சனி, 18 ஜூலை, 2026

அலைபேசி வழி பதிவுகள் - எழுத்தாளருடன் ஒரு சந்திப்பு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இதற்கு முன்னர் வெளியிட்ட வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் - பகுதி இரண்டு - ஜெயலக்ஷ்மி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


********


அலைபேசி வழி பதிவுகள் - சிரமங்கள்:


சில நாட்களாக எனது பதிவுகளை அலைபேசியில் தட்டச்சு செய்து வெளியிட வேண்டியிருக்கிறது. அதனால் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கும் பயணத் தொடர், காஃபி வித் கிட்டு பதிவுகள் போன்றவை வெளியிடுவதில் சிரமங்கள் இருக்கின்றன. என்னதான் ஓரளவுக்கு Tech Savy ஆக இருந்தாலும் கூட அலைபேசி வழி விரும்பிய படி, தரத்துடன் இப்படி பதிவுகள் வெளியிடுவது சுலபம் அல்ல.  அதுவும் நீண்ட பதிவுகள் எனில் அலைபேசி வழி தட்டச்சு செய்யும் போது பிழைகளும் அதிகம் வர வாய்ப்பு உண்டு. படங்கள், காணொளிகள் இணைப்பது கூட கடினமாகவே இருக்கிறது. அதனால் சில நாட்களோ, அல்லது வாரங்களோ கூட எனது வழக்கமான பதிவுகள் வெளியிடுவது சாத்தியமல்ல என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 


அதைப் போலவே நண்பர்களின் பதிவுகள் படிப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. சில பதிவுகள் Blogger தளத்தில் Update ஆவதில்லை. அவர்களது பழைய பதிவு வழி உள்ளே சென்று தான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நண்பர்கள் படிக்கவில்லை என்றோ, நான் படித்ததன் அடையாளமாக பின்னூட்டம் இடவில்லை என்றோ தவறாக நினைக்க வேண்டாம். படித்தாலும் சில சமயங்களில் அலைபேசி வழி தட்டச்சு செய்ய சுணக்கமாக இருப்பதால் வருகையைத் தெரிவிக்காமல் செல்ல வேண்டியிருக்கிறது. மடிக்கணினி வந்தவுடன் வழக்கமான பதிவுகள் வெளிவரும். அதுவரை முடிந்த போது பதிவுகள் வெளியிடுவேன். தொடர்ந்து ஆதரவு அளிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.


********


எழுத்தாளருடன் ஒரு சந்திப்பு:


சில நாட்கள் முன்னர் "எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்" என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். நான் சந்தித்த ஆட்டோவில் பயணித்த போது ஓட்டுநரிடம் சில வார்த்தைகள் பேசினேன் என்றும்,  Trip முடிந்து பணம் கொடுக்கும் போது, “சார் நீங்க தமிழ் புக்ஸ் படிப்பீங்களா சார்?” என்று கேட்டதையும் சொல்லி இருந்தேன்.  ஏன் அப்படிக் கேட்கிறார் என்று புரியாமல் படிப்பது எனக்கு பிடித்தமான விஷயம் தான் என்று சொல்ல, உங்களுக்கு இந்தப் புத்தகம் குறித்து தெரியுமா என்று அவரது அலைபேசியில் ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்தினைக் காண்பித்தார் (படம் கீழே!) 


இந்தப் புத்தகம் நான் எழுதிய புத்தகம் தான். இதுவரை ஆறு புத்தகங்கள் எழுதி அச்சுப் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன் என்று சொன்னதோடு, ஆறாவது வெளியீடு தான் மேலே உள்ள லெமூரியாவுக்கு அப்பால் என்ற புத்தகம் என்று சொன்னார். அச்சுப் புத்தகமாக வெளியிடுவதில் இருக்கும் சிரமங்கள் குறித்தும் பேசினோம். கூடவே நானும் அமேசான் தளத்தில் சில புத்தகங்கள் வெளியிட்டு இருப்பதை சொல்லி, எனது அமேசான் பக்கத்தினையும் அலைபேசியில் காண்பித்தேன். வருமானம் எப்படி என்ற கேள்விக்கு பதில் - பெரிதாக ஒன்றும் இல்லை என்று சொன்னதோடு, வருமானத்திற்காக எழுதுவதில்லை என்பதையும் சொன்னேன். 

அவரது அச்சுப் புத்தகமும் அப்படித்தான் - நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் வழி சுமார் 300 பிரதிகள் விற்று இருக்கிறது என்றாலும் அமேசான் தளம் வழி பெரிதாக வருமானம் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவருக்கு வாழ்த்துகள் சொல்லி அவரிடம் விடை பெற்றேன். பிறகு பயணத்தில் அவரது புத்தகம் குறித்து தேடியபோது இப்படியான தகவல் கிடைத்தது - "லெமூரியாவிற்கு அப்பால் என்பது எழுத்தாளர் தனபால் எழுதிய ஒரு அறிவியல் புனைகதை (Sci-Fi) மற்றும் வரலாற்று நாவலாகும். இந்நூல் மனித குலத்தின் தோற்றம், இயற்கை பேரழிவுகள் மற்றும் இந்தியாவின் தொன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டு கற்பனைத் திறனுடன் எழுதப்பட்ட ஒரு படைப்பாகும்."

எழுத்து வழி சம்பாத்தியம் என்பது எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. போட்டிகள் நிறைந்த உலகம் இது. தனது விருப்பத்திற்காக இப்படி எழுத்தை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் தனது வாழ்க்கைப் பயணத்திற்காக ஆட்டோவும் ஓட்டி சம்பாதிக்கிறார் என்று தெரிந்தது. இணையத்தில் தேடியபோது இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்வுகள் கூட கிடைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் பார்க்கலாம். அமேசான் தளத்தில் இந்த அச்சுப் புத்தகம் கிடைக்கிறது - 251/- ரூபாய் விலையில். விருப்பம் இருந்தால் பாருங்கள். 

ஒவ்வொரு பயணமும் இப்படி ஏதோ ஒரு அனுபவத்தைத் தந்த வண்ணம் இருக்கிறது. அந்த அனுபவங்கள் இப்படியும் பதிவுகள் ஆகலாம் :) 


வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை காத்திருங்கள்.


********


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

18 ஜூலை 2026

2 கருத்துகள்:

  1. மொபைல் வழியாக பதிவுகள் இடு,வது என்பது சிரமமான காரியம் தான். துரை செல்வராஜ் அண்ணா மற்றும் கமலா அக்கா ஆகியோர் முழுக்க முழுக்க மொபைல் வழியாகத்தான் இயங்குகின்றனர். அவர்களால் எப்படி முடிகிறது என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு அது சிரமம் தான்! ஒரு எடிட்டிங் செய்வதற்கு மொபைல் வழியாக செல்ல வேண்டும் என்றாலே மூக்கால் அழும் டைப் நான்!

    பதிலளிநீக்கு
  2. தமிழ்நாட்டில் எந்த ஒரு எழுத்தாளரும் எழுத்தை முழு தொழிலாக வைத்திருக்க முடியாது. எஸ்ரா ஜெயமோகன் போன்றோர் விதிவிலக்கு. அவர்கள் பதிப்பகம் போல வேறு எதையாவது வைத்து சமாளிக்கிறார்கள். பெயர் பெறாத எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்களை எவ்வளவு பேர் வாங்குகிறார்கள்?! இப்போது புத்தக கண்காட்சி போனாலும் பழைய எழுத்தாளர்கள் புத்தகங்கள் தான் விலை போகிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....