சனி, 11 ஜூலை, 2026

சோலோ ட்ரிப் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட Sugar Cut - மலையாள குறும்படம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




பயணங்கள் வாழ்விற்கான அனுபவங்கள் பலவற்றை தரும் என்று அடிக்கடி என்னவர் சொல்லிக் கொண்டிருப்பார்! நம்ம பதிவர் அமுதாக்கா தனித்தே காஷ்மீர் வரை செய்யும் சோலோ ட்ரிப்களை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்! சிறுவயது முதலே அப்பாவின் துணையுடனோ பின்பு என்னவரின் துணையுடனோ ஏன் மகளுடன் கூட தான் பயணம் செய்திருக்கிறேன்! 


நான் முதன்முதலில் தனித்தே பயணம் செய்தது என்றால் அது என் 22வது வயதில் டெல்லியிலிருந்து கோவை வரையிலான இரண்டு நாட்கள் மேற்கொண்ட ரயில் பயணம் தான்! அம்மா இன்னும் பத்து நாள் தான் இவ்வுலகில் இருப்பாள் என்று டாக்டர்கள் கைவிட்ட நிலையில் அம்மாவைக் காண அப்போது தனித்தே ஓடி வந்தேன்! அதன் பின்பு அம்மாவுடன் ஒன்றரை மாதங்கள் போல உடனிருந்து அவளுக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பை இறைவன் அருளினார்!


அன்று மேற்கொண்ட ரயில் பயணத்தில் நேரத்தை செலவிட அமரர் கல்கி அவர்களின் ‘தியாக பூமி' எனும் புத்தகம் பெரிதும் உறுதுணையாக இருந்தது! டெல்லியிலிருந்து நான் வந்து கொண்டிருந்த ரயில் மூன்று மணிநேரம் போல தாமதமானதால் அடுத்து கோவைக்கு செல்லும் ரயிலை பிடிக்க வேண்டிய பதட்டம்! அன்றைய சூழலை எளிதென கடந்து வர உதவிய மனிதர்கள் என்று சிறந்ததொரு அனுபவத்தினை பெற்றேன்!


எதற்காக இந்தக் கதைகள்?? நேற்றைய தினம் கோவையிலிருந்து திருச்சி வரை தனித்தே மேற்கொண்ட ஒரு பயணம் தந்த இனிய அனுபவத்தினை பற்றி எழுதலாம் என்று தான் துவங்கினேன்! முன்கதை சுருக்கம் அல்லது ஃப்ளாஷ் பேக் கதைகள் இல்லாமல் என் பதிவுகள் எப்போதுமே இருக்காது…:) சரி! வாங்க! 


ரயில் பயணங்களில் ஒருவருக்கொருவர் பேசி பழகி வாழ்நாள் நட்புவட்டத்தை பெற்றுக் கொண்ட நாட்கள் மறைந்துவிட்டது! அலைபேசியில் முடங்கிப் போய்விட்ட சமூகத்தில் இந்த முறை நான் செய்த ரயில் பயணத்தில் சட்டென்று ஏதோ நேற்று விட்ட உரையாடலை இன்று தொடர்வது போன்று அருவிப் பிரவாகமாய் எங்களுக்குள் பெருகிக் கொண்டிருந்தது!


திருச்சிக்கும் கோவைக்கும் இடையே செய்த ரயில் பயணம் என்பதால் திருச்சியைப் பற்றியும் கோவையைப் பற்றியும் துவங்கிய எங்கள் பேச்சு, காலநிலை, விலைவாசி, அறியப்படாத கோவில்கள் அதன் சிறப்புகள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், இறைவனின் அருள் என்பதாகச் சென்று கொண்டிருந்தது! நேரம் போனதே தெரியவில்லை! 


நான் திருச்சி ஜங்ஷனில் இறங்க முற்படும் போது என்னருகில் அமர்ந்திருந்த பெண்மணி என்னிடம் நானும் உங்களோடயே இறங்கிடலாம்னு தோணுது! நேரம் போனதே தெரியலை! என்றார்! அவர் அந்த ரயிலிலேயே கும்பகோணம் வரை செல்ல வேண்டியவர்! எதிர்சீட்டில் இருந்த பெண்மணி திருச்சி fort ஸ்டேஷனில் இறங்கினார்! அவர் சொன்ன தகவல்களில் இதுவரை அறியாத கோவில்களைப் பற்றி மனதில் முடிச்சிட்டுக் கொண்டேன்! நல்லதொரு இனிய பயணமாக இருந்தது!


திருச்சி ஜங்ஷனில் இறங்கியதும் வாயிலில் இருந்த A2B உணவகத்தை நோக்கி தான் சென்றேன்! காலையில் கோவை ரயில்நிலையத்தில் 50ரூ கொடுத்து வாங்கிய 3 இட்லிகளும் 1வடையும் கொண்ட பொட்டலத்தை 8மணி போல ரயிலில் சாப்பிட்டேன்! இப்போது மதியமாகி விட்டது! 


‘நான் ஒண்ணும் சமைச்சு வைக்கல! இருந்த மாவில் தோசை வார்த்து சாப்பிட்டுட்டு ஆபீஸுக்கு வந்துட்டேன்! நீ வரும் போது A2B ல சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போ! என்று என்னவர் அனுப்பியிருந்த மெசேஜை பார்த்தேன்! சரி! இதுவும் ஒரு அனுபவம்! ஹோட்டலுக்கெல்லாமும் தனித்து சென்று எனக்காக ஆர்டர் செய்ததில்லை..🙂


உடமைகளையும் எடுத்துச் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தேன்! என்ன இருக்கு? என்று சர்வரைக் கேட்க, அந்த நேரத்தில் டிபன் ஐயிட்டங்கள் குறைவாகத் தான் இருந்தது! அவர் சொல்லிச் சென்றதில் தோசை வெரைட்டிகளில் சாதா, பொடி, மசாலா என்றதும் அதற்குமேல் அவரை நான் பேச விடவில்லை..🙂 ஒரு மசால் தோசை! என்றேன்..🙂 எங்கு சென்றாலும் நான் என்ன ஆர்டர் செய்வேன் என்று என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும்..🙂


சூடான மசால் தோசையை விள்ளல்களாக எடுத்து சட்னி, சாம்பாருடன் ரசித்து சாப்பிட்டேன்! ஏதாவது குடிக்கலாமே என்று தோன்றவே, மில்க்‌ஷேக் ஏதாவது இருக்கா? என்று சர்வரைக் கேட்டதும் காபி, டீ, சூடான பாதாம் மில்க் தான் இருக்கு என்றார்! சரி! சூடா பாதாம் பால் கொண்டு வாங்க என்று சொல்லி டபரா டம்ளரில் வந்ததை ஆற்றி சிறிது சிறிதாக ருசித்தேன்! பில்லை கொண்டு வரச் சொல்லிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக Red taxiயும் அங்கேயே புக் செய்து கொண்டேன்!


இந்தப் பயணத்தை அசை போட்டுப் பார்த்தால் என்னை நினைத்து எனக்கே மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது! நிர்பந்தமோ, கட்டாயமோ, சூழலோ வாழ்வில் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் அனுபவங்கள் நிச்சயம் நமக்கான பக்குவத்தை தந்து மெருகேற்றும் என்பது உறுதி என்பதை புரிந்து கொண்டேன்! சந்திக்கும் மனிதர்களால் நட்பு மட்டுமல்ல பாடங்களும் பெறலாம்!


பின்குறிப்பு:-


படத்தில் இணைத்திருக்கும் முல்லைச்சரம் நான் ரயில் பயணத்தில் வாங்கியது தான்! வட்டமாக சுற்றி வைத்திருக்கும் இரண்டு முழம் முல்லைசரத்தின் விலை 50ரூ. அந்த அண்ணா ‘இத உடனே உபயோகிச்சுடுங்க! காசு ஏதும் தர வேணாம்! என்று இன்னும் மூன்று முழ முல்லைச்சரத்தையும் என்னிடம் கொடுத்தார்!



******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

11 ஜூலை 2026


11 கருத்துகள்:

  1. ஆக தனித்து பயணம் செய்தது இப்போது இரண்டாவது முறை.  சரிதானே?  வெங்கட்டோ, ரோஷ்ணியோ அவ்வப்போது அரைமணிக்கொருமுறை அலைபேசி "எங்கே இருக்கே?" ன்னுல்லாம் கேக்கலையா?

    பதிலளிநீக்கு
  2. அரைநாள் பயணத்தை 'ஆதி'யோடந்தமாக நிதானமாக சொல்லி இருக்கிறீர்கள்!  நான் தனித்து முதல் முறை ஹோட்டலுக்குச் சென்றபோது கொஞ்சம் நெர்வஸாகவும், பெருமையாகவும் இருந்தது.  அப்போது நான் மூன்றாம் க்ளாஸ் படித்துக் கொண்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு தனித்துப் பயணிப்பது ஒரு திரில் அனுபவம்தான். (எனக்கு). நான் இதுவரை அப்பேற்பட்ட பயணங்களை மேற்கொண்டதில்லை. எப்போதும் துணையுடன்தான் சென்றிருக்கிறேன். பலர் அதுவும் இந்த காலத்தில் அப்படித்தான் பயங்கள் ஏதுமின்றி பயணம் செல்கிறார்கள். அதைப் பார்த்தும் பல நேரம் நான் ஆசச்சரியபட்டுள்ளேன். உங்களுக்கு இப்போது அது அமைந்ததும், ஒரு வகை வெற்றிதான். உங்கள் பதிவை ரசித்துப் படித்தேன்.

    முல்லைச்சரம் படம் நன்றாக உள்ளது. மேலே வீபுதி கீற்று, அடியில் குங்கும பொட்டுப் போன்ற அமைப்புடன் என் கண்களுக்குத் தெரிந்தது. ரசித்தேன். நல்ல வாசனையான பூவிது. ஆனால் சீக்கிரம் வாடி விடும் தன்மை கொண்டது. . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. தனித்துப் பயணம்... பெரும்பாலும் பெண்களுக்கு அமைவது கஷ்டம்.

    அதனாலோ என்னவோ.. என் பெண் 10வது படிக்கும்போது, தான் தனியாகத்தான் பஹ்ரைனிலிருந்து சென்னை செல்வேன் என்று சொன்னாள். அம்மா, தம்பிக்கு வேறு ஃப்ளைட்டோ இல்லை அதே ஃப்ளைட்டில் வந்தால் தனியா புக் செய்து அவங்களை ஏர்போர்ட்டில் டிராப் பண்ணுங்க என்றாள். அது விநோத கோரிக்கையா இருக்கே என்று அப்போது யோசித்தேன். பிற்பாடு அசைபோடும்போது, அவங்க அவங்க தனியா பயணிக்க பழகிக்கொள்வது நல்லது என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை னம்ம வீட்டில் நான் பெரும்பாலும் தனியான பயணம் தான். உங்க பெண்ணை ரொம்பப் பாராட்டுகிறேன். பிறந்த வீட்டில் திருமணத்திற்கு முன்னரே கூட நான் தனியாகத்தான் காஞ்சிபுரம், சென்னை என்று பயணத்தேன்! பேருந்தில். ஆனால் பின்னால் அமர்ந்திருந்த இரு காவாலிப்பசங்க என்னை ரொம்ப சீண்டினாங்க...எழுந்து சட்டையைப் பிடித்து, கண்டக்டரிடம் சொல்லி. போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லச் சொல்லி...அதன் பின் கண்டக்டர் எனக்கு வேறு சீட் மாற்றிக் கொடுத்தார். இதை எல்லாம் வீட்டில் சொன்னது கிடையாது ஆனால் சொல்லும் அளவு வீட்டில் connectivity யும் கிடையாது!!!!!!

      கீதா

      நீக்கு
  5. நீங்க உணவகத்தைப் பற்றி எழுதியிருக்கும்போது என் அனுபவமும் நினைவுக்கு வருது

    நான் திருமணம் ஆன முதல், சமீப காலம் வரை மனைவிக்கும் நாந்தான் ஆர்டர் செய்வேன். இதுதான் நல்லா இருக்கும், இது பெட்டர் என்று நானே நினைத்து (மனதில் நல்லது நினைத்துத்தான்) செய்வேன். சில நேரங்களில் மனதில், இதைப்போய் ஆர்டர் பண்ணறாளே.. நல்லா இருக்காதே என்று தோன்றும். ஆனால் வெளியில் சொல்வதில்லை.

    என் பெண், இரு வருடங்களுக்கு முன்னால், நல்லதோ கெட்டதோ..அம்மாதான் அம்மாவுக்கு என்ன வேணும்னு ஆர்டர் பண்ணணும், நீங்க பண்ணுவது தவறு என்று சொல்லிட்டா. அதிலிருந்து அந்தப் பழக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, நம்ம வீட்டுல எப்பவுமே எனக்கு வேண்டியதை நான் தான் ஆர்டர் செய்வேன்....எப்பவாச்சும் மெனு பார்க்க போரடிச்சு சலிப்பாகி....நீங்களே சொல்லிடுங்க என்றாலும் கூட நீ தான் சொல்லணும் என்று சொல்லிடுவாங்க.

      கீதா

      நீக்கு
    2. என் பெண், இரு வருடங்களுக்கு முன்னால், நல்லதோ கெட்டதோ..அம்மாதான் அம்மாவுக்கு என்ன வேணும்னு ஆர்டர் பண்ணணும், நீங்க பண்ணுவது தவறு என்று சொல்லிட்டா//

      That's it!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  6. ஆஹா ஆதி தனியாகப் பயணமா சூப்பர். அது தரும் சுகம் அனுபவம் சொல்ல வார்த்தைகள் கிடையாது நீங்களும் அனுபவிச்சிருப்பீங்க....தன்னம்பிக்கையும் நிறைய தரும்.

    நான் பெரும்பாலும் தனியாகத்தான் பயணம்...ஒரு சில இடங்கள் கூடத் தனியாகப் போய் பார்த்திருக்கிறேன் குறிப்பாக என் ஊர்ப்பயணத்தின் போது.

    சூப்பர் ஆதி இனியும் அமைந்தால் Enjoy!!! நிறைய கற்க முடியும். தெரிந்து கொள்ள முடியும். நானும் ரயிலில் பேச்சுக் கொடுப்பதுண்டு யாரேனும் சரியாக அமைந்தால்! ஆனால் பிரச்சனை என் செவித்திறன்!! மத்தவங்க கஷ்டப்படக் கூடாதே..நான் திரும்பக் கேட்டால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தனியாகப் பயணம் இக்காலம் எல்லோரும் தம் வேலையில் பிசியாக இருப்பதில் தனிப் பயணம் தேவைப்படுகிறதே.
    தன்நம்பிக்கை வந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  8. வாசகம் அருமை. நானும் திறந்த வெளி பல்கலை கழகத்தில் படிக்கும் போது செமினார் வகுப்புகளுக்கு, மாயவரத்திலிருந்து திருச்சி, கடலூர் என்று தனித்து பயணம் செய்தேன் முதன் முதலில் அப்புறம ஆழியாரில் ஆசிரிய பயிற்சிக்கு தனித்து பயணம் செய்து இருக்கிறேன்.

    இப்போது மதுரையிலிருந்து தனித்து டெல்லிக்கு விமான பயணம்.
    மகன் ஊரிலிருந்து மகள் வீட்டுக்கு தனித்து பயணம்
    முன்பு பயந்து நடுங்குவேன் இப்போது தன்னம்பிக்கையை வளர்த்து விட்டார்கள், அப்பா, (என் கணவர்)மகள்,மகன்.

    பதிவு அருமை. முகநூலில் படித்தேன்
    ரயில் பயணத்தில் நல்ல நட்புகள் கிடைத்தது மகிழ்ச்சி. அவர்கள் பிரியவிடை கொடுத்தது மகிழ்ச்சி.
    பூ விற்கும் அண்ணன் தங்கைக்கு உடனே வைத்து கொள்ள பூ கொடுத்தது நெகிழ்வு.
    அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம் ஆதி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....