடிவமைத்திருந்தார்கள்.


லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....


லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....
கீழிலிருந்து மேலாக... நண்பர் எடுத்த படம்....

கடைகள் நிறைந்த குறுகிய பாதை வழியே சற்றே மேட்டுப்பாங்கான பாதையில் நடந்து சென்றால், லக்ஷ்மி நாராயண் மந்திரின் சுற்றுப் புறச் சுவர் நமக்குத் தெரிகிறது. பாதையிலிருந்து பார்க்கும்போது ஒரே ஒரு கோபுரம் மட்டுமே தெரிய, சிறு கோவில் தான் என நினைத்துச் சென்றால் அங்கே நமக்குக் காணக் கிடைப்பது ஆறு கோபுரங்கள்! பெரும்பாலான வட இந்திய நகரங்கள் போலவே பல இடங்களில் குப்பைக் கூடங்கள்! கோவிலின் சுற்றுப் புறச் சுவர் அருகே மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.  அவற்றைக் கடந்து கோவிலின் வாசலுக்குச் சென்று உள்ளே நுழைய மனதிலிருந்து ஒரு உற்சாகத் துள்ளல்! அருமையாக வடிவமைக்கப்பட்ட கோபுரங்களும் சிற்பங்களும் நம்மை வரவேற்கின்றன.


கணபதி.....
லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....


லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....
கோபுரங்களில் ஒன்று மட்டும்.....
நண்பர் எடுத்த படங்களிலிருந்து.....

இக்கோவிலில் மொத்தம் ஆறு கோபுரங்கள்/தனிச் சன்னதிகள் – வைஷ்ணவத்திற்கு மூன்று, சைவத்திற்கு மூன்று! கோவில் கட்டப்பட்டது பத்தாம் நூற்றாண்டில் என்றாலும் பிறகு வந்த அரசர்களும் கோவிலை விரிவு படுத்தியிருக்கிறார்கள். chசம்பா பகுதியில் மிகவும் பிரபலமான இந்தக் கோவிலில் ராதா கிருஷ்ணர் கோவில் ராணி ஷாரதா [ராஜா ஜீத் சிங் என்பவரின் மனைவி]யாலும், கௌரி ஷங்கர் கோவில் ராஜா யுக்காரா [சாஹில் வர்மாவின் மகன்] என்பவராலும் கட்டப்பட்டன. கோவில் பிரதான வாயில்புறத்தில் அமைக்கப்பட்ட கருடன் சிலை ராஜா பாலபத்ர வர்மா அவர்களாலும் அமைக்கப்பட்டன. 


தேவியின் சிற்பம் ஒன்று....
லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....

கோவில் என்றாலே கூடவே கதைகளும் உண்டுதானே.  அந்தக் கதைகளை நம்புவதும், நம்பாததும் அவரவர் இஷ்டம். இந்தக் கோவில் கட்டிய ராஜா சாஹில் வர்மா அவர்கள் விஷ்ணுவின் சிலை அமைக்க சிறந்த மார்பிள் கற்களை, விந்தியாசல மலைப்பகுதியிலிருந்து தான் கொண்டு வர வேண்டும் என விரும்பினாராம். அதற்காக அவரது மகன்களை அனுப்பி வைக்க, அங்கிருந்து கற்களைக் கொண்டு வர இயலாமல் எட்டு மகன்களை இழந்து நின்றாராம்.  கடைசியாக அவரது மூத்த மகன் யுக்காரா என்பவர் விஷ்ணு சிலை செய்யத் தகுந்த கல்லைக் கொண்டு வர சிற்பம் தயாரானது என்கிறார்கள்.


சிற்பம் யாரைக் குறிக்கிறதோ?
லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா.... 

கோவில் வளாகத்தில், லக்ஷ்மி நாராயணன், ராதா கிருஷ்ணர், கௌரி சங்கர், என தனித்தனி சன்னதிகள். கற்களால் ஆன கோபுரங்களின் மேலே மரப்பலகைகள் கொண்டு “சத்ரி” என அழைக்கப்படும் அமைப்பு – பனிப்பொழிவை தாங்கிக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, மேலும் கோபுரத்தினை அடுத்து மரங்களினால் ஆன மண்டபம் என பார்க்கும்போது அனைத்துமே அழகு.  கோபுரங்களின் கீழ் பகுதிகளிலும், கோவில் வளாகத்திலும் சிற்பங்களும் உண்டு. கோபுரங்களில் மலர்கள், விலங்குகள், கடவுளர்களின் உருவங்கள் என மிகச்சிறப்பாக வடித்திருக்கிறார்கள்.  அனைத்தையும் பார்த்து ரசித்து கோவிலுக்குள் சென்று விஷ்ணு பகவானை தரிசித்தோம்.  மிகப் பெரிய சிலை – அழகாய் இருந்த சிலையை படம் எடுக்கலாமா எனக் கேட்க, மறுத்தார் பூஜாரி. பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம். 


இன்னுமொரு சிற்பம்....
லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....

எல்லா நாட்களிலும் இக்கோவில் திறந்தே இருக்கும். காலை ஆறு மணி முதல் மதியம் 12.30 வரையிலும், சற்றே இடைவெளிக்குப் பிறகு மதியம் 02.30 முதல் இரவு 08.30 வரையும் இக்கோவில் திறந்திருக்கும். நிறைய பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இங்கே வருகிறார்கள். ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்து chசம்பா வரை வர பேருந்து வசதிகள் – அரசாங்கத்தின் பேருந்து வசதிகள் நிறையவே இருக்கிறது. சம்பாவில் தங்கும் வசதிகளும் உண்டு என்பதால் இரவு நேரம் வந்தாலும் கவலையில்லை.


அபிஷேக நீர் வெளியேறும் இடத்தில்....
லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....


ஆஞ்சிக்கும் இடமுண்டு....
லக்ஷ்மி நாராயண் மந்திர், சம்பா....

நானும் நண்பர்களும் கோவில் வளாகத்தில் சில படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு கோவிலிலிருந்து புறப்பட்டோம். மீண்டும் அந்த குறுகிய சாலை வழியே வெளியே வந்து கடை வாசலில் விட்ட நண்பரைக் கண்டோம்.  கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார்.  இரவில் போட்ட ஆட்டம் அவரை ஒரு வழி செய்திருந்தது போலும். சம்பா நகரை நோக்கிச் செல்லலாமா என அவரிடம் கேட்க, தலையசைத்தார். அவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்து அங்கே பார்க்க வேண்டிய மற்றொரு இடம் பற்றி காவல்துறை நண்பர் ஒருவரிடம் கேட்க, அவர் வழி காட்டினார்.  சம்பா நகரத்து வீதிகளில் பயணித்து நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன ஸ்பெஷல் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

16 கருத்துகள்:

 1. நம்மூர்க் கோவில்களை பார்த்துவிட்டு இதைப் பார்த்தால் கோவில் என்கிற உணர்வே தோன்றவில்லை! சர்ச் சாயலில் இருக்கிறது, அருகில் பார்க்கும்போது.

  சரக்கு போட்டவரை ஸ்வாமி தள்ளியே நிறுத்தி விட்டார் போலும்!

  ஆஞ்சி கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டிருப்பது போலிருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் இவர் மட்டுமில்லையே சரக்கு அடித்தது இன்னும் இருவர் உண்டே! அவர்கள் தரிசனம் செய்திருக்கின்றனரே!!

   கீதா

   நீக்கு
  2. நான் பதில் சொல்வதற்குள் கீதா ஜி சொல்லி இருக்கிறார்கள் - நான் நினைத்த அதே விஷயத்தினை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. ஆலயத்தின் தோற்றம் வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளன ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. கோபுரத்தின் வடிவமே புதுமையாக இருக்கிறதே... ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வட இந்தியாவில் வித்தியாசமாகத் தான் இருக்கும் கோபுரங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. நல்லதொரு அனுபவம் இல்லையா வெங்கட்ஜி! கோயில்க என்ன அழகு!! வித்தியாசமான கலைநயம். வட இந்தியக் கோயில்கள் பெரும்பாலும் குறிப்பாக மலைப்பிரதேசங்களில் இப்படியான கோபுரங்களைக் கொண்டவையாகவே இருக்கு.

  ஆஞ்சு சூப்பரா ஸ்டைலிஷா இருக்கார். குழந்தை போல...தூக்கி எடுத்துக் கொள்ள வேண்டும் போல இருக்கார்.

  ஹும் முதல்நாள் ஆட்டம் போட்ட நண்பர்களினால் ஏதேனும் தடங்கள் வந்துவிடக் கூடாதே என்று நினைத்தது போல நல்ல காலம் மற்றவர்களது ப்ரோக்ராமில் தடங்கல் வராமல் போனதே மகிழ்ச்சி...ஜி!!
  படங்கள் அனைத்தும் அழகு!!!
  ஆவலுடன் தொடர்கிறோம் ஜி!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதொரு அனுபவம் தான். ஆஞ்சு அழகு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 5. ஆலயத் தோற்றமும் சிற்பங்களும் அழகு. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 6. வித்யாசமான அமைப்புடன் கோவில் இருக்கிறது எவ்வ்ளவு வேலைப்பாடுடன் சிற்பங்கள் எதோ செய்தியை சொல்கிறது ... புரியவில்லை ஒரு சிற்பம் 2 சிலைகள் ஒரு உயிரினத்தை இழுப்பது போல் அது எது என்று தெரிந்தால் பகிருங்கள்


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாற்கடலை கடையும் காட்சி தான் - பெரும்பாலும் அசுரர்களும் தேவர்களும் இரண்டு பக்கத்திலும் இருப்பார்கள் - இங்கே பக்கத்திற்கு ஒருவர் மட்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   நீக்கு
  2. நன்றி சகோ நினைத்தேன் ஆனால் பாற்கடலை பாம்பு கொண்டுதானே கடையப்பட்ட்து இந்த சிற்பத்தில் வாலில் முடி இருப்பது போல் தோற்றம் எனக்குதான் தோன்றிவிட்டது

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....