திங்கள், 13 ஜனவரி, 2020

எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம்




அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.

பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் – முல்லர்.


சென்ற கிண்டில் வாசிப்பு பதிவு – கிண்டில் வாசிப்பு – ஐந்து முதலாளிகள் கதை – ஜோதிஜி - வாசிக்காதவர்கள் – சுட்டியைக் கிளிக்கி வாசிக்கலாம்!



நண்பர் பரிவை சே. குமார் – மண்மணம் வீசும் இனிமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். பல தளங்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். அவரது எழுத்துப் பணி கல்லூரி காலத்திலேயே தொடங்கி விட்டது என்றாலும் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்த பிறகே எனக்கு அறிமுகம். நான் தொடர்ந்து, ரசித்து வாசிக்கும் கதைகளில் அவருடைய கதைகளும் உண்டு. சில கதைகள் படித்து நீண்ட நாட்களுக்குப் பின்னரும் மனதில் நினைவில் நிற்கும். வலைவழி உறவென்றாலும் நேரில் சந்தித்தது போன்று தொடர்ந்து நினைவில் நிற்பவர் குமார். ஒரு சில சமயங்களில் அவருடன் வாட்ஸப் வழியும் மின்னஞ்சல் வழியும் தொடர்பு கொண்டதுண்டு. இத்தனை வருடங்களில் வெளிவந்த அவரது ஆக்கங்கள் இன்னும் புத்தகமாகக் கொண்டு வரவில்லையே என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. இந்தியாவிலிருந்து பாலை நாட்டில் இருந்து கொண்டு புத்தகம் வெளியிடுவதில் சில சிக்கல்கள் உண்டு என்பதால் தான் வெளியிடாமல் இருக்கிறார் என்று எனக்கு நானே பதில் சொல்லிக் கொள்வேன்!

சமீபத்தில் தான் தனது 12 கதைகள் ஒரு தொகுப்பாக “எதிர்சேவை” என்ற தலைப்புடன் புத்தகமாக வெளியிடப்பட்ட சந்தோஷ செய்தியைப் பகிர்ந்து கொண்டார் குமார். தகவல் தெரிந்த பிறகு ”கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பக”த்தினை மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டு புத்தகம் அனுப்பி வைப்பது பற்றிக்கேட்டேன். அடுத்த நாளே தகவல் கிடைக்க, கூகிள் பே வழி பணம் அனுப்பி வைத்து ஒரு வாரத்திற்குள் புத்தகம் தில்லி முகவரிக்கு வந்து சேர்ந்தது.  விரைந்து செயல்பட்ட அந்த நண்பருக்கு நன்றி. புத்தகம் பதிப்பித்தவர் முகவரி கீழே.

கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம், எண்-3, நேரு தெரு, மணிமேடு தண்டலம், பெரிய பணிச்சேரி, சென்னை – 600122. கைபேசி: 9840967484.  மின்னஞ்சல் முகவரி – kalakkaldreams@gmail.com. இணையதள முகவரி - www.kalakkaldreams.com. புத்தகத்தின் விலை – ரூபாய் 100/- தபால் செலவு தனி!

மேல் பத்தியில் சொன்னது போல, மொத்தம் 12 கதைகள் இந்தத் தொகுப்பில். மூன்றாம் கதையாக புத்தகத்தின் தலைப்பாக வந்திருக்கும் “எதிர்சேவை” கதை. பன்னிரெண்டு கதைகளுமே பிடித்தது என்றாலும், எனக்கு அதிகமாகப் பிடித்தது, படித்ததும் நீண்ட நேரம் புத்தகத்தினைக் கீழே வைத்து – யோசிக்க வைத்தது முதல் கதை – நண்பர் பத்மநாபன் அவர்களுடன் இந்தக் கதை பற்றி அடுத்த நாள் விரிவாகப் பேச வைத்தது – நினைவின் ஆணிவேர் என்ற கதை தான். முதல் கதையே முத்தான கதை. காதல், காதலால் வந்த உறவுகளுடன் உண்டான மோதல் – பிரிவுக்குப் பிறகு ஒரு சூழலில் பிரிந்த பெற்றோரைச் சந்தித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காதலித்து மணம் புரிந்த மனைவியை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன்/கணவன் – அவருக்குக் கிடைத்த அனுபவம் என ரொம்பவும் சிறப்பாக கதையை நகர்த்தி இருக்கிறார் குமார். ரொம்பவே பிடித்த கதையாக முதல் கதை.

தனது முன்னுரையில் “குடும்பம், குழந்தைகள் தூர தேசத்தில் இருக்க, அமீரகத்தில் ஒரு கட்டில் வாழ்க்கையில் சேணம் பூட்டிய குதிரையாய் அலுவலகம், அறை என்று தொடரும் நாட்களில்… வலியை, சோகத்தை, வெறுமையைப் போக்கும் தோழனாய் அமைந்தது இந்த எழுத்து” என்று சொல்லி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. தனிமையிலிருந்து விடுபட நிறைய வழிகள் இருந்தாலும் என்னைக் கேட்டால் வாசிப்பும், எழுத்தும் தான் முதலிடம் பெற வேண்டியவை. தனிமைச் சூழல் பல தீங்கு தரும் செயல்களைச் செய்யத் தூண்டும் என்றாலும் அதிலிருந்து விலகி இருக்க நல்லதொரு வழி - வாசிப்பும், எழுத்தும் என்பதில் சந்தேகமில்லை.  அவர் முன்னுரையிலிருந்து இன்னுமொரு வரி – அவரின் எளிமையைச் சொல்லும் வரி – ”என் வாழ்க்கையில் என்னால் எதுவும் நிகழ்ந்து விடவில்லை… இப்போதும் எப்போதும் என் நண்பர்களால்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது… அவர்களே நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.”

முதல் கதை போலவே, ”குலசாமி” கதையும் ரொம்பவும் பிடித்த கதைகளில் ஒன்று. அப்பாவின் பாசம், அப்பாவிற்கும் மகளுக்குமான உறவு பற்றிச் சொல்லும் போது ஒரு பெண்குழந்தையின் அப்பாவாக இருக்கிற ஒவ்வொரு தகப்பனும் தன்னை அங்கே நிறுத்திப் பார்க்க முடியும். குலசாமி கதையிலிருந்து சில வரிகள் இங்கே உங்கள் வாசிப்பிற்காக – ”அப்பாக்களின் பாசமும்… அது தாய்ப்பாலைப் போன்றது. அது எளிதில் கிடைத்துவிடாது. அப்பாக்களும் எதையும் எதிர்பார்ப்பதில்லைதான். ஆனாலும் பாசத்தை அவ்வளவு சீக்கிரத்தில் வெளிக்காட்ட மாட்டார்கள். அப்பாக்களுக்கு தங்களின் மகன்கள் இளவரசர்களாகத் தெரிந்தாலும் இளவரசிகளான மகள்களைத்தான் ரொம்பப் பிடிக்கும். அதனால் தான் பெண் பிள்ளைகள் கடைசிவரை அப்பாக்களுடன் ஒட்டிக் கொள்கிறார்கள். வீட்டு ஆண்களிடம் சொல்ல முடியாத சில விஷயங்களை அம்மாவிடம் சொன்னாலும் ஒட்டுதல் என்னமோ அப்பவிடம் தான்!” அப்பாவிடமிருந்து விலகி நின்ற கதையின் நாயகி கடைசியில் என்ன செய்தார் என்று சொல்லும் கதை.

நேசத்தின் ராகம் – இந்த சமூகம் பல சமயங்களில் உறவுகளைக் கொச்சப்படுத்தத் தயங்குவதே இல்லை. ஒரு பெண்ணும், ஆணும் பழகினார்கள் என்றாலே அவர்களுக்குள் இருப்பது என்னவகை உறவு என்று தான் கேட்கும் – பழகும் அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் – பார்க்கும் பார்வையில் தானே நல்லதும் கெட்டதும்! ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உறவு என்றாலே தகாத உறவு என்ற எண்ணத்துடனேயே அனைவரும் பார்க்கும்போது, சம்பந்தப்பட்ட இருவரும் எத்தனை கஷ்டப்படுவார்கள் என்று அவர்கள் யாருமே உணர்வதில்லை என்பது சோகம். இந்தக் கதையும் ஒரு ஆசிரியருக்கும் அவரது மாணவியாக வந்து மூத்த மகள் என்று சொல்லும் அளவிற்கு இருந்த ஒரு பெண்ணுக்கும் உண்டான பிரச்சனைகளைச் சொன்ன கதை. ரொம்பவே பிடித்த கதைகளில் இந்தக் கதையும் உண்டு.  முடிவும் நல்ல முடிவாகவே இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

மொத்தம் பன்னிரெண்டு கதைகள் – அதில் மூன்று எனக்கு அதிகமாகப் பிடித்தது என்று இங்கே பகிர்ந்து இருக்கிறேன் – அதனால் மற்ற கதைகள் பிடிக்கவில்லை என்று அர்த்தமல்ல! அவையும் நல்ல கதைகள் – தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளுமே நல்ல கதைகள் தான். புத்தகத்தினை வாசிக்க விருப்பம் இருந்தால் மேலே சொன்ன மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டு வாங்கிப் படிக்கலாம்! நிச்சயம் உங்களுக்கும் இந்தக் கதைத் தொகுப்பு பிடிக்கக் கூடும்.  நண்பர் பரிவை சே. குமாரின் கைவண்ணத்தில் மேலும் பல கதைகள் எழுத, அவற்றைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து அவரது புத்தகங்கள் வெளிவரட்டும்!

இந்த நாளின் வாசிப்பனுபவம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பின்னூட்டம் வழியே பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லியிலிருந்து…

24 கருத்துகள்:

  1. பரிவை குமார் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை நானும் ஆமோதிக்கிறேன்.  பாசமான நண்பர்.  மரியாதையான மனிதர்.

    பகிர்ந்திருக்கும் கதைகளை நானும் படித்த நினைவு இருக்கிறது.  பாராட்டுகளும், வாழ்த்துகளும் குமார்.

    பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மிக அன்பாகப் பேசுபவர் பரிவை சே.குமார். ஓரிரு கதைகளை நானும் படித்திருக்கிறேன். முகநூலில் அவர் புத்தக வெளியீடு பற்றிப் போட்டிருந்தார்கள். இந்த வருஷப் புத்தகத்திருவிழாவிலும் அவர் புத்தகம் விற்பனைக்கு இருக்கிறது என நினைக்கிறேன். அமோகமாகப் புத்தகம் விற்கப் பிரார்த்திக்கிறேன். தொடர்ந்து மேலும் பல புத்தகங்கள் வெளியிடவும் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும். அழகாய் விமரிசனம் எழுதி இருக்கும் வெங்கட்டுக்கும் வாழ்த்துகள். சுருக்கமாகவும் கதைக்கருவை ஓரிரு வார்த்தைகளில் சொல்லியும் எழுதி இருக்கார். நானெல்லாம் கிட்டத்தட்ட முழுக்கதையையே சொல்லி இருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானெல்லாம் கிட்டத்தட்ட முழுக்கதையே சொல்லி இருப்பேன்// ஹாஹா...

      //அழகாய் விமர்சனம் எழுதி இருக்க்கும் வெங்கட்டுக்கும் வாழ்த்துகள்// நன்றி கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அன்பின் குமார் அவர்களை நானறிவேன்...
    அவரது எழுத்துக்களும் அப்படியே..

    மேலும் பல சிறப்புகளை எய்துதல் வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. மிக சிறப்பான பகிர்வு ...

    குமார் அவர்களுக்கு மகிழ்வான வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  5. பரிவை குமார் பாணியை அதிகம் ரசிப்பேன். உங்கள் மதிப்புரை நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. பரிவை குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

      நீக்கு
  8. கதை விமர்சனம் மிக அருமை.
    கதையை மிக நன்றாக எழுதுவார் குமார்.
    குமாருக்கு வாழ்த்துக்கள்.
    நிறைய புத்தகங்கள் வெளி வர வாழ்த்துக்கள் குமார்.

    மிக அருமையாக கதையை விமர்சனம் செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. சிறந்த பதிவு. தொடர்ந்தும் வலைத்தளத்தில் எழுதி வருவது மகிழ்ச்சி. எனது வலைத் தளத்துக்கும் முதல் நபராக வந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

    உங்கள் பதிவை என் தளத்தில் இணைத்துள்ளேன்.

    சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | எதிர்சேவை – பரிவை சே. குமார் - வாசிப்பனுபவம்
    https://sigaram6.blogspot.com/2020/01/edhir-sevai-parivai-se-kumar-venkat-nagaraj.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா மகிழ்ச்சி... உங்கள் பக்கத்தில் இப்பதிவின் சுட்டி தந்தமைக்கு நன்றி சிகரம் பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பரிவை குமார் வாழ்த்துகள். இவரின் கதைகள் எனக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  12. வணக்கம் அண்ணா.
    நம் நட்பு வட்டத்தில் தங்களின் முதல் விமர்சனம் இன்றுதான் பார்க்க முடிந்தது. புத்தகம் வாங்கி வாசித்து எழுதியதற்கு மிக்க நன்றி.
    ஊருக்கு வந்து உடல் நலமின்மையால் தேவகோட்டை - மதுரை என அலைந்ததில் இணையப் பக்கமெல்லாம் போகலை. தனபாலன் அண்ணன் தவிர வேறு யாருடனும் பேசவும் இல்லை. இந்தப் பயணம் வலி, வேதனை நிறைந்ததாய் அமைந்தது.
    இப்போ அபுதாபி வந்துட்டேன்... மாத்திரை மருந்துகளுடன்... கம்பெனி வரச்சொல்லி அழைத்ததால்...
    மிக விரிவான விமர்சனம்... ரொம்ப நன்றி.
    அடுத்த புத்தகம் குறித்த விபரம் விரைவில் சொல்கிறேன்.
    உங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி பரிவை சே. குமார். உடல் நலம் முக்கியம். கவனித்துக் கொள்ளுங்கள். இன்னுமொரு விமர்சனம் - நண்பர் பத்மநாபன் வழி வந்தாலும் வரலாம். இந்த வாரம் தான் வாசித்து முடித்தார் அவர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....