அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட S.ஜானகி எனும் தேன் குரலாள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
எங்கள் பக்கத்தில் விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதும் பதிவுகள் பற்றி அறிவீர்கள். அவரது இல்ல வளாகத்தில், பக்கத்து வீட்டில் இருக்கும் திருமதி ஜெயலக்ஷ்மி அவர்கள் தனது வெள்ளியங்கிரி மலையேற்றம் குறித்த அனுபவங்களை ஒலி வடிவில் கொடுக்க, அதனை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுத்து வடிவத்தில் நமக்காகத் தந்து இருக்கிறார். வாருங்கள் இந்தப் பதிவு வழி நாமும் வெள்ளியங்கிரி மலையேற்றம் செய்யலாம் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு ஜெயலக்ஷ்மி/விஜி வெங்கடேஷ்.
******
வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் - 20.4.2026* -
வெகு நாட்களாக எனக்கு கோவை பூண்டியிலுள்ள வெள்ளியங்கிரி மலையிலுள்ள சிவன் கோயிலான வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்று ஒரு ஆசை.
வெள்ளியங்கிரி அடிவாரக் கோவிலுக்குச் சென்று அந்த ஈஸ்வரனை கடந்த மூன்று மாதங்கள் பிரதோஷ தினத்தன்று நான் இருக்குமிடத்தில் இருந்து என் two wheeler இல் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்து கொண்டிருக்கிறேன். அந்தக் கோவிலிலிருந்து தான் வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு செல்லும் படிகள் ஆரம்பமாகின்றன. அந்தக் கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள்(சில பெண் பக்தர்களும்) கையில் ஒரு கழியோடு வருவது முதலில் புரியவில்லை. பின்புதான் தெரிந்தது, மலைக்கோவிலுக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல மிகக் கடினமான ஏழு மலைகளை ஏறிச் சென்றுதான் தரிசிக்க வேண்டுமென்றும், அப்போது ஊன்றிக்கொள்ள கையில் ஒரு குச்சி/கழி அவசியம் வேண்டும் என்றும். அவர்களைப் பார்க்கும்போது நானும் ஒரு முறை மலையேறி அப்பனை தரிசனம் செய்ய வேண்டும் எனும் தணியாத ஆவல் எழுந்தது.
என் மகனிடம் இந்த முறை நீ வெள்ளியங்கிரி மலை போகும்போது என்னையும் கூட்டிக்கொண்டு போ (அவன் ஒவ்வொரு வருடமும் சென்று வருவான்) என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் அம்மா அது இள வயது ஆண்களுக்கே மிகக் கடினமான பயணம். உன்னால் ஏறுவது கஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனால் எனக்கோ நாளுக்கு நாள் போகும் எண்ணம் வலுத்துக் கொண்டே இருந்தது.
எனக்கு எப்போதும் மலை மேலிருக்கும் கோவிலுக்குச் செல்வது மிகவும் விருப்பமான ஒன்று. அப்படி சிரமம் எடுத்துக்கொண்டு ஏறி கடவுளை தரிசனம் செய்வதுதான் உண்மையான கடவுள் தரிசனம் என்ற எண்ணம். பழனி, திருப்பதி போன்ற மலைக் கோவில்களுக்குச் சென்றாலும் மிகவும் சவாலான வெள்ளியங்கிரி மலைக் கோவிலுக்கும் போய்விட்டு வர வேண்டும் என்று மிகவும் விருப்பமாக இருந்தது.
ஒரு கார் டிரைவரிடம் என்னைக் கூட்டிக் கொண்டு செல்லுமாறு சொல்லி ஏற்பாடும் செய்துவிட்டேன். இதைத் தெரிந்துகொண்ட என் மகன் என் தீவிரத்தை பார்த்துவிட்டு சரி தானே என்னைக் கூட்டிக்கொண்டு செல்வது என்று முடிவெடுத்து எனக்கு phone செய்தான், அம்மா இந்த திங்களன்று (20.4.26) போகலாம், ரெடியாக இரு என்று. அதற்கு 3 நாட்கள் முன்னர்தான் வெள்ளிக்கிழமை (17.4.26) திருவண்ணாமலை கிரிவலம் (5 மணிநேர நடை 14 km மலையைச் சுற்றி) முடித்துவிட்டு வந்திருந்தேன்.
அவனிடம் பௌர்ணமியன்று போகலாமே வெளிச்சமாக இருக்குமே என்று சொன்னேன்.
அவன் இல்லம்மா அது சரியாகாது, எனக்கே பல முறை தட்டிப் போய் இப்போதுதான் போக சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது அதனால் நாம் திங்களன்றே போய்விடலாம் என்றான். ஆகவே நான், என் மகன் (சித்தார்த்) உதவிக்கு ஒரு ஆள் மூவரும் அடிவாரம் வந்து சேர்ந்தோம்.
அடிவாரத்தில் ஒரு மெடிக்கல் கேம்ப் இருக்கிறது. அங்கே போய் நாம் test செய்துகொள்ள வேண்டும். மலையேற நம் உடல் தகுதியாக இருந்தால்தான் அனுமதிப்பார்கள். அங்கிருந்த Dr. உங்களுக்கு BP இருக்கா ஏதாவது மருந்து அதற்குச் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார். எனக்கு BP இல்லையே அதனால் நான் எதுவும் மருந்து எடுத்துக் கொள்வதில்லை என்றேன். அதற்கு அவர் இங்கே BP காட்டுகிறதே என்றார். பின் என் மகனை அழைத்து நீங்கள் இந்தக் கோவிலுக்கு போய் வந்திருக்கிறீர்கள். உங்கள் அம்மாவிற்கு மலையேறி அனுபவம் உண்டா என்று கேட்டார். முன்னர் பழனி, திருப்பதியெல்லாம் ஏறிப் போய் வந்திருக்கிறோம், இங்கு, இதுதான் முதல் முறை என்று சொன்னான். பின்னர் அவர் நீ பார்த்து ஜாக்கிரதையாகக் கூட்டிக் கொண்டு போ என்று சொல்லி அனுமதித்தார்.
இரவு 9.30 மணிக்கு மூவரும் கையில் கழியுடன் ஏற ஆரம்பித்தோம். மூன்று மலைகள் ஏறியாயிற்று. என் மகன் சுக்குக் காபி குடிக்கிறாயா என்று கேட்டான், வேண்டாம் மோர் வாங்கிக் கொடு என்று கேட்டு குடித்தேன். கையில் பழங்கள் நறுக்கிக் கொண்டு வந்திருந்தேன், பசித்தால் சாப்பிட. நான், என் மகன் இருவரும் இரவு உணவு சாப்பிடாமல்தான் கிளம்பினோம். மோர் குடித்துவிட்டு
ஒரு ஆரஞ்சுப் பழமும் சாப்பிட்டேன். அது தப்பாகப் போய் விட்டது. மலை ஏற ஏற வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. கையை விட்டு வாந்தி எடுத்துவிடலாமா என்று தோன்றிவிட்டது. மிகச் சிரமப் பட்டு அடக்கிக் கொண்டு ஏறினேன்.
பேசவில்லை (பயம்! வாயைத் திறந்தால் வாந்தி வந்துவிடுமோ என்று). தஸ் புஸ் என்று மூச்சு மட்டும் ஹெவியாக வந்து கொண்டிருந்தது.
அப்படியே 3 மலைகள் ஏறி நாலாவது மலையை அடைந்தோம். அதுமிகக் கடினமானது.
பெஞ்ச் போல் படிகள் உயர உயரமாக. காலைத் தூக்கித் தூக்கி உயரே வைத்து ஏறவேண்டும். மிகவும் சிரமப் பட்டேன். என் இடது கையில் குச்சி. எதிரே வருபவர்கள் தங்கள் குச்சியையும் என் வலது கையில் பிடித்துக் கொள்ளக் குடுத்து உதவினார்கள். இதுபோல் இறங்கும் பலரும் அடுத்தவர்களுக்கு உதவினார்கள். ஒருவழியாக இந்த மலையையும் கடந்தோம். தொடர்ந்து என்ன செய்தோம் என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நட்புடன்
ஜெயலக்ஷ்மி
********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
16 ஜூலை 2026





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....