திங்கள், 1 ஜனவரி, 2018

கட்டிப்புடி கட்டிப்புடிடா… - ஆங்கிலப் புத்தாண்டில்…




என்னய்யா இது, புது வருஷமும் அதுவுமா, காலையிலேயே இப்படி கட்டிப்புடி கட்டிப்புடிடான்னு தலைப்பு வைச்சு ஒரு பதிவு போடறியே – அதுவும் காலங்காத்தால? என்று நினைத்து, மனதில் என்னைத் திட்டுவதற்குள் சொல்லி விடுகிறேன் – இது வேறு!


யாரைச் சந்தித்தாலும் நம் ஊரில் வணக்கம் சொல்வோம். கை குலுக்குவது என்பது பாராட்டும் சமயங்களில் மட்டுமே நடந்த ஒன்றாகத் தான் நான் அறிந்திருந்தேன். தினம் தினம் பார்க்கும்போதெல்லாம் கைகுலுக்கிக் கொண்டது கிடையாது. ஆண்களோடே இப்படி என்றால், பெண்களோடு கைகுலுக்குவது என்பது நிச்சயம் செய்ய முடியாத ஒன்று மட்டுமல்ல, நினைத்தும் பார்க்க முடியாது. நெய்வேலியில் இருந்தவரை என்னதான் Co-ed கல்லூரியில் படித்திருந்தாலும் பெரிதாக பெண்களோடு பழகியதில்லை. “பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்” என்கிற மாதிரி, “ஹாய், ஹலோ” என்ற அளவில் தான் இருந்தது. கல்லூரி சமயத்தில் ஒரு சுற்றுலா சென்றபோது நடந்த நிகழ்வு ஒன்று இன்றைக்கும் நினைவில் உண்டு! அந்த நிகழ்வு பற்றி முன்னர் எழுதி இருக்கிறேனா என நினைவில் இல்லை!

கல்லூரி சுற்றுலா சமயத்தில் பொள்ளாச்சி அருகே இருந்த ஒரு இடத்திற்குச் சென்ற போது நடுவே ஒரு காட்டாறு. ஆற்றுப் பகுதியில் நிறைய பாறைகள். ஒரு பாறைக்கும் மற்ற பாறைக்கும் இடையே கடப்பதற்கு கைகளைப் பிடித்து தான் போக வேண்டியிருந்தது. அங்கே ஒரு கல்லூரித் தோழி எங்கள் கைகளைப் பிடித்துக் கடக்க மாட்டேன் எனச் சொல்ல, பக்கத்தில் இருந்த குச்சியை நான் பிடித்துக் கொள்ள அப்பெண் குச்சியின் மற்ற முனையைப் பிடித்துக் கடந்தார்! அப்படி இருந்தது அந்தக் காலம்! இப்படியெல்லாம் இருந்த எனக்கு, தில்லி வந்ததும் பயங்கர மாற்றம். அலுவலகத்தில் உடன் வேலை செய்த பெண்மணிகள் காலையில் கை குலுக்குவார்கள், தொட்டுப் பேசுவார்கள் – அப்படி இருந்தது எனக்குக் கூச்சமாகவே இருக்கும்.

பெண்களே கைகுலுக்கி காலை வணக்கம் சொல்லும்போது ஆண்கள் கைகளை குலுக்குவது மட்டுமின்றி கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். தில்லி வந்த புதிதில் இது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது – குறிப்பாக வட இந்திய ஆண்கள், ஹிந்தியில் ஏதோ சொல்லிக்கொண்டு காலையில் கட்டிப்பிடிக்க, “டேய் என்னதாண்டா சொல்ல வரீங்க!” என்று குழப்பத்தோடு தான், நிற்பேன். ஒரு சர்தார்ஜி தான் “என்ன ஆச்சு, ரிலேக்ஸ்!” என்று சொல்லி, ஒருவரை ஒருவர் இப்படி கட்டிக்கொண்டு முதுகில் தட்டிக்கொடுப்பது இங்கே சாதாரணம் – சாதாரண நாளிலேயே இப்படி என்றால், புத்தாண்டு அன்று என்ன செய்யப் போகிறாயோ?” என்று கேட்டார். அன்னிக்கு என்னப் பண்ணுவாங்களோன்னு ஒரு வித பயத்துடன் தான் நான் இருந்தேன்.

தலைநகரில் எனக்கு முதலாம் ஆங்கிலப் புத்தாண்டும் வந்தது. அலுவலகம் வந்து சேர்ந்தேன். பார்க்கும் அனைவருமே கைகளைக் குலுக்கி புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி, கட்டிப்பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். தெரிந்தவர் தெரியாதவர் என யார் யாரோ வரிசையாக கட்டிப்பிடித்தார்கள்! எங்கள் அலுவலகமோ ரொம்பப் பெரிய அலுவலகம்! சுமார் ஆயிரம் பேராவது அன்றைக்கு என்னைக் கட்டிப் பிடித்து இருப்பார்கள், கைகுலுக்கி இருப்பார்கள் – ஒரு ஸ்டேஜில் எனக்கு கைகள் வலிக்கவே ஆரம்பித்து விட்டது! சிலர் முரட்டுப் பிடியாக பிடித்துக் குலுக்கோ குலுக்கு எனக் குலுக்க, “வேண்டாம், விட்டுடு, அழுதுடுவேன்” நு சொல்லக் கூடிய நிலை எனக்கு! அதிலும் பார்ப்பவர்கள் அனைவருமே கோட் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

அந்தக் கோட் பற்றி தனியாகவே பதிவு எழுதலாம்! யாரு என்னன்னு தெரிஞ்சாதான! ஏதோ பெரிய ஆளு போல, கோட் எல்லாம் போட்டு இருக்காருன்னு நினைப்பேன்! கட்டிப்புடிக்கும்போது வரும்போது நாற்றம் வேறு பிரட்டும்! வாசனை திரவியங்கள், வியர்வை நாற்றம், Naphthalene உருண்டைகள் வாசம் எனக் கலந்து கட்டி இருக்கும் வாசனைகளில் மயங்கி விழாத குறை தான்! இப்போது நினைக்கும்போது, சூரியன் படத்தில் கவுண்டமணியை நோம்பிக்குக் கூப்பிடும்போது உத்தரவு வாங்க, “இஞ்சாயி, இஞ்சாயி” எனக் கட்டிப்பிடிப்பாரே அந்தக் காட்சி நினைவுக்கு வருகிறது! விதம் விதமான கட்டிப்பிடி காட்சிகள்!

ஒருவர் கையில் சாக்லேட் திணித்தபடியே கைகுலுக்குவார். இன்னுமொருவர் காலையிலிருந்து மூன்று நான்கு முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து, புத்தாண்டு வாழ்த்து சொல்வார்! “யோவ், பக்கத்துல வராத, நீ ஏற்கனவே கட்டிப்பிடிச்சுட்ட!” எனச் சொல்ல நினைப்பேன்! ஆனாலும் தொடரும் கட்டிப்பிடித்தலும் கைகுலுக்கல்களும்! சிலர் அலுவலகத்தில் இருக்கும் அத்தனை அறைகளுக்கும் சென்று அங்கிருக்கும் மற்றவர்களுக்கு, கைகுலுக்கி, கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்லிச் செல்வார்கள். இதற்கே மதியம் ஆகிவிடும்! பிறகு உணவகத்தில் ஓசியில் தேநீரும் சிற்றுண்டியும் கிடைக்கும். அங்கேயும் தொடரும் கட்டிப்பிடி, கட்டிப்பிடிடா! அதனாலேயே முதல் வருடத்திற்குப் பிறகு அங்கே செல்வதில்லை!

இப்படி முதல் முறை பயந்தாலும், அடுத்த வருடங்களிலிருந்து பழகி விட்டது! கட்டிப்பிடித்தலுக்கும் பழகி விட்டேன்.  இதோ இன்றும் ஒரு ஆங்கிலப் புத்தாண்டு. இரண்டு கைகளையும் முன்னர் நீட்டியபடியே, ஒன்று கைகுலுக்க, மற்றது கட்டிப்பிடிக்க, அலுவலகத்திற்குப் புறப்பட வேண்டும்! கட்டிப்பிடிக்கும் தயாராக வேண்டும்! சிலர் முதுகில் தட்டிக்கொடுக்கிறேன் பெயரில் பலமாக தட்டும் தட்டலுக்கும் தயாராக வேண்டும்! என்னது நீங்களும் கைகுலுக்கப் போறீங்களா, கட்டிப்பிடிக்கப் போறீங்களா! வேண்டாம்பா வேண்டாம். இந்தப் பழக்கம் தலைநகரோடு போகட்டும்! நாம் நாமாகவே இருப்போம்!

அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

34 கருத்துகள்:

  1. ஹாஹாஹா, சுவாரசியமான கட்டிப்பிடித்தல். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமா! எனக்கு புத்தாண்டு வந்தாலே கிலி வரும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  2. கட்டிப்புடி வைத்தியம் நல்லதுதான் ஜி
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கறை நல்லது! மாதிரி கட்டிப்புடி நல்லது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  4. //“யோவ், பக்கத்துல வராத, நீ ஏற்கனவே கட்டிப்பிடிச்சுட்ட!”//

    ஹாஹா ஹாஹா..... சிரிச்சு சிரிச்சு இப்ப வயித்துவலி :-) :-)

    இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் புத்தாண்டு புன்னகையுடன் ஆரம்பித்தது அறிந்து மகிழ்ச்சி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
    என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி யுவராணி தமிழரசன் ஜி!

      நீக்கு
  6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. நலம் பெருகட்டும்..
    நன்மைகள் சூழட்டும்..

    தங்களனைவருக்கும் அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. சுமார் ஆயிரம் பேராவது அன்றைக்கு என்னைக் கட்டிப் பிடித்து இருப்பார்கள்/ ஏன் இருக்காது அதுதான் மீண்டும் மிண்டும்கட்டிப் பிடிக்கிறார்களே கேரள பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் மீண்டும் கட்டிப்பிடித்தது சிலர் மட்டுமே! அலுவலகத்தில் இருந்தவர்கள் மிக அதிகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. உங்கள் "மைண்ட் வாய்ஸ்" -களை ஆங்காங்கே ரசித்தேன்...புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை ரசித்தமைக்கு நன்றி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  11. உங்கள் கட்டிப்பிடி அனுபவம் சுவாரஸ்யம். இன்றும் அதை அனுபவித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள், உங்களுக்கும், ஆதி, ரோஷ்ணிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றும் அதே அனுபவம் - கொஞ்சம் தள்ளியே நின்று கை கொடுத்ததால் சிலரிடமிருந்து தப்பித்தேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  13. ஹா.... ஹா... ஹா... சுவாரஸ்யம். இது போல என் மாமா ஒன்று சொல்வார். உதகையில் அவர் இருந்த காலங்களில் அவரைப் பார்க்க வந்த அவர் சகோதரர் அங்கிருந்த அலுவலக பியூனை மாமாவின் மேலதிகாரி என்று நினைத்து விட்டாராம் (கோட் போட்டிருந்ததால்)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நட்புகளுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலமுறை சந்தேகமாகவே இருக்கும் - யாரென்று தெரியாமல் விழித்ததுண்டு - அருகே வந்து பேசியதும் தான் தெரியும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  14. ஹாஹாஹா. வெங்கட் மிக சுவாரஸ்யம். நடுக்கமா கூட இருக்கு. அதுவும் நாஃப்தலின்
    வாசனையோட. கடவுளே.
    இத்தனை நகைச்சுவையாக இதற்குமுன்
    படித்ததில்லை. சிரித்தபடி வாழ இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
    ஆதிக்கும்,உங்களுக்கும் ,ரோஷ்ணிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாஃப்தலின் மட்டுமல்லாது விதம் விதமான வாசனைகள் - கஷ்டமாக இருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  15. //“யோவ், பக்கத்துல வராத, நீ ஏற்கனவே கட்டிப்பிடிச்சுட்ட!”//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா வெங்கட்ஜி சிரித்து முடியவில்லை. முழு பதிவுமே சிரித்து முடியலை..

    கட்டிப்பிடி வைத்தியம் ஹா ஹா..

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  16. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...

    வெகு சுவையான சுவாரஸ்ய பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  17. பிடிக்காத மாதிரியே போஸ்ட் போட்டுட்டு வருஷா வருஷம் கட்டி பிடிச்சுண்டு இருக்கீங்க போலருக்கே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... இப்படி கூட ஒரு வழி இருக்கா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....