செவ்வாய், 12 ஜூன், 2012

ஃப்ரூட் சாலட் – ஒன்று


[பட உதவி: கூகிள்]

அவியல், மொறுமொறு மிக்சர், கொத்து பரோட்டா, கதம்பம், கலவை, அஞ்சறைப் பெட்டி, வானவில், களஞ்சியம், இப்படி ஏகப்பட்ட பகுதிகள் பதிவுலகில் கலக்குகின்றன. இப்போது புதியதாக எனது பக்கத்திலும் ஃப்ரூட் சாலட் என்று... 

இந்த வார செய்தி:

சிலருக்கு படிக்க ஆசையிருந்தும் படிக்க முடியாது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் படிப்பார்கள். கேரளாவின் அதுல்யா மிஷன் சிறு வயதில் படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு படிப்பறிவு தருகிறார்கள். அவர்களது வகுப்பில் படிக்கும் ஒருவரைப் பற்றிய செய்தியைப் படித்ததும் ஆச்சரியமாக இருந்தது. 


சிறு வயதில் படிக்க முடியாத ஃபாத்திமா பீவி, இளமையிலேயே கல்யாணம் முடித்து, பின்னர் கணவரை இழந்து மூன்று குழந்தைகளையும் இறைச்சி கடை வைத்து காப்பாற்றியிருக்கிறார். அவர்கள் படித்து பெரியவர்களாக ஆகி வாழ்க்கையில் காலூன்றிவிட்டனர். இப்போது அதுல்யம் படிப்பறிவு சொல்லித்தருவது தெரிந்தவுடன் தானும் சேர்ந்து எப்படியாவது பத்தாவது முடித்து விடவேண்டும் என படிக்கத் தொடங்கி விட்டாராம். சென்ற வருடம் நான்காம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் அதிக வயதானவர் இவர் தான்! இந்த வருடம் நேரடியாக ஏழாவது தேர்வு எழுத முயற்சித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

ஆனால் பாவம், பத்தாவது படித்து முடிக்கும் இவரது ஆசையை நிறைவேறவிடாமல் அவரது 93 - வது வயதில் அவரை அழைத்துக் கொண்டு விட்டான் காலன்! படிப்பதென்றாலே தூக்கம் வருகிறது எனச் சொல்லும் பலர் இருக்க, இப்படியும் ஒருவர்! அவரது முயற்சியைப் பற்றிப் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.  

அவரது பெயரைப் பார்த்ததும் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்தது! என் கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு பெண்ணின் பெயரும் ஃபாத்திமா பீவி! என்னுடன் படித்த நிறைய நண்பர்கள்/நண்பிகள் இப்போதும் தொடர்பிலிருக்கிறார்கள். 

**
இந்த வார முகப்புத்தக இற்றை [Update]:

முகப்புத்தகத்தில் நிறைய இற்றைகள் [வார்த்தை உதவி: தில்லி பதிவர் முத்துலெட்சுமி] வந்து கொண்டே இருக்கும்! அவற்றில் சில சுவையாகவும் சிறப்பாகவும் இருக்கும். அப்படி முகரக்கட்டை [மன்னை மைனர் வாக்கு! புத்தகத்தில் வந்த சில இந்த ஃப்ரூட் சாலட் - இல் வெளிவரும். இன்றைக்கு ஹிந்தியில் வந்த ஒரு இற்றையின் மொழிபெயர்ப்பு:

பெரியவர் [ஒரு சிறுவனைப் பார்த்து]: உன் வயது என்னப்பா?

சிறுவன்: வீட்டுல 14…
பள்ளியில் 12…
ட்ரெயினில் 7…
முகப்புத்தகத்தில் 18…  :)
**
இந்த வாரக் காணொளி:

**
இந்த வார குறுஞ்செய்தி: 

இந்த அலைபேசி வந்தாலும் வந்தது, கூடவே கணக்கற்ற குறுஞ்செய்திகளும் வந்து குவிகின்றன. அவற்றிலும் சில நல்ல விஷயங்கள்  கிடைக்கத் தவறுவதில்லை.. அப்படி வந்தவற்றை இந்த ஃப்ரூட் சாலட் பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.

”எப்போதும் சந்தோஷமாக இரு. கவலையும் உன்னைப் பார்த்து கவலைப்படும்.”

மீண்டும் சந்திப்போம்!
நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



வெள்ளி, 8 ஜூன், 2012

சில பயணங்களில் சில மனிதர்கள்!


[பட உதவி: கூகிள்]



தொலை தூர பயணம் என்றால் பொழுது போக என்ன செய்யலாம்? புத்தகம் படிக்கலாம், அலைபேசியில் பாட்டு கேட்கலாம், ஜன்னலோர இருக்கையெனில் வெளியே வேடிக்கை... இவையும் அலுத்துவிட்டால்? ஹீ.ஹீ... சக பயணிகளின் நடவடிக்கைகளைக் கவனிக்கலாங்கறதை சொல்ல வந்தேன். சென்ற மாதத்தில் ஒரு நாள் சென்னை - திருச்சி பல்லவன் பயணத்தின்போது கவனித்த சில மனிதர்கள் பற்றி...


சாப்பாட்டு ராமர்: பயணத்தின் போது மேலே சொன்னவையெல்லாம் தாண்டி  இன்னொன்றும் இருக்கிறது என எனக்குப் புரியவைத்தவர் இவர். பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு பாக்கெட் கள்ள பர்ஃபி [கடலை கேக்]யை ரசித்து ருசித்து சாப்பிட்டார். பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த மனைவிக்கு ஒரு துண்டாவது தரணுமே மனுஷன்? ஊஹூம்!. இது ஒரு நல்ல ஆரம்பம் என்று எனக்குப் புரியவில்லை அப்போது. அடுத்தது மசாலா வடை ஒரு ப்ளேட். தொடர்ந்து வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த ஒரு பாட்டில் மோரில் கொஞ்சம் குடித்தார். (அடுத்தடுத்து வரிசையாக வருபவைகள் உள்ளே இறங்க வேண்டுமே!) தொடர்ந்து வந்த சமோசா, வாழைக்காய் பஜ்ஜி, போளி என ஒவ்வொன்றாய் உள்ளே செல்ல, ஒவ்வொரு ஐட்டத்தின் முடிவிலும் பாட்டிலில் இருந்து மோர் தவறாமல் நடந்தது! சாப்பிடுபவை வழுக்கிக்கொண்டு வயிற்றுக்குச் செல்லவும் அனாயாசமாக அவற்றை டைஜெஸ்ட் செய்யவும் என்ன ஒரு ஏற்பாடு! சே, இவ்வளவு நாள்  இந்த டெக்னிக் நமக்கு தெரியாம போச்சே! சாப்பாட்டு இடைவேளைகளில் கொஞ்சம் அலைபேசியில் ரிங்டோன் மாற்றி விளையாடினார் இந்த சாப்பாட்டு ராமர். 

பந்தா பரமசிவம்: கார்மேக வர்ணம் இந்த பந்தா பரமசிவம். அலைபேசியில் யாரிடமோ “நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நான் சொல்லி நடக்காம போகுமா? காரியம் நடக்க நான் கேரண்டி!...” என்று சத்தமாக பேசிக் கொண்டே வந்தார். சென்னையிலிருந்து விழுப்புரம் வரை தான் அவர் பயணம். வரும்போதே நல்ல அலங்காரத்தோடுதான் வந்தார். திண்டிவனம் தாண்டியவுடன், ஒரு பையை எடுத்துக்கொண்டு எழுந்து சென்றவர் 15 நிமிடத்தில் திரும்பினார். என்ன செய்தார் அந்த நேரத்தில்? ஏற்கனவே இருந்த மேக்கப்பின் மேல், அடுத்த கோட்டிங்! சுண்ணாம்பு அடித்தது போல, காது மடல் வரை பவுடர். சாருக்கு கொஞ்சம் பெரிய நெற்றி [வழுக்கைன்னு சொன்னா எனது தில்லி நண்பருக்குக் கோபம் வந்து விடும்!]. நெற்றி எல்லை வரை பளபளவென பவுடர் அடித்து... பக்கத்தில் போனால் சட்டைக்கை உங்களைக் கீறிவிடக்கூடும். மொடமொட கதர் சட்டையும் வேட்டியும் மாற்றிக் கொண்டு விழுப்புரத்தில் இறங்குவதற்கு தயாராகி விட்டார். மீண்டும் அலைபேசியில் மைக் விழுங்கிய குரலில் யாருக்கோ வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்! சீக்கிரமே ஏதாவது ஒரு தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராகப் பார்க்க முடிந்தாலும் பார்க்கலாம் இந்த பந்தா பரமசிவத்தை. 

நின்றவூர் நெட்டையப்பர்: சராசரியை விட சற்றே உயரம். நான்கு ஐந்து வரிசைகள் தள்ளி அமர்ந்திருப்பவர்களுக்கும் அவரது தலை தெரியும். பயணித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவரது அலைபேசி அடித்தது. காதில் வைப்பதற்கு முன்னரே எழுந்து நின்று விட்டார். அழைத்தது அவரது மனைவியோ? மனதுக்குள் ஒரு 'சம்சயம்'. பேசிய பிறகு கையைக் கட்டிக்கொண்டு சில நிமிடங்கள் நின்று கொண்டே வந்தார். என்ன தவறுக்கு இந்த பனிஷ்மெண்டோ, தெரியவில்லை! ஒவ்வொரு அரைமணிக்கும் கையைக் கட்டி நின்றபடி அவர் பயணம் தொடர்ந்தது.

[பட உதவி: கூகிள்]

கமலா டியர் கமலா: நான்காவது ஆள் கொஞ்சம் விவகாரமானவர். கையில் கடுகு (அகஸ்தியன்) அவர்கள் எழுதிய "கமலா, டியர் கமலா.." புத்தகம். கமலா, தொச்சு, அங்கச்சி மற்றும் கமலாவின் அம்மா, ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் கதைகளைப் படித்தபடி, ஏற்கனவே தடக், தடக் என அதிர்ந்து கொண்டு இருக்கும் ரயில் வண்டி மேலும் அதிரும்படி சிரித்துக் கொண்டே வந்தார். என்னடா இது, எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்களேன்னு கொஞ்சமாவது இங்கிதம்? நோ! இடி இடிச்ச மாதிரி சிரிப்பு!  

அந்த நாலாவது ஆள் வேற யாருமில்லீங்க! மத்தவங்களையெல்லாம் கவனித்து, அவர் சாப்பிட்டார், இவர் பந்தா காட்டினார், இன்னொருத்தர் நின்னுட்டே இருந்தார்னு எழுதி உங்களைப் படிக்க வைத்தவர்தான்! நான் கவனிச்ச மாதிரியே வேற யாராவது ஒரு வலைப்பூ எழுதுபவர் கவனிச்சு என்னைப் பத்தி எழுதறதுக்கு முன்னாடி நானே எழுதிடலாமேங்கற ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா!

என்னைச் சந்திக்க எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்து, கடுகு எழுதிய இரண்டு புத்தகங்களையும் இன்னும் ஒரு புத்தகத்தையும் அளித்த நண்பர் 'மின்னல் வரிகள்' கணேஷ் அவர்களுக்கு எனது நன்றி. பயண அலுப்பு தெரியாமலிருக்க என்னுடன் கூடவே பயணம் செய்ய அவர் அனுப்பிய 'கமலா' ரொம்பவே உதவியாக இருந்தார்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்
வெங்கட்.



வியாழன், 7 ஜூன், 2012

ஆட்டமா? படகோட்டமா?



[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 7]





இயற்கை அன்னை தந்த நர்மதா நதியின் நீர்வீழ்ச்சி கோலத்தினைப் பார்த்துவிட்டோம். இயற்கை என்றிருந்தால் அதில் மனிதன் தனது கைவண்ணத்தினைக் காட்டாது இருப்பானா? மத்தியப் பிரதேசத்தின் முக்கிய நதியான நர்மதை, அரபிக்கடலில் கலக்கும் முன் தனது மொத்த ஓட்டத்தில் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் மத்தியபிரதேசத்திலே தான் ஓடுகிறது. அதன் குறுக்கே இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. நதியின் குறுக்கே ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட அணைகளில் ஒன்று தான் பர்கி [Bargi] அணை. 

1974-ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1990-ம் ஆண்டில் முடிக்கப்பட்ட இந்த அணையின் மூலம் 4000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. தற்போது 90 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தியாகிறது. மாலை ஐந்து மணிக்குள் அங்கு சென்றால் தான் படகோட்டம் செய்ய முடியும் என்பதால் நாங்கள் வேகமாக சென்றோம்.

”வேகம் விவேகம் அல்ல”  என்பது சரிதான் போல. ஓட்டுனர் விரைவாகச் சென்று செல்ல வேண்டிய வழியை சரியாக தவறவிட்டார். ஐந்து கிலோமீட்டர் தாண்டிய பின்னரே அவருக்கும் தவறு புரிந்து, வண்டியைத் திருப்ப யத்தனித்தார்.  குறுகலான பாதையில் வண்டியைத் திருப்ப பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு வழியாகத் திரும்பி, சரியான பாதையில் சென்று மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையின் “மைகல்” உணவகத்திற்குச் சென்று சேர்ந்த போது மாலை மணி 05.15.





ஆதவன் தனது பணியைச் செவ்வனே முடித்துவிட்டு, வேறு கண்டம் செல்லத் தயாராக இருந்தான். எங்களைச் சுமந்து நர்மதையில் பயணம் செய்ய “நர்மதா ராணி” என்று அழைக்கப்படும் படகும் தயாராக இருந்தாள். இருட்டி விட்டால் பயணத்தினையும், நர்மதையின் அழகினையும் சுவைக்க முடியாது என்பதால் எல்லோரும் விரைவாக படகில் ஏறி உல்லாசப் பயணத்தினைத் தொடங்கினோம்.



[பட உதவி: கூகிள்]

படகினுள் வரவேற்று ”WELCOME DRINKS” கொடுத்தார்கள். “அடடா….  ம்.. எஞ்சாய் மாடி!....” என மனதுக்குள் பொறாமையாக சிலர் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவர்கள் கொடுத்தது ஆளுக்கொரு டெட்ரா பேக் மேங்கோ ஃப்ரூட்டி. :)   

[பட உதவி: கூகிள்]


உள்ளே சென்று ஃப்ரூட்டி அருந்தியபடி நாங்கள் இருக்க படகு நதியில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. அந்தி மாலை வேளையில் சுகமான தென்றல் காற்று தவழ்ந்து வந்து எங்களை முத்தமிட்டது. கூடவே படகில் இருந்த பெரிய ஒலிபெருக்கிகளில் இருந்து பல ஹிந்திப் பாடல்கள் [டப்பாங்குத்துதேன்!] அலறத் தொடங்கியது. "நிலா அது வானத்து மேல" போடுப்பான்னு யாரோ கும்பலில் கோவிந்தா போட்டார்கள்.

வட இந்தியர்களுக்கு ஒரு பழக்கம் – கல்யாணமா, பிறந்த நாளா, அது எந்த விழாவாக இருந்தாலும் சரி – உடனே கையை மேலே தூக்கி ஒரு விரல் கிருஷ்ணாராவ் மாதிரி இரு கைகளிலும் ஒரு விரல் காட்டி ஆட ஆரம்பித்து விடுவார்கள். படகிலும் அவர்கள் விடவில்லை. எல்லோரும் ஆட ஆரம்பித்து எங்களையும் ஆட்டுவித்தனர். அட ஆமாங்கறேன்…  என்னையும் ஆடச் சொல்லி வற்புறுத்த கையை காலை உதறி விட்டு வந்தேன்! [யாருப்பா அது?  அந்த வீடியோவைப் போடச் சொல்லி கேட்கிறது?]





ஒரு மணி நேரத்திற்கு படகில் ஆனந்தமான ஒரு உல்லாசமான பயணம் செய்தோம். மாலை மயங்கும் நேரத்தில் இந்த பயணம் நிச்சயம் ஒரு சுகமான நினைவுதான். அனைத்து நண்பர்களுக்கும் படகில் தொடர்ந்து பயணம் செய்ய ஆசை இருந்தாலும் மாலை ஆறு மணிக்கு மேல் படகுப் பயணத்திற்கு அனுமதி இல்லாததால் திரும்ப வேண்டியதாயிற்று.  மைகல் உணவகத்திற்கு திரும்ப வந்து சிற்றுண்டி சாப்பிட்டு நாங்கள் தங்கியிருந்த “கல்சூரி ரெசிடென்சி” நோக்கி பயணித்தோம். 

அலைந்த அலைச்சலுக்கு, இன்றிரவு நல்ல உறக்கம் வரும் என உடல் சொன்னாலும், மனது தனது ஓட்டத்தினை நிறுத்த மறுக்கிறது. காலையில் சீக்கிரமே எழுந்து தயாராக வேண்டும் நீண்ட பேருந்துப் பயணத்திற்கு. ஆம் பயணம் எங்கள் அடுத்த இலக்கான “பாந்தவ்கர்” நோக்கி அல்லவா! 

நாளை பேருந்தில் முதல் இருக்கையைப் பிடிக்க தயாராக இருங்கள். நான் தூங்கி எழுந்து வந்து விடுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

பின் குறிப்பு: 01.06.2012 அன்று வல்லமையில் வெளிவந்த பயணக் கட்டுரை.


திங்கள், 4 ஜூன், 2012

தமிழகத்தில் தில்லி பதிவர்கள்: ஏக், தோ, தீன்!



வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு ஒரு வலைப்பதிவர் வந்தாலே அமளிதுமளிப்படும். அதிலும் மூன்று பதிவர்கள் என்றால் அதகளம் ஆகிவிடுமே! மேலே இருக்க மாதிரி பேனர் யாராவது வச்சிட்டா? எனவே முன்னரே அறிவித்தால் சென்னை மாநகரமே பரபரப்பாகி பொது மக்களுக்கு தொந்தரவு ஆகிவிடும் என்பதால் சில நட்பு வட்டாரத்திற்கு மட்டும் அறிவித்துவிட்டு வந்தார்கள் அந்த மூன்று தில்லி பதிவர்களும். 

அட ஆமாங்க, நான், மனைவி மற்றும் மகளுடன் தமிழகம் வந்திருந்தேன். மே மாதம் ஐந்தாம் தேதி தமிழகம் வந்து இருபத்தி எட்டாம் தேதி திரும்பினேன். பயணம் என்றால் சில பதிவுகள் அது பற்றி இல்லாமலா? ஒரே பதிவிலேயே எல்லாவற்றையும் சொல்லி விட்டால் விறுவிறுப்பு ஏது… ஐந்தாறு பதிவுகளாவது தேத்த வேண்டாமா? அப்பதானே நம்மையும் பதிவர்னு ஒத்துப்பாங்க!

இந்தப் பயணத்தில் நிறைய பதிவர்களை சந்திக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. சென்னையில் இருந்த இரண்டு நாட்களில் வீடு திரும்பல் மோகன்குமார், மன்னை மைனர் ஆர்.வி.எஸ்., கற்றலும் கேட்டலும் ராஜி, மின்னல் வரிகள் கணேஷ் ஆகியோர்! திருச்சியில்  ரிஷபன்,  ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி, வை. கோபாலகிருஷ்ணன், திருமதி கீதா சாம்பசிவம்! அனைவரும் காட்டிய அன்பிற்கும் வரவேற்புக்கும்  என்ன கைம்மாறு செய்து விடமுடியும்?

சென்னையில் இருக்கும் சில உறவினர்களைப் பார்க்க வேண்டியிருந்ததால் நண்பர் மோகன்குமாரை நெடுநேரம் காக்க வைத்திருக்க வேண்டியதாயிற்று. அதற்கு முன்பாக  'கற்றலும் கேட்டலும்' ராஜியை அவர்கள் வீட்டில் சந்தித்தோம். மாங்கோ மில்க்‌ஷேக் செய்து வைத்திருந்தார்கள். ”தில்லிக்காரங்களாச்சே!” என ”சாச்” வாங்கி வைத்திருந்தார் அவரின் கணவர். வென்றது மகளிர் அணியே என்பதில் சந்தேகமென்ன?   

அங்கிருந்து மன்னை மைனரிடம் அலைபேசியில் பேசியபோது, “எங்க வீட்டு வழியாதான் மோகன் வீட்டுக்குப் போகணும், முதலில் இங்க வந்துடுங்க, எல்லோரும் சேர்ந்து அவர் வீட்டுக்குப் போகலாம்” என மடக்கினார். 

அவரது வீட்டிலும் நிறைய விஷயங்கள் பேசினோம் [மைனர் மட்டுமே பேசினார் என்பதே பொருத்தமாக இருக்கும் என மோகன் சொல்வது கேட்கிறது!].  அவரது புத்தக அலமாரி பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எவ்ளோ புத்தகங்கள்! பாடல் பெற்ற திருத்தலங்கள் பற்றிய புத்தகம் காண்பித்து அத்தனை ஊர்களுக்கும் செல்ல நினைத்திருப்பது குறித்துப் பேசினார். 

மோகன்  வீட்டிற்குச் செல்ல சற்றே தடுமாறியதால், இரண்டு சக்கர வாகனத்தில் வந்து எங்களை வழிநடத்தி  அழைத்துச் சென்றார். கொஞ்ச  நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, அஜு, நாட்டியுடன் சற்றே விளையாடிவிட்டும் இருப்பிடம் திரும்பினோம். 

A2B சென்று இரவு உணவு உட்கொள்வதாக திட்டமிட்டிருந்தோம். ஆனாலும் காலையிலிருந்து உறவினர்கள், நண்பர்கள்  என எல்லோர் வீட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டதே ஓவர் டோஸ்!. நான் வாயைத் திறந்தால் நிச்சயம் காகம் கொத்தி உணவு உட்கொண்டிருக்கும்!  அதனால் அது கான்சல். 

திருச்சியிலும் சில இனிமையான நினைவுகள் உண்டு.   ஒரு முன்மாதிரியாக சில படங்கள் மட்டும் இப்பகிர்வில்…..

உங்களை கைக்கூப்பி வரவேற்கும் இந்த இடம் எதுவோ?

இது ஒரு பாடல் பெற்ற சிவஸ்தலம். எந்த ஸ்தலம்?

இவர் யாருங்க… பாருங்க! 

 இங்கே குடிகொண்டிருக்கும் அழகர் யாரோ?

லிங்கத்திற்குள் லிங்கங்கள் – வரலாறு தந்த ஒரு இடம்!

மிகச் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கோவில் கோபுரம் இது… எந்த ஊர்  கோவில்?

திருஷ்டி பொம்மை செய்யும் நபருடன் ஒரு பேட்டி….  :)

 பக்தருக்கு வழி சொல்லிய கடவுள் கோவில். 

 என்ன ஒரு அருமையான படம்.  எங்கே எடுத்ததோ?

 இங்கேதான்! :)

இவை தவிர நாங்கள் சந்தித்த ஒரு முக்கிய நபர் பற்றிய விவரங்கள் வரும் பதிவுகளில். . 

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


வியாழன், 31 மே, 2012

நீர்வீழ்ச்சியா – புகை மூட்டமா?


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 6]
பகுதி-5 பகுதி-4 பகுதி-3 பகுதி-2 பகுதி-1





நர்மதை நதி ஓடிக்கொண்டிருக்கும் ஜபல்பூரில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு தான் நாங்கள் அடுத்து சென்றது. இதன் பெயர் “[D]துவாந்[Dh]தார் ஃபால்ஸ்”. ஹிந்தியில் ”[D]துவான்” என்றால் புகை. நர்மதா நதியிலிருந்து விழும் தண்ணீரின் நீர்த்திவலைகள் புகை போன்றதோர் தோற்றத்தினை ஏற்படுத்துவதால் தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு “துவாந்தார்” எனக் காரணப் பெயர் வந்திருக்கிறது. 

ஜபல்பூரிலிருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் எங்களை இறக்கியதும் நீர்வீழ்ச்சி இருக்குமிடத்தை அடைய அனைவரும் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடக்க ஆரம்பித்தோம். 

வழி நெடுகிலும் பாதையின் இரு மருங்கிலும் நிறைய கடைகள். மார்பிளால் செய்யப்பட்ட பொம்மைகள், விதவிதமான வண்ணமயமான தொப்பிகள் என திருவிழாக் கால கடைகளைப் போல இருந்தது. பக்கத்திலிருந்த கிராமங்களில் இருந்து வந்த மக்கள் நிறைய பழங்கள், கிழங்குகள் போன்றவற்றையும் விற்றுக் கொண்டிருந்தனர். 

ஒரு வயதான பாட்டி ஒரு சிறிய மூங்கில் தட்டில் அவர்களின் சுருங்கிய தோலைப் போன்ற தோற்றத்தையுடைய  பழத்தினை விற்றுக் கொண்டிருந்தார். “இது என்ன பழம் பாட்டி?” என்று நான் கேட்க, "बेटा, एह उबला हुआ बेर हे" எனச் சொன்னார். ’என்னய்யா இது திடீர்னு ஹிந்திக்குத் தாவினா, மறத்தமிழர்களான எங்களுக்கு எப்படிப் புரியும்?’ என்று கேட்பவர்களுக்கு, “அவித்த இலந்தைப் பழம்!’.

பொடிநடையாக நடந்து சென்று கொண்டு இருக்கும்போதே தூரத்தில் நீர்வீழ்ச்சியின் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.  அருகே நெருங்க நெருங்க, சில்லென்ற காற்று நம்மைத் தழுவ, ஆர்வத்தில் நடையை வேகமாக போட்டோம். நீர்வீழ்ச்சியே கண்டிராத தில்லி நண்பர்களின் அதிக ஆர்வத்தால் இருபதே நிமிடத்தில் நீர்வீழ்ச்சியை சென்றடைந்தோம். 



யார் மேல் உள்ள கோபமோ, பேரிரைச்சலோடு நர்மதா, நீர்வீழ்ச்சியாக மாறி கொட்டிக் கொண்டிருந்தாள். இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கும் மக்கள் மட்டும் அவள் கையில் கிடைத்தால் உருட்டி எடுத்துக் கொண்டு போய் கடலில் தள்ளியிருப்பாள் என்று நினைக்கத் தோன்றியது.

அமைதியாக இருக்கும் நதி ஆக்ரோஷமாக குதித்தோடியதை பார்த்து ரசித்துக் கொண்டும் ஆங்காங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுமிருந்தோம். நமது குற்றால நீர்வீழ்ச்சி போல இங்கே குளிக்க வசதி இல்லை. நின்று நீர்வீழ்ச்சியை ரசித்து வர வேண்டியது தான். எப்படி அது ஆக்ரோஷத்துடன் குதித்தோடியது என்பதை நீங்களும் பார்க்க வேண்டாமா? அதனால் உங்களுக்காகவே அங்கே எடுத்த ஒரு காணொளி இங்கே!



நீர்வீழ்ச்சி விழும் உயரம் சுமார் முப்பது அடியாம். அரை மணி நேரத்திற்கு மேல் அங்கேயே நின்று இயற்கையின் அழகை ரசித்தபின் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். மேலே போகும் போது நிறைய பேர் மூச்சு வாங்கியபடி போய்ச்  சேர்ந்தோம். ஆனால் கஷ்டமில்லாமல் சீக்கிரமே இறங்கிவிட்ட மாதிரி தோன்றியது. 

நீர்வீழ்ச்சியும் பார்த்தாயிற்று! அடுத்தது? பெரிய படகில் ஒரு உல்லாசப் பயணம் போக வேண்டியதுதான். லைஃப் ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கொண்டு தயாராக இருங்க. சரியா?

மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்.
புது தில்லி.

பின் குறிப்பு: 25.05.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.