வெள்ளி, 5 ஜனவரி, 2018

முடிவில்லாத பிரச்சனைகள் – யாருக்குத் தான் இல்லை பிரச்சனை




படம்: இணையத்திலிருந்து....

பொதுவாக நம்மில் பலரும் சொல்லும் ஒரு வாக்கியம் – “இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேனோ? இன்னிக்கு நாள் நல்லாவே இல்ல! பிரச்சனைகள் நிறைய!”  தலைநகரில் தனியாக இருக்கும் நான் ”யார் முகத்தில் முழித்தேனோ?” எனச் சொல்ல முடியாது! காலையில் விழித்தவுடன் முதல் முதலாகப் பார்ப்பதே – பாத்ரூம் கண்ணாடியில் தான்! என்னை நானே பார்த்துக் கொள்கிறேன் – நல்லதோ கெட்டதோ, ஒவ்வொரு நாளும் நடப்பது யாருடைய கையிலும் இல்லை! இன்றைக்கும் அப்படித்தான் – ஆனால் இன்றைய நாள் நன்றாக இல்லை! – வாக்குவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் என எல்லாமே சரியானபடி அமையவில்லை. அலுவலகத்திலும் சில சில்லறைப் பிரச்சனைகள். என் பிரச்சனைகளை பெரிதாக வெளியே சொல்வதில்லை, தீர்வு காண்பது தான் வழக்கம். இன்றைக்கும் அப்படியே!


எனக்குப் பிரச்சனை என நான் அதற்கான தீர்வுகளை யோசித்தபடி இருக்க, அலுவலகத்தின் வேறு பிரிவில் இருக்கும் ஒரு ஊழியர் – அவர் வேலை கடிதங்களையும், தபால்களையும் வாகனத்தில் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பது! அதற்கென்றே ஒரு பதவி – Despatch Rider என்ற பதவி – அரசு அலுவலகங்களில் உண்டு, என்னிடம் ஒரு உதவி கேட்டு வந்தார் – ஒன்றும் பெரிய விஷயம் அல்ல – காலையில் கொடுத்திருந்த ரத்தப் பரிசோதனையின் அறிக்கையை இணையம் மூலம் தரவிறக்கம் செய்து தரவேண்டும் – பெரிய பெரிய பரிசோதனை நிலையங்கள் பரிசோதனை அறிக்கையை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி தருகிறார்கள். அந்த அறிக்கையை தரவிறக்கம் செய்து கொடுத்த பிறகு சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

பலமுறை அவரை அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன் என்றாலும், அலுவல் சம்பந்தமாக பேசியிருந்தாலும் தனிப்பட்ட விஷயங்களை பேசியது இல்லை. பல வருடங்கள் வேலை செய்து இன்னும் 22 மாதங்களில் பணி நிறைவு பெறப்போகும் அவர் – 58 வயதுக்கு மேலானவர், தனது பிரச்சனைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அவருக்கு மூன்று குழந்தைகள், இரண்டு மகன், ஒரு மகள். முதலில் மகளைப் பற்றித்தான் பேச ஆரம்பித்தார். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர், அவரது மகள் வீட்டின் அருகில் உள்ள ஒரு இளைஞரைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் சொல்ல, நிரந்தர வேலை இல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்வதில் இருக்கும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார். காதல் கண்ணை மறைக்க, “மணந்தால் மகாதேவன், இல்லையேல் மரண தேவன்!” என்று வசனம் பேச, இவரும் அந்த இளைஞரின் பெற்றோரைச் சந்தித்து முடிவு எடுத்திருக்கிறார் – அந்த இளைஞர் கேரளாவைச் சேர்ந்த கிறித்துவர், இவர் தில்லியில் உள்ள இந்து! கிருத்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் நடந்தது.

இளைஞர் Gym ஒன்றில் Instructor-ஆகப் பணிபுரிகிறார் – நிரந்தரமில்லாத வேலை. அப்பெண் எந்த வேலைக்கும் போகக்கூடாது எனச் சொல்ல வீட்டிலேயே இருக்கிறார். மாமியாருக்கும் மருமளுக்கும் ஒத்து வரவில்லை. பிறகு புனே நகரத்திற்குச் சென்று அங்கே இருவரும் வாழ்கிறார்கள். காதலன் – காதலி என்ற நிலையிலிருந்து கணவன் – மனைவி என்ற நிலைக்கு வந்த பிறகு அவர்களுக்குள் நிறைய பிரச்சனைகள். குழந்தை பிறந்தால் சரியாகும் எனச் சொன்னால், இளைஞருக்கு குழந்தை இத்தனை சீக்கிரம் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை எனத் தட்டிக் கழிக்கிறார்.  பிரச்சனைகள் அதிகமாக அந்தப் பெண் அப்பா வீட்டிற்கு வந்துவிடுகிறார்! விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இந்த மாதத்தில் விவாகரத்து தீர்ப்பாகிவிடுமாம். எனக்குப் பிறகு என் மகளின் நிலை என்ன என்று கண்களைக் கசக்க ஆரம்பித்தார்.

அவரை ஆஸ்வாஸப்படுத்தி, எல்லாம் சரியாகி விடும் கவலை வேண்டாம், மகள் படித்திருந்தால் ஏதேனும் வேலைக்கு ஏற்பாடு செய்யலாம் எனச் சொல்ல, கண்களைத் துடைத்தபடி, மகள் பட்டதாரி என்று சொல்லி சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தார்.  “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அன்றைக்கு எனது கடைசி மகனின் பிறந்த நாள். அலுவகத்தில், மாதத்தின் பயணச் செலவுக்காக கொடுத்த 150 ரூபாயில் பிறந்த நாள் கேக் வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்லலாம் என புறப்பட்டபோது அலுவலக தொலைபேசிக்கு அழைப்பு வருகிறது.

உங்கள் இரண்டாவது மகனுக்கு விபத்து – 13 வயது தான் – சைக்கிளில் சென்றவரை ஒரு L Board கார் ஓட்டுனர் இடித்து சில அடி தூரம் இழுத்துச் செல்ல, மண்டையில் அடிபட்டு சிறுவன் இறந்து விட்டான் என்ற தகவல் வருகிறது! இதைச் சொல்லும்போதே மீண்டும் அழ ஆரம்பிக்கிறார். எப்படி அவரை சமாதானப்படுத்துவது என, அவர் மேல் கை வைத்து, தட்டிக்கொடுத்து, கவலைப் படாதீர்கள், ஆண்டவனின் விளையாட்டை யாரும் புரிந்து கொள்ள முடியாது என்றெல்லாம் சொல்ல, அழுதபடியே “ஒரு மகனின் பிறந்த நாள், மற்ற மகனின் இறந்த நாள்…. ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் அழுது கொண்டிருக்கிறேன்” என்று அழுதபடியே சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டிலே நீங்கள் தான் மூத்தவர், குடும்பத்தலைவர் – நீங்களே இப்படி தடுமாறினால் வீடு முழுவதும் கஷ்டப்படும். அதனால் தைரியமாக இருங்கள் எனச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

எனக்கு ஒரு முக ராசி – தன்னுடைய சொந்தப் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்து சொல்லி அழுவதற்கு இப்படி சிலர்! என் பிரச்சனைகளை பெரிதாக நினைத்து அதை எப்படித் தீர்ப்பது என்ற யோசனையில் இருந்த எனக்கு அவர் கஷ்டங்களைக் கேட்டதும், என் பிரச்சனைகள் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது! அவரது கஷ்டங்களை எல்லாம் என்னிடம் இறக்கி, கண்ணீர் விடுத்து, தனது மனக்குறையை லேசாக்கிக் கொண்டு சென்றார் அவர் – அவரது கஷ்டங்கள் முன் என் கஷ்டம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணத்துடன் இந்தப் பதிவினை தட்டச்சு செய்தேன் – எட்டரை மணிக்கு, அலுவலத்திலிருந்து வீடு திரும்பிய பிறகு தான்!

முடிவில்லாத பிரச்சனைகள் – யாருக்குத் தான் இல்லை பிரச்சனை? எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு நிச்சயம் உண்டு என்பது தானே உண்மை…..

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

35 கருத்துகள்:

  1. உண்மைதான், ஒரு கோட்டுக்கு அருகே, அதைவிட ஒரு பெரிய கோட்டைப் போடும்போது, முன்பு பெரிதாக இருந்தது இப்போ சின்னதாகி விடுகிறது.. அப்படித்தான் பிரச்சனைகளும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு கோடு தத்துவம் - சிறப்பு. பதிவினை எழுதும்போது இதையும் குறிப்பிட வேண்டும் என நினைத்திருந்தேன் - எழுதவில்லை.

      அட இந்த பதிவுல மியாவ் குரல் தான் முதல்ல கேட்டிருக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  2. நாள் நன்றாக இல்லை என்று சொல்வதைவிட, நம் அனுபவங்கள் நன்றாய் இல்லை என்று சொல்லலாம். சொல்வதில் நாம்! "யார் மூஞ்சில முழிச்சேனோ" - பழியை எப்போதும் அடுத்தவர் மேல் போடவே ஆசைப்படுகிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லில் இடித்துக் கொண்டு கல் இடித்துவிட்டது என்று சொல்வது போலத் தான்! பழி போடுவதிலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அந்த அலுவலக நண்பரின் அனுபவங்கள் படிக்கக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவரின் மருத்துவ ரிப்போர்ட் வேறு என்ன குண்டுகள் போட்டதோ.. சிலபேர் ராசி அப்படி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே சர்க்கரை வியாதி உண்டு - இன்சுலின் தானாகவே போட்டுக்கொள்கிறார் என்பதால் சுகர் சரியான அளவில் தான் இருந்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. இரு கோடுகள் தத்துவத்தில் கடவுள் உங்களுக்கு ஒரு பெரிய கோட்டினை உங்களுக்கு வரைந்து காட்டி உங்கள் பிரச்னையை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார் போல. மதுரையிலிருந்து வத்ராப்புக்குப் பணிக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் அலுவலகத்தில் ஒரு பெரிய பிரச்னை. குழப்பம். திருமங்கலம் தாண்டும்போது அங்கு ஒரு சர்ச் வரும் அதன் சுவரில் ஒரு பெரிய வாசகம் 'நீ என்ன செத்தா போய்விட்டாய்? பிரச்னைகளைத் தீர்க்க முடியாதா என்ன' என்கிற அர்த்தத்தில் அமைந்த வாசகம். எனக்கு அது அன்று கொடுத்த தைரியம்...! இன்றுவரை நினைவு கூர முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவத்தினையும் இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அடடே... என்ன இது? கமெண்ட் மாடரேஷன் எடுத்து விட்டீர்களா! இதுகூட நல்லாதான் இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமெண்ட் மாடரேஷன் - பழைய பதிவுகளுக்கு [இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவுகளுக்கு] இப்போதும் உண்டு. புதிய பதிவுகளுக்கு இல்லை! அலுவலகத்திலிருந்து வீடு வந்து பப்ளிஷ் செய்ய வேண்டியிருக்கிறதே. அதனால் எடுத்து விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. எல்லாருக்கும் பிரச்னைகள் உண்டு. என்றாலும் சிலரின் பிரச்னைகள் தலை சுற்ற வைக்கும். அதைப் பார்க்கையில் நமக்கெல்லாம் ஒண்ணுமே இல்லைனு தான் தோணும். நல்ல அனுபவப் பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  7. விரைவில் உங்கள் சங்கடங்கள் தீர்ந்து நல்ல முடிவு காணப் பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கடங்கள் - பெரிதாக ஒன்றுமில்லை - எல்லாம் சரியாகும் என்று தெரிந்தாலும் யோசிக்காமல் இருக்க முடிவதில்லையே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  8. மனது வேதனையாக இருக்கிறது பெரியவரின் குடும்பநிலை எல்லாம் சரியாகட்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அவரது பிரச்சனைகள் முடியட்டும் என்ற பிரார்த்தனையோடு தான் இருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. பிரச்னை இல்லாத இடமே இல்லை. நாம் அதை அணுகும் முறையைப் பொறுத்தே அதுவும் அமையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஐயா. பிரச்சனை இல்லாத இடம் தான் எது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. பெரியவரின் குடும்பப் பிரச்சனைகள் வருத்தத்தை வரவழைத்தது. இளமை மோகம் எத்தனை ஆபத்தில் கொண்டுவந்துவிடுகிறது. பையனின் மரணம் அவர் கையில் இல்லை.

    கடைசியில் உங்கள் பிரச்சனை, ஒன்றுமேயில்லை என்று ஆகிவிட்டதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னர் நம் பிரச்சனை பெரிதாகத் தெரிவதில்லை - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. பாவம் பெரியவர்...வேதனைதான்..

    வாழ்க்கை இருகோடுகள் தத்துவம் தானே...ஒரு கோடு அதன் பின் அதைவிடப் பெரிய கோடு வந்தால் மற்றது சிறிதாகிவிடும் தானே...நம்முடைய பிரச்சனைகளுக்குமே தான் இல்லையா..

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதிநாடு வரிகள் நினைவுக்கு வருகிறது..நீங்கள் இறுதியில் சொன்னது மிகவும் சரியே பல சமயங்களில் நம் பிரச்சனைகள் ஒன்றுமே இல்லை என்றாகிவிடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு கோடு தத்துவம் - பதிவு எழுத ஆரம்பிக்கும் போது சேர்க்க நினைத்தது - பிறகு விட்டு விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  12. >>> யாருக்குத் தான் இல்லை பிரச்சனை?.. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு நிச்சயம் உண்டு..<<<

    உண்மைதான்.. ஆனாலும்..
    துக்கங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துக்கங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - உண்மை. தாங்கும் மனநிலை பலருக்கும் இல்லை என்பதும் உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  13. வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சும்மாவா சொன்னாங்க?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்குத்தான் இல்லை பிரச்சினை - தலைப்பை ரசித்தேன். பதிவினுள் உங்கள சக ஊழியரின் புலம்பல் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினைகள் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. - "உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" - என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவில் வந்தன

      நீக்கு
    2. கண்ணதாசன் பாடல் வரிகள் - எடுத்துக் காட்டியமைக்கு நன்றி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  15. உடுப்பதற்கு இல்லை என்று உடன் பிறந்தவன் வீட்டிற்குச் சென்றால் அவன் ஓலைப் பாயை உடுத்திக்கொண்டு எதிர்த்தார்ப்போல் வந்தானாம் என்னும் சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.

    //எனக்கு ஒரு முக ராசி – தன்னுடைய சொந்தப் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்து சொல்லி அழுவதற்கு இப்படி சிலர்! //

    எனக்கும் இப்படிப்பட்ட ராசி உண்டு. நான் பணியில் இருந்த பொழுது என் சீனியர்கள் சிலர் கூட என்னிடம் அவர்களின் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். என்னிடம் ஏன் இதெயெல்லாம் சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். வருத்தத்தில் இருக்கும் மனிதர்களுக்கு பெரும்பாலும் அவர்கள் குறைகளை கேட்பதற்கு இரண்டு காதுகளும், சொல்லப்பட்ட விஷயம் வெளியே செல்லாது என்னும் நம்பிக்கையும் வேண்டும். அப்படிப்பட்டவர்களோடுதான் பகிர்ந்து கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொலவடை ரசித்தேன்.

      உங்களுக்கும் என்னைப் போலவே ராசி. உண்மை தான் - அவர்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, அவர் பற்றி நண்பர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள் - நம்மிடமிருந்து என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  16. தவிர்க்கப்பட முடியாதவை அனுபவித்துதானே ஆக வேண்டும் சந்தோஷம் பகிர்வதால் அதிகரிக்கும் துக்கம் பகிரும் போது குறையும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவிர்க்க முடியாதவற்றை அனுபவித்தே ஆக வேண்டும். உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது என்பது ஒரு திறன் (skill). இந்தத் திறனை ஆங்கிலத்தில் empathy என்றும் தமிழில் பச்சாதாபம் என்றும் குறிப்பிடுவதுண்டு. பிறரிடம் மனம்விட்டுப் பேசுவது, அவர்கள் சொல்வதை முழு விருப்பத்துடன் கேட்பது; ஒருவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுவது; பிறருடைய மன நிலையை அவர்களிடத்தில் இருந்து புரிந்து கொள்ளுதல்; கேட்டால் மட்டும் யோசனை சொல்லுதல் போன்ற அணுகுமுறைகளை (attitudes) empathy skills என்று வகைப்படுத்துவது உண்டு.
    இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், அலுவலகத்திலோ, இல்லத்திலோ, நண்பர்களிடமோ இணக்கமாக இருப்பதற்கு empathy என்னும் emotional intelligence skill ”உணர் திறனறிவு” மிகவும் தேவையான ஒன்று. இது தங்களிடம் மிகுந்து காணப்படுவதால்தான் நண்பர்கள் தங்களை அணுகி தங்கள் பிரச்சனைகளை வெளியிடுகிறார்கள். எல்லோருக்கும் இந்தத் திறன் எளிதில் அமைந்துவிடாது. தங்களிடம் இந்த empathy skill மிகுந்து காணப்படுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சற்று விரிவாக எழுதிவிட்டேன் தவறாக நினைக்க வேண்டாம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. empathy skill பற்றி விரிவாக குறிப்பிட்டமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....