[கல்லும் முள்ளும் காலுக்கு
மெத்தை –
பகுதி
7]
முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:
[கல்லும் முள்ளும் காலுக்கு
மெத்தை –
பகுதி
6]
[கல்லும் முள்ளும் காலுக்கு
மெத்தை –
பகுதி
5]
[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி
4]
[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி
3]
[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி
2]
[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி
1]
தொடர்ந்து மலையேறிக் கொண்டிருக்கிறோம் நாங்கள் – அட உங்களுக்கும் என்னுடன் மலை ஏறி வந்ததில் கொஞ்சமாகக் கால் வலிக்க ஆரம்பித்து இருக்குமே.... அதனால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோமா? வழியில் ஒரு இடத்தில் சுடுவெள்ளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயே நின்று நானும் கொஞ்சம் சுடுவெள்ளம் குடித்து விட்டு மலையேற்றத்தினைத் தொடங்குகிறேன். நீங்களும் ஓய்வெடுத்துக் கொள்ளுங்களேன்!
உங்கள் நினைவுக்காக: [என்
நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ பயணத் தொடரின் முந்தைய பகுதியை
இப்படித்தான் முடித்திருந்தேன்.
வழியில் சில இடங்களில் இப்படி சற்றே சூடான நீரில் சீரகம் போட்டு சீரக வெள்ளம்
பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறார்கள். கஷ்டப்பட்டு மலையேறி வரும்
பக்தர்களுக்கு இப்படி நீர் கொடுத்து அவர்கள் தாகத்தினை தீர்த்தாலும் பரந்தாமனின்
அருளைப் பெறலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். மலையேற்றத்தினால் ஏற்பட்ட களைப்பு
கொஞ்சம் நீங்குவதற்கு இந்த சீரக வெள்ளமும் அங்கே சில நிமிடங்கள் நின்றதால் கிடைத்த
ஓய்வும் உதவுகிறது.
வயதானவர்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் மலையேற்றம் சற்றே
கடினம் தான். பல பெரியவர்கள் ஒரு கையில் குச்சியைப் பிடித்துக் கொண்டு, மறு கையில்
முட்டியைப் பிடித்தபடி தான் ஏறுகிறார்கள். செங்குத்தான பாறை என்பதால் நிறைய பேர்
மேல் மூச்சு முட்ட முட்ட, இறைவனின் நாமாக்களைச் சொன்னபடியே தான் மலையேறினார்கள்.
நானும் நண்பர்கள் இருவரும் விரைவாக மலையேறிக் கொண்டிருந்தோம்.
வழியில் மேலிருந்து கீழே இறங்கி வரும் பக்தர்களின் முகத்தில்
சபரிகிரிவாசனை தரிசித்த சந்தோஷமும் அமைதியும் குடி கொண்டிருந்தது. சபரிகிரிவாசன் தங்களது பிரார்த்தனைகளை
நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கையோடு இறங்கிக் கொண்டிருந்தார்கள். மேல் நோக்கி
செல்லும் பக்தர்களை உற்சாகப்படுத்தவும் அவர்கள் தவறவில்லை. தாங்கள் அனுபவித்த
பேரின்பம் மேல் நோக்கிச் செல்லும் பக்தர்களுக்கும் கிடைக்கட்டும் என்ற நல்ல
எண்ணம்!
வழியில் ஒரு இடத்தில், மலைப்பகுதியில் ஒரு சிறிய கொட்டகை.
அதிலிருந்து ஒலிபெருக்கி மூலம் மலையாளத்தில் ஏதோ பரைந்தார்கள் – ”வெடி வழிபாடு” –
பெயரையும் அவர்களுடைய நட்சத்திரத்தினையும் சொல்லி ஒரு வெடி வெடிப்பார்கள் – அது
தான் வெடி வழிபாடு. அங்கே மூன்று நான்கு மொழிகளில் வெடி வழிபாடு என
எழுதியிருந்தார்கள் – தமிழில் “வெடி வழிபாட்!”
பத்து ரூபாய் கொடுத்து பெயரையும் உங்கள் பிறந்த நட்சத்திரத்தினையும்
சொன்னால் மைக் மூலம் அறிவிக்க, பின்னால் மலையிலிருந்து ஒரு வெடி சத்தம் கேட்கும்…. எத்தனை பெயர் சொல்கிறோமோ அத்தனை பத்து ரூபாய்!
அத்தனை வெடிகள் வெடிப்பார்கள். தொடர்ந்து வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது
சபரிமலை முழுவதும்.
இந்த வெடிவழிபாடு நடத்த சபரிமலை தேவஸ்தானம் வருடா வருடம் ஏலம்
விடுகிறார்கள். சபரிமலை முழுவதும் ஐந்து இடங்களில் வெடி வழிபாடு நடத்தலாம் என
நியமனம் செய்து அதற்கான ஏலத்தினை தேவஸ்தானம் வருடா வருடம் நடத்த அதில் யார்
அதிகமான தொகையைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு வெடி வழிபாடுக்கான இடங்களை
அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கிறார்கள்.
சென்ற வருடம் ஏலம் எடுத்த தொகை 25 லட்சத்திற்கும் மேல்.
ஏலம் எடுக்கும் போது அதில் ஒவ்வொரு வெடிக்கும் ஐந்து ரூபாய் மட்டுமே வாங்க
வேண்டும் என எழுதியிருந்தாலும் பத்து ரூபாய் வாங்குகிறார்கள் எனவும் அதை
தேவஸ்தானமோ அரசோ கண்டு கொள்வதில்லை எனவும் சொல்லிக் கொண்டு வந்தார் நண்பர்.
மலைப்பகுதியில் வெடி வெடிப்பதால் காய்ந்த சருகுகள்
பற்றிக்கொண்டு தீவிபத்துகள் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால் மிகவும் முன்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெடி
மருந்தினையும் மலையில் சேமித்து வைப்பதால் அதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரையும்
நியமித்து இருக்கிறார்கள்.
சென்ற பதிவில் நாஞ்சில் மனோ பின்னூட்டத்தில் இப்படி
கேட்டிருந்தார்….
அந்த காட்டுக்குள்ளே புலி எல்லாம் உண்டுன்னு சின்ன வயசுல சொல்லக் கேட்டு இருக்கேன் உண்மையா ?
மலைப்பகுதி அதுவும் காட்டுப் பகுதி என்பதால் மிருகங்கள் இருப்பது
நிச்சயம் தான். பொதுவாகவே அடர்ந்த காடு என்பதால் மிருகங்கள் நிச்சயம் இருக்கும்.
ஆனால் சபரிமலை செல்லும் பாதையில் மனித நடமாட்டம் அதிகம் என்பதால் இந்த மிருகங்கள்
தற்போதெல்லாம் தென்படுவதில்லை. மேலாக, இப்படி நாள் முழுவதும் இந்த வெடி வழிபாடு
மூலம் வெடிகள் வைத்து சத்தம் எழுப்புவதால் மிருகங்கள் வர வாய்ப்பில்லை. அவை
அடர்ந்த காட்டுப் பகுதிக்குள்ளேயே இருக்கின்றன.
சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் போது கூட அங்கே அதிக
அளவில் புலிகள் இருப்பது பற்றி தெரிந்து இருக்கிறது. அடர்த்தியான காட்டுப்
பகுதியில் மட்டுமே மிருகங்கள் இருக்கின்றன என்று நண்பர் சொல்லிக் கொண்டு வந்தார். வாகனம்
மூலமாக சபரிமலை செல்லும் போது பாதையிலிருந்தே அடர்ந்த காட்டுப்பகுதிகள் கண்ணுக்குப்
புலப்படுகின்றன. அங்கே மிருகங்கள் இருக்கின்றன. மனிதர்கள் நடமாட்டம் கண்டு
மிருகங்கள் கூட பயப்படுவது இயற்கை தானே!
நடந்து கொண்டே வெடி வழிபாடு பற்றியும் பார்த்தாயிற்று.
நடந்தபடியே இருந்ததால் சன்னிதானம் என்று அழைக்கப்படும் சபரிகிரிவாசனின் கோவில்
இருக்கும் இடத்திற்கு வந்தது தெரியவில்லை. சன்னிதானம் பகுதியை அடைந்து சபரிமலை
வாசனை தரிசித்த அனுபவம் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்! சரியா?
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....








