வெள்ளி, 12 ஏப்ரல், 2024

கதம்பம் - சுடிதார் டாப்ஸ் - யூட்டியூப் அலப்பறைகள் - ப்ரெட் மலாய் குல்ஃபி - வெயிலோ வெயில் - இலை வடாம்! (அ) தளிர் வடாம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட மகளுக்கு ஒரு கடிதம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




*******


சுடிதார் டாப்ஸ் - 29 மார்ச் 2024:


மகள் யூ ட்யூப்பில் பார்த்து தைத்த சுடிதார் டாப்ஸ் - உங்கள் பார்வைக்கு! 



*******


யூட்டியூப் அலப்பறைகள் - 29 மார்ச் 2024:



யூட்டியூபில் பார்த்த ஒரு shorts...!


Foodie ஒருவர் ஒரு ரெஸ்ட்டாரன்ட்டிற்குச் சென்று pudding ஒன்றை ஆர்டர் செய்கிறார்! அவருக்கு வெள்ளை வெளேர் என்று அழகான பூனைக்குட்டியைப் போல புட்டிங் வருகிறது! 


இத்தோடு அந்த ஷார்ட்ஸை முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!!!


இருங்க! இப்போ பூனைக்குட்டியை எப்படி சாப்பிடுகிறேன் பாருங்கள் என்று அதன் காது பகுதியை கடிக்க.... உள்ளிருந்து சிகப்பாக ஒரு திரவம்  வெளியே வர....!!! கடவுளே...!!


கண்ணுக்குள் அழகான பூனைக்குட்டி தான் நினைவுக்கு வருகிறது...🙁


*******


ப்ரெட் மலாய் குல்ஃபி - 31 மார்ச் 2024:



கொளுத்தும் வெயிலில் சில்லென்று ஏதாவது சுவைத்தால் நன்றாகத் தான் இருக்கும்! சட்டென்று அரைலிட்டர் பாலைக் காய்ச்சி இனிப்புக்கு சர்க்கரையும், ரெண்டு ஸ்லைஸ் ப்ரெட்டும், நட்ஸ் கொஞ்சமும் பொடி செய்து போட்டு செய்த குல்ஃபி! சுவை ஜோர்! மகளுக்கு மிகவும் பிடித்திருந்தது!


*******


வெயிலோ வெயில் - 2 ஏப்ரல் 2024:



இம்முறை மார்ச் மாதத்திலேயே அப்படியொரு வெப்பம்! கொளுத்தி எடுக்கிறது! நாள்முழுதும் வியர்வைக் குளியல் தான்! வியர்த்து வியர்த்து தலையெல்லாம் பாரமாகி விடுகிறது! ஒரு மழை வந்து குளிர்விக்காதா என்ற ஏக்கமும் தவிப்பும் உண்டாகி விடுகிறது!


நேற்றைய வாரச்சந்தையில் மண்சட்டிகளும், மண்ஜாடிகளும் குவிந்திருக்க ஒவ்வொன்றுமே அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது! 'குழம்பு சட்டி எடுத்துட்டு போய் சமைச்சுப் பாரும்மா! அவ்வளவு ருசியா இருக்கும்!' என்று கடைக்காரம்மா சொல்லிக் கொண்டே இருந்தார்! 


நம்ம வீட்டில் தான் பத்து வருடங்களுக்கு மேலாகவே மண்பாத்திர சமையல் தானே! அதைத் தவிர வேறு எதில் செய்வது என்று எனக்கே இப்போது தெரிவதில்லை...🙂 அந்த அளவுக்கு ஒன்றிப் போய் விட்டேன்...🙂 


கொளுத்தும் கோடை வெயிலுக்கு ஏதேனும் திரவமாக பருகிக் கொண்டிருந்தாலே போதும் போல இருக்கிறது! தண்ணீரில் எலுமிச்சை, நெல்லிக்காய், புதினா, வெட்டிவேர் என்று எல்லாவற்றையும் போட்டு வைத்திருக்கிறேன்! அப்படியே உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்த நீர்மோர்!


அவ்வப்போது இவற்றை பருகிக் கொண்டிருந்தால் உடல் உஷ்ணத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்! பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களுக்கு பதிலாக நன்மை தரக்கூடிய இவற்றை வழக்கப்படுத்திக் கொள்ளலாமே!


*******


இலை வடாம்! (அ) தளிர் வடாம் - 5 ஏப்ரல் 2024:



இங்கு திருச்சியில் தாங்க முடியாத வெயிலாக இருக்கிறது! சரி! இந்த வருடத்திற்கான கோட்டாவுக்காக  கொஞ்சம் போல இலை வடாம் போட்டுள்ளேன்! ஒரு நாளிலேயே காய்ந்து பொரித்தும் சாப்பிட்டு விடலாம்..🙂 அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி எடுக்கிறது!


வழக்கமாக கூழ் காய்ச்சி பண்ணும் ஜவ்வரிசி வடாம், அரிசி வடாம் எல்லாம் இன்னும் பண்ணலை! மொட்டை மாடியில் சில வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மண், சிமெண்ட் என்று விழுந்து வீணாகி விடும் என்பதால் போடுவதில் தயக்கம்! சென்ற வருடமும் டெல்லி பயணம், கல்லூரி அட்மிஷன் வேலைகள் என்று செய்யவில்லை!


இந்த இலை வடாம் செய்வது மிகவும் எளிது! வீட்டிலேயே நிழலில் கூட காயவைத்துக் கொள்ளலாம்! வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பது சிறப்பு! ஒரு டம்ளர் பச்சரிசியில் எனக்கு 18 வடாம்கள் போல கிடைத்தது! 


பச்சரிசியை ஊறவைத்து மையாக அரைத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, காரம், பெருங்காயம், சீரகம் என்று சேர்த்து மாவை நீர்க்க வைத்துக் கொள்ளவும். இட்லிபானையில் சின்ன சின்ன தட்டுகளிலோ, தட்டு இட்லி ஸ்டாண்டிலோ மாவை விட்டு வைத்து எடுக்கவும். ஒரு நிமிடத்திலேயே வெந்து விடும். அதை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்து தட்டிலோ பிளாஸ்டிக் ஷீட்டிலோ காய வைத்துக் கொள்ளலாம். 


வருடத்திற்கும் சேமித்து வைப்பதென்றால் ஒருநாள் வெயிலில் போட்டு எடுக்க வேண்டும்.


இந்த வடாம் எண்ணெயில் நன்றாக வீசிப் பொரியும்! வாயில் போட்டால் கரையும்! செய்முறை மிகவும் எளிதானது தான்! கொஞ்சம் நேரத்தை செலவிட வேண்டும்!


இந்த ரெசிபி என்னுடைய சேனலிலும் இருக்கு. இணைப்பு கீழே...


How to make ilai vadam by Adhi Venkat/இலை வடாம்/தளிர் வடாம்/Vadam series/Easy vadam recipe! (youtube.com)


*******


இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

  1. பதிவுகளே வரவில்லையே என்னாச்சு, இன்று தில்லி வெங்கட்டிடம் கேட்கணும் என நினைத்திருந்தேன்.

    கதம்பம் நன்று. குல்பி அழகு. இந்த முறை பெங்களூரிலும் வெயில் அதிகம். சென்னையில் மூன்றாம் வாரம் எப்படி இருக்கப் போகிறதோ என்று ஒரே கவலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வெங்கட் தற்சமயம் திருச்சியில் இருக்கிறார் சார்! அலுவலக வேலைகள், இங்கு வீட்டு வேலைகள் என ரொம்ப பிஸி..:)

      இம்முறை கோவையிலும் வெயில் வாட்டி வதைக்கிறது என்று தான் சொல்கிறார்கள்! வியர்வையே இல்லாதிருந்த ஊர்..:(

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  2. இரண்டாவது பாராவில் மகள் மக்களாகி இருக்கிறது!

    ரோஷ்ணியின் திறமைகள் கூடிக்கொண்டே போகின்றன.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    நாய்க்குட்டி நரிக்குட்டி பூனைக்குட்டி என்றெல்லாம் கொடுத்தால் சாப்பிட தோன்றுமா?  பாவமாக இருக்காது?!!

    பிரட் மலாய் குல்பி பார்க்க அழகாய் இருக்கிறது.   தொடர்ந்து மண்சட்டி சமையல் என்பது பாராட்டத்தக்கது.  நீர்மோர் ஐடியா பிரமாதம்.  இலவடாமும் ஜோர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். அன்று பார்த்த காட்சி மனதை பதைபதைக்கச் செய்தது! இப்படியெல்லாமா யோசிப்பார்கள்?

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. மக்களிடம் புதுமை என்ற பெயரில் எதையாவது பூனை, நாய் இப்படி செய்து கவர்வது உணவிலும் வந்து விட்டது.

    பிற செய்திகளும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே சாப்பிட்டிருந்தால் கூட ஒன்றும் தெரிந்திருக்காது! இதோ காதைக் கடிக்கிறேன்! என்று செய்ததும் உள்ளிருந்து ஒரு திரவம் வந்ததும் தான் கண்ணுக்குள்ளேயே நின்றது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. அருமை! ரோஷ்ணியின் கைவண்ணம் மேன் மேலும் மெருகேற வாழ்த்துக்கள்!

    பத்துப்பாட்டில் ஒரு பாட்டு 'மலைபடுகடாம்'. அதுபோல சாப்பாட்டுக்கு ஒரு பக்கப் பாட்டு 'இலைபடு வடாம்'. சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்துப்பாட்டிற்கும் நம்ம வீட்டு சாப்பாட்டிற்குமான ஒப்பீடு ஆஹா! அருமை!இனி இப்பண்டம் இலைபடு வடாம் என்றே அழைக்கப்படும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்து சார்.

      நீக்கு
    2. மலைபடுகடாம்.... இலைபடு வடாம்... பத்னாபன் அண்ணாச்சியாலத்தான் இப்படீல்லாம் யோசிக்க முடியும்

      நீக்கு
  5. ரோஷ்ணியின் கை வண்ணம், உங்களின் கை வண்ணத்தில் உருவான குல்ஃபி , இலை வடாம் எல்லாம் அருமை. வெயிலின் தாக்கத்தை போக்க செய்து இருக்கும் ஏற்பாடுகள் அருமை ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த கருத்துக்கு மிக்க நன்றிம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. செல்வி ரோஷ்ணியின் திறமைகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  7. இலை வடாம் செய்முறைக் குறிப்பு அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  8. தொடக்க வாசகமும் படமும் மனதை கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  9. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.

    கொழுத்தும் வெயிலுக்கு வடாம். இங்கும் இவ் வருடம் முன்பைவிட வெப்பம் கொழுத்துகிறது.:(

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....