புதன், 25 ஜூன், 2025

கதம்பம் - Fashion Designing - சம்மர் ஸ்பெஷல் - பிறந்தநாள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மின்னூல் வெளியீடு - மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ரோஷ்ணி கார்னர் - Fashion Designing - 19 மார்ச் 2025: 



மகள் இந்தக் கோர்ஸில் சேர்ந்தது முதலாகத் தான் நிறைய நிறைய  விஷயங்களை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது! அவளுக்கு எப்படி இதில் ஆர்வம் வந்தது என்று எனக்கு  தெரியவில்லை!! A to Z Cotton seed to fabric! என்று சொல்லலாம்! அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றது!


ஒவ்வொரு செமஸ்டரிலும் Theoryல் கற்பது போக practicalக்காக நிறைய நிறைய செய்து வருகிறாள்! போன செமஸ்டரில் Wet processing என்று துணிகளை ப்ளீச்சிங் செய்வது, வண்ணம் ஏற்றுவது, பிரிண்ட் போடுவது என்று பலவற்றை செய்து வந்து காண்பித்தாள்!


இந்த செமஸ்டரில் அவளுக்கான பாடம் Kids garment! கல்லூரியில் பெரும்பாலும் தியரி தான் கற்று வருகிறாள் என்றாலும் இணையத்தில் தேடி குட்டி குட்டியாக நிறைய டிரஸ்களை தைத்து முடித்தாள்! ரெகார்டுக்காக தனியே miniature டிரஸ்களும் தைத்தாள்!

கைகளில் மட்டுமே ஒரு ஆடையை வடிவமைக்க முடிந்தால் போதுமா! கணினியிலும் Corel draw எனும் Computer aided designing மூலம் அத்தனை ஆடைகளையும் வடிவமைத்தாள்! என் கல்லூரிப்பருவத்தில் இயந்திரபாகங்களை நான் வடிவமைத்திருக்கிறேன் என்றால் மகள் அவள் துறையில்! மிகவும்  நுணுக்கமான வேலை இது!


சம்மர் ஸ்பெஷல் - 23 மார்ச் 2025:




கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற குளிர்பானம்! அல்லது காலையில் எழுந்ததும் குடிக்க ஏற்ற பானம்! இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும் என்றால் நல்லது தானே! என்ன இது???!!


ABC ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையும் சமஅளவு எடுத்து சுத்தம் செய்து மிக்சியில் இட்டு அரைத்து ஐஸ் ட்ரேக்களில் விட்டு வைத்துக் கொண்டால் ஒரு தம்ளர் நீருக்கு இரண்டு க்யூப் வீதம் போட்டு பருகலாம்! தேவைப்பட்டால் இதில் சிறிதளவு எலுமிச்சைசாறு, உப்பு, சாட் மசாலா சிறிதளவும் சேர்த்துக் கொள்ளலாம்! அல்லது இதற்குப் பதிலாக இதில் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்!


மார்கெட்டில் ABC malt என்று கொள்ளை விலையில் விற்கப்படுகிறது! அதன் செய்முறையில் அவற்றை அரைத்து கடாயில் இட்டு கிளறுவதன் மூலம் சத்துக்களும் போய்விடும்! 


நெல்லிக்காய், கறிவேப்பிலை, இஞ்சி மூன்றையும் சுத்தம் செய்து மிக்சியில் அரைத்துக் கொண்டு ஐஸ் ட்ரேக்களில் போட்டு வைத்துக் கொண்டால் அன்றாடம் காலையில் எழுந்ததும் பருக ஏற்ற பானம்! நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றில் உள்ள நன்மைகள் நம் அனைவரும் அறிந்ததே!


சில வருடங்களுக்கு முன்பு காலையில் வெறும் வயிற்றில் ஒரு பிடி கறிவேப்பிலை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்! பின்பு அதனுடன் ஒரு நெல்லிக்காயும் சேர்த்து சுவைத்துக் கொண்டிருந்தேன்! இப்போது இந்த செய்முறையில் அன்றாட பழக்கத்தைத் தொடரலாம்!


நெல்லிக்காய், கறிவேப்பிலை, இஞ்சியுடன், பச்சை மஞ்சள் அல்லது மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, மிளகு இவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்! ஒரு தம்ளர் நீரில் இரண்டு க்யூப் போட்டு குடிக்கலாம்! தேவைக்கேற்ப இதில் தேன் அல்லது உப்பு, சாட் மசாலா, மோர் சேர்த்தும் பருகலாம்! 


கடைகளில் விற்கும் Aerated drinksஐயும் வெள்ளை சர்க்கரை சேர்த்த பானங்களையும் தவிர்த்து விட்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் வகையில் ஒரு ஆரோக்கியமான ஜூஸ்! சுவையிலும் எந்த குறைவும் இல்லை! உடலை மட்டுமல்ல வயிற்றையும் குளிர்விக்கிறது! நீங்களும் முயன்று பாருங்களேன்!


******


பிறந்தநாள் - 25 மார்ச் 2025: 


வருடங்கள் கடந்து செல்வதைப் போல வயதும் கூடிக் கொண்டே தான் செல்கிறது! இந்த பூமியில் நான் ஜனித்து 43 வருடங்களாகி விட்டதாம்! இதுவரை என் வாழ்நாளில் யாராவது ஒருவருக்காவது உபயோகமாக இருந்திருப்பேன் என்று நினைப்புடன் மிகுதி வாழ்வைத் தொடரப் போகிறேன்! 


சாப்பிடாமல் இருப்பது மட்டும் விரதம் என்பது அல்ல! துன்பங்களை பொறுத்துக் கொள்வதும் யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பதும் கூட விரதமாம்! இதை செவி வழி செய்தியாக நேற்று வானொலியில் கேட்க முடிந்தது! உண்மை தானே! அப்படியென்றால் நானும் அப்படி பல விரதங்களை இருந்திருக்கிறேன்!


என் வாழ்வை சற்றே திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த வாழ்நாளில்  எல்லா வித அனுபவங்களையும் ரொம்ப சீக்கிரமே பார்த்து விட்டேன் என்று தான் சொல்லணும்! அன்பு, பாசம், பிரிவு, இழப்பு என்று என்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்து எனக்கு கிடைத்ததும், நான் அவர்களுக்கு  கொடுத்ததும் என பல எண்ணங்கள் அவ்வப்போது தோன்றிய வண்ணம் தான் இருக்கின்றது!


பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பதெல்லாம் எப்போதும் தோன்றியதில்லை! அம்மா பண்ணித் தந்த பாயசமும், குலோப்ஜாமூனும் இன்னும் தித்தித்துக் கொண்டிருக்க, அப்போது என் பிஞ்சு கைகளில் வைத்துக் கொண்ட  மருதாணியின் வாசமும் பசுமையாய் மனதில் படர்ந்திருக்க அதை பொக்கிஷமாய் பாதுகாத்துக் கொள்ளவே நினைக்கிறேன்!


இது உனக்காக வாங்கினேன்! பர்த்டேக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு நினைச்சேன்! என்ற என்னவரின் அன்பிலும், அம்மா! எனக்கு வாங்கினது எல்லாம்  இருக்கட்டும்! உனக்காக இப்போ நான் செலக்ட் பண்ணுவேன்! நீ போட்டுக்கணும்! என மகளின் அன்பிலும் நெகிழ்ந்து போகிறேன்! இந்த அன்புக்கு முன்னால் கொண்டாட்டம் என்பது பெரிதல்ல!


ஒவ்வொரு நாளும் இறைவனிடம் இறைஞ்சுவது நோய் நொடியில்லாத  வாழ்வும், விழிப்பு தட்டாத நிம்மதியான உறக்கமும், இன்னும் செய்து முடிக்க வேண்டிய கடமைகளை நிறைவேற்ற உடலில் தெம்பும், மனதில் நிதானமும், பக்குவமும் மட்டுமே! பணம் பொருளின் மீது என்றுமே பற்று இருந்ததில்லை!


இணைய உலகில் 15 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்! காலை முதல் முகநூல், வாட்ஸப், மெசஞ்சர் என்று எங்கும் பல அன்பான  நட்புள்ளங்களின் வாழ்த்து மழையால் இன்று மலைக்கோட்டை நகரின் வெப்பம் கூட சற்று தணிந்துள்ளது என்று சொல்லிக் கொள்வேன்! அனைவரின் அன்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! பெரியோர்களுக்கு என் நமஸ்காரங்கள்!


இந்த நாள் இனிய நாள்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

25 ஜூன் 2025


23 கருத்துகள்:

  1. ரோஷ்ணி தைத்தவை மிக அழகாக இருக்கின்றன. நன்றாகச் செய்திருக்கிறார். நல்ல ஆர்வம்!

    அவற்றைப் பார்த்ததும் எனக்கு 2004-5 களில் நானும் கணவரின் சித்தப்பா பெண்ணும் சேர்ந்து செய்த சில நினைவுக்கு வந்தன. நான் நிறைய உடைகள் டிசைன் செய்து தைத்தேன். குழந்தைகளுக்குக் குறிப்பாக அதிலும் பெண் குழந்தைகளுக்கு என்று. கூடவே எம்ப்ராய்டரி. அப்படி நாங்கள் சென்னையில் பெண்கள் தொழில் முனைவோருக்கான ஒரு கண்காட்சி போட்ட போது அதில் நாம் செய்யும் பொருட்களை அங்கு விற்பனைக்கு வைக்கலாம் என்று. அப்படி நாங்கள் உடைகள், சமையல் பொடிகள், புளிக்காய்ச்சல் என்று பலதும் வைத்தோம். எல்லாமே வீட்டில் செய்தவை. தைத்தவை. கவுன்களை வாங்கினவங்க அது மிகவும் சரியாக இருந்தன என்று சொன்னது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதிலும் கழுத்துக்கு சுருக்கு வைத்த கவுன், இடுப்பு வரை smocking செய்து தைத்த கவுன் என்று ....அது போல எம்ப்ராய்டரியும்...பேக்கிங்க்...என்று சென்ற ஓரிரு வருடமே பிக்கப் ஆகும் முன் நிறுத்த வேண்டிய சூழல் வந்துவிட்டது. பேப்பர் கம்மல்கள் எல்லாமும் அப்ப ஃபேஷன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. அப்போதே பேப்பர் க்வில்லிங் வந்துவிட்டதா!!!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  2. உங்களின் ரெண்டு குறிப்புகளும் சூப்பர். படங்கள் கவர்கின்றன.

    இங்கும் அதேதான் ஆனால் சில்லுன்னு இல்லாம....சர்க்கடை தேன் போன்றவை சேர்க்காமல் உப்பு மட்டும் சிறிதளவு...

    சென்னையிலிருந்து வந்த பிறகு சில் எதுவும் சாப்பிடுவதில்லை அதுவும் கொரோனாவுக்குப் பிறகு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர். இங்கும் உப்பு தான் சேர்த்துப் பருகுகிறோம். மோருடன் நெல்லிக்காய் க்யூப்ஸ் சேர்த்தால் பெருங்காயமும் சேர்த்து பருகுவோம். இந்த நெல்லிக்காய் க்யூப்ஸை வைத்து நெல்லிக்காய் ரசமும் செய்து வருகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. தாமதமான வாழ்த்துகள் ஆதி!

    உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  4. Arumai adhi Venkat ungal magalukku valthukkal

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜி.

      நீக்கு
  5. விஜயலஷ்மி சென்னை25 ஜூன், 2025 அன்று 12:44 PM

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஜயலஷ்மி ஜி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்ல பயனுள்ள விஷயங்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். தங்களின் மகள் தைத்த உடைகள் நன்றாக உள்ளது ரோஷிணியின் கல்லூரியில் கற்று வரும் தையல் பயிற்சி திறமைகள் அவர்களிடம் நன்கு வளரட்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், திடமான ஆயுளையும் தர வேண்டுமாய் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    நல்ல எழுத்துகள். உங்களின் பதிவு எப்போதுமே சுவாரஸ்யமாக இருக்கும். தொடரந்து பல விஷயங்களை தங்கள் பதிவு மூலம் அனைவரும் அறியும்படி எழுதுங்கள். வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் எல்லாப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்த உங்களுக்கு என் அன்பான நன்றிகள் கமலா ஜி.

      நீக்கு
  7. ரோஷ்ணியின் கைவண்ணங்கள் அழகாய் இருக்கிறது.  பாராட்டுகள்.  உங்கள் வீட்டில் தையல் இயந்திரம் வைத்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கிறது சார். அவள் தன் கனவை எட்டாம் வகுப்பிலேயே துவங்கி விட்டதால் அப்போதே அதற்கேற்றாற் போல் வாங்கிவிட்டோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  8. ABC பானம் வீட்டிலேயே செய்து கொள்வது பாராட்டுக்குரியது.  கடைகளில் விற்கும் பானத்தைவிட சுவையாக செய்து கொள்ளலாம்.  எனக்கு ABC பானத்தைவிட நெல்லிக்காய் கறிவேப்பிலை பணம் சிறந்ததாக படுகிறது.  கூட கொஞ்சம் இஞ்சி கூட சேர்த்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். வீட்டிலேயே சுவையாக தயாரித்துக் கொள்ளலாம்! நெல்லிக்காய், கறிவேப்பிலை, இஞ்சியும் எலுமிச்சை சாறும் சேர்த்து தான் அரைத்து இப்போதெல்லாம் தயாரிக்கிறேன். இதுவரை நான்கு பேட்ச்கள் செய்து விட்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  9. உங்களுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்.  நேற்று முழுவதும் நான் இணையம் பக்கம் வரவில்லை.  

    பிறந்தநாளுக்கு உங்களவரின் பரிசு இந்த வருடம் என்ன?  

    என் மாமா பையன் தன் மனைவியின் பிறந்த நாளுக்கு அதிகாலை எழுந்து சென்று மெதுவடை வாங்கி வந்து கொடுத்தான்.  நான் அந்த எல்லாம் அவனோடு பேசிக்கொண்டிருந்தேன்.  அவன் மனைவியிடம் பேசும்போது அவர் சொன்னது "தெரியும்ணா...   அவர் சஸ்பென்ஸாக வடை வாங்கி வந்திருப்பார்.  எனக்குப் பிடிக்கும் என்று அவர் ஒவ்வொரு வருடமும் சர்ப்ரைஸாக வாங்கி வருவதுதான்.  நானும் மாறாத ஆச்சரியத்துடனும், சந்தோஷத்துடனும் வாங்கி கொள்வேன்" என்றார்/ 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறந்தநாளுக்கு மனைவிக்கு பிடித்த மெதுவடை. மிகவும் அழகாக இருக்கிறது! மனைவிக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்யணும் என்று நினைத்தார் இல்லையா!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  10. வாசகம் அருமை.

    ரோஷ்ணி கார்னர் நன்றாக இருக்கிறது. நல்ல திறமைகள் உள்ள அன்பான குழந்தை ரோஷ்ணி.
    உங்கள் பிறந்த நாள் சிந்தனைகள் மிக அருமை.
    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ஆதி. நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. ரோஷ்ணியின் கை வண்ணம் அருமை! பிறந்த நாள் பற்றிய உங்கள் கருத்துகள் ரசிக்கக் கூடியவை.
    நான் அவ்வப்பொழுதெ ABCஜூஸ் செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி ஜி.

      நீக்கு
  12. ரோஷ்ணியின் கை வண்ணம் அருமை! பிறந்த நாள் பற்றிய உங்கள் கருத்துகள் ரசிக்கக் கூடியவை.
    நான் அவ்வப்பொழுதெ ABCஜூஸ் செய்வேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....