வியாழன், 9 ஜூலை, 2026

இரயில் காட்சிகள் - SETC VOLVO பேருந்து - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட வடக்கு வாழ்கிறது - ஹோட்டல் உணவு - வீணடிக்கப்படும் உணவு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இரயில் காட்சிகள்:


இரயில் வந்ததும் அடித்துப் பிடித்து இரயிலில் ஏறிவிட்டால் மட்டும் போதுமானது அல்ல! நம்முடைய உடைமைகளை அடைத்து வைத்து விடவேண்டும் - வேறு யாரும் வைப்பதற்கு முன்னர், அவர்களுக்கு இடம் இல்லை எனில் நமக்கென்ன வந்தது என்ற எண்ணம் தான் பலருக்கும் இருக்கிறது.  சற்றே பொறுமையாக அனைவரும் நடந்து கொண்டால் சில நிமிடங்களில் எல்லாம் சரியாகும். ஆனால் யாருக்குமே பொறுமை இருப்பதில்லை. என்ன ஒரு அவசரம், என்ன ஒரு சலசலப்பு, வாக்குவாதம் என சில நிமிடங்கள் சந்தையில் நடக்கும் சண்டைக் காட்சி போல தான் காட்சி அளிக்கிறது நம் இரயில் பெட்டிகள்.  ஒரு வழியாக அனைவரும் அவரவர் இடங்களில் அமர்ந்து கொண்ட பிறகு, இருக்கவே இருக்கிறது அலைபேசி - சத்தமாக ரீல்ஸ், யூட்யூப் காணொளிகள், செய்திகள் என எதையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம்! யாருக்கேனும் தொந்தரவாக இருந்தால் அது அவர்கள் பிரச்சனை. எனக்குப் பிடித்ததை நான் செய்வேன் - அதை யாரும் கேட்கக் கூடாது என்பதே இன்றைய சிந்தனை.  கடந்த சில நாட்களாக இரயில் பயணங்கள் மற்றும் நீண்ட தூர பேருந்துப் பயணமும் வாய்த்தது.  


எல்லோரையும் கவனித்தபடி எனக்குப் பொழுது போனாலும் சில சமயங்களில் எதற்காக இத்தனை அவசரமும் சலசலப்பும் என்று தோன்றாமல் இருக்காது.  அதிலும் சிலரின் செயல்கள் நமக்கு அலுப்பைத் தருவதோடு கோபமும் தருகிறது.  கண்டுகொள்ளாமல் இருப்பது நமக்கு நல்லது! இந்தக் காட்சி பிடிக்கவில்லையா வேறு காட்சி தான் இருக்கவே இருக்கிறது! எனக்கு முன் இருக்கையில் ஒரு பெண் - அவளுடன் ஒரு இளைஞர். இளைஞருக்கு சீட் வேறு எங்கோ, பெண்ணுக்கு இங்கே எனக்கு முன்னால்! அந்த இளைஞர் அவரது சீட்டில் அமரவே இல்லை! பெண்ணும் அமராமல், வாசல் கதவுகள் அருகே இரண்டு பேரும் நின்று கொண்டே வந்தார்கள் - சென்னையிலிருந்து திருச்சி வரை - அதாவது அந்தப் பெண் இறங்கும் வரை! அதற்குப் பிறகு அந்த இளைஞரின் பயணம் உட்கார்ந்த படி தொடர்ந்தார்.  இறங்குவதற்குள் அவர்கள் கண்ணோடு கண் பேச, எனக்கு ஒரு எம்.ஜி.ஆர். படப் பாடல் - எஸ்.பி.பி - சுசீலா குரல்களில் நினைவுக்கு வந்தது! பாருங்களேன்!


SETC VOLVO பேருந்து:



கோவையிலிருந்து சென்னை வரை பயணம் - திட்டமிடாத பயணம் செய்ய வேண்டியிருந்தது.  இரயிலில் முன்பதிவு செய்யலாம் என்றால் எந்த இரயிலிலும் இடம் இல்லை. தத்கால் பதிவு செய்யலாம் என்றால், கிடைப்பது அரிதாகவே இருக்கிறது - சரி வேறு வழியில்லை - பேருந்தில் பயணிப்போம் என முடிவு செய்து முன்பதிவு செய்வதற்கான தளங்களில் பார்த்தால் எல்லாம் அதிக விலையில் தான் இருந்தது. SETC தளத்தில் பார்க்க அதில் VOLVO பேருந்து இருக்க, செமி ஸ்லீப்பர் இருக்கைகள் கிடைத்தன.  கட்டணம் - 950/- ரூபாய்! சரி என்று முன்பதிவு செய்து விட்டேன்.  புதிய VOLVO பேருந்து என்பதால் நன்றாகவே இருக்கிறது. ஜன்னலோர இருக்கை தான் முன்பதிவு செய்திருந்தேன்.  நல்ல வேளை, “நாங்க ஃபேமிலியா வந்திருக்கோம் - இடம் மாறி உட்கார்ந்துக்கோங்க!” என்று யாரும் வரவில்லை.  எனக்கு அருகே என்னை விட சில வயதுகள் அதிகம் இருக்கலாம் - அவர் தான் இருந்தார்.  அடுத்த நாளைக்கான பதிவினை தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். அது முடிந்து அலைபேசியை வைத்ததும் பேச்சுக் கொடுத்தார் பக்கத்து இருக்கை மனிதர். 


காலைல எத்தனை மணிக்கு சென்னை போகும்?


இந்த பஸ் ECR வழியா போகுமா?


ECR போகணும்னா எங்க இறங்கணும்? வண்டலூர்ல இறங்கினா சரியா இருக்குமா?


வண்டலூர்ல இறங்கினா அங்கேயிருந்து ECR எவ்வளவு தூரம், எப்படி போகலாம்? பஸ் கிடைக்குமா? இல்லை Red Taxi பிடிக்கலாமா? எவ்வளவு காசு கேட்பாங்க?


இப்படி வரிசையாக கேள்விகள். 


சென்னை ECR இல் இருக்கும் ஏதோ ஒரு ரிசார்ட்டில் திருமணம் ஒன்றிற்கு போகிறாராம். பசங்க எழுதி குடுத்தாங்க என்று துண்டு சீட்டைக் காண்பித்தார்.  வண்டலூர்ல இறங்கிக் கோங்க, அங்கே இருந்து நீங்க சொல்ற ரிசார்ட் 40 கிலோ மீட்டர் காண்பிக்குது கூகுள் மேப்.  Red Taxi App இருந்தா அதுல Book செய்து போகலாம் என்று சொல்ல App இல்லை, எதோ ஃபோன் நம்பர் இருக்கு, ஆனா எவ்வளவு கேட்பாங்கன்னு தெரியல என்றார்.  என்னுடைய அலைபேசியில் பார்க்க அந்த இரவு நேரத்தில் 1500 ரூபாய் காண்பித்தது.  அவரிடம் காலைல வண்டலூர்ல இறங்கிட்டு உங்க கிட்ட இருக்க நம்பரில் அழைத்து பேசுங்கள், எவ்வளவு என்று சொல்வார்கள் என்று சொல்லி விட்டேன். 


கோவையிலிருந்து புறப்பட்டு சேலம் வழி சென்னை செல்லும் பேருந்து நடுவில் இரண்டு இடங்களில் நிறுத்தினார்கள் - முதலாவது நல்ல ஒரு உணவகத்தின் அருகே - அங்கே தான் இரவு உணவை சாப்பிட்டேன் - ஹோட்டல் ஸ்ரீ ஆனந்தாஸ் - இது நேற்றைய பதிவில் சொன்ன உணவகத்தின் கிளை அல்ல! - சப்பாத்தி கிடைத்தது - ஒரு ப்ளேட் 95 ரூபாய் - தொட்டுக்கொள்ள - கேட்காதீங்க - அதே குருமா, வெங்காய பச்சடி! சாப்பிட்டு வந்து, வெளியே சில நிமிடங்கள் காற்றாட நின்றிருந்தேன். என்ன தான் VOLVO பேருந்து, AC தான் என்றாலும் வெளிக்காற்றின் சுகம் அதில் இல்லை.  எனது உயரம் காரணமாக அந்தப் பேருந்தில் அமர்ந்து செல்வது கூட கொஞ்சம் நேரம் ஆனதும், ஸ்ட்ரெச் செய்ய முடியாமல் கால்கள் வலிக்க ஆரம்பித்தன! பரவாயில்லை நல்லதொரு உணவகத்தில் நிறுத்தி இருக்கிறாரே என்று நினைத்தேன்.  ஆனால் இரண்டாவது நிறுத்தம் - வழக்கம் போல பாடாவதியான உணவகத்தில் நிறுத்தினார்கள் - விக்ரவாண்டி அருகே! இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன். 


இரவு 08.15 மணிக்கு எடுத்த பேருந்து எங்களை சென்னை கிளாம்பாக்கம் நிறுத்தத்தில் இறக்கி விட்ட போது அடுத்த நாள் காலை 05.30 மணி! வசதியாகவே இருக்கிறது பேருந்து - பேருந்தினை சரியாக பராமரித்து வந்தால் நல்லது - இல்லை எனில் போகப் போக பாடாவதி பேருந்து ஆகிவிடும்! செய்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

9 ஜூலை 2026


8 கருத்துகள்:

  1. ரயிலில் முடிந்தவரை லக்கேஜ் இல்லாமல் போனால் சௌகர்யம்!  மூட்டை முடிச்சை குறையுங்கள் வண்டிப்பயணம் சுகமாகும் விளம்பரம் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  2. காதல் அப்படி அவர்களை பாடாய்ப்படுத்துகிறது. 

    ஆஹா அதிகம் அறியப்படாத எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றான தலைவர்(கள்) பாடல் சூப்பர்.  சரணங்களில் தலைவர் விளையாடுவார்.  உங்கள் தளத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு தமிழ்ப் பாடல் பகிர்வு இல்லை?

    பதிலளிநீக்கு
  3. வால்வோ பேருந்து என்றதும் மகன் திருமணத்துக்குச் செல்லும்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன.  SBLT.

    பதிலளிநீக்கு
  4. 900 ரூபாய் கொடுத்து வால்வோ பேருந்தில் திருச்சியிலிருந்து சென்னை வரை பயணம்.  பின்னர் 40 கிலோமீட்டருக்கு 1500 ரூபாய்..  அநியாயம் இல்லை?  ஈரோடு திருமணத்துக்கு வந்தவர்களுக்கும் சிலருக்கு இந்தக் கஷ்டம் ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. ரயில் பயணங்களில் பலரும் அப்படித்தான், ஏகப்பட்ட லக்கேஜுடன் ஏறி நமக்குக் கால் வைக்கக் கூட இடமில்லாமலும் செய்வதுண்டு. அது போல வீடியோக்கள் பார்ப்பது..ஒரு சிலர் மட்டுமே ஹெட் ஃபோன் பயன்படுத்தறாங்க.

    பகல் என்றால் நான் பெரும்பாலும் வெளியில் வேடிக்கை ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டு...அப்படியே பயணிப்பது. இரவு என்றால் டிடி ஆர் வந்து சென்ற பிறகு படுக்கை

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அடுத்த நாளைக்கான பதிவினை தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். அது முடிந்து அலைபேசியை//

    அலைபேசியில் பதிவு டைப் செய்வது...உங்களை, அது போல கமலா அக்கா, துரை அண்ணா எல்லோரையும் வியந்து பார்க்கிறேன்.

    தொட்டுக்கொள்ள - கேட்காதீங்க - அதே குருமா, வெங்காய பச்சடி! //

    சிரித்துவிட்டேன். குருமா எல்லா ஹோட்டல்களிலும் நன்றாக இருப்பதில்லை. மசாலா ஓவராகப் போட்டுவிடுகிறார்கள்.

    பேருந்துப்பயணத்தைவிட ரயில் பயணம் பிடித்த ஒன்று ஆனால் இப்படித் தவிர்க்க முடியாமல் போகும் போது பேருந்த்ப்பயணம் தான் கை கொடுக்கும். ஸ்லீப்பர் பேருந்து விரும்புவதில்லை.

    கீதா


    பதிலளிநீக்கு
  7. //நம்முடைய உடைமைகளை வைத்துவிடவேண்டும்// - நாங்கள் நால்வர் (மனைவி, மாமனார், மாமியார்) முக்திநாத் யாத்திரை 2008ல் சென்றிருந்தபோது, இரயிலில் ஏறிய உடனேயே எங்கள் உடைமைகளை சீட்டின் அடியில் வைத்துவிட்டேன்... (அவசர அவசரமாக). பிறகு மெதுவாக மாமனார் சொன்னார் (அவர் எங்கள் அப்பாவின் குடும்ப நண்பர், என்னுடைய ப்ரொஃபசராகவும் இருந்தவர்), இங்கு 6 பேர் பயணிக்கிறோம், நம் நால்வர் உடைமைகளை மாத்திரம் வைத்துவிட்டால், மற்றவர்களுக்கு இடம் வேண்டாமா? நமக்குள்ள இடத்தில்தான் முடிந்த அளவு நம் உடைமைகளை வைக்கவேண்டும் என்று சொன்னார். நல்ல படிப்பினை எனக்கு.

    பதிலளிநீக்கு
  8. வழி நிறுத்தங்களில் சப்பாத்திக்கு குருமா, வெங்காய ரெய்த்தா கொடுக்காமல் வேறு என்ன கொடுப்பாங்க? சில யாத்திரைகளில் எனக்கு தக்காளி தொக்கு கொடுப்பாங்க. எனக்கு குருமாதான் இஷ்டம். இல்லைனா எலுமிச்சை கார ஊறுகாய்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....