அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
ஈச்சனாரி விநாயகர், கோவை - 30 ஜூன் 2026:
இன்று காலை ஈச்சனாரி விநாயகரின் அருமையான தரிசனம் கிடைத்தது! குளுமையான சூழலில் எந்த தள்ளுமுள்ளுவும் இல்லாமல் நல்லதோர் தீபாராதனையுடன் கணேஷாவுடன் சற்று மனதார பேச முடிந்தது! சுற்றுப் பிரகாரத்தில் விநாயகரின் திருவிளையாடல்கள் ஓவியமாக தீட்டப்பட்டிருந்தது! பிரசாதமாக சுவையான பஞ்சாமிர்தமும் கிடைத்தது.
நல்லதே நடக்கணும் கணேஷா!
அருகில் நடக்கும் தொலைவில் மஹாலஷ்மி கோவில் இருந்தது! அங்கேயும் சென்று வந்தோம்! துர்கா லஷ்மி சரஸ்வதி என மூன்று தேவியரையும் நன்கு தரிசிக்க முடிந்தது!
பிறந்தது முதலாக நான் பார்த்து ரசித்த கோவையை மகளுக்கும் காண்பிக்க முடிவதில் மகிழ்கிறேன்!
******
ரேஸ்கோர்ஸ் ஹவுசிங் யூனிட் - 1 ஜூலை 2026:
நேற்று மாலை, பிறந்தது முதலாக நான் வசித்த பகுதியை மகளுக்கு காண்பிக்கலாம் என நினைத்து இருவரும் கிளம்பினோம்!
**** ரேஸ்கோர்ஸ் ஹவுசிங் யூனிட் தாமஸ் பார்க், கோவை - 641018.
இதுவே அன்றைய எங்கள் வீட்டின் முகவரியாக இருந்தது! அப்பா PWDல் பணிபுரிந்ததால் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது இந்தக் அரசுக் குடியிருப்பு! ஆனால் இப்போது அங்கு வீடுகளே இல்லை என்று கேள்விப்பட்டிருந்தேன்! எங்கள் குடியிருப்பைச் சுற்றி அமைந்திருக்கும் Walking road என்பது மிகவும் பிரபலம்! கோவையின் அடையாளங்களில் ஒன்றாக எண்ணப்படுகிறது இந்த சாலை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
நாங்கள் இருந்த இடத்தில் வீடுகளே இல்லையென்பதால் Red taxi appல் book பண்ணும் போது location என்று எதைப் போடுவது!!? அதனால் அங்கு உள்ள சிருங்கேரி மடத்தின் சாரதாம்பாள் கோவிலைத் தேர்ந்தெடுத்தேன்! அழகான கோவில்! Walking roadல் உள்ள கலெக்டர் பங்களாவுக்கு அடுத்ததாக உள்ள கோவில்! வருடங்கள் பல கடந்து விட்டதால் இப்போது மாற்றம் பல கண்டுள்ளது இக்கோவில் எனத் தெரிந்தது!
பால விநாயகர், ஆதி சங்கரர், பால முருகர் மற்றும் சாரதாம்பாள் என தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கும் தெய்வங்களை தரிசித்துக் கொண்டோம்! சிறுபிராயத்தில் அம்மாவுடன் இந்தக் கோவிலுக்கு சென்றிருந்த சமயம், தம்பியும் நானும் கோவிலுக்குள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம்! நான் அவனை பிடிக்க முயலும் போது ஆதிசங்கரர் சன்னிதியின் படிகளில் அவன் தலை மோதி நெற்றியின் உச்சியில் தையல் போடுமளவு காயம் ஏற்பட்டது! என்பது நினைவுக்கு வந்தது!
அதே போல் நவராத்திரி சமயத்தில் கோவிலுக்கு அருகே ஓலையில் பந்தல் வேயப்பட்டு அங்கு யாகங்கள், பூஜைகள்,சொற்பொழிவு என்று நடைபெறும்! ஒருமுறை திரு சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவை நின்று பார்த்ததும் நினைவுக்கு வந்தது! இப்போது அந்த ஓலைப்பந்தல் மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது!
Walking road வழியே வராமல் நாங்கள் இருந்த குடியிருப்பு வழியாகவும் இந்தக் கோவிலுக்குச் செல்லலாம் என்று நினைவில் இருந்ததால் அதில் சற்று தூரம் சென்று பார்த்தேன்! அங்கே District health office என்ற பதாகையுடன் ஒரு அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! ஆமாம்! இந்த இடத்தில் தான் நான் முதன்முதலில் சூரியகாந்திப் பூவை பார்த்தேன்! முற்றிய விதைகளுடன் நாணத்தில் தலைகுனிந்து காணப்பட்டது அந்த மலர்!
அந்த அலுவலகத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த ஊழியர்கள் சிலர், என்னம்மா வேணும்? யாரைப் பார்க்கணும்? இந்தப் பக்கமா எங்க போறீங்க? என்று என்னிடம் விசாரித்தனர்! நான் ரொம்ப வருஷம் கழிச்சு இங்கே வரேன்! நாங்க பின்னாடி இருக்கிற குவார்ட்டர்ஸ்ல தான் அப்போ இருந்தோம்! இந்தப் பக்கமா ஒரு வழி கூட இருக்கு! இப்படித்தான் சாரதாம்பாள் கோவிலுக்கு நாங்க வருவோம் என்றேன்!
ஆமாம்மா! ஆனா இப்போ அங்க தான் வீடுகளே இல்லையேம்மா! என்றார்! மார்கழி மாதத்து பனியில் கூட அம்மாவும் எதிர்வீட்டு மல்லிகாம்மாவும் குளித்து முடித்த ஈரத்தலையுடன் அதிகாலை இருட்டில் பயமின்றி இந்த வழியே கோவிலுக்கு வருவார்களே என்று நினைத்துக் கொண்டேன்! எல்லாம் பசுமையாய் கண்ணில் தோன்றும் காட்சிகளாய் மாறிவிட்டது!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
4 ஜூலை 2026


ஈச்சநாரி பிள்ளையார்! ஆஹா, அங்கிருந்தவரை பல முறை சென்றதுண்டு. நீங்கள் கோவை பற்றிச் சொல்லும் போது எனக்கும் பழைய நினைவுகள் கிளர்ந்து ஆசை எழுகிறது.
பதிலளிநீக்குகடவுளே! ரேஸ் கோர்ஸ் - ஹவுஸிங் யூனிட்! இப்படியா? எனக்கு மகனின் கராத்தே வகுப்பிற்குப் பயிற்சி அங்குதானே வருவேன் கூட்டிக் கொண்டு, அவன் பயிற்சி செய்ய, நான் ரேஸ்கோர்ஸ் சாலையைச் சுற்றி நடப்பேன். இடமே இப்ப வேறு மாதிரி இருக்கிறது. இப்ப நான் வந்திருந்தால் சத்தியமாக என்னால் அடையாளம் சொல்ல முடியாத அளவிற்கு.....மகனிடம் சொல்ல வேண்டும்.
உங்க குரலில் ஆதங்கம் வெளிப்படுகிறது. அதை உணர முடிகிறது. நான் அக்குடியிருப்பிற்கு வந்தப்ப, 96, 97, 98, 99 களில்
கீதா
சிருங்கேரி மடத்தின் சாரதாம்பாள் கோவிலைத் தேர்ந்தெடுத்தேன்!//
பதிலளிநீக்குஅழகான கோயில். அடிக்கடி சென்ற கோயிலும் கூட. இப்போது அக்கோயிலைப் பார்த்தீங்களா? படங்கள் அடுத்த பகுதியில் வருமோ?
கீதா
உங்கள் ஊரில் நீங்கள் வாழ்ந்த இளமைக்காலத்தை, நாங்களும் கண்டு கொண்டோம்.
பதிலளிநீக்குஅக்காலங்கள் மீண்டும் வருமா? வரும்
எமது நினைவலைகளில்......என்றும் இனிதாக.