புதன், 2 பிப்ரவரி, 2011

தலைவலி சிகிச்சை




இந்த பகிர்வில் ஒரு சிகிச்சை பற்றிச் சொல்லப் போகிறேன்.  சற்றே (?) உங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

என்னுடன் பணிபுரியும் ஒரு ராஜஸ்தானிய பியூனுடைய மனைவிக்கு ஓரிரு வருடங்களாகவே தலைவலி இருக்கிறது.  அதற்காக அவரை  பல மருத்துவர்களிடம் காட்டி  சிகிச்சை எடுத்து வந்தார்.  தில்லியின் பிரபல அரசு மருத்துவமனைகளான சஃப்தர்ஜங் மற்றும் All India Institute of Medical Sciences ஆகியவற்றில் கிடைக்கும் எல்லா சோதனைகளும் செய்து பார்த்து மருந்துகள் பெற்று அவற்றை எடுத்துக் கொண்டாராம் அவரது மனைவி.  ஆனாலும் பெரிய அளவில் தலைவலி குறையாத காரணத்தினால் மிகுந்த கவலையில் இருந்தார். 

அப்போது ராஜஸ்தானில் இருக்கும் உறவினர்கள் இதற்கு சிகிச்சை அவர்களது ஊரிலேயே செய்யலாம் எனச் சொல்லி அங்கே வரச் சொன்னார்கள்.  சரி என்று அவரும் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு, அஜ்மேர் மாவட்டத்தில் இருக்கும் அந்த கிராமத்திற்கு மனைவியை அழைத்துச் சென்றார். 

என்ன பிரச்சனை என்று கேட்ட அந்த கிராமத்து வைத்தியரிடம், தனது மனைவிக்கு தீராத தலைவலி என்று சொல்லவே, அவரும் அந்தப் பெண்ணை சோதித்துப்  பார்த்துவிட்டு அவருக்குக் கொடுத்த சிகிச்சை பற்றி அந்த பியூன்  சொன்னது: .

“ஒரு படுக்கையில் என் மனைவியைப் படுக்க வைத்து, மூக்கில் ஒரு பக்கத்தை மூடிக்கொண்டு மற்ற துவாரத்தில் ஒரு திரவத்தினை நான்கு-ஐந்து சொட்டுகள் விட்டு, பிறகு அந்த துவாரத்தை மூடி மற்ற துவாரத்திலும் நான்கு-ஐந்து சொட்டுகள் விட்டார். காரமாய் உள்ளே இறங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு காதின் அருகில் ஒரு அலுமினிய குழல் எடுத்து தன்னுடைய வாயில் வைத்து மெதுவாக காற்றை உள்ளே இழுத்தார். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு காதிலிருந்து அலுமினிய குழலை எடுத்து, தன் வாயில் வைத்து மெதுவாக ஊத, அந்த குழலில் இருந்து வெளியே வந்து விழுந்தது என்ன தெரியுமா? ஒரு சிறிய புழு  இது போல இன்னும் ஒரு புழு மண்டைக்குள் இருக்கிறது. ஒரு வாரம் கழித்து வாருங்கள், இரண்டாவது புழுவையும் எடுக்கலாம்"
இந்த சிகிச்சைக்குக் கட்டணமாய் புழு ஒன்றிற்கு ரூபாய் 1500/- வாங்குகிறாராம்.  ஒரு வாரம் சென்ற பிறகு இரண்டாம் புழுவையும் எடுத்து விட்டு வந்த பிறகு அவரது மனைவிக்கு தலைவலி அறவே இல்லை எனவும், மேல் மருந்தாக, பாதாம், பிஸ்தா, பிசின் போன்ற பல பொருட்கள் போட்டு லட்டு செய்து சாப்பிடக் கொடுத்ததாகவும் சொன்னார். 

எடுத்த புழுவினை ஒரு சிறிய குப்பியில் போட்டு எடுத்துக்கொண்டு வந்து காண்பித்தார். இந்த சிகிச்சை பற்றி அலுவலகத்தில் வந்து எங்களிடம் பகிர்ந்த போது என்ன சொல்வது என்று யாருக்கும் புரியவில்லை. இதை எழுதிக்கொண்டு இருக்கும் போது பின்னாலிருந்து படித்த என் மனைவி அருவருப்புடன் சென்று விட்டார்.

பிரபல மருத்துவ மனைகளாலேயே தீர்க்க முடியாததை இது போன்ற கிராம வைத்தியார்களால் தீர்க்க முடியும் என்று நம்பிச் செல்லும் இவர்களுக்கு  என்ன சொல்லி புரிய வைப்பது? நிச்சயம் இது ஏமாற்று வேலைதான்.  இன்னமும் இது போன்ற விஷயங்கள் நமது கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனாலும்  ஒரு விஷயம் – இந்த சிகிச்சையால் பலன் இருக்கிறது என்று அந்த நபர் நம்புகிறார் பாருங்கள்! அதுதான் அந்த கிராமத்து வைத்தியரைப்  போன்ற ஏமாற்றுபவர்களுக்கு மூலதனம் என நினைக்கிறேன்.  இந்த நிகழ்ச்சி பற்றி எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனாலும் இந்த மாதிரி மூட நம்பிக்கைகளைப்  பற்றி நீங்களும் தெரிந்துகொள்ளவே எழுதி இருக்கிறேன். 

இந்த சிகிச்சை முடிந்து திரும்பவும் தில்லி வந்த அவருக்கு மறுபடியும் தலைவலி வந்துவிட்டது!
மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்…


திங்கள், 31 ஜனவரி, 2011

[G]கூமர் நடனம்



சில மாதங்களுக்கு முன் ”கத்புத்லி” என்ற இடுகையில் ராஜஸ்தானிய நடனமான ”[G]கூமர் நடனம்” பற்றி பின்னர் எழுதுகிறேன் என்று எழுதியிருந்தேன். அதற்கு இப்போது தான் வேளை வந்திருக்கிறது! [”சோம்பேறித்தனம் என்று சொல்லாமல் இப்படி ஒரு சமாளிப்பு தேவையா?” என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது!]

”[G]கூமர் நடனம்” என்பது ராஜஸ்தானிய பெண்களால் அவர்கள் ஊரில் நடக்கும் திருவிழா, கண்காட்சி போன்ற இடங்களில் ஆடப்படும் ஒரு வகை நடனம். இதை ஆடும் பெண்கள், பல சுருக்கங்கள் வைத்து, கண்ணாடி வேலைப்பாடு செய்த நீண்ட பாவாடையும் சட்டையும் [Ghagra-Choli] போட்டுக் கொண்டுச் சுற்றிச் சுற்றி ஆடுவார்கள். தாளத்திற்கு ஏற்ப அவர்கள் அப்படி ஆடும்போது அவர்கள் காட்டும் வேகம் சில சமயங்களில் சுழல் காற்றைப் போல இருக்கும். YOUTUBE-ல் கிடைத்த ஒரு [G]கூமர் நடனத்தின் காணொளி கீழே.


எந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுகிறார்களோ அதற்கு ஏற்றார்ப் போல அவர்களது கால்கள் இடும் தாளங்களும் மாறுபடும். கைகளைச் சுற்றியும், நடுநடுவே கை கொட்டியும், தலையின் மேலே மூன்று-நான்கு மண்பானைகளை வைத்தவாறும் ஆடும் இந்த ஆட்டம் மாலையில் ஆரம்பித்து சில சமயங்களில் நடுநிசி வரை கூட நடக்குமாம்! சமயங்களில் தரையில் இரு குவளையை வைத்து அதன் மேல் இரு கால்களை வைத்து நின்றபடி கூட ஆடுகின்றனர்.

அவர்களுடைய ஆட்டம் காண்பவர்களையும் ஆடத்தூண்டும் விதமாக இருக்கும். சில விழாக்களில் நான் இந்த நடனத்தினைக் கண்டு களித்திருக்கிறேன். ஒரு ஜெய்ப்பூர் பயணத்தின் போது மாலை வேளையில் நடந்த இந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வெளி நாட்டைச் சேர்ந்தவரும் அவர் மனைவியும் இதில் ரொம்பவே மெய்மறந்து அவர்களுடன் ஆட ஆரம்பித்து விட்டனர்.

அந்த வெளிநாட்டுத் தம்பதி ராஜஸ்தானிய நடனக் கலைஞர்களின் ஒவ்வொரு நடன அசைவுகளையும் தொடர முயல, உற்சாகத்தில் கலைஞர்கள் இன்னும் கடினமான நடன அசைவுகளைத் தர, அதையும் இவர்கள் தொடர என உற்சாகமான ஒரு போட்டி நடந்தேறியது. குழுமியிருந்த அத்தனை பேரும் இந்த போட்டி நடனத்தினை ரசித்தனர்.

அந்த நடனத்தினை நான் எடுத்த காணொளி உங்களுக்காய் கீழே. மாலை வேளை, மற்றும் குறைந்த வெளிச்சம் என்பதால், காணொளியில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை! நீங்கள் நிச்சயம் இந்த நடனத்தினைப் பார்த்து ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.


மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

வியாழன், 27 ஜனவரி, 2011

மறக்க முடியுமா இந்த கல்லூரி சுற்றுலாவை ஆயுசுக்கும்?



நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு சுற்றுலாக்கள் சென்றோம்.  முதலாவது சுற்றுலா திருச்சிக்கும், இரண்டாவது சுற்றுலா பொள்ளாச்சி, ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, திருமூர்த்தி ஹில்ஸ், பழனி போன்ற இடங்களுக்கும்.

முதலாவதை விட இரண்டாவது மறக்க முடியாத விதத்தில் அமைந்தது.  எங்களது கணிதத்துறை பேராசிரியர் திரு தங்கராஜ் அவர்களின் திருமணம் பொள்ளாச்சியில் நடக்க ஏற்பாடாகியிருந்தது.  அங்கு செல்லும் போது அருகில் உள்ள மற்ற இடங்களையும் பார்க்க ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்து, நெய்வேலியில் தனியார் பேருந்துகள் இல்லாததால், பாண்டிச்சேரியில் இருந்து பேருந்து எடுத்துச் சென்றோம். 

முதல் மூன்று நாட்கள் தொந்தரவு ஏதுமின்றி பாட்டு, கூத்து, கும்மாளம் என அருமையாக கழிந்தது.  பழனி வழியாக நெய்வேலி திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது சதாம் ஹுசைன் குவைத்தை தன்னகப்படுத்தியதன் காரணமாக தமிழகமெங்கும் பெட்ரோல், டீசல் கடுமையான தட்டுப்பாடு என்று.

பழனி அருகே ஒட்டன்சத்திரத்தின் அருகில் வரும்போது எங்கள் பேருந்தின் ஓட்டுனர் டீசல் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி மலைப்பாம்பு கிடப்பதைப் போன்ற வண்டிகளின் வரிசையில் நிறுத்தியபோது இரவு பன்னிரண்டு மணி.  நீண்டு நெளிந்து சென்ற வரிசையில் எங்கள் பேருந்து இருந்தது பெட்ரோல் நிலையத்திலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டருக்கு அப்பால்.  பேருந்து நின்று கொண்டிருந்த இடமோ ஆள் அரவமில்லாத அத்வான காடு போல இருந்தது.  பேருந்து முழுவதும் பத்து மாணவர்களும், முப்பது மாணவிகளும்.  கண்களில் பயம் தெரியாமல் இருந்தாலும் நெஞ்சு முழுக்க திக்..திக்..திக். 

அங்கே திருட்டுத்தனமாக பதுக்கல் டீசல் வியாபாரமும் கன ஜோராக நடந்து கொண்டிருந்தது.  தோழர் ஒருவர் பதுக்கல் காரர்களுடன் தனியாக டீசல் வாங்கச் சென்று, டீசல் கிடைக்காமல், ”தலை தப்பியது தம்புரான் புண்ணியம்” என சாகசமாக தப்பி வந்தது தனிக் கதை. 

பிறகு மண்ணெண்ணையும் என்ஜின் ஆயிலும் கலந்து டீசலுக்கு பதிலாக ஊற்றி கரும்புகையை கிளப்பியபடி ஒருவழியாக நான்காம் நாள் இரவு நெய்வேலி வந்து சேர்ந்தோம்.

எல்லா நண்பர்களும் மிகவும் சோர்ந்து விட்டதால் அனைவரையும்  அவரவர் வீட்டில் இறக்கி  விட்டுவிட்டு,  நான் மட்டுமே அப் பேருந்திலேயே பாண்டி சென்று கணக்கை முடித்த போது இரவு இரண்டு மணி.   

பின்னர் பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்து பயணச்சீட்டு வாங்கியபின் (கைப்பையில் நிறைய பணத்துடன்) அசதியில் நன்றாக தூங்கி விட்டேன்.  பேருந்திலிருந்த பயணிகளை கடலூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட பிறகு பஸ் டிப்போவில் பேருந்தினை விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள் போலிருக்கிறது நடத்துனரும் ஓட்டுனரும் – நான் பேருந்தினுள் ஒரு மூலையில்  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியாமல்.  நான்கு மணி சுமாருக்கு ஏதோ சத்தம் கேட்டு விழித்தால் நான் இருந்த  பேருந்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். 

தமிழ்த் திரைப்படங்களில் ஹீரோ-ஹீரோயின்கள் கேட்பது போல ”நான் எங்கே இருக்கேன்? எனக் கேட்டதற்கு, அந்த சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி சொன்னது இன்னும் காதில் ரீங்காரித்துக் கொண்டிருக்கிறது.  “என்னதான் பாண்டிச்சேரியில தண்ணி விலை குறைவா இருந்தாலும் இப்படியா தம்பி தண்ணி அடிக்கிறது?  இதிலே நான் எங்க இருக்கேன்னு கேள்வி வேற! சீக்கிரம் இறங்குய்யா, வண்டி எடுக்க நேரமாச்சு"--ன்னு சத்தமாகச்  சொன்னார்”.


[இந்த புகைப்படம் 2009-ல் குரங்கு நீர்வீழ்ச்சி சென்ற போது எடுத்தது] 

"சரி இன்னிக்கி நாம முழிச்ச நேரம் சரியில்லே போல" என்று மனதில் வருந்திக்கொண்டே வெளியே வந்து ஒரு சோடா வாங்கி, அதில் ஒரு சொட்டைக் கூட  குடிக்காமல் அதாலேயே   முகம் கழுவிக்கொண்டு நெய்வேலி பேருந்து பிடித்து, கண்ணை அகல விரித்துப் பிடித்தபடியே  வீடு வந்தபோது நன்றாக விடிந்து விட்டிருந்தது.


இருபது வருடங்கள் ஆனாலும், இப்போதும் அப்பயணம் நினைவில் நிற்கிறது.