சனி, 5 நவம்பர், 2016

தேவ் பூமி ஹிமாச்சல் – பயணக்கட்டுரைகள் – மின்னூலாக….


அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கடிதம் எழுதும் முயற்சி. தில்லி வந்த புதிதில் அப்பா-அம்மாவிற்கு ஒவ்வொரு வாரமும் கடிதம் எழுதி வந்திருக்கிறேன். நிறைய கடிதங்கள் எழுதுவார். உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கடிதம் எழுதுவது அவருக்கு ரொம்பவும் பிடித்த விஷயம். ஒவ்வொரு நாளும் ஒரு கடிதமாவது எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். பல சமயங்களில் தன்னுடைய எண்ணங்களை கடிதம் மூலம் வெளிப்படையாக எழுதி அதனால் மனஸ்தாபங்களும் உண்டானதுண்டு. தில்லி வந்து, பணிக்குச் சேர்ந்த புதிதில் எனக்கும் நிறைய கடிதங்கள் எழுதுவார். அதற்கு பதில் கடிதங்களும் நான் எழுதியதுண்டு. குடும்பத்தினர் தவிர நண்பர்கள், குறிப்பாக கல்லூரி நண்பர்களுக்கும் கடிதம் எழுதியதுண்டு. 

தொலைபேசி, அலைபேசி, சமூக வலைத்தளங்கள், Face Book, WhatsApp என வளர்ந்து விட்ட இந்த காலத்தில் கடிதம் எழுதும் கலையையே பலரும் மறந்து விட்டோம். தபால் துறையே இழுத்து மூடிவிடுவார்களோ என நினைக்கும் அளவுக்கு கடிதம் எழுதும் பழக்கம் குறைந்திருக்கிறது – அலுவலகங்கள் தவிர வேறு யாருமே கடிதங்கள் எழுதுவதில்லை. நானும் கடைசியாக கடிதம் எழுதியது எப்போது என்று எத்தனை சிந்தித்தாலும் நினைவுக்கு வரவில்லை. கடிதம் எழுதுவது பற்றிய சிந்தனை கூட வருவதில்லை என்பது தான் சோகம். எனது கடிதங்கள் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.

இப்போது இந்த கடிதம் எதற்கு என்ற விஷயத்துக்கு வருவோம்……

வலைப்பூ என ஆரம்பித்து ஏழு வருடங்கள் முடிந்து எட்டாம் ஆண்டாக எழுதிக் கொண்டிருப்பது பற்றியும், 1200 பதிவுகள் எழுதிவிட்டது குறித்தும் சமீபத்தில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.  இதெல்லாம் மனதுக்கு ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியைத் தரும் விஷயம்.  பணிச்சுமைகளுக்கு இடையே, தனிமையில் வீட்டில் இருக்கும் போது எனக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு வலைப்பூவில் எழுதுவதும், மற்ற நண்பர்களின் வலைப்பூக்களில் வரும் படைப்புகளைப் படித்து கருத்து எழுதுவதும் தான்.  அப்படி எழுதும் எழுத்துகளை அச்சில் பார்ப்பது என்பது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசை….

எனது பயணக் கட்டுரைகளை புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்று என்னிடம் பலரும் சொல்லும் போது, எனக்கும் ஆசை உண்டாகும்.  எனது மனைவி, பதிவுலக நண்பர்கள், மற்ற நண்பர்கள் என பலரும் இப்படிச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். என்றாலும் புத்தகமாக வெளியிடாமல் இதுவரை அந்த யோசனையிலேயே இருக்கிறேன்.

நம் எழுத்துகளை புத்தகமாக வெளியிடுவதில் சில சிக்கல்கள் உண்டு. நமது எழுத்துகளை அச்சிடுவதற்கு ஒரு பதிப்பகம் தயாராக இருக்க வேண்டும், அவர்கள் இஷ்டப்படி மாற்றாமல் நாம் எழுதுவதை அப்படியே வெளியிட மனது வேண்டும், மேலும் புத்தகம் வெளியிட செலவும் செய்ய வேண்டும், இப்படி வெளியிட்ட புத்தகங்கள் விற்பனையும் ஆக வேண்டும்…. இப்படி பல விஷயங்கள் அதில் உண்டு.

புத்தகமாக அச்சில் வெளியிடுவதில் சிக்கல்கள் இருந்தால் மின்னூலாகவாது வெளியிடலாமே என்று சொல்ல, இதுவரை இரண்டு மின்னூல்கள் WWW.FREETAMILEBOOKS.COM தளத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது – அந்த நூல்கள் – ஏரிகள் நகரம் மற்றும் மத்தியப் பிரதேசம் அழைக்கிறது – ஆகிய இரண்டும் தான். ஏரிகள் நகரம் இன்று வரை 9659 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.  மத்தியப் பிரதேசம் அழைக்கிறது மின்னூலுக்கு அத்தனை வரவேற்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் – 2519 முறை மட்டுமே தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.  
இப்போது மகிழ்ச்சியான ஒரு செய்தி – எனது மூன்றாவது மின்னூல் நேற்று வெளிவந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசம் சென்று வந்த அனுபவங்களை என்னுடைய வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறேன். அந்த தொகுப்பு இப்போது “தேவ் பூமி ஹிமாச்சல் – பயணக்கட்டுரைகள்” என்ற தலைப்பில் மின்னூலாக வெளியாகியிருக்கிறது.  தன்னுடைய பணிச்சுமைகளுக்கு இடையே தமிழ் மின்னூல்களை வெளியிட்டு வரும் நண்பர் ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது குழுமத்தினருக்கு எனது மனம் நிறைந்த நன்றி….

இந்த மின்னூலை Kindle கருவிகள், Android அலைபேசிகள், PDF வடிவம் என எதிலும் தரவிறக்கம் செய்து படிக்க முடியும். மின்னூலை தரவிறக்கம் செய்ய கீழே கொடுத்திருக்கும் சுட்டி மூலம் வேண்டிய வடிவத்தில் தரவிறக்கம் செய்து படிக்கலாம்…. எனது வலைப்பூவின் வலது ஓரத்திலும் இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி தந்திருக்கிறேன்.


இந்த கடிதம் மூலம் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.  தொடர்ந்து பதிவுகள் மூலம் சந்தித்து வந்தாலும் இப்படி ஒரு கடிதமாக எழுதுவதும் நல்ல உணர்வையே தருகிறது.  வாரத்திற்கு ஒரு கடிதமாவது எழுத வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது. பதிவாக இல்லாவிடினும், கடிதம் எழுதி யாருக்காவது அனுப்ப வேண்டும் என எண்ணுகிறேன். எந்த அளவிற்கு இதை செயல்படுத்துவேன் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

கடிதம் எழுதுகிறேனோ இல்லையோ, பதிவுகள் எழுதுவதில் தடை இருக்காது – அலுவல்கள், பயணங்கள் இருக்கும் சமயம் தவிர மற்ற நாட்களில் பதிவுகள் தொடர்ந்து வரும்!

எனது இந்த மூன்றாவது மின்னூலை தரவிறக்கம் செய்து படிப்பதோடு, மற்ற நண்பர்களுக்கும் தரவிறக்கம் செய்து படிக்க உதவுங்கள் – ஹிமாச்சல் பிரதேசத்தின் இந்த பகுதிகளுக்கு பயணம் செய்யும் போது, அவர்களுக்கு இந்தப் பயணக் கட்டுரைகள் உதவியாக இருக்கலாம்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

வெள்ளி, 4 நவம்பர், 2016

ஃப்ரூட் சாலட் 182 – அரசு ஆம்னி பஸ் – பெண் மனதில் இடம் பிடிப்பது எப்படி? – புதுல் நாச்….


இந்த வார செய்தி:

தமிழக அரசின் ஆம்னி பஸ்கள் பொங்கல் பண்டிகைக்குள் தயாராகின்றன

தீபாவளி சமயத்தில் தமிழகம் வந்திருந்தபோது ஆம்னி பஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வாங்கியதைப் பார்க்க முடிந்தது. அரசுப் பேருந்துகள் நிறையவே இயக்கினாலும், ஆம்னி பேருந்துகளில் செல்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாகவே இருந்தது. இன்று தமிழ் இந்து நாளிதழில் பார்த்த செய்தி கவனம் ஈர்த்தது.  செய்தியில் இருக்கும் இந்த விஷயம் நடந்து விட்டால் நன்றாக இருக்கும்.  பார்க்கலாம்!

தமிழகத்தில் நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து தேவையும் அதிகரிக்கிறது. பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது, பல்வேறு சூழ்நிலை காரணமாக மக்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப் பது வாடிக்கையாகிவிட்டது. இதனால், வெளியூர் செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 10 ஆயிரம் பேருந்துகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி இடையே இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 1,000 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால், நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பிரேக் டவுன் ஆகின்றன. மேற் கூரை, இருக்கை, ஜன்னல் ஆகியவை உடைந் திருப்பது மக்களை முகம்சுழிக்க வைக்கிறது. இவற்றுக்கு மாற்றாக, புதிய பேருந்துகள் வருவதும் தாமதமாகிறது.

விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து களை அதிகபட்சம் 2 ஆண்டுகள் அல்லது 8 லட்சம் கி.மீ தூரம்தான் இயக்க வேண்டும். ஆனால், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மூன்றரை ஆண்டுகளைக் கடந்து 500 பேருந்து கள் இயக்கப்படுகின்றன. இந்த பழைய பேருந்து களால் போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமல்லா மல், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டும் வகையில், ஆம்னி பேருந்து போல அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் நவீன சொகுசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

நீண்ட தூரம் செல்பவர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து கொஞ்சம் வசதியாக செல்ல விரும்புகின்றனர். எனவே, இதுபோன்ற பயணிகளைக் கவரும் வகையில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்குவது குறித்து தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

குறிப்பாக, ஒரே வரிசையில் மூன்று சொகுசு இருக்கை (2+1), ஏசி, படுக்கை வசதி, தொலைக்காட்சி, செல்போன் சார்ஜ் போடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றில் இருக்கும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 200 புதிய பேருந்துகள் வாங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், கணிசமான பேருந்துகளை ஆம்னி பேருந்துகள்போல ஒதுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை 2017 பொங்கல் பண்டிகைக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தமிழ் இந்து நாளிதழிலிருந்து.

இந்த வார முகப்புத்தக இற்றை:

An apple a day keeps the doctor away…..  இது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி…. தில்லி வந்த புதிதில் ஒரு புத்தகத்தில் படித்தது – “If the doctor is a girl, keep the apple away!”. இன்று முகப்புத்தகத்தில் இன்னுமொரு Apple-Doctor மொழி படித்தேன் – அது…..

I wonder what happens when a doctor’s wife eats an apple a day?

நல்ல கேள்வி!

இந்த வார குறுஞ்செய்தி:

அம்மாவின் வலியை ஐந்து வயதில் கூட உணரலாம்.... ஆனால் அப்பாவின் வலியை உணர, நீ அப்பாவானால் தான் முடியும்.

இந்த வார காணொளி:

புதுல் நாச் [Putul Nach] – West Bengal

சென்ற மாதம் பார்த்த ஒரு பொம்மலாட்டம் – இதன் பெயர் புதுல் நாச் – வங்காளத்தில் நடத்தப்படும் இந்த பொம்மலாட்டத்தின் ஒரு காணொளி – தில்லியில் நடந்த போது எடுத்த காணொளி… - இதோ உங்கள் ரசனைக்கு…..



இந்த வார ஓவியம்:



ஊர்வலம் போகும் ராஜா….. – வரைந்தது யாராக இருந்தாலும் அவருக்கு ஒரு பூங்கொத்து!


ராஜா காது கழுதை காது:

திருவரங்கத்திலிருந்து திருச்சி பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த போது, பின் சீட்டில் இருந்த யுவதி அவருடன் வந்திருந்த இளைஞருக்குச் சொன்னது...

வாழ்க்கையில சேமிப்பு ரொம்பவே முக்கியம்.  கொஞ்சமாவது சேமிக்கணும். உனக்கு அந்தப் பழக்கமே கிடையாது. ஒரு ரூபாய் கூட சேமிக்க மாட்டே.... இப்படியே செலவு பண்ணு.... உன் கிட்ட ஒண்ணுமே மிச்சம் இருக்காது....

ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ....  நான் வேலைக்குப் போகும்போது சம்பாதிக்கிற காசு முழுசும் எனக்கு தான். நான் நிறைய சேமிப்பேன். அதுல இருந்து உனக்கு ஏதும் தருவேன்னு கனவுல கூட நினைக்காதே!”

இந்த வார புகைப்படம்:

இரண்டாவது தேசிய கலாச்சார திருவிழா சமயத்தில் வேடமிட்ட பலரைப் பார்க்க முடிந்தது – சிவபெருமான், கிருஷ்ணர், ராதா, ராமர், காளி என பல வேடங்கள். 



ஜிந்த் பாபா என்று கூட ஒருவர் வேடமிட்டுக் கொண்டிருந்தார் – பார்த்தால் பூதம் மாதிரி இருந்தார்.  கண்களை விரித்து விதம் விதமாய் போஸ் கொடுத்தார்.  அவருடன் நானும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டேன் – ஆனால் அந்தப் புகைப்படம் வெளியிடக்கூடாது என அம்மணி சொல்லி விட்டார்கள்…. அதனால் ஜிந்த் பாபா புகைப்படம் மட்டும் இங்கே….  இது கேமராவில் எடுத்தது. 

படித்ததில் சிரித்தது:

பெண்கள் மனதில் இடம் பிடிப்பது எப்படி?




மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

வியாழன், 3 நவம்பர், 2016

நாட்டுச் சாராயம் – லவ்பானி மற்றும் அபாங்/பிட்சி.....



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 63

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


லவ் பானி


பிட்சி....


நாங்கள் தவாங்கில் கிடைத்த அனுபவங்களோடு உறங்கிப் போக, சில நண்பர்கள் மட்டும் அருணாச்சலப் பிரதேசத்தின் நாட்டுச் சாராயம் அருந்த முடியவில்லை என்ற வருத்தத்தினை நண்பர் ஜார்ஜுடன் பகிர்ந்து கொண்டார்கள் போலும்...  அவர் எதற்குக் கவலைப் படுகிறீர்கள் என அதற்கும் ஏற்பாடு செய்து விட்டார்.  தவாங்கிலிருந்து காலையில் ஓட்டுனர் ஷம்புவுடன் அவரது வாகனத்தில் புறப்பட்டு போகும் வழியில், தவாங்க் தாண்டியதும் நகரின் எல்லையில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் இருக்கும் கேரள மாநிலத்தவர் ஒருவருக்கு அலைபேசி மூலம் தகவல் தந்து விட்டார்.



தங்குமிடத்தின் எதிரே இருந்த பூங்காவில் புத்தர் சிலை... 


தவாங்க் தங்குமிடத்தின் வெளியே நண்பர்களோடு..

நாங்கள் அடுத்த நாள் காலையில் தவாங்க் நகரில் இருந்த கடைவீதியைக் கொஞ்சம் சுற்றி விட்டு, நண்பர் ஜார்ஜிடம் எங்களது நன்றியைத் தெரிவித்து புறப்பட்டோம். வழியில் மற்றொரு கேரள மாநிலத்தவரைச் சந்தித்து பிறகு பயணம் தொடரவேண்டும். சில கிலோமீட்டர்கள் பயணித்தபிறகு ஒரு வளைவில் அந்த கேரள நபரைப் பற்றி விசாரித்தோம். அவர் அங்கே ஒரு Mechanic Shop வைத்திருக்கிறார். அதற்குள் நாங்கள் நின்றிருந்த சாலையின் மேலே இருந்த வீடு ஒன்றிலிருந்து மலையாளக் குரல்…..


தவாங்க் கடைவீதி...

நண்பர் மலை வழியே கீழே இறங்கி வந்து அறிமுகம் செய்து கொண்டார்.  வீட்டிற்கு வர வேண்டும் எனச் சொல்ல, இத்தனை பேரும் அவர் வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என அங்கேயே நின்று பேசினோம். அதற்குள் அவர் மகனுக்குத் தொலைபேசி மூலம் அழைத்து அவர்களை கீழே வரச் சொல்ல, குடும்பம் முழுவதும் வந்து விட்டார்கள். அருணாச்சல் மட்டுமல்லாது பெரும்பாலான வடகிழக்கு மாநிலத்தவர்கள் ஜோல்னா பை இல்லாது இருப்பதில்லை. கேரள நண்பரின் மனைவி தோளிலும் ஒரு ஜோல்னா பை! அதில் இரண்டு பாட்டில்கள் லவ்பானி, இரண்டு பாட்டில்கள் ரெக்ஸி/பிட்சி. இரண்டுமே அருணாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் நாட்டுச் சரக்கு!


கடைவீதியிலும் பிரார்த்தனை உருளைகள்...

நமது ஊர் போல இதை யாரோ அரசியல்வாதியின் அடிப்பொடி ரவுடியின் மேற்பார்வையில் தயாராகும் சரக்கு அல்ல! ஒவ்வொரு வீட்டிலும் இந்த நாட்டுச் சரக்கினை பெண்களே தயாரிக்கிறார்கள். பெரியவர்கள், குறிப்பாக ஆண்கள் இந்த நாட்டுச் சரக்கினை தினமும் அருந்துகிறார்கள். பெண்களும் இதை அருந்துவதுண்டு.  இந்த நாட்டுச் சரக்கினை அடித்தால் IMFL சரக்கை விட கிக் அதிகமாக இருக்குமாம்.  அது சரி அருணாச்சல் பெண்கள் தயாரிக்கும் இந்த சரக்கு மலையாள நண்பரின் மனைவி எப்படி தயாரிக்கிறார் என்ற சந்தேகம் உங்களுக்கும் வந்திருக்கலாம்!


நண்பர்களுடன் தவாங்க் குடும்பம்...

கேரள நண்பர் இருபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக தவாங்க் நகர வாசி. இளமையிலேயே அருணாச்சலப் பிரதேசத்தினைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் புரிந்து கொண்டவர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். குழந்தைகள் அம்மாவிடம் அருணாச்சலப் பிரதேச மொழியிலும் அப்பாவிடம் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள். மலையாளம் பேசத் தெரியாது என்றாலும் கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். சில புகைப்படங்களையும் அந்த சாலையின் ஓரத்திலேயே நின்று எடுத்துக் கொண்டோம். 

கேரள நண்பரின் மனைவி எங்களுடன் வந்திருந்த நண்பர்களின் விருப்பத்திற்கு இணங்க, நாட்டுச் சரக்கினைக் கொடுத்ததோடு, ஒரு Flask-ல் தேநீரும் கொண்டு வந்திருந்தார். அனைவருக்கும் தேநீர் கொடுத்து உபசரித்தார். குழந்தைகளும் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பெரிய மகனுக்கு கால்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வமாம். அதற்காகவே கேரளாவிற்குச் சென்று அங்கே நிறைந்திருக்கும் கால்பந்து அகாடெமி எதிலாவது சேர்த்து விட எண்ணம் என்றும் சொன்னார் அந்த கேரள நபர்.  இன்னும் சில மாதங்களில் அருணாச்சலப் பிரதேசம் விட்டு கேரளத்திற்கே குடும்பத்துடன் சென்று Settle ஆகும் எண்ணம் இருப்பதையும் சொன்னார்.

காதல் – ஜாதி, மொழி, மதம், இனம் என எதையும் பார்ப்பதில்லை. எவருக்கும் எவர் மீதும் காதல் வரலாம்! இரண்டு பேருக்குமே மற்றவர் மீது காதல் என்பதால் இத்தனை வருடம், மற்றவருடைய மொழி தெரியாது என்றாலும் காதல் மட்டுமே துணை கொண்டு தங்களது வாழ்க்கையினை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காதல்…  அதற்குத் தான் எத்தனை சக்தி! எங்கிருந்தோ வந்து இப்படிக் காதல் புரிந்து திருமணமும் செய்து கொண்ட அந்த நண்பருக்கு இத்தனை வருடம் கழித்து நாங்கள் வாழ்த்துகளைச் சொன்னோம். கணவன் மனைவி குழந்தைகள் என அவர்களுக்குள் பரிமாற்றம் எல்லாமே ஹிந்தி மொழியில் தான். நாங்கள் அந்த நபரிடம் மலையாளத்திலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹிந்தியிலும் பேசினோம்.  

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்க் நகரிலிருந்து கேரளாவிற்குப் பயணம் செய்யப் போகிறது அந்த குடும்பம். இந்திய வரைபடத்தின் தெற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடிக்கு வந்து அங்கேயே ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் அந்த கேரள நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது வாழ்த்துகளைச் சொல்லி, தொடர்பு எண்களைப் பரிமாறிக் கொண்ட பின் எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.   

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி

புதன், 2 நவம்பர், 2016

கச்சி கோடி - ராஜஸ்தானின் பொய்க்கால் குதிரை நடனம்.....



தமிழகத்தின் தஞ்சைப் பகுதிகளில் பொய்க்கால் குதிரை நடனம் மிகவும் பிரபலம். கால்களில் மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு, குதிரை உருவத்தினை சுமந்தபடி ஆடும் பொய்க்கால் குதிரை நடனத்தினை நம்மில் பலரும் பாத்திருக்க வாய்ப்புண்டு.  இதே மாதிரி குதிரை நடனம் ராஜஸ்தானிலும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?  ராஜஸ்தானிலும் இப்படி குதிரை உருவத்தினை தனது இடுப்பில் மாட்டிக்கொண்டு, அலங்கார உடைகள் அணிந்து பாரம்பரிய இசை இசைக்க, சுற்றிச் சுற்றி நடனமாடுவார்கள்.  அந்த நடனத்திற்குப் பெயர் கச்சி கோடி [Kachhi Godi] நடனம்.



சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது தேசிய கலாச்சாரத் திருவிழா சமயத்தில் ராஜஸ்தானிலிருந்து ஒரு குழு தலைநகரின் IGNCA-வில் தொடர்ந்து இந்த கச்சி கோடி நடன்ம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.  நடனம் ஆட மூன்று பேர், இசைக்குழுவில் நான்கு-ஐந்து பேர் என சுமார் பத்து பேர் கொண்ட குழு. அவ்வப்போது இடைவெளி கொடுத்து நாள் முழுவதும் ஆடியபடியே இருந்தார்கள் அந்த மூன்று பேரும். அதில் ஒருவர் பொய்க்குதிரையைச் சுமந்தபடி ஆட, மற்ற இருவரும் [ஒரு பெண், ஒரு ஆண்] முக்கிய ஆட்டக்காரருடன் ஆடுகிறார்கள். 



ராஜஸ்தானின் ஷேகாவத்தி பகுதியில் தான் இந்த நடனம் முதன் முதலாக ஆடினார்கள் என்றும் அங்கே இருந்த கொள்ளைக்காரர்களின் வீர பராக்கிரமங்களை பாடல் மூலம் தெரிவிக்க நடனம் ஆடுபவர்கள் கைகளில் கத்திகளோடு நடனமாடுவார்கள் எனத் தெரிகிறது.  ஆனால் நான் பார்த்த நாட்டியக்காரர்கள் கத்தியுடன் ஆடவில்லை. ஒரே ஒருவர் மட்டுமே குதிரை வேடமிட்டிருந்ததால் கத்தியுடன் ஆடவில்லை போலும்.  ஆனாலும் சுற்றிச் சுற்றி மூவரும் ஆடுவதைப் பார்க்கும் நமக்கே தலைசுத்துகிறது. ஆனால் சுற்றும் அவர்களோ எந்தவித தயக்கமோ, சோர்வோ இல்லாது தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். 











குதிரையின் உருவம் மூங்கில் குச்சிகள் மற்றும் பேப்பர் கூழ் கொண்டு அமைக்கப்படுகிறது. அதன் மேல் வண்ண வண்ண உடைகளும், அந்த உடைகளில் இருக்கும் வேலைப்பாடும், சுற்றிச் சுற்றி ஆடும்போது அந்த ஆடையில் மின்னும் கண்ணாடிகளும் என அனைத்துமே பார்க்கும் உங்களை நிச்சயம் கவரும்.

நடுநடுவே இடைவெளி என்றாலும் தொடர்ந்து நாள் முழுவதும் இப்படி ஆடுவது, அதுவும், தொடர்ந்து எட்டு நாள் விழாவிலும் இப்படி ஆடுவது பிரமிக்க வைக்கிறது. நடனமாடிய மூவருமே ஒருவருக்கொருவர் சளைக்காது ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.  

வழக்கம் போல, நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். இந்த முறை காமிரா உள்ள அலைபேசியும் எடுத்துச் சென்றிருந்ததால் காணொளியும் எடுத்தேன்.  Youtube-லும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இங்கேயும் உங்கள் பார்வைக்காக, இரண்டு காணொளிகளைச் சேர்த்திருக்கிறேன்.  நீங்களும் பார்த்து ரசிக்க இதோ கச்சி கோடி நடனம்....






மீண்டும் ச[சி]ந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.....



செவ்வாய், 1 நவம்பர், 2016

ஏமாற்றம் தந்த ஹெலிகாப்டர் சேவை.....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 62

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


தவாங்க் மோனாஸ்ட்ரி...

தவாங்க் மோனாஸ்ட்ரியில் பிரம்மாண்ட புத்தர் சிலையும், அழகிய சுவர் ஓவியங்களையும் பார்த்து ரசித்த பிறகு தங்குமிடம் வந்து சேர்ந்தோம். கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு இரவு உணவு – வழக்கம் போல எனக்கு சைவ உணவும், மற்ற நண்பர்களுக்கு அசைவ உணவும். நண்பர் ஜார்ஜும் வந்து சேர அடுத்த நாள் அங்கிருந்து புறப்பட வேண்டும் என்பதை அவருக்கு நினைவுபடுத்தினோம்.  ஹெலிகாப்டர் பயணத்திற்கு முன்பதிவு செய்வதில்லை. ஏன் என்றால் தட்பவெப்ப நிலை பொறுத்தே பயணிக்க முடியுமா முடியாதா என்பதை முடிவு செய்வார்கள். 


படம்: இணையத்திலிருந்து....

முன்பெல்லாம் தவாங்கிலிருந்தே பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் சேவை இருந்தது. நிறைய விபத்துகள் ஏற்பட, இந்த சேவையை கட்டாயமாக நிறுத்த வேண்டிய சூழல். ஒரு விபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சர் இறந்து போனது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  2011-ஆம் வருடம் நடந்த ஒரு விபத்தில் பயணித்த 17 பேரும் உயிரிழந்தார்கள். 2015-ஆம் ஆண்டிலும் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து விபத்துகள் ஏற்படக் காரணம் ஹெலிகாப்டர் செல்லும் பாதையின் இரு மருங்கிலும் மலைப்பகுதிகள் – கொஞ்சம் கவனம் தவறினாலும் மலைகளில் மோதி விபத்து ஏற்படலாம்.


படம்: இணையத்திலிருந்து....
  
நாங்கள் பும்லா பாஸ் சென்றிருந்த போது நண்பர் ஜார்ஜ் ஹெலிகாப்டர் சேவை அடுத்த நாள் இருந்தால் ஏற்பாடு செய்வதாகச் சொல்லி இருந்தார். அதுவும் சமீப காலத்தில் தவாங்கிலிருந்து புறப்பட்ட பல ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாக, தவாங்க் – கௌஹாத்தி ஹெலிகாப்டர் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதையும், தவாங்கிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லும்லா என்ற இடத்திலிருந்து தான் ஹெலிகாப்டர் சேவை இருக்கிறது.  நாங்கள் புறப்பட வேண்டிய அன்றும் ஹெலிகாப்டர் சேவை நிறுத்தி இருக்கிறார்கள் என்பதையும் சொல்ல, எங்கள் திட்டத்தினை மாற்றியே ஆகவேண்டிய கட்டாயம். 

ஹெலிகாப்டர் மூலம் பயணித்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கும் – வேறு சில இடங்களுக்குப் பயணித்திருக்கலாம். ஆனாலும் ஆபத்தான மலைகள் நிறைந்த பாதைகளில், மேகக் கூட்டங்களுக்கு நடுவே ஹெலிகாப்டரில் பயணிப்பது கொஞ்சமல்ல நிறையவே ரிஸ்க் என்பதால் மேக மூட்டமாக இருக்கும் சமயங்களில் ஹெலிகாப்டர் சேவைகளை நிறுத்தி விடுகிறார்கள்.  எங்களுக்கும் வேறு வழியில்லை.  மீண்டும் கரடு முரடான சாலைகளில் தான் பயணிக்க வேண்டும்.

இந்த வடகிழக்கு மாநிலங்கள் பயணத்தில் பல வாகனங்களில் பயணித்திருந்தோம். ஹெலிகாப்டர் பயணமும் வாய்க்கும் என்ற எங்கள் எண்ணம் நிறைவேறவில்லை என்பதில் வருத்தம் தான். 

ஹெலிகாப்டர் தான் பயன்படுத்தப் போகிறோம் என்ற எண்ணத்தில், நாங்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனம் [ஓட்டுனர் ஷம்பு] தவாங்க் சுற்றி முடித்தபிறகு அங்கேயே கணக்கை முடித்து விட்டுவிடுவதாகத் தான் பேசி இருந்தோம். ஆனால் ஹெலிகாப்டர் சேவை நிறுத்தி விட மீண்டும் ஷம்புவோடு பயணிக்க அவரது முதலாளியிடம் பேசினோம். ஓட்டுனர் ஷம்புவிற்கு அதில் அத்தனை விருப்பமில்லை! திரும்பி போகும்போது வேறு பயணிகளை அழைத்துச் சென்றால் அவருக்கு அந்த காசு கிடைக்கும் என்பது அவரது எண்ணம். எங்களையே அழைத்துச் சென்றால், நாங்கள் கொடுக்கும் காசு முதலாளிக்குச் சென்றுவிடும்....

இருந்தாலும் வேறு வழியில்லை. ஓட்டுனர் ஷம்புவின் வாகனத்தில் தான் செல்ல வேண்டும். அவரிடமும் பேசி அவர் வாகனத்திலேயே தேஸ்பூர் சென்று, கணக்கு முடித்து, அங்கிருந்து கௌஹாத்தி செல்ல வேண்டும்.  இந்த ஏற்பாடுகளை முடித்து அன்றைய தினம் பார்த்த இடங்களைப் பற்றிய எண்ணங்களோடு உறங்கச் சென்றோம்.  நானும் நண்பர் பிரமோத்-உம் உறங்கச் செல்ல, மற்ற நான்கு பேரும் அன்றைய தினத்தினை மகிழ்ச்சியோடு முடிக்க மீதி இருந்த சரக்குகளை காலி செய்தார்கள்.  இத்தனை இருந்தும் அவர்களுக்கு ஒரு வருத்தம் – அந்த வருத்தம் அருணாச்சலப் பிரதேசத்தின் நாட்டு சரக்கு அடிக்க முடியாததே.....

அந்த வருத்தத்தினை நண்பர் ஜார்ஜுடன் பகிர்ந்து கொண்டார்கள் போலும்...  அவர் எதற்கு கவலைப் படுகிறீர்கள் என அதற்கும் ஏற்பாடு செய்து விட்டார்.  அந்த ஏற்பாடு எங்களுக்கு இன்னுமொரு மலையாளியை அறிமுகம் செய்தது! மலையாளி எப்படி அருணாச்சல நாட்டுச் சரக்கு ஏற்பாடு செய்வார் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்! கொஞ்சம் ஸ்வாரஸ்யமான விஷயம் அது!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்....
புது தில்லி.