வெள்ளி, 3 ஜனவரி, 2014

ஃப்ரூட் சாலட் – 74 – கல்விக்கண் திறக்கட்டும் – புத்தாண்டு ஆசைகள்


இந்த வார செய்தி:

நேற்று இணையத்தில் உலா வந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றவே, ஃப்ரூட் சாலட்-ன் இப்பகுதியில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  இது போல இன்னும் நிறைய செல்வராஜ் தம்பதிகள் நமது நாட்டிற்கு தேவை...... தமிழ் நாளிதழான தி இந்து வின் இணைய தளத்தில் வந்த செய்தியை நீங்களே படிங்களேன்!

ஏழைக் குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் லாரி ஓட்டுநர்

-          இரா. கோசிமின்
கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லையே என வருத்தப்பட்டேன். ஆனால், எனது பள்ளியில் படிக்கும் 80 குழந்தைகள், தாத்தா.. தாத்தா.. என அழைக்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது எனக் கூறுகிறார் கல்வி மையம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்.

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள சேங்கிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி. செல்வராஜ் (54). முன்னாள் லாரி ஓட்டுநரான இவர், தற்போது கரடிப்பட்டி கிராமத்தில் நேதாஜி கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் சிறப்பு பயிற்சி மையத்தின் நிர்வாகி.

10 மையங்கள்

தமிழகத்தில் 2002-ம் ஆண்டு முதல் அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், பள்ளியில் இருந்து இடைநின்ற 14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் 8 ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள். இந்த இயக்கத்தின்கீழ், மதுரையில் 10 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், கரடிப்பட்டியில் இயங்கிவரும் நேதாஜி கல்வி அறக்கட்டளை உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையமும் ஒன்றாகும்.

நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிக்கு எதிரே உள்ள சாலையில் 3 கி.மீ. சென்றால் கரடிப்பட்டி என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில்தான் நேதாஜி கல்வி அறக்கட்டளை உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

அந்த மையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் சேர்த்து பண்பும் கற்றுத் தரப்படுகிறது என்பதை பள்ளிக்குச் சென்றதும் உணரலாம். அங்கே மதிய வேளையில், சமையல் வேலை செய்து கொண்டிருந்த எஸ்.பி. செல்வராஜ் என்பவரை தாத்தா என்றும், அவரது மனைவி மயிலை பாட்டி என்றும் குழந்தைகள் பாசமாக அழைத்துக் கொண்டிருந்தனர்.

வெளி நபர்கள் சென்றால் வரவேற்று வணக்கம் செலுத்துகின்றனர். இவர்களுக்கு சிலம்பாட்டமும் சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது. அந்தப் பள்ளியின் நிர்வாகியான செல்வராஜிடம் பேசினோம்.

80 பேர் படிக்கின்றனர்

நான் லாரி ஓட்டுநராக இருந்தேன். எனது மனைவி தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார். எங்களுக்கு குழந்தை கிடையாது. அந்த வருத்தம் எனக்கு இருந்தது. இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில்தான் சமுதாயத்தில் தாய், தந்தை இல்லாமல் சிரமப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படியே, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்கத்தின் மூலம், குழந்தைகளுக்காக இங்கே ஒரு மையத்தைத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் இந்த மையத்தில் 17 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். தற்போது 80 பேர் படிக்கிறார்கள். இதில், 51 பேர் 8 ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள். 29 பேர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். இந்த மையத்தில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக அரசு சார்பில் நிதி தருகிறார்கள். ஆனாலும், குழந்தைகளின் பிற தேவைகளுக்காக வெளியில் நன்கொடை பெற்றுத்தான் இந்த மையத்தை நடத்தி வருகிறேன். சில நாள்களுக்கு முன் இந்த பள்ளிக் கட்டிடத்தை எழுப்பினேன்.

8 ஆம் வகுப்புக்கு மேல் வெளியில் வேறு பள்ளிகளில் படிக்கும் 29 மாணவர்களுக்கும் வெளியில் சிரமப்பட்டு நிதி திரட்டியே செலவழித்து வருகிறேன். இந்த அறக்கட்டளையில் இன்னும் 2 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூலித் தொழிலாளிகள் தான்.

ஒரு குழந்தை இல்லை என்று வருத்தப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால், இப்போது எங்களுக்கு 80 குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவரும் தாத்தா, பாட்டி என அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் மனைவி அனைத்து வேலைகளையும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்கிறார். இந்தக் குழந்தைகளின் ஆடைகளை நாங்கள்தான் தினமும் துவைப்போம். நானும், எனது மனைவியும் படிக்காதவர்கள்தான். ஆனால் பலரது கல்விக் கனவை நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் செல்வராஜ்.

சிறப்பாக செயல்படுகிறது

அந்த மையத்தில் 1 முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறையும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறையும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையும் கற்றுத் தரப்படுகிறது. சேவை நோக்கோடு குறைந்த ஊதியத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த கற்பகதேவி என்பவரும், முதுகலை பட்டப்படிப்பு முடித்த சிவபாலன் என்பவரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்கள்.

மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலர் பார்வதி கூறியதாவது: 14 வயது வரையுள்ள அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில், மதுரையில் 10 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கரடிப்பட்டி நேதாஜி அறக்கட்டளையின் மூலம் பயிலும் மாணவர்கள், வெள்ளை பாறைப்பட்டி பள்ளியில் பதிவு பெற்றுள்ளார்கள். கரடிப்பட்டி பள்ளியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள் என்றார்.

     நன்றி – தி இந்து.


சிறப்பான செயல் புரிந்து வரும் திரு செல்வராஜ் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரது துணைவிக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.....

இந்த வார முகப்புத்தக இற்றை:

IF A MAN EXPECTS HIS WOMAN TO BE AN ANGEL IN HIS LIFE, THEN HE SHOULD FIRST CREATE A HEAVEN FOR HER……

இந்த வார குறுஞ்செய்தி

EXPECT MORE FROM YOURSELF THAN FROM OTHERS – BECAUSE EXPECTATIONS FROM OTHERS HURT A LOT, WHILE EXPECTATIONS FROM YOURSELF INSPIRE YOU A LOT!

இந்த வாரத்தின் புகைப்படம்: 

சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது 25-வது திருமண நாளைக் கொண்டாடினார். அங்கே வந்திருந்த ஒரு குழந்தை கண்ணைக் கவரவே அக்குழந்தையினை என் கேமராவிற்குள் சிறை பிடித்தேன். அக்குழந்தையின் படம் இங்கே உங்கள் ரசனைக்கு......


ரசித்த பாடல்:

இந்தியன் படத்திலிருந்து நான் ரசித்த இந்த பாடல், உங்கள் ரசனைக்கு......




ரசித்த காணொளி:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை விளக்கும் அருமையான காணொளி.  பார்த்து ரசிக்க இங்கே...



படித்ததில் பிடித்தது!:

ஒரு இல்லத்தரசியின் புத்தாண்டு விருப்பங்கள்!

தண்ணீர் பஞ்சம் தொலைய வேண்டும்
தங்கம் விலை குறைய வேண்டும்

அழுகை இல்லா சீரியல் வேண்டும்
அழாமல் பிள்ளை சாப்பிட வேண்டும்

வாரா வாரம் அவுட்டிங் வேண்டும்
வஞ்சனை இல்லா ஷாப்பிங் வேண்டும்

சண்டை போடாத சர்வண்ட் வேண்டும்
சமையலில் உதவும் ஹஸ்பண்ட் வேண்டும்

வாக்கிங் இன்றி மெலிய வேண்டும்
வல்கர் சினிமா ஒழிய வேண்டும்

தொடர்பு விட்ட தோழிகள் வேண்டும்
தொல்லை தராத சொந்தங்கள் வேண்டும்

மயக்கம் இல்லா மசக்கை வேண்டும்
மதியம் குட்டித் தூக்கம் வேண்டும்

மளிகைச் செலவு குறைய வேண்டும்
மாசக் கடைசியிலும் மகிழ்ச்சி வேண்டும்

வேண்டும் வேண்டும் இறைவா – என்
ஏக்கங்கள் எல்லாம் தீர்ப்பாயா
புன்னகை ததும்பும் வாழ்வை – நீ
புத்தாண்டு வரமாய் சேர்ப்பாயா!
-  மிஸஸ். எக்ஸ்....

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 2 ஜனவரி, 2014

ஓவியக் கவிதை – 7 –காயத்ரி


டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது ஏழாம் கவிதை.



ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.






இந்த ஓவியத்திற்கான கவிதையை மின்னஞ்சல் மூலம் அனுப்பிய காயத்ரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.



மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு காயத்ரி அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....



என்னவனே என்னை மயக்கிய மன்னவனே

கண்ணாளனே என்னை களவாடிய கள்வனே

உன்னோடு நான் கொண்ட காதல் பசலையில்

என் மேனியும் குருதியாய் திகைக்கிறதே

மோகத்தீயில் நான் எரிய மேகமாய் உன் காதல் மழை பொழிய‌

யாருமில்லா நந்தவனத்தில் மன்னவனே

 நீ சூடிய மலரினில் உன் வாசம் வீச‌

வெட்கத்தில் உன் மார்போடு என் முகம் புதைக்க‌

வேனீர்காலமும், பனிக்காலமாய் குளிர்கிறதே

என்னவரை சீண்டிவிடும் சில்லென தென்றல் காற்று,

என்னை கட்டி அணைத்து.., விரலோடு விரல் கோர்த்து,

இதழோடு இதழ் சேர்த்து கண்கள் மூடி காதல்

சொர்கத்திற்கு நாங்கள் செல்ல, ஒற்றை நிலவு மட்டும்

எங்களை ஏக்கத்தோடு பார்த்து கொண்டு இருக்க,

விண்மின்கள் அர்ச்சனை தூவ, நிலவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு

திரும்பினோம் மீண்டும் காதல் சொர்கத்திற்குச் செல்ல. 



-          காயத்ரி


என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான ஏழாம் கவிதை இது. கவிதை படைத்த காயத்ரி அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!





டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த மொத்த கவிதைகள் பதிமூன்று மட்டுமே.  அவை வந்த வரிசையிலேயே எல்லா கவிதைகளும் வரும் நாட்களில் இங்கே பதிவு செய்யப்படும். கவிதை எழுதி அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கவிதைகளை ரசித்துக் கருத்து பகிரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.



மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......



நட்புடன்



வெங்கட்.

புது தில்லி.

புதன், 1 ஜனவரி, 2014

நல்லோர்கள் வாழ்வைக் காக்க.....


இன்றைய தினம் 2014-ஆம் ஆண்டு துவங்குகிறது.  2013-ஆம் ஆண்டு இப்போது தான் துவங்கியது போல இருந்தது – முடிந்தும் விட்டது! இப்புது வருடத்தின் முதல் நாளில் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். 


Sangili - Nallorkal | Muziboo





இன்று போல் எல்லா நாளும் இனிதாய் அமைய எங்களது நல்வாழ்த்துகள்......

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
ஆதி வெங்கட்.
ரோஷ்ணி வெங்கட்.