எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 26, 2012

சம்பள நாள் சந்தை


[மனச்சுரங்கத்திலிருந்து…]


நெய்வேலியில் இருந்த/இருக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த சம்பள நாள் சந்தை என்பது என்னவென்று தெரிந்திருக்கும்.   வட்டம் 18 - ல் மெயின் பஜார் என்று அழைக்கப்படும் இடத்தில் கடைகள் மாதம் முழுவதும் இருந்தாலும், பெரும்பாலான நடுத்தர மக்கள் ஒவ்வொரு மாதமும் ஏதாவது வாங்க வேண்டுமெனில் காத்திருப்பது மாதத்தின் ஐந்தாம் தேதிக்குத் தான். 

சுரங்கம், அனல்மின் நிலையம் போன்றவற்றில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி தான் சம்பளம் கிடைக்கும் என்பதால் ஐந்தாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை இந்த சம்பள நாள் சந்தை நடக்கும்.  முதலாம் அனல்மின் நிலையம் செல்லும் நகர பேருந்துகள் எதிலும் இந்த சம்பள நாள் சந்தைக்குச் செல்ல முடியும்.  எங்களுடைய சிறிய வயதில் அதற்கான கட்டணமும் இப்போது செல்லாத 20 – 25 பைசாக்களில் தான்.  தொலைதூரத்தில் இருந்து வந்தால் கூட ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணம் தான்.

இந்த சம்பள நாள் சந்தையில் துணிவகைகள், அலங்காரப் பொருட்கள், வீட்டிற்குத் தேவையான மரச்சாமான்கள் என்று எல்லாவிதமான பொருட்களும் கிடைக்கும்.  எல்லா மாதமும் கடை போடுவார்கள் என்பதால் சில வியாபாரிகள் தவணை முறையில் கூட பொருட்களை நகர மக்களுக்கு விற்பனை செய்வது உண்டு. 

தீபாவளி வரும் மாதத்தில் இன்னும் நிறைய பொருட்கள் இங்கே கிடைக்கும்.  அந்த மாதத்தில் வழக்கத்தை விட இன்னும் சில நாட்கள் அதிகமாக கடைகள் திறந்திருக்கும்.  நெய்வேலி நிறுவனம் அப்போதெல்லாம் ஊக்கத்தொகையினை தீபாவளி சமயத்தில் கொடுப்பார்கள் என்பதால் இங்கு விற்பனையும் அமோகமாக இருக்கும். 

இந்த சம்பள நாள் சந்தைக்கு சில சமயங்களில் அம்மா எங்களையும் அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் எங்களுக்குக் கொண்டாட்டம் தான்.  அங்கு போய் பெரிதாக ஒன்றும் வாங்கிவிடவில்லை என்றாலும், அங்கு சென்று வருவதே பெரிய விஷயமாகத் தோன்றியது அப்போது.  என்னதான் இப்போது பெரிய பெரிய கடைவீதிகளுக்கும், நிறைய கடைகள் ஒரே இடத்தில் இருக்கும் மால்களுக்குச் சென்று வந்தாலும் அந்த பழைய சந்தோஷம் ஏனோ வருவதில்லை. 

சென்ற முறை அம்மா அங்கு சென்றபோது வழியில் பார்த்த சம்பள நாள் சந்தையில் கடை போடும் ஒரு கடைக்காரர், எங்கள் எல்லோரையும் விசாரித்ததாக நேற்று என் அம்மா போனில் சொல்லி என்னை ஆச்சரியப் பட வைத்தார்.  நாங்கள் நெய்வேலியை விட்டு வந்து இத்தனை வருடங்கள் ஆனாலும், வாடிக்கையாளர்களை இந்த சம்பள நாள் சந்தை கடைக்காரர்கள் மறப்பதில்லை என்பதற்கு இரு ஒரு சாட்சி.  

இப்போதெல்லாம் இந்த கடைகள் எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை.  சென்ற முறை நெய்வேலி சென்றிருந்த  போது கூட ஏனோ அங்கு செல்ல வேண்டும் எனத் தோன்றவில்லை – பழைய நினைவுகளை மறக்கக்கூடாது என்று மனதில் தோன்றிவிட்டது காரணமாக இருக்கலாம்….  மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்றே என்பது தெரிந்திருந்தாலும் சில மாற்றங்களை மனது ஒத்துக் கொள்வதே இல்லை, இல்லையா?

மனச்சுரங்கத்திலிருந்து என்ற தலைப்பில் அவ்வப்போது எனது நெய்வேலி நினைவுகளை எழுதி வருகிறேன்.  சில சமயங்களில் இந்த மனச்சுரங்கத்திலிருந்து பதிவுகளில் நீண்ட இடைவெளி இருந்தால் அதற்கு நினைவுகள் மறந்து போனது என்று அர்த்தமில்லை – நேரம் இல்லாமையே காரணம்.  இருபது வருட நெய்வேலி வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அவ்வப்போது தொடரும்.

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


46 comments:

 1. அங்கு போய் பெரிதாக ஒன்றும் வாங்கிவிடவில்லை என்றாலும், அங்கு சென்று வருவதே பெரிய விஷயமாகத் தோன்றியது அப்போது. என்னதான் இப்போது பெரிய பெரிய கடைவீதிகளுக்கும், நிறைய கடைகள் ஒரே இடத்தில் இருக்கும் மால்களுக்குச் சென்று வந்தாலும் அந்த பழைய சந்தோஷம் ஏனோ வருவதில்லை.

  உண்மைதான்..

  ReplyDelete
 2. மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்றே என்பது தெரிந்திருந்தாலும் சில மாற்றங்களை மனது ஒத்துக் கொள்வதே இல்லை, இல்லையா?

  நாம் ஒருபோதும் மாற விரும்புவது இல்லையோ !!!!!!

  ReplyDelete
 3. \\இப்போது பெரிய பெரிய கடைவீதிகளுக்கும், நிறைய கடைகள் ஒரே இடத்தில் இருக்கும் மால்களுக்குச் சென்று வந்தாலும் அந்த பழைய சந்தோஷம் ஏனோ வருவதில்லை//
  தில்லியில் வாரச்சந்தையில் போய் வாங்காமலே சுத்திவிட்டுவந்தால் நல்லாத்தான் இருக்குது..:) மால் ந்னா தான் வாங்கமுடியாத சோகம் ...

  ReplyDelete
 4. நல்ல நினைவுகள். ஒரு தடவை போய் பார்த்துவிடுங்கள்,

  ReplyDelete
 5. We have such santhais in some part of Chennai also. Pl. continue ur Neyveli experiences

  ReplyDelete
 6. மலரும் நினைவுகள் நண்பரே என்றும்
  மணக்கும் நினைவுகள் அன்பரே!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 7. நினைவுகள் அடிக்கடி மலரட்டும்.

  ReplyDelete
 8. அந்த சந்தையில்தானே வாழைத்தார்களை ஏலத்தில் விட்டு விற்பார்கள்?

  //இந்த சம்பள நாள் சந்தைக்கு சில சமயங்களில் அம்மா எங்களையும் அழைத்துச் செல்வார்.//

  அது அப்போ! அம்மா அப்பாவுக்கு தெரியாமல் நண்பர்களுடன் அந்தச் சந்தைக்கு விசிட் செய்த அனுபவம் உண்டா? அது எப்போ?

  ReplyDelete
 9. நம்ம மனசுக்குத்தான் எவ்வளவு நினைவு சக்தி இருக்கு இல்லியா? எவ்வளவு நாட்கள் வருடங்கள் ஆனால்கூட சில விஷயங்கள் பசுமையாக எப்பவும் நினைவிலேயே வச்சிருக்கே.

  ReplyDelete
 10. // மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்றே என்பது தெரிந்திருந்தாலும் சில மாற்றங்களை மனது ஒத்துக் கொள்வதே இல்லை, இல்லையா? //

  Very true..
  :-)

  ReplyDelete
 11. அழகான நினைவலைகளை எடுத்துச் சொல்லியுள்ள அருமையான பதிவு.

  ReplyDelete
 12. இது போன்ற இனிய,மனதை விட்டு நீங்காத நினைவுகளைப் பகிர்வதும் அதைப் படிப்பதும் சுவாரஸ்யம்தான்!

  ReplyDelete
 13. //மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்றே என்பது தெரிந்திருந்தாலும் சில மாற்றங்களை மனது ஒத்துக் கொள்வதே இல்லை, இல்லையா//
  மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் நமக்கு வயதாகிவிட்டதையும் ஏற்றுக் கொண்டு விட நேரிடும் என்பதனாலேயே ஆழ்மனது இது போனற மாற்றங்களை ஏற்க மறுக்கும் காரணமாக இருக்கலாம்.

  ReplyDelete
 14. பொக்கிஷ நினைவுகள் அல்லவா அவை? பொன்மலையிலும் ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் வரும் மூன்றாம்தேதி சம்பள சந்தை களை கட்டிவிடும். என் பழைய நினைவுகளையும் தூண்டி மகிழவைத்துவிட்டீர்கள். நன்றி வெங்கட்.

  ReplyDelete
 15. உண்மைதான்.என்னதான் இப்பொழுது பெரிய பெரிய மாலகளுக்கு சென்று பார்த்தாலும் வாங்கினாலும் சிறு வயதில் நாம் கடைகளுக்கு சென்ற சந்தோஷம் (ஒன்றும் வாங்கா விட்டாலும்) இப்பொழுது கிடைப்பதில்லை.

  இம்மாதிரி நீண்டா நாட்களுக்குப் பிறகு நம்மை நினைவு வைத்துக் கொண்டு யாரேனும் விசாரிக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி தனிதான்.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 16. என்னதான் இப்போது பெரிய பெரிய கடைவீதிகளுக்கும், நிறைய கடைகள் ஒரே இடத்தில் இருக்கும் மால்களுக்குச் சென்று வந்தாலும் அந்த பழைய சந்தோஷம் ஏனோ வருவதில்லை.

  உண்மைதான். நமது பழைய அனுபவங்களில் மூழ்கி முத்தெடுக்கும் இனிமையின் ருசியே தனி.

  ReplyDelete
 17. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 18. @ முத்துலெட்சுமி: தில்லி வாரச் சந்தையின் விஷயம் வேறு. அது என்னமோ அந்த சம்பள நாள் சந்தையின் சுகம் இதில் கிடைக்கவில்லை....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 19. @ பழனி. கந்தசாமி: போகத்தான் வேண்டும்..... அடுத்தமுறை பார்க்கலாம்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 20. @ மோகன் குமார்: //We have such santhais in some part of Chennai also. // ஓ....

  தொடர்கிறேன் மோகன்.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 22. @ அமைதி அப்பா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நிச்சயம் தொடரும்.....

  ReplyDelete
 23. @ ஈஸ்வரன்: //அந்த சந்தையில்தானே வாழைத்தார்களை ஏலத்தில் விட்டு விற்பார்கள்?//

  இது வேறு சந்தை அண்ணாச்சி... அது ஒரு சுகமான ஏலம். எடு இரண்டு அம்பது.... என்று சொல்லி சரி வேண்டாம் இரண்டரை ரூபாய் எனச் சொல்லும் போது நிறைய கை நீளும்! வார்த்தை விளையாட்டு அது..... :))

  நண்பர்களுடன் சென்ற அனுபவம் - எதுக்கு அண்ணாச்சி அதெல்லாம் இப்போ!

  ReplyDelete
 24. @ லக்ஷ்மி: //நம்ம மனசுக்குத்தான் எவ்வளவு நினைவு சக்தி இருக்கு இல்லியா? எவ்வளவு நாட்கள் வருடங்கள் ஆனால்கூட சில விஷயங்கள் பசுமையாக எப்பவும் நினைவிலேயே வச்சிருக்கே.//

  ஆமாம்மா... சில நினைவுகள் பசுமரத்தாணியாக இருக்கின்றது நெஞ்சிலே...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 25. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

  ReplyDelete
 26. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. @ சென்னைபித்தன்: //இது போன்ற இனிய,மனதை விட்டு நீங்காத நினைவுகளைப் பகிர்வதும் அதைப் படிப்பதும் சுவாரஸ்யம்தான்!//

  உண்மை... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் நமக்கு வயதாகிவிட்டதையும் ஏற்றுக் கொண்டு விட நேரிடும் என்பதனாலேயே ஆழ்மனது இது போனற மாற்றங்களை ஏற்க மறுக்கும் காரணமாக இருக்கலாம்.//

  ஆஹா என்ன யோசனை! :)

  தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சீனு.

  ReplyDelete
 29. @ கீதமஞ்சரி: //பொக்கிஷ நினைவுகள் அல்லவா அவை? பொன்மலையிலும் ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் வரும் மூன்றாம்தேதி சம்பள சந்தை களை கட்டிவிடும். //

  பொன்மலை.... நல்ல இடம். என் அம்மா அவரது சிறு வயதில் அங்கே இருந்திருக்கிறார். நானும் அங்கே வந்திருக்கிறேன் ரயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த என் பெரியப்பாவினைப் பார்ப்பதற்கு.

  தங்களது நினைவுகளையும் தூண்டிவிட எனது பகிர்வு காரணமாக இருந்தது எனக்கும் மகிழ்ச்சி....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 30. @ ராஜி: //இப்பொழுது பெரிய பெரிய மாலகளுக்கு சென்று பார்த்தாலும் வாங்கினாலும் சிறு வயதில் நாம் கடைகளுக்கு சென்ற சந்தோஷம் (ஒன்றும் வாங்கா விட்டாலும்) இப்பொழுது கிடைப்பதில்லை.// நிதர்சனமான உண்மை.

  //இம்மாதிரி நீண்டா நாட்களுக்குப் பிறகு நம்மை நினைவு வைத்துக் கொண்டு யாரேனும் விசாரிக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி தனிதான்.// ஈடில்லாத மகிழ்ச்சி அது..

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி.

  ReplyDelete
 31. @ ரிஷபன்: // நமது பழைய அனுபவங்களில் மூழ்கி முத்தெடுக்கும் இனிமையின் ருசியே தனி.//

  ஆமாம்... இனிமையான நினைவுகள் தரும் சுகமே தனி....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. எளிய‌வ‌ர்க‌ளும் வ‌ச‌திப‌டைத்த‌வ‌ர்க‌ளும் பார‌ப‌ட்ச‌மின்றி வ‌ர‌வைக்கும் ச‌ந்தைக‌ள் ச‌ம்ப‌ள‌ நாள் ச‌ந்தையும், வெவ்வேறு கிழ‌மைக‌ளில் வெவ்வேறு பிளாக்‍‍ க‌ளில் ந‌ட‌க்கும் காய்க‌றி ச‌ந்தைக‌ளும் (செவ்வாய் ச‌ந்தை, ஞாயிறு ச‌ந்தை, வியாழ‌ன் ச‌ந்தை) என்ற‌ வ‌ழ‌க்க‌ம் இன்றும் நெய்வேலியில் தொட‌ர்கிற‌து ச‌கோ... இதுவ‌ன்றி மெயின் ப‌ஜாரும் டெய்லி ப‌ஜாரும் எந்நேர‌மும் ம‌க்க‌ளால் நிர‌ம்பி வ‌ழிந்த‌ப‌டி... வெளியில் கிள‌ம்பும் அனைவ‌ரும் ப‌ண‌மும் பையும் எடுக்காம‌ல் கிள‌ம்ப‌ முடிவ‌தில்லை. ஊழிய‌ர்க‌ள் ச‌ம்ப‌ள‌ தின‌த்தை ந‌ம்பியிருக்கிறார்க‌ள்; வியாபாரிக‌ள் ஊழிய‌ர்க‌ளை:)

  ஈஸ்வ‌ர‌ன் குறிப்பிடும் வாழைத்தார் ஏல‌ம் பெரும்பாலும் காய்க‌றி ச‌ந்தைக‌ளில். 'தானே' புய‌லுக்குப் பின் அதெல்லாம் அரிதாகிவிட்ட‌து.

  ச‌ம்ப‌ள‌ நாள் ச‌ந்தையின் பேர‌ம் பேசி வாங்கும் சுவார‌ஸ்ய‌ம் ப‌ற்றி சொல்ல‌ விட்டு விட்டீர்க‌ளே... (அதுவும் இப்போது அனேக‌ க‌டைக‌ளில் 'ஒரே விலை' அறிவிப்பு வைத்தாச்சு.)

  ReplyDelete
 33. நம் அனுபவங்களைத் திரும்பிப் பார்ப்பது ஒரு தனி சுகம்தான். உங்களின் நெய்வேலி அனுபவங்கள் ரசிக்க வைக்கிறது. தொடருங்கள், தொடர்கிறேன்..!

  ReplyDelete
 34. பெரும்பாலும் நல்ல நினைவுகள் மட்டும் தங்கி அந்த இடங்களின் வசதிக்குறைவுகள் நினைவில் இருப்பதில்லை. We are all kind of frozen in Time!

  ReplyDelete
 35. old memories are always nice

  ReplyDelete
 36. அருமையான அனுபவங்கள்; இம்மாதிரிச் சந்தைகளுக்குச் சென்றதில்லை என்றாலும் மதுரையில் சந்தைப் பேட்டையில் நடக்கும் வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைச் சந்தைக்குப் போனதுண்டு. வட இந்தியாவில் பல ஊர்களில் கிராமங்களில் இம்மாதிரிச் சந்தைகள் இப்போதும் நடக்குமே? பார்த்திருக்கலாம். இங்கே ஐசிஎப் கோச் பாக்டரியில் இப்படி நடந்து சில வருடங்கள் முன்னர் வரை. இப்போதெல்லாம் இல்லை.

  ReplyDelete
 37. @ நிலாமகள்: //(செவ்வாய் ச‌ந்தை, ஞாயிறு ச‌ந்தை, வியாழ‌ன் ச‌ந்தை// ஆஹா... ஒவ்வொரு சந்தையிலும் வரும் வியாபாரிகள் வரும் எல்லோரையும் நினைவில் வைத்திருப்பார்கள்....

  வாழைத் தார் ஏலம் சுகமானதோர் நினைவு... இப்போதெல்லாம் இல்லை எனக் கேட்கும்போது சோகம்....

  அங்கே பேரம் பேசி வாங்கியது எனக்கு அவ்வளவாக நினைவில் இல்லை.

  தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 38. @ கணேஷ்: //நம் அனுபவங்களைத் திரும்பிப் பார்ப்பது ஒரு தனி சுகம்தான். // உண்மை நண்பரே...

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 39. @ பந்து: //பெரும்பாலும் நல்ல நினைவுகள் மட்டும் தங்கி அந்த இடங்களின் வசதிக்குறைவுகள் நினைவில் இருப்பதில்லை. // வசதிக்குறைவை நினைத்து எதற்கு மனதை கவலைப் படுத்திக் கொள்ள வேண்டும்... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 40. @ அருள்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருள்.

  ReplyDelete
 41. @ கீதா சாம்பசிவம்: ஆமாம்... இங்கேயும் சில கிராமங்களில் சிறப்புச் சந்தைகள் நடக்கின்றன - ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் ஒட்டக சந்தை கூட நடக்கும் - ஒரு முறை பார்த்திருக்கிறேன்.....:)))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 42. இனிமையான நினைவுகள்...

  ReplyDelete
 43. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..

  ReplyDelete
 44. நல்ல நினைவுகள்.சம்பள நாள் சந்தை இப்ப தான் கேள்விபடுறேன்.

  ReplyDelete
 45. தொடருங்கள்!

  உங்கள் வட்டார வழக்கிலேயே-
  எழுதுங்கள்!
  ரசிக்கும்படியான-
  தமிழ் அது!

  ReplyDelete
 46. @ சீனி: வருகைக்கு நன்றி நண்பரே... தொடர்ந்து மனச்சுரங்கத்திலிருந்து அவ்வப்போது பகிர்வுகள் வரும்!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....