செவ்வாய், 7 ஜூலை, 2026

ஜான் நா பெஹச்சான் - வெங்கட் நாகராஜ்

இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

இதற்கு முன்னர் வெளியிட்ட இன்று கடை விடுமுறை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


******


பல சமயங்களில், என் பயணங்களில், அன்றாட அலுவல் சமயத்தில் முன் பின் அறிமுகம் இல்லா நபர்களுடன் பேசி இருக்கிறேன். அந்த சம்பாஷனைகள் எல்லாமே தேவையான தகவல்களைப் பெற அல்லது சந்தர்ப்ப சூழல் காரணமாக பேசப்படும் பேச்சு. வெகு சில நேரங்களில் மட்டுமே தேவையற்ற பேச்சு இருக்கும். அதே போல என்னிடம் தேவையில்லாமல் பேச்சுக் கொடுத்தால் அதிகம் பேசுவதில்லை. 


சின்னஞ்சிறு ஊர்களில் இப்படி முன் பின் அறிமுகம் இல்லா நபர்களிடம் பேசி அந்த ஊர் குறித்த தகவல்கள் கேட்பது உண்டு என்றாலும் பெரிய ஊர்களில் யாரிடமும் பேசுவதில்லை. பேசுபவர்களிடம் பேச்சுக் கொடுப்பதும் இல்லை. சமீபத்தில் திருச்சியில் இருந்து கோவை செல்ல இரயில் நிலையத்தில் காத்திருந்தபோது ஒரு மனிதர் தானாகவே பேச ஆரம்பித்தார். இந்த இரயில் ரொம்ப வேகமா போகுமோ? சதாப்தி, ராஜதானி மாதிரி தானே இதுவும்? முன்னாடி எல்லாம் இரயில் பயணம் நிறைய நேரம் எடுக்கும். நான் 1994-ல கிராண்ட் ஓ என்னமோ, அதுல பயணம் செய்தேன்….. மூன்று நாட்கள் கழித்து தான் தில்லி போச்சு. (ஓ அப்படியா என்றேன் நான். அவருக்கு எப்படித் தெரியும் - நான் 35 வருட தில்லி வாசி என்று?) அங்கே இருந்து ஜெய்ப்பூர், அஜ்மீர், மதுரா எல்லாம் போனேன். இப்ப பரவாயில்ல சீக்கிரமே போகுது போல….. இப்படி நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டே இருந்தார். 


அவர் கல்லூரியில் படித்தது, அவருக்கு பாடம் சொல்லிக்கொடுத்த CVK எனும் வாத்தியார், அவர் கல்லூரியை விட்டு IIT சென்றது என்று அவர் படித்த காலம் முதல் இன்றைக்கு அவர் திருச்சியை அடுத்த ஒரு கல்லூரியில் பேராசிரியர் ஆக இருப்பது வரை நான் கேட்காமலேயே என்னுடன் பகிர்ந்து கொண்டு இருந்தார். அவர் மாணவராக இருந்தபோது இருந்த காலத்திற்கும் இப்போது பேராசியராக மாணவர்களை சமாளிக்கும் பொறுப்பில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இடைவிடாமல் பேசிக் கொண்டே இருந்தார். மாணவர்களிடம் இப்படி பேசினால், மாணவர்கள் அவருக்கு பிளேடு மாமா, பூமர் அங்கிள் என்று ஏதேனும் பெயர் வைத்திருப்பார்கள். இத்தனைக்கும் நான் பேசியது மொத்தமே பத்து வார்த்தைகள் கூட இருக்காது. 


காது மட்டும் இவரது பேச்சைக் கேட்டுக்கொண்டு இருக்க, என் கவனம் முழுவதும் இரயிலில் இருந்தது - அது புறப்பட்டால் நான் ஏறிக்கொள்ள வேண்டும். அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தால் வண்டியை விட்டு விடப் போகிறீர்கள் என்று அவரே கூடச் சொன்னார். :) எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம், என்னை அவர் அறிவாரா? இல்லை அறிமுகம் செய்து வைத்தார்களா? எதுவும் இல்லை. ஆனால் ஏனோ பேசிக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவே இந்த இரயில் எங்கே போகுது? கோவையா? ரொம்ப மாறிடுச்சு கோவை….. என்று அடுத்த தலைப்புக்கு மாறும்போது சரியாக இரயில் புறப்பட, நான் அதில் ஏறிக்கொண்டேன். 


இந்தியில் ஒரு சொலவடை உண்டு. அது தான் இன்றைய பதிவின் தலைப்பு….. 


"जान ना पहचान मैं तेरा मेहमान”


புரியவில்லை என்றால் இதை அப்படியே காப்பி செய்து கூகிள் பாபாவிடம் paste செய்து கேளுங்கள்…. உங்களுக்கு அதன் அர்த்தம் புரியும். அப்படித்தான் என் நிலை….. எனக்கென்று ஏன் இப்படி நடக்கிறது? முகத்தில் ஏதேனும் ஒரு ஒளி தெரிகிறதோ? எப்படியோ அவருக்கு நேரம் போனது…… எனக்கு ஒரு பதிவுக்கான விஷயம் கிடைத்தது….. வேறென்ன இதில் கிடைத்து விடப் போகிறது…… 


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள். நாளை வேறு ஒரு விஷயத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்….


அது வரை…. 


நட்புடன்


வெங்கட் நாகராஜ் 

07-07-2026



2 கருத்துகள்:

  1. ஓரளவு ஹிந்தி தெரியும் என்பதால் குண்ட்ஸாக அர்த்தம் தெரிந்தாலும் கூகுளை கேட்டபோது "முன் அறிமுகம் இல்லை, ஆனாலும் நான் உங்கள் விருந்தினன்."என்று சொன்னது!

    பதிலளிநீக்கு
  2. எப்படி இப்படி நம்பி எல்லா விவரங்களையும் முன்பின் தெரியாத ஒருவரிடம் சொன்னாரோ...  ஒருவேளை எல்லாமே கதையாக இருக்குமோ...  அவருக்கு பொழுது போக ஏதோ அளந்து கொண்டிருந்தாரோ...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....