ஞாயிறு மாலை அலைபேசியில் ஒரு அழைப்பு....
நான்: “ஹலோ...”
அலைபேசிக் குரல்: “என்னடா பண்ணறே.....”
நான்: சொல்லுடா....
அலைபேசிக்குரல்: வெளியே எங்கும் சுத்தக்
கிளம்பிடாத, அம்மா வந்திருக்காங்க, அழைச்சிட்டு வரேன்.”
நான்: எங்க அம்மா, அப்பாவும் இங்கே தான்
இருக்காங்க.... நிச்சயம் அழைச்சுட்டு வா! ரொம்ப
நாள் கழிச்சு பார்க்கப் போறோம். நான் வீட்டிலேயே இருக்கேன்”
அந்த அழைப்பு வந்தது என்னுடைய நெய்வேலி
நண்பர் ஒருவரிடமிருந்து. பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்த
குடும்பங்கள் எங்களுடையது. எங்கள் வீட்டில் மூன்று பேர். அவர்கள் வீட்டில் மூன்று
பேர், அதற்கடுத்த வீட்டில் ஒரு பெண். ஏழு பேர் கொண்ட அணி எங்களுடையது. பெண்கள்
நால்வரும் ஒரு அணி. வால்கள் மூவரும் ஒரு அணி! எத்தனையோ நாட்கள்
விளையாடியிருக்கிறோம். அவர்களது பெற்றோர்கள் வெளியூர் சென்றுவிட்டால், எங்கள்
வீட்டில் சாப்பாடு. என் பெற்றோர்கள் வெளியூர் சென்றால் எங்களுக்கு அவர்கள்
வீட்டில் சாப்பாடு.
அவர்கள்
வீட்டில் எப்போது புட்டு கடலை செய்தாலும் எங்களுக்கும் நிச்சயம் வரும். எங்கள்
வீட்டில் வற்றல் குழம்பு செய்தாலும் அவர்கள் வீட்டுக்கும் கொஞ்சம் போகும். கிட்டத்தட்ட
எனது பெற்றோர்களுக்கும் அவர்களுக்கும் 35 வருட பழக்கம். நாங்களும் பிறந்ததிலிருந்து
ஒன்றாகவே இருந்திருக்கிறோம். படித்த பள்ளிகள் வேறாக இருப்பினும், வீடு
வந்துவிட்டால் நிறைய விளையாடி இருக்கிறோம்.
இந்த எழுவர்
அணி சேர்ந்து நாவல் பழம் பறிக்கப் போய் அடி வாங்கிய கதை ஏற்கனவே இந்த
வலைப்பக்கத்தில் ”டவுசர்
பாண்டி” எனும் தலைப்பில் எழுதி இருக்கிறேன். அன்று
மரத்திலிருந்து கீழே விழுந்த முரளி தான் மாலை அலைபேசியில் அழைத்துப் பேசியது.
தில்லியிலேயே அவர் வசித்தாலும், பணிச்சுமை, இருக்கும் இடங்களுக்கு இடையே இருக்கும்
இடைவெளி போன்ற பல விஷயங்களால் அடிக்கடி சந்திப்பதில்லை. இப்படி ஏதாவது ஒரு நாளில் –
சில வருடங்களுக்கு ஒரு முறை சந்திப்பது வழக்கம். அப்படிச் சந்திக்கும் போது
நெய்வேலியின் நினைவுகளும், சொந்த விஷயங்களும் பேச ஆரம்பித்து விட்டால், நேரம்
போவது தெரியவே தெரியாது.
நேற்றும்
ஐந்தரை மணிக்கு வந்த பின் தொடர்ந்த பேச்சு தான். முடிவுக்குக் கொண்டு வர
யாருக்கும் மனதில்லை. நடுவில் எனக்கு வேறொரு அழைப்பு வர கொஞ்சம் அவசரமாக வெளியே
செல்ல வேண்டிய சூழல். நான் வெளியே சென்று வீடு திரும்ப ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.
அப்பொழுதும் நெய்வேலி கதை தான் வீட்டில் ஓடிக்கொண்டிருந்தது. நானும் வெளியே
சென்றுவிட்டாலும் அதே நினைவுகள் தான் எனது மனதிற்குள்ளும்.
நண்பரின்
மகன் தனது பாட்டியிடம் “நீ ரொம்ப நாள் கழிச்சு உன்னோட ஃப்ரண்டை பார்க்கப் போற,
பேச்சு சுவாரசியத்துல மறந்து போய் அங்கேயே இருந்துடாத, ராத்திரிக்குள்ள வீட்டுக்கு
வந்துடு. அப்பாவுக்கு நாளைக்கு ஆஃபீஸ் போகணும்” என்று சொல்லி தான்
அனுப்பினானாம். நிஜமாகவே மறந்து தான் போய்
விட்டார்கள். உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பவர்கள், திடீரென நினைவு வந்து
எழுவதும், நின்றபடியே சில விஷயங்கள் பேசுவதும், வேறு ஒரு விஷயத்திற்கு தாவும்போது
சுவாரசியத்தில் மீண்டும் அமர்ந்து பேசுவதும் என தொடர்ந்தது பேச்சு.
நடுவே
எங்களது வீர பராக்கிரம செயல்கள் பற்றிப் பேசும்போது நான் அவர்களது பல் செட்டினை
காக்கையிடமிருந்து தட்டிப் பறித்து வந்த விஷயமும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்
நண்பரின் அம்மா. ”அட அது என்ன
விஷயம்னு?” தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா இங்கே போய் படிங்க! – ”அண்டங்காக்கையை வென்ற
பல்லவன்”
நான்,
அப்பா, மற்றும் நண்பர் ஒரு இடத்தில் பொது விஷயங்கள் பேச, அம்மாவும், நண்பரின்
அம்மாவும் தேநீர் தயாரித்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி
நேரம் இடைவிடாத பேச்சு. ஓய்வில்லாத பேச்சு.....
முடிக்கத்தான் மனசில்லை – மைக் கிடைத்த அரசியல்வாதி போல தொடர்ந்த பேச்சு.
ஆனால் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
ஹிந்தியில்
லங்கோட்டியா யார் எனச் சொல்வார்கள் – அதாவது குழந்தைப் பருவ நட்பு. லங்கோட்
என்பதற்கு அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். அந்த வயதில்
தொடர்ந்த நட்பிற்கு கொஞ்சம் பலம் அதிகம் தான் என நினைக்கிறேன். இத்தனை வருடங்கள்
ஆனாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே. வருடங்கள் பல கடந்து, படிப்பு முடித்து அவரவர்
வாழ்க்கையின் ஓட்டத்தில் சிக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் நேரிலே பாக்காது
இருந்தாலும், மனதிற்குள் இந்த நட்பு தொடர்கிறது என்பதை இது போன்ற சந்திப்புகளின்
போது தான் உணர முடிகிறது.
இனிமையான
நினைவுகளோடு பேசிப் பேசிய கழித்த இந்த மூன்றரை மணி நேரமும் இன்னமும் பல நெய்வேலி
நினைவுகளை மீட்டெடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
இனிய
நினைவுகளோடு, இன்னும் சில நாட்கள் இருந்தாலும் தொடர்ந்து பேச விஷயங்கள்
இருந்தாலும், செல்ல வேண்டிய இடம் தூரம் என்பதால் மனதில்லாது வீட்டை விட்டு
கிளம்பினார்கள் நண்பரும் அவரது அம்மாவும்.
இது போன்ற சந்திப்புகள் என்றுமே சந்தோஷ நினைவலைகளை கட்டுக்கடங்காது ஓட வைத்து
விடுகிறது அல்லவா. அவர்கள் சென்ற பிறகும் இந்த பேச்சு எங்களுக்குள்
தொடர்ந்தபடியே......
மீண்டும்
வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.
படங்கள்: கூகிளாண்டவர் இருக்க பயமேன்?






