வெள்ளி, 8 ஜூன், 2012

சில பயணங்களில் சில மனிதர்கள்!


[பட உதவி: கூகிள்]



தொலை தூர பயணம் என்றால் பொழுது போக என்ன செய்யலாம்? புத்தகம் படிக்கலாம், அலைபேசியில் பாட்டு கேட்கலாம், ஜன்னலோர இருக்கையெனில் வெளியே வேடிக்கை... இவையும் அலுத்துவிட்டால்? ஹீ.ஹீ... சக பயணிகளின் நடவடிக்கைகளைக் கவனிக்கலாங்கறதை சொல்ல வந்தேன். சென்ற மாதத்தில் ஒரு நாள் சென்னை - திருச்சி பல்லவன் பயணத்தின்போது கவனித்த சில மனிதர்கள் பற்றி...


சாப்பாட்டு ராமர்: பயணத்தின் போது மேலே சொன்னவையெல்லாம் தாண்டி  இன்னொன்றும் இருக்கிறது என எனக்குப் புரியவைத்தவர் இவர். பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு பாக்கெட் கள்ள பர்ஃபி [கடலை கேக்]யை ரசித்து ருசித்து சாப்பிட்டார். பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த மனைவிக்கு ஒரு துண்டாவது தரணுமே மனுஷன்? ஊஹூம்!. இது ஒரு நல்ல ஆரம்பம் என்று எனக்குப் புரியவில்லை அப்போது. அடுத்தது மசாலா வடை ஒரு ப்ளேட். தொடர்ந்து வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த ஒரு பாட்டில் மோரில் கொஞ்சம் குடித்தார். (அடுத்தடுத்து வரிசையாக வருபவைகள் உள்ளே இறங்க வேண்டுமே!) தொடர்ந்து வந்த சமோசா, வாழைக்காய் பஜ்ஜி, போளி என ஒவ்வொன்றாய் உள்ளே செல்ல, ஒவ்வொரு ஐட்டத்தின் முடிவிலும் பாட்டிலில் இருந்து மோர் தவறாமல் நடந்தது! சாப்பிடுபவை வழுக்கிக்கொண்டு வயிற்றுக்குச் செல்லவும் அனாயாசமாக அவற்றை டைஜெஸ்ட் செய்யவும் என்ன ஒரு ஏற்பாடு! சே, இவ்வளவு நாள்  இந்த டெக்னிக் நமக்கு தெரியாம போச்சே! சாப்பாட்டு இடைவேளைகளில் கொஞ்சம் அலைபேசியில் ரிங்டோன் மாற்றி விளையாடினார் இந்த சாப்பாட்டு ராமர். 

பந்தா பரமசிவம்: கார்மேக வர்ணம் இந்த பந்தா பரமசிவம். அலைபேசியில் யாரிடமோ “நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நான் சொல்லி நடக்காம போகுமா? காரியம் நடக்க நான் கேரண்டி!...” என்று சத்தமாக பேசிக் கொண்டே வந்தார். சென்னையிலிருந்து விழுப்புரம் வரை தான் அவர் பயணம். வரும்போதே நல்ல அலங்காரத்தோடுதான் வந்தார். திண்டிவனம் தாண்டியவுடன், ஒரு பையை எடுத்துக்கொண்டு எழுந்து சென்றவர் 15 நிமிடத்தில் திரும்பினார். என்ன செய்தார் அந்த நேரத்தில்? ஏற்கனவே இருந்த மேக்கப்பின் மேல், அடுத்த கோட்டிங்! சுண்ணாம்பு அடித்தது போல, காது மடல் வரை பவுடர். சாருக்கு கொஞ்சம் பெரிய நெற்றி [வழுக்கைன்னு சொன்னா எனது தில்லி நண்பருக்குக் கோபம் வந்து விடும்!]. நெற்றி எல்லை வரை பளபளவென பவுடர் அடித்து... பக்கத்தில் போனால் சட்டைக்கை உங்களைக் கீறிவிடக்கூடும். மொடமொட கதர் சட்டையும் வேட்டியும் மாற்றிக் கொண்டு விழுப்புரத்தில் இறங்குவதற்கு தயாராகி விட்டார். மீண்டும் அலைபேசியில் மைக் விழுங்கிய குரலில் யாருக்கோ வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்! சீக்கிரமே ஏதாவது ஒரு தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராகப் பார்க்க முடிந்தாலும் பார்க்கலாம் இந்த பந்தா பரமசிவத்தை. 

நின்றவூர் நெட்டையப்பர்: சராசரியை விட சற்றே உயரம். நான்கு ஐந்து வரிசைகள் தள்ளி அமர்ந்திருப்பவர்களுக்கும் அவரது தலை தெரியும். பயணித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவரது அலைபேசி அடித்தது. காதில் வைப்பதற்கு முன்னரே எழுந்து நின்று விட்டார். அழைத்தது அவரது மனைவியோ? மனதுக்குள் ஒரு 'சம்சயம்'. பேசிய பிறகு கையைக் கட்டிக்கொண்டு சில நிமிடங்கள் நின்று கொண்டே வந்தார். என்ன தவறுக்கு இந்த பனிஷ்மெண்டோ, தெரியவில்லை! ஒவ்வொரு அரைமணிக்கும் கையைக் கட்டி நின்றபடி அவர் பயணம் தொடர்ந்தது.

[பட உதவி: கூகிள்]

கமலா டியர் கமலா: நான்காவது ஆள் கொஞ்சம் விவகாரமானவர். கையில் கடுகு (அகஸ்தியன்) அவர்கள் எழுதிய "கமலா, டியர் கமலா.." புத்தகம். கமலா, தொச்சு, அங்கச்சி மற்றும் கமலாவின் அம்மா, ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் கதைகளைப் படித்தபடி, ஏற்கனவே தடக், தடக் என அதிர்ந்து கொண்டு இருக்கும் ரயில் வண்டி மேலும் அதிரும்படி சிரித்துக் கொண்டே வந்தார். என்னடா இது, எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்களேன்னு கொஞ்சமாவது இங்கிதம்? நோ! இடி இடிச்ச மாதிரி சிரிப்பு!  

அந்த நாலாவது ஆள் வேற யாருமில்லீங்க! மத்தவங்களையெல்லாம் கவனித்து, அவர் சாப்பிட்டார், இவர் பந்தா காட்டினார், இன்னொருத்தர் நின்னுட்டே இருந்தார்னு எழுதி உங்களைப் படிக்க வைத்தவர்தான்! நான் கவனிச்ச மாதிரியே வேற யாராவது ஒரு வலைப்பூ எழுதுபவர் கவனிச்சு என்னைப் பத்தி எழுதறதுக்கு முன்னாடி நானே எழுதிடலாமேங்கற ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா!

என்னைச் சந்திக்க எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்து, கடுகு எழுதிய இரண்டு புத்தகங்களையும் இன்னும் ஒரு புத்தகத்தையும் அளித்த நண்பர் 'மின்னல் வரிகள்' கணேஷ் அவர்களுக்கு எனது நன்றி. பயண அலுப்பு தெரியாமலிருக்க என்னுடன் கூடவே பயணம் செய்ய அவர் அனுப்பிய 'கமலா' ரொம்பவே உதவியாக இருந்தார்!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்
வெங்கட்.



68 கருத்துகள்:

  1. சுவாரசியமாக சென்றது பயண ரயில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்....

      நீக்கு
  2. பயணம் பற்றிய பதிவு நேரடி வருணனை போன்று உள்ளது

    சா இராமாநுசம்

    த ம ஓ 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே....

      நீக்கு
  3. மனிதர்கள் பலவிதம். நல்ல அவதானிப்பு. சுவாரஸ்யமான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பக்கத்திற்கு வந்து பதிவினை ரசித்துக் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  4. தங்கள் பயணத்தை சுவாரஸ்யப்படுத்தியவர்களை
    மிக அழகான பதிவாக்கி எங்களுக்கு
    நல்ல விருந்து கொடுத்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது சுவையான கருத்துரைக்கு மிக்க நன்றி ரமணி சார்.....

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  6. கமலா ரொம்பவே உதவியாக இருந்தார், உங்க பேச்சில கிண்டல் தெரியுதே, (கணேஷ் சார் ) வாத்தியாரே கவலை படாதீங்க அடுத்த தடவ சென்னை வரும் போது ரவுண்டு கட்டிருவோம்,.

    உங்கள் பயணத்தில் சாப்பாட்டு ராமன் நிலைமையை சொன்ன விதம் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அடுத்த தடவ சென்னை வரும் போது ரவுண்டு கட்டிருவோம்,.//

      ஏங்க பயமுறுத்தறீங்க.... :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  7. பதில்கள்
    1. ஏன்.... இந்த கொல வெறி? :)))

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  8. மிகவும் அருமையான பயணப்பகிர்வு. பாராட்டுக்கள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.....

      நீக்கு
  9. சகோதரா வித்தியாசமான சிந்தனைக் கரு. ரசித்தேன். நல்வாழ்த்து. வாருங்களேன் என் வலைப்பக்கமும். நல்வரவு)
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கோவைக்கவி.....

      உங்களது பக்கத்திலும் வந்து சிறுவர் பாடல் வரிகளை சுவைத்தேன்....

      நீக்கு
  10. கேரக்டர் ஸ்டடி சூப்பர்.. நான்காவது ஆளுக்கும் ஒரு பெயர் வைத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசிப்பிற்கு நன்றி.... நாளாவது ஆளுக்கு ஒரு பெயர் வைக்கணுமா? சரியா போச்சு.....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

      நீக்கு
  11. சாப்பாடு ராமர்களை பார்த்தால் நான் ஆ என்று பார்த்து கொண்டே இருப்பேன். இவர்களுக்கு வாய் வலிக்காதா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய சாப்பிட்டா வாய் வலிக்குதோ இல்லையோ, நிச்சயம் வயிறு வலிக்கும்னு நினைக்கிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க...
    நல்ல வேளை...உங்க கூட பயணிக்கல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்ல வேளை...உங்க கூட பயணிக்கல...//

      என் கூடவே பயணித்திருந்தால், உங்களைப் பற்றியா எழுதி இருப்பேன்... :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.

      நீக்கு
  13. ஒருமுறை நான் தில்லியிலிருந்து ஹரித்வார் செல்லும்போது ஒரு தம்பதி 3 டிக்கெட் வாங்கி,முழு சீட்டையும் சொந்தமாக்கிகொண்டு நடுவில் பல தின்பண்டங்களை பரப்பித் தின்று கொண்டே வந்தது நினைவுக்கு வந்தது!எதுக்கும் கொடுப்பினை வேண்டும்!

    பயணத்தை நல்லா அனுபவிச்சிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியிலிருந்து உத்திரப்பிரதேசம் பஸ் பயணம் எனில் நிச்சயம் கஷ்டம் தான்.... ரொம்பவே பொறுமை வேண்டும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  14. அமைதிச்சாரல் மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:

    உங்க கட்டுரை வாசிச்சேன்,.. ஜூப்பரா இருக்கு. பயணங்களில் பக்கத்துல இருக்கும் ஆட்களின் சேஷ்டைகளை ரசிப்பதே ஒரு ரசனையான பொழுதுபோக்கு. அதுவும் பதிவரானபின் இதைக்கவனிக்கறது கூடுதலாகிப்போச்சு :-))

    உங்க ப்ளாகில் என்னைக் கமெண்ட விடாம கூகிளார் சதி செய்யறார். எம்பெடெட் பின்னூட்டப்பொட்டி வெச்சுருக்கும் நட்புகளின் இடுகைகளில் மட்டும் கமெண்டு போடவே முடியலை. வாசிச்சுட்டு அடையாளமா ஓட்டுப் போட்டுட்டு வரேன் இப்பல்லாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னஞ்சல் மூலம் தாங்கள் அனுப்பிய கருத்துரைக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்....

      சில பேருக்கு தனியே இருக்கும் கமெண்ட் பெட்டியில் பிரச்சனை.... உங்களுக்கு எம்பெடட் பின்னூட்டப் பெட்டியில் பிரச்சனை. கூகிளார் என்ன சதி செய்யறார்னு புரிய மாட்டேங்குது :))))

      நீக்கு
  15. நிறைய இடங்களில் நகைச்சுவை பிரமாதம்.
    நானும் பொது இடம் என்று பார்க்காமல் சிரிப்பு வந்தால் அனுபவித்துச் சிரிப்பவன். அதை மட்டும் விட்டுறாதீங்க. இங்கிதமாவது ஒண்ணாவது..
    பொதுவாக சாப்பாட்டுராமர்/மி கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கும். அதிலும் சத்தமாகச் சாப்பிடுவோர் - கடக் முடக் என்று கடித்து, கர் புர் என்று உறிந்து, வாய் திறந்து எச்சில் தெறிக்க மெல்வோர் - கஷ்டம் கஷ்டம். இருக்கை அருகே யாராவது சாப்பிட்டால் எழுந்து போய்விடுவேன் :)
    அதே போல் பக்கத்து இருக்கைக்காரர் குறட்டை விட்டால் சிலருக்குப் பிடிப்பதில்லை. (என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எனது பக்கத்திற்கு வந்து பதிவினை ரசித்ததாய் சொன்னதில் எனக்கு மகிழ்ச்சி.

      தில்லி வந்த புதிதில் மூன்று வருடங்கள் மெஸ்/ஹோட்டல்களில் தினந்தினம் உணவு உண்டு இந்த சாப்பாட்டுராமர்களின் தொல்லைகளை அனுபவித்து இருக்கிறேன்.... நிச்சயம் கஷ்டம் தான்....

      குறட்டை... :)) குறட்டை விடுபவர்களிடம் தானே சொல்ல முடியும்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை சார்.

      நீக்கு
  16. பல்லவனில் வரும் ஐட்டங்களை அந்த அளவு விரும்பிச் சாப்பிட ரொம்பவே பொறுமை வேண்டும்! சூப் என்று ஒன்று கொடுப்பார்கள். சாதா ரசம் கூட நன்றாக இருக்கும்!

    நின்றவூர் நெட்டையப்பர்...! :))

    வித்தியாசமான பார்வயில் புதிய முயற்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சூப் என்று ஒன்று கொடுப்பார்கள். சாதா ரசம் கூட நன்றாக இருக்கும்!//

      இந்த முறை அதை “ரசம்” என்றே விற்று வந்தார்கள்.... :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  17. கணேஷ் அளித்த அந்த 'இன்னும் ஒரு புத்தகம்' என்ன என்று சொல்லவில்லையே....!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கணேஷ் அளித்த இன்னொரு புத்தகம், திருப்பாவை [விளக்கத்துடன்]. நல்ல புத்தகம்.

      தங்களது இரண்டாவது வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  18. ரசிப்புடன் இருந்தது. சார், உங்களுக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம "ரயில் சினேகம்" இருக்குமோ? கண்டுபிடிக்க நம்ம பக்கம் வந்து போங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குமரன். உங்கள் பக்கத்திற்கு வருகிறேன்.....

      நீக்கு
  19. உங்க பதிவுகளைப் படிக்கிறேன் வெங்கட்.. என்ன இப்படி சொல்லிட்டீங்க? அலுவலக கம்ப்யூடரில் இருக்கும் bookmark பதிவுகளில் பின்னூட்டம் எழுதுவது சிரமமாக இருக்கிறது (சோம்பலாகவும்:). எல்லா bookmarkம் வீட்டுக் கணினிக்கு மாத்தணும்.

    பதிலளிநீக்கு
  20. ஹாஹா ஹாஹா

    ரசித்தேன்:-)

    மக்களைக் கவனிப்பதுபோல படு சுவாரசியமான விஷயம் வேறொன்னுமில்லை கேட்டோ:-)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மக்களைக் கவனிப்பதுபோல படு சுவாரசியமான விஷயம் வேறொன்னுமில்லை கேட்டோ:-)))))//

      அதே அதே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  21. பல்லவன்/வைகையிலி திருச்சிக்கு பயணம்னா ஆஷ்ஷிக்கு ரொம்ப பிடிக்கும். :)) பதிவு எழுத ஆரம்பிச்சதும் எதையும் கலைப்பார்வையோட பார்க்கும் சக்தி வந்திடுதுல்ல சகோ....

    பதிவை ரசிச்சேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி சகோ....

      நீக்கு
  22. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

      நீக்கு
  23. மூன்று நாள் பயணமாக பெங்களூரு சென்றிருந்ததால் இந்தப் பதிவைத் தவற விட்டு விட்டேன் வெங்கட். அழகாக அப்ஸர்வ் பண்ணி காரெக்டர்களை எழுதியிருக்கீங்க. நான்கூட ரயில் பயணத்துல இப்படி கவனிச்ச காரெக்டர்களை எழுதலாமோன்னு ஐடியா வர வெச்சுட்டீங்க. நன்றி. அந்த கேரக்டர்களுக்கு நீங்க கொடுத்த பெயர்களை மிக ரசித்தேன். கமலா கதைகளை நீங்க ரசிச்சுப் படிச்சீங்கன்னு கடுகு ஸார் கிட்ட சொல்றேன். ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ பெண்களூர் பயணமா? நல்லது..... பயண அனுபவத்தினை நீங்களும் எழுதுங்களேன்.. உங்கள் பாணியில் எழுதினால் நன்றாகவே இருக்கும்....

      //கடுகு சாரிடம் சொல்கிறேன்../ மிக்க சந்தோஷம்..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  24. //ஏன்.... இந்த கொல வெறி? :))) //

    I second this ...

    :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட மாதவன்..... சரியாச் சொன்னீங்க....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன். எங்கே ஆளையே காணோம்... ரொம்ப பிசி?

      நீக்கு
  25. நண்பரே
    பயணக்கட்டுரை மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி

    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.

      நீக்கு
  26. பயணங்கள் என்றும் சுவாரஸ்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  27. க‌ம‌லாவை ப‌டித்துக் கொண்டே இத்த‌னை பேரை க‌வ‌னித்த‌ உங்க‌ திற‌னை மெச்சுகிறேன் ச‌கோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ நிலாமகள்.

      நீக்கு
  28. பயணித்தது போல ஒரு உணர்வு ஏற்படுத்தியது உங்கள் கட்டுரை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பர் சேஷாத்ரி.

      நீக்கு
  29. வெங்கட்! கொஞ்சம் லேட் நான். கையில் கமலா.. கண்ணோ அலைபாயுது.. ஆதி எங்கிருந்தாலும் அனவுன்ஸ்மெண்ட் இடத்துக்கு வரவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதியும் ரோஷ்ணியும் என் பக்கத்திலேயேதான் இருந்தார்கள் மோகன்ஜி.. குடும்பத்தோடு தான் பார்த்தோம். :)))

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  30. எப்போதும் பயணம் இனிமையானதுதான்....அதிலும் ரசிப்புத்தன்மையை உள்ளூட்டமாகக்கொண்டு பயணிக்கும் உங்களைப் போன்றோர்க்கு பயணம் ஒரு வரம்...உங்களின் பயண ரசனையை ரசித்துப் படித்தேன்...அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களது வருகை.. மிக்க மகிழ்ச்சி எல்லென்.... இந்த முறை திருச்சி சென்ற போது உங்களைப் பற்றியும் பேசினோம்..... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எல்லென்.

      நீக்கு
  31. I really enjoyed your travel experiences &writing. Thanks a lot.

    பதிலளிநீக்கு
  32. ஹா!ஹா!ஹா!

    அந்த சாப்பாட்டு ராமரைச் சுற்றி நல்ல காற்றோட்டமாகவும் இருந்திருக்கும்னு சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சி, இந்த மாதிரி கமெண்ட் உங்களாலே தான் போடமுடியும்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].....

      நீக்கு
  33. நான்காவது ஆள் நீங்கள் தான் என்று ஊகித்தேன் சரியாக போயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ யூகிச்சீங்களா நீங்க? நல்ல விஷயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....