புதன், 8 ஜூலை, 2026

வடக்கு வாழ்கிறது - ஹோட்டல் உணவு - வீணடிக்கப்படும் உணவு - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஜான் நா பெஹச்சான் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


வடக்கு வாழ்கிறது: 


கடந்த மூன்று நாட்களாக தொடர் பயணங்கள் - ஒவ்வொரு பயணமும் ஒரு வித அனுபவங்களைத் தராமல் இருப்பதில்லை. இந்தப் பயணத்தில் வீட்டுச் சாப்பாட்டை விட வெளி சாப்பாடு - உணவகங்கள், நிகழ்வுகள் என வெளி சாப்பாடு தான் அதிகம். உணவகங்கள் அனைத்திலும் சிப்பந்திகளில் அதிகமானவர்களாக வடக்கர்களே அதிகமாக இருக்கிறார்கள்.  கோவையில் லுலு மால் அருகே இருக்கும் ஆனந்தாஸ் உணவகத்திற்கு ஒரு காலை நேரத்தில் சென்றிருந்தோம்.  அங்கே எங்களுக்கு உணவு வழங்கிய உழைப்பாளி எங்களிடம் எத்தனை பேர் என்பதைக் கேட்க, “மூண் பேர்?” என்றார்.  கேட்ட விதத்திலும், அவரின் முகத்திலும் வடக்கர் என்று எழுதி ஒட்டி இருந்தது! ஹிந்தியில் சம்பாஷணையை தொடர்ந்தேன். இப்படிச் சென்றது எங்கள் சம்பாஷணை…


“கஹா சே ஹோ?”


பீஹார் சே…


பீஹார் மே கௌன் ஜில்லா? 


கயா ஜில்லா.


தொடர்ந்து சில விஷயங்களைக் குறித்து அவரிடம் பேசிய பிறகு “நீங்க தமிழரா இருந்து இவ்வளவு நல்லா ஹிந்தி பேசுகிறீர்களே?” என்ற ஆச்சரியத்துடன் வினவினார் - அவருக்குத் தெரியாதே - நான் வடக்கில் தான் அதிக காலமாக இருந்திருக்கிறேன் என்று.  ஹிந்தியில் பேசியதில், உணவகத்தில் சிலருக்கு கஷ்டமாக இருந்திருந்தாலும் அவருக்கு மகிழ்ச்சி.  பொறுமையாக தேவையானதைக் கொண்டு வந்து கொடுத்தார். அவர்கள் அங்கே வேலை கிடைக்கவில்லை என்று சொன்னாலும் இங்கே ஒருவர் சம்பாதிக்க, அந்தப் பணம் கொண்டு வீட்டினர் வாழ்வதோடு, அவர்கள் விவசாயம் செய்து பணமும் ஈட்டுகின்றார்கள் என்பதை நானே பார்த்திருக்கிறேன். அங்கே வேலையில்லாமல் இங்கே வந்து வாழ்க்கைக்கான பொருளை ஈட்டுகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அது பல சமயங்களில் உண்மையல்ல! நிறைய அரசியல் இதில் இருக்கிறது. எது எப்படியோ, உழைப்பாளிகள் உழைக்க, ஒரு பக்கம் அரசியல்வாதிகள் “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்று தொடர்ந்து ஜல்லியடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் - இருப்பார்கள்! அதில் மாற்றம் இருக்கப் போவதில்லை! அதெல்லாம் போகட்டும், உணவின் தரம் எப்படி என்று சொல்லவே இல்லையே?  அதுவும் சொல்லி விடலாம்!


வெளியில் உணவு:



கோவை என்றாலே இல்லத்தரசி அவரது அப்பா காந்திபுரம் அன்னபூர்ணா கௌரிஷங்கர் அழைத்துச் சென்றது குறித்தும் அங்கே எப்போதும் மசாலா தோசா சாப்பிட்டது குறித்தும் சொன்னார்.  இந்த முறையும் அங்கே போக வேண்டும் என்று சொல்லியிருந்தார். ஆனால் சந்தர்ப்பம் வாய்க்காத காரணங்களால் வேறு ஒரு உணவகத்திற்கு ஒன்றிரண்டு முறை சென்று வந்தோம்.  அன்னபூர்ணா கௌரிஷங்கர் போலவே தற்போது ஹோட்டல் ஆனந்தாஸ் என்பது மிகவும் பிரபலமாக இருக்கிறது. பல இடங்களில் கிளைகள் இருக்கின்றன.  நாங்கள் இரண்டு கிளைகளில் இரு வேறு தினங்களில் காலை உணவும் மதிய உணவும் சாப்பிட்டோம்.  காலை நேரம் சாப்பிட்டது சோலா பூரி.  மதிய நேரம் வேறு கிளையில் சாப்பிட்டது நான், சப்பாத்தி மற்றும் கடாய் பனீர்.  அனைத்துமே நன்றாகவே இருந்தது.  சப்பாத்திக்கு தான் இங்கே விதம் விதமாக தொட்டுக்கொள்ள தருவதில்லை - ஒரே டிஷ் தான் - குருமா மற்றும் வெங்காய பச்சடி! அதை மாத்துங்கப்பா ப்ளீஸ்! 


நிகழ்வுகளில் வீணடிக்கப்படும் உணவு:


சமீப காலமாக தமிழகத்தில் இருப்பதால் அவ்வப்போது நிகழ்வுகளில் கலந்து கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. பொதுவாக தவிர்க்க முடிந்தால் இது போன்ற நிகழ்வுகளை தவிர்த்து விடுவதே வழக்கமாக இருக்கிறது.  அதீத கூச்சல், அதிக ஆடம்பரம், வீணான செலவுகள் என பார்க்கும்போது வருத்தம் மிஞ்சுகிறது. ஒரு நிகழ்வெனில் போட்டி போட்டுக்கொண்டு உணவு வகைகளை அடுக்கித் தள்ளுகிறார்கள்.  காலை உணவில் பத்து வித உணவுகள் - இட்லி, வடை, பொங்கல், மசாலா தோசை, ஆப்பம், பூரி என வரிசையாக வைத்துக் கொண்டே போகிறார்கள் - இதைத் தவிர இனிப்பும் இரண்டு மூன்று வகைகள்! முதலில் ஒன்றொன்று வைத்தாலும் மீண்டும் மீண்டும் வந்து இன்னும் வேண்டுமா என்று கேட்டு, வாயில் இருப்பதை விழுங்கிவிட்டு பதில் சொல்வதற்குள் போட்டு விடுகிறார்கள். இத்தனையும் சாப்பிட்டால் என்ன ஆவது? மதியம் வேறு ஹெவி உணவு இருக்கிறது!


மதிய உணவில் கூட நான்கு இனிப்பு, இரண்டு பொரியல், கூட்டு, இரண்டு பச்சடி, சாம்பார், ரசம், மோர் குழம்பு, வற்றல் குழம்பு, தயிர், அவியல் என வந்து கொண்டே இருக்கிறது. இதைத் தவிர ஒரு நிகழ்வில் பருப்புப்பொடி வேறு வைத்திருந்தார்கள்! இத்தனை ஐட்டம் இருக்க, பருப்புப் பொடி எதற்கு என்று புரியவில்லை! சாப்பாட்டில் வகைகள் இருக்கலாம்! இத்தனை செய்தால் எப்படிச் சாப்பிடுவது? எல்லோராலும் எல்லாவற்றையும் சுவைக்க முடியுமா? தேவையானதை மட்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம் என்றால் சில நிகழ்வுகளில் நாம் உட்கார்வதற்கு முன்னரே பல ஐட்டங்களை இலையில் வைத்து விடுகிறார்கள். உணவை வீணடிக்கக்கூடாது என்ற கொள்கை இருப்பதால் இருப்பதை மட்டுமேனும் முடிக்கலாம் என்றால் தொடர்ந்து உபசரிக்கிறேன் என்ற பெயரில் படுத்தி எடுக்கிறார்கள்.  ஆனால் இதெல்லாம் ஒரு வித கட்டாயம் ஆகிவிட்டது.  


ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் உணவு, உடை, நிகழ்வுகள் என எல்லாவற்றிலும் கடைபிடிக்கிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை! சிலர் தப்பாக எடுத்துக் கொண்டாலும், ஹிந்தியில் சொல்வது போல  शो-बाज़ी (ஷோ பாஜி - ஹிந்தி என்று சொன்னாலும் இதன் மூலம் பெர்சியன்!) மட்டுமே என்று எனக்குத் தோன்றுகிறது. வீணடிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இலையில் இருப்பதை மட்டும் உண்டு, அடுத்த முறை ஏதேனும் ஒரு ஐட்டம் வரும்போது கிட்டத்தட்ட இலையில் கையை நீட்டி முதுகைக் குனிந்து படுத்துக் கொண்டு இலையில் போடுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது.  இலையில் போட்டவற்றை மட்டுமே சாப்பிட்டு முடிக்க, Literally இரை உண்ட மலைப்பாம்பு போல அசையாமல் கிடக்க வேண்டியிருக்கிறது! அப்படியான நாட்களில் பெரும்பாலும் இரவு உணவு தவிர்த்துவிடுவது அவசியமும் ஆகிறது! பால் மட்டும் அருந்திவிட்டு படுத்துக் கொண்டால் போதும் என்று ஆகிவிடுகிறது. எத்தனை சொன்னாலும், இது மாறப் போவதில்லை! நாமும் நிகழ்வுகளை தவிர்க்க முடிவதில்லை! 


நிகழ்வுகளில் மீதமாகும் உணவு சிலருக்கு கொடுக்கப்பட்டாலும் பெரும்பாலும் வீணாகிறது என்பது தான் நிதர்சனம். எனக்குத் தெரிந்த ஒரு திருமண நிகழ்வில் ஒரு பெரிய அண்டா நிறைய பால் பாயசம் இருந்தது - நிகழ்வு முடிந்த பிறகு! அந்தப் பக்கம் போகும் போது பார்த்தேன் - ஐந்து நிமிடங்களில் திரும்பி வரும்போது பார்த்தால் அண்டா காலி - என்ன செய்தீர்கள் என்று கேட்க, கொடுத்துட்டோம் என்றார் - ஆனால் கொடுக்கவில்லை - சாக்கடையில் கொட்டி விட்டார்கள் என்று பக்கத்திலிருந்த சாக்கடை பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது - பால் பாயசம் சாக்கடையில் ஓடிக் கொண்டிருந்தது!  என்னவொரு வேதனை எனக்கு! எப்படியும் ஐம்பது லிட்டர் பால் பாயசம்! இல்லாதவர்கள் யாருக்கேனும் கொடுத்திருந்தாலாவது சுவைத்திருப்பார்கள்! அன்றிலிருந்து பால் பாயசம் பார்க்கும்போதெல்லாம் சாக்கடை முழுக்க ஓடிய பால் பாயசம் நினைவுக்கு வந்து மனதில் வேதனை தரும்.  


கலந்து கட்டி இன்றைக்கு சில விஷயங்களை பேசி/எழுதி இருக்கிறேன்.  நாளை வேறு சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம். அதுவரை தொடர்ந்து இணைந்திருங்கள்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

8 ஜூலை 2026


5 கருத்துகள்:

  1. முதல் பகுதி இரண்டாவது பகுதி எல்லாவற்றிற்கும் சொல்லுக்குச் சொல் டிட்டோ டிட்டோ டிட்டோ!! அப்படியே வழி மொழிகிறேன்.

    நான் கூடியவரை நிகழ்வுகளைத் தவிர்க்கிறேன், சாப்பாட்டிற்குப் பயந்தே. ஏனென்றால் சாப்பிடலைனா தப்பா எடுத்துக்கொண்டு பேச மாட்டேன்றாங்க...நம்ம உடம்பு நமக்குத்தானே தெரியும்? இரண்டாவது நம் குடும்பத்தார்க்கு நாம் முக்கியம். எனவே நம் உடல்நலம் மிக மிக முக்கியம். எனவே நான் நிகழ்வுகளில் உணவு விஷயம் எல்லாவற்றிலும் கறாரார்தான்!

    கூடியவரை இரவு நிகழ்வுகளைத் தவிர்த்துவிடுகிறேன். அப்படியே இருக்க வேண்டிய நிலை வந்தாலும்...மார்ச்சில் நடந்த நெருங்கிய உறவில் நடந்த தவிர்க்க முடியாத நிகழ்வில் காலை, மதியம் எல்லாம் மிகவும் கறாராக உண்டபின் மாலை 3, 4 மணிக்கு காஃபி கூட என்னென்னவோ போடுவாங்களே அதைத் தவிர்த்துவிட்டு, 5.30 மணிக்கு நான் அப்பா என் கணவர் மூவரும் மட்டும் சாப்பாட்டுக் கூடத்திற்குப் போய் என்ன இருக்கோ அது போதும் மாமா என்று, இருப்பதில் கொஞ்சம் போதும் என்று எண்ணைப் பண்டங்களைத் தவிர்த்து, லைட் டிஃபன் சாப்பிட்டு முடித்துக் கொண்டோம். கணவராவது இரு நாட்கள்தான். நான், அப்பா மூன்று நாட்கள்...அப்பாவுக்கும்...எங்களுக்குமே கூட நாங்கள் கூடவே இருந்து கையை நீட்டி வைத்துக் கொண்டு.. அந்த நிகழ்வில் என் முக்கியத்துவம் உண்டு என்பதால், ஸாஸ்திரம் அது இது என்று சொன்னாலும் நான் கறார்!!!! யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே தான்.

    உணவு வீணடிக்கப்படுவது ரொம்ப ரொம்ப மோசம்...௳னம் வேதனைப்படும் நிகழ்வு. நாம சாப்பிட்டால் இலை கடைசியில் ஓ இன்னும் எதுவும் போடலையா என்று கேட்கும் அளவிற்கு ஹிஹிஹி...வேண்டும் என்பதை மட்டும் போட்டுக் கொண்டு!!

    ஆடம்பரம் ஆடம்பரம்...ஆடம்பரம்...

    ஸ்ரீராம் மகன் நிகழ்வில், மதியச் சாப்பாடு அளவான ஐட்டம்ஸ். இதம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சப்பாத்திக்கு சைட் டிஷ் - உங்கள் வரியை அப்படியெ வழி மொழிகிறேன். மாத்துங்கப்பா....ஆனால் இங்கு ரோட்டி என்று கிட்டத்தட்ட oven இல் செய்து, பெரிதாகத் தந்து தொட்டுக் கொள்ள ஏதேனும் தனியாக நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உணவகங்கள் இருக்கின்றன. சப்பாத்தி என்றால் நீங்கள் சொன்னவைதான்.

    கோவையிலும் லூலூ மால் வந்துவிட்டதா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வடவர்கள் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். பத்து பனிரண்டு மணி நேரம் உழைக்கிறார்கள். லிவு போடுவதில்லை. அதனால அவங்களை தமிழ் முதலாளிகள் ப்ரோக்கர்கள் எக்ஸ்ப்ளாய்ட் பண்ணுகிறார்கள், மனதில் குற்ற உணர்வு இன்றி.

    நான் பல இடங்களில் பார்க்கும் பங்களாதேசிகள் வேறு. இதில் அரசிய் தேச திரோகம் கலந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. உணவு பிளேட்டை முன்பே பார்த்த நினைவு இருக்கிறது.

    கௌரி சங்கர், அன்னபூர்ணா போன்றவற்றைவிட ஆனந்தாஸ் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. ஆடம்பர திருமணம், விருந்து இவற்றிர்க்கு மத்திய அரசு தடை கொண்டுவரணும்.

    முன்னெல்லாம் ரிசப்ஷன் உணவில்தான் ஆடம்பரம் வீண்டிப்பு இருக்கும். இப்போ பைத்தியம் பிடித்துவிட்டது போல, எல்லா உணவிலும் ஆடம்பரம் வீண்டிப்பு. மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்.(கேடர்ர் உட்பட)

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....