சனி, 11 ஜனவரி, 2020

காஃபி வித் கிட்டு – தேவைகள் – எள் மகசூல் – கதை மாந்தர் – ரிக்‌ஷா – கலோரி – தக்காளி சட்னி - நிர்பயா

காஃபி வித் கிட்டு – பகுதி 52

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வாழ்க்கையில் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்ந்தால் நீ புத்திசாலி..! அதே நேரத்தில், தேவையைப் பெருக்கிக் கொண்டு அதை சமாளிக்கத் தெரிந்தால் நீ திறமைசாலி! இரண்டுமே நம் கையில் தான் உள்ளது! 

இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்தி – எள் சாகுபடியில் அதிக மகசூல்:



நாமக்கல் : எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டிய, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் விவசாயி, பிரதமரிடம் விருது பெற்றார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், சீராப்பள்ளி ஊராட்சி, குஞ்சாம்பாளையத்தை சேர்ந்தவர், பாப்பாத்தி, 61. ஜெயா, ரமேஷ் என, இரு பிள்ளைகள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன், அவரது கணவர் பொன்னுசாமி உயிரிழந்தார்.இதையடுத்து, கணவர் மேற்கொண்ட விவசாயத்தை, பாப்பாத்தி தொடர்ந்தார். 2017 - 18ல், 1 ஹெக்டேர் நிலத்தில், இயற்கை முறையில், எள் சாகுபடி செய்தார். வேளாண் துறை ஆலோசனைப்படி, எண்ணெய் வித்து பயிரான எள் சாகுபடி மேற்கொண்டதில், 1,210 கிலோ அறுவடை செய்தார். அதிகளவில் மகசூல் எடுத்த விபரம் அறிந்த, சக விவசாயிகள் ஆச்சரியப்பட்டனர்.
இது தொடர்பாக, வேளாண் துறையினர், தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். தமிழக அரசு, மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்தது. அதையடுத்து, கர்நாடக மாநிலம், தும்கூரில், 2ம் தேதி நடந்த விழாவில், விவசாயி பாப்பாத்திக்கு, 'கிரிஷி கர்மான்' என்ற, முன்னோடி விவசாயி விருது மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகிவற்றை, பிரதமர் மோடி வழங்கினார்.

பாப்பாத்தி கூறுகையில், ''வேளாண் துறையினர் ஆலோசனைப்படி, எள் சாகுபடி செய்தேன். அதனால் தான், நல்ல மகசூல் கிடைத்தது. இந்த விருது, மேலும் சாதிப்பதற்கு உந்துதலாகவும் அமைந்துள்ளது. விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்வேன்,'' என்றார்.

தினமலர் நாளிதழில் வந்த இந்த செய்தி விவசாயப் பெருமக்களுக்கு ஊக்கம் தரும் செய்தி.  பிரதமரிடம் இருந்து பரிசு என்ற அரசியலை ஒரு பக்கம் விட்டுவிட்டு விவசாயியைப் பாராட்டலாம் நாம்!

இந்த வாரத்தின் சோகம் – கதை மாந்தர் மறைவு:

இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஜனவரி 5, 2018 அன்று ”முடிவில்லாத பிரச்சனைகள் – யாருக்குத் தான் இல்லை பிரச்சனை” என்ற தலைப்பில் அலுவலகத்தில் பணிபுரிந்த Despatch Rider ஒருவர் பற்றி எழுதி இருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதி கீழே…

58 வயதுக்கு மேலானவர், தனது பிரச்சனைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அவருக்கு மூன்று குழந்தைகள், இரண்டு மகன், ஒரு மகள். முதலில் மகளைப் பற்றித்தான் பேச ஆரம்பித்தார். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர், அவரது மகள் வீட்டின் அருகில் உள்ள ஒரு இளைஞரைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் சொல்ல, நிரந்தர வேலை இல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்வதில் இருக்கும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார். காதல் கண்ணை மறைக்க, “மணந்தால் மகாதேவன், இல்லையேல் மரண தேவன்!” என்று வசனம் பேச, இவரும் அந்த இளைஞரின் பெற்றோரைச் சந்தித்து முடிவு எடுத்திருக்கிறார்அந்த இளைஞர் கேரளாவைச் சேர்ந்த கிறித்துவர், இவர் தில்லியில் உள்ள இந்து! கிருத்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் நடந்தது.

இளைஞர் Gym ஒன்றில் Instructor-ஆகப் பணிபுரிகிறார்நிரந்தரமில்லாத வேலை. அப்பெண் எந்த வேலைக்கும் போகக்கூடாது எனச் சொல்ல வீட்டிலேயே இருக்கிறார். மாமியாருக்கும் மருமளுக்கும் ஒத்து வரவில்லை. பிறகு புனே நகரத்திற்குச் சென்று அங்கே இருவரும் வாழ்கிறார்கள். காதலன்காதலி என்ற நிலையிலிருந்து கணவன்மனைவி என்ற நிலைக்கு வந்த பிறகு அவர்களுக்குள் நிறைய பிரச்சனைகள். குழந்தை பிறந்தால் சரியாகும் எனச் சொன்னால், இளைஞருக்கு குழந்தை இத்தனை சீக்கிரம் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை எனத் தட்டிக் கழிக்கிறார்.  பிரச்சனைகள் அதிகமாக அந்தப் பெண் அப்பா வீட்டிற்கு வந்துவிடுகிறார்! விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இந்த மாதத்தில் விவாகரத்து தீர்ப்பாகிவிடுமாம். எனக்குப் பிறகு என் மகளின் நிலை என்ன என்று கண்களைக் கசக்க ஆரம்பித்தார்.

இந்த வாரம் அந்த நபர் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தது – மனதில் வருத்தம் தந்த மறைவு – விவாகரத்தான மகள் வீட்டில் இருக்க, சோகத்திலேயே மனிதர் இறந்த சம்பவம் நிறைய நண்பர்களை அதிர வைத்திருக்கிறது – என்னையும். என்றைக்காவது ஒரு நாள் இறந்து தான் தீர வேண்டும் என்று சொன்னாலும், சில இறப்புகள் நம்மை ரொம்பவே சங்கடப் படுத்தி விடும்.  இந்த Despatch Rider இறப்பும் அப்படியே. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்…

குளிரும் ஒரு ரிக்‌ஷா ஓட்டுனரும் – தலைநகரக் காட்சி…

குளிர் என்றால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கத்தான் தோன்றும் இங்கே. ரஜாய்க்குள் புகுந்து கொண்டால் வெளியே வர எவருக்கும் பிடிப்பதில்லை – அலுவலகம், பள்ளி என போக வேண்டியிருப்பதால் மட்டுமே, வேறு வழியில்லாமல் எழுந்திருக்கிறார்கள் ஒவ்வொருவரும். வீடு வாசல் என இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால் வீடில்லாத பலர் தலைநகர் தில்லியில் உண்டு – இவர்களுக்கென குளிர் காலத்தில் இரவு நேர தங்குமிடங்கள் உண்டு என்றாலும் எண்ணிக்கையில் குறைவு என்பதால் பலருக்கும் இங்கே இடம் கிடைப்பதில்லை.  ரிக்‌ஷா ஓட்டுனர்கள், ஆதரவு இல்லாதவர்கள் என பலரும் குளிரில் வெட்ட வெளியில் நடுங்கிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது மனதில் கஷ்டம்.  எங்கள் வீட்டின் அருகே உள்ள ரிக்‌ஷா ஓட்டுனர் இரவு நேரத்தில் தன் ரிக்‌ஷாவில் ஒற்றைக் கம்பளி – அதுவும் குளிர் தாங்கவே தாங்காத ஒரு கம்பளியைப் போர்த்தியபடி, தன்னைக் குறுக்கிக் கொண்டு ரிக்க்ஷாவில் தூங்குவதைப் பார்க்க மனதுக்குள் வலி. அவருக்கு ஒரு கம்பளி கொடுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது – ஆனால் அவருக்கு நான் தான் கொடுத்தேன் என்று தெரியாமல் தர வேண்டும் – இன்றைக்கு இரவில் இதை செயல்படுத்த வேண்டும். 

இந்த வாரத்தின் விளம்பரம் – அதிக கலோரியும் பயன் தரும்!

Huawei அலைபேசிக்கான விளம்பரம் ஒன்று – 2018 டிசம்பரில் வெளிவந்தது – உங்களில் சிலர் பார்த்திருக்கலாம் – என்றாலும் பார்க்காதவர்களுக்காக இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக இங்கே…  எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள். 



இந்த வாரத்தின் கேள்வி:

தமிழ் கோராவில் சில சமயங்களில் மிக ஸ்வாரஸ்யமான கேள்விகள் வரும். அப்படி ஒரு கேள்வி – நம்மில் பலருக்கும் இப்படி சங்கடமான சூழலில் மாட்டியிருக்க வாய்ப்புண்டு! கேள்வியும் அதற்கு வந்த ஒரு பதிலும் பாருங்களேன்!

செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்ததுண்டா? அந்த அனுபவத்தை பகிர முடியுமா?

ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு. ஓராயிரம் எடத்துலைல வாங்கிருக்கேன். சம்பவம் நடந்த அன்னைக்கு சாயங்கால நேரம். அப்ப நான் சின்ன பையன். வீட்டு பாடம் எழுதி முடுச்சுட்டு அப்பதான் வீட்ட விட்டு வெளியில வந்தேன். பக்கத்து வீட்டு அங்கிள் நல்ல மொரட்டு ஆளா இருப்பாரு. விட்டாரு ஒரு அரை. காது கொய்ய்ய்ய்யினு கேட்டுசு. வாயி முழுக்க ரத்தம் நிக்கவே இல்லை. அடிச்சிட்டு அவருபாட்டுக்கு போயிட்டாரு. தெரு பசங்க ஒரு நாலு பேரு அப்பதான் என் பக்கதுல வந்து நின்னாங்க. சத்தம் கேட்டு வெளில வந்த என் அம்மா பதறிபோயிட்டாங்க. அடிச்சது யாருனு சொன்னதும் பக்கத்து வீட்டுக்குள்ள போனவங்க அந்த அங்கிள லெஃப்ட் ரைட்டு வாங்கிட்டாங்க. அப்பதான் அந்த மனுசனுக்கு தெரிஞ்சுருக்கு அவரு அடிச்சது ஒரு புள்ள பூச்சியனு.



சரி அதெல்லாம் இருக்கட்டும். செவனேனு போயிட்டு இருந்த என் வாயில ஏன்யா தக்காளி சட்னி வரவச்சனு கேட்டா. நான் அடி வாங்கிட்டு நிக்கும்போது ஒரு நாலு பசங்க வந்து என் பக்கத்துல நின்னானுங்களே அவனுங்க செய்த  வேலைதானாம் அது. அந்த அங்கிள்கு ஒரு குட்டி பொன்னு இருந்துசு. மலேசியா வாழ் மக்கள். நல்ல கொளுகொளுனு இருந்ததும் நம்ம பசங்க சும்மா இல்லாம குண்டமா குண்டமானு வம்பிழுத்துட்டு ஓட, அந்த பொன்னு அவுங்க அப்பாகிட்ட போட்டு குடுக்க, இது தெரியாம நான் எண்ட்றி குடுக்க, ஆஹா அடி வாங்குறதுக்குன்னே அளவு எடுத்து செஞ்ச மாதிரி இருக்காண்டானு அந்த அங்கிள்க்கு தோண, வெளில வந்தது ஒரு குத்தமாடானு கையில ரெண்டு பல்லோட நான் நின்னதுதான் மிச்சம்முஹம்மது நயீம்.

உண்மையோ பொய்யோ, சுவைபட எழுதி இருக்கிறார் நயீம்! ஹாஹா..

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

நிர்பயா – ஏழு வருடங்கள் முடிந்து இப்பொழுது தான் தீர்ப்பு வந்திருக்கிறது – வரும் 22-ஆம் தேதி நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு! மீண்டும் அதில் ஒருவர் வழக்கு போட்டிருக்கிறார் – குற்றம் சாட்டப்பட்ட போது தான் 18 வயதுக்கும் குறைவானவர் என! என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதே நாளில் 2013-ஆம் ஆண்டு, நிர்பயா பற்றி அமிதாப் பச்சன் அவர்கள் எழுதிய ஹிந்தி கவிதையின் தமிழாக்கம் வெளியிட்டிருந்தேன். அந்த பதிவு இன்றைய பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவாக…


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

  1. அந்த மனிதரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. தெரிந்தவர்களில் நம்மிடம் மனம்விட்டுப் பேசுபவர்களின் இழப்பு தாங்கிக் கொள்ள முடியாததே...இறப்பிலாவது அவரது ஆன்மா சாந்தியடையட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறப்பிலாவது.... உண்மை தான் ரமணிஜி - அவருக்கு நிரந்தர அமைதி...

      சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. விவசாயிப் பெண்மணிக்குப் பாராட்டுகள்.. ரோல் மாடல் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ரோல் மாடல் பலருக்கும் - அவரைத் தொடர்ந்து சிலராவது மாறினால் நல்லது தான் ரிஷபன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டிய, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் விவசாயி, பிரதமரிடம் விருது பெற்றார்.//

    வாழ்த்துக்கள்.

    கதை மாந்தர் படித்து மனது கனத்து போனது.

    //ஒரு கம்பளி கொடுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது – ஆனால் அவருக்கு நான் தான் கொடுத்தேன் என்று தெரியாமல் தர வேண்டும் – இன்றைக்கு இரவில் இதை செயல்படுத்த வேண்டும். //

    செயல் படுத்தி இருப்பீர்கள். உங்கள் நல்ல மனது வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை மாந்தர் - கொஞ்சம் கடினமான விஷயம் தான் மறப்பது எனக்கு...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. அலுவலக நண்பர் மரணம் ஜீரணிக்கக் கஷ்டமானது.  சென்னையிலும் குளிர் இருக்கிறது.   அதே சமயம் பகல் ஏற, ஏற  வெயில் கொளுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தமிழகத்திலும் குளிர் அதிகமாக இருக்கிறது என்றே பலரும் சொல்கிறார்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. எள் விளைச்சலில் சாதனை படைத்த பாப்பாத்தியம்மாள் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  7. கதை மாந்தர் - மனம் கனக்கிறது..
    பெண்ணைப் புரிந்துணர்வுடன் வளர்க்கவில்லையோ என்று தோன்றுகின்றது.....

    காணொளி அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை மாந்தர் - மனம் கனத்துத் தான் போனது துரை செல்வராஜூ ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. தாமதமாய் வந்த நிர்பயா குற்றவாளிகளுக்கான தண்டனை விரைவில் நிறைவேற வேண்டும். அமிதாபின் கவிதை ஏற்கெனவே பார்த்தேனோ? நினைவில் இல்லை. காணொளி பின்னர் பார்க்கிறேன். கதை மாந்தர் இன்றைய நாட்களில் அடிக்கடி பார்க்கக் கூடிய ஒன்று. :( காலம் மாறும், காட்சி மாறும் என்றாலும் இப்படி மோசமாக மாற வேண்டாம். செய்யாத தப்புக்கு நிறைய அடி மட்டுமல்ல, திட்டும் வாங்கி இருக்கேன். நம் பக்கத்து நியாயத்தைக் காது கொடுத்துக் கேட்கவும் மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமிதாப் கவிதை - ஏழு வருடங்களுக்கு முன்னர் எழுதியது என்று சொல்லி இருக்கிறேன் கீதாம்மா... பின்னோக்கி ஒரு பார்வை! :)

      செய்யாத தவறுக்கு திட்டு - உண்மை தான். இப்படி பல சமயம் நடக்கிறது. பொறுமையாக இருக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. தங்கள் நண்பரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. மிக மிக அருமையான செய்தி விருது
    வாங்கிய பாப்பாத்தி அம்மாளின் உழைப்புக்கும், துணையாக இருந்த வேளாண் துறைக்கும் வாழ்த்துகள்.

    கதைமாந்தராக வந்தவரின் கதை நினைவில் இருக்கிறது.
    மன வருத்தம் மீளாத்துயிலில் ஆழ்த்திவிட்டது அந்த மனிதரை.
    அஞ்சலிகள்.
    நிர்பயாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்.
    அமிதாப் அவர்களின் எழுத்து,சிந்தனை வலிமைகாட்டுகிறது நன்றி மா.
    தில்லி குளிர் உறைய வைக்கிறது. கடவுள் உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் மூலம்
    நிறைய ஏழைகளின் துயரைத் தீர்க்கட்டும். வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை மாந்தர் - கஷ்டம் தான் வல்லிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. Millions are homeless in India. They fight for survival in winter. Every year we give woolens to someone. But the poor are poorer, the rich are richer. Nirbhaya case verdict speaks that we need to educate our children to respect women and how to behave in society.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  12. விவசாய பெண்மணி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....