புதன், 6 பிப்ரவரி, 2013

கோமதியின் காதலன்இந்த முறை தில்லி தமிழ்ச் சங்க நூலகத்தில் புத்தகங்களை திருப்பிக் கொடுத்து விட்டு வேறு புத்தகங்கள் எடுக்க பார்வையிட்ட போது, ஒரு அலமாரியில் தேவன்என்று எழுதி இருந்ததைப் பார்த்தவுடன் துப்பறியும் சாம்பு கண்முன் வந்து போனார். உடனே அதில் இருந்த புத்தகங்களைப் பார்வையிட ஆரம்பித்தேன். முதலில் கையில் எடுத்த புத்தகமே ‘கோமதியின் காதலன்’.  ஆஹா காதல் கதை – சரி படித்து விடவேண்டியது தான் என உடனே எடுத்துக் கொண்டேன்.இரவு 09.00 மணிக்குப் படிக்க ஆரம்பித்த நான் முடிக்கும் வரை கீழே வைக்கவேயில்லை. படித்து முடித்த பின் கதை மாந்தர்களின் நினைவுகளோடே உறங்கினேன். ஆனந்த விகடனில் தொடராக வந்ததாம் இந்த நாவல். நான் படித்த புத்தகம் வெளிவந்த ஆண்டு – முதல் பதிப்பு 1968, இரண்டாம் பதிப்பு – 1970 – அதாவது நான் பிறப்பதற்கு முன் வந்த புத்தகம்! விலை ஒன்றும் அதிகமில்லை நண்பர்களே – 5 ரூபா 25 பைசா மட்டுமே!சின்னவேலி ஜமீன்தாருக்கு இரண்டு மகன்கள் – இதில் இரண்டாவது மகன் தான் நாவலின் கதாநாயகன். தனது அண்ணனோடு சண்டை போட்டுக் கொண்டு சென்னைக்கு வந்து சேருகிறார். வந்த இடத்தில், போர் காலத்தில் எப்படி நடந்து கொள்வது என ஒத்திகையாக  அபாயச் சங்கு முழங்கவே, ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றபோது    கதை நாயகியைப் பார்த்துக் கொண்டே, தனது துணிமணிகள், தினமும் எழுதும் டைரி ஆகியவை இருந்த பெட்டியைத் தொலைத்து விடுகிறார்.

பெட்டி போனால் போகிறது என நினைத்தபடியே கதாநாயகியைப் பின் தொடர்ந்து போக நினைத்தால் கதாநாயகி கோமதியையும் காணோம். சரி என நடக்கும்போது எதிர்பாராது அவரை ஒருவர் தொந்தரவு செய்யும்போது மீண்டும் சந்திக்க நேருகிறது. தொந்தரவிலிருந்து காப்பாற்றி அவரை பின் தொடர நினைக்கும்போதும் அவர் காட்சியிலிருந்து விலகவே, மனதை நொந்தபடி செல்கிறார்.

வழியில் எள் வியாபாரி பிரணதார்த்திஹரன் கார் மக்கர் செய்ய, அவருக்கு உதவி செய்ய அவரையே கார் ஓட்டுனராக வைத்துக்கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றால் நாயகன் ரங்கராஜனுக்கு அதிர்ச்சி – அந்த வீட்டில் இருக்கிறாள் கோமதி – அவரது அப்பா, நண்பரது வீட்டில் சில நாட்கள் தங்க வைத்துச் சென்றிருக்கிறார்.

இங்கே உண்மையான ரங்கராஜன், ராஜாராமன் என்ற பெயரில் இருக்க, பெட்டியைத் திருடிச் சென்ற மணி என்னும் திருடன் ரங்கராஜனாக மாறி கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓட வழி தேடுகிறார்.  நாவலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு மேற்கோள் காட்டி துவங்குகிறது. அதன் மூலமே அந்தப் பகுதியில் என்ன நடக்கப் போகிறது என்பதை கொஞ்சம் யூகிக்க முடிகிறது. உதாரணமாக ஒரு மேற்கோள் – “ஓடிப்போனவனக்கு ஒன்பதாம் இடத்திலே ராஜா; அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்திலே சனி. ஜோதிஷ சாஸ்திரம்.

கதையின் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஏதாவது ஒரு சுவாரசியமான திருப்பம். கதையின் சிறப்பம்சம் அதில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள், எதுகை மோனையாக பேசி பணம் கேட்கும் நபர், பணத்திலே குறியாக இருக்கும் பிரணதார்த்திஹரன், நகை மீது தீராத மோகம் கொண்டிருக்கும் அவரது மனைவி, அவ்வப்போது, அந்தந்த சூழ்நிலைக்குத் தக்க அறிவிப்புகள் செய்யும் கோமதியின் தம்பி பாலு, பாரிஜாதம்எனப் பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்கும் பொன்னாயி, நீதிபதி, போலீஸ்காரர், திருடன் மணிக்கு உதவியாளாக வரும் பக்கிரி என ஒவ்வொருவரும் கதையின் ஓட்டத்திற்கு அவர்களது பங்கினை வழங்குகிறார்கள்.

பலப் பல திருப்பங்களைக் கொண்டு கடைசியாக கோமதியும் அவரது காதலன் ரங்கராஜனும் சேர்ந்தார்களா, திருடர்கள் மணியும், பக்கிரியும் என்ன ஆனார்கள் என்பதை எல்லாம் வெள்ளித்திரையில் காண்க! என்னங்க, புத்தக விமர்சனம்னு நினைச்சா வெள்ளித்திரையில் காண்கன்னு சினிமா மாதிரி சொல்லிட்டீங்களே என நினைப்போருக்கு – ஆமாங்க, இந்தக் கதை சினிமாவாகவும் வந்திருக்கிறது. டி. ராமச்சந்திரன், ஆர். சாவித்திரி ஆகியோரது நடிப்பில் திரு தேவனின் இக்கதை சினிமாகவும் வந்திருக்கிறது.  என்னால் புத்தகம் படிக்க முடியாது, சினிமாவாக பார்க்கிறேன் என்பவர்கள் யூ-ட்யூபில் இங்கே பார்க்கலாம். சினிமாவில் சில பாத்திரங்களின் பெயர்கள் மாற்றப் பட்டிருக்கின்றன.

படித்ததில் பிடித்ததுபகுதியில் மீண்டும் வேறொரு புத்தகத்தினைப் பற்றிய பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 கருத்துகள்:

 1. ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைத்தேன்! :)


   தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 2. நான் தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு மட்டுதான் படித்து இருக்கிறேன், வேறு கதைகள் படிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். எங்கள் ஊரில் புத்தக கண்காட்சியில் தேவன் அவர்களின் நான்கு கதை புத்தகங்கள் வாங்கி வந்தேன். ஒவ்வொன்றிலும் நீங்கள் சொல்வது பாத்திர படைப்புகள் மிக அருமையாக இருக்கிறது.

  கோமதியின் காதலன் கதை விமர்சனம் படிக்க ஆவலை தூண்டுகிறது.
  நூலகத்திற்கு போயே பல வருடங்கள் ஆகி விட்டது , உங்கள் விமர்சனம் படித்தவுடன் நூலகத்திற்கு போய் இந்த கதை புத்தகத்தை எடுத்து வந்து படிக்க ஆசை.

  யூ-ட்யூபில் பார்க்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கேயும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. நேரமும் மனதும் ஒத்துழைத்தால் அனைத்தையும் படிக்க ஆசைதான்... பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 3. சுவாரஸ்யமான புத்தகம் பற்றி
  பாரிஜாதமாய் மணக்கும் வகையில்
  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 4. எல்லாம் ஆன்டிக் சமாச்சாரங்களாகவே மெருகு
  குறையாமல் அழகா இருக்கே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... தொடர்ந்து பழங்கதையாகவே வந்து விட்டதோ....

   அடுத்த ப்திவில் சரி செய்து விடுவோம்!!!!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   நீக்கு
 5. இப்போதெல்லாம் நாவல்கள் படிப்பதே இல்லை.. கல்லூரிக் காலங்களில் தேர்ந்தெடுத்துப் படிப்பேன். நீங்கள் எழுதியுள்ளதைப் பார்க்கும் போது திரும்பவும் படிக்க ஆரம்பிக்கலாமா எனத் தோன்றுகிறது. பார்ப்போம் நேரம் ஒத்துழைத்தால் ... இப்படி கேப்சுயூலாக கொடுக்கும் போது எளிதாகத்தான் இருக்கிறது.. இருந்தாலும் எழுத்தாளரின் முழு அனுபவத்தை அறிய நாவலை படிக்கத்தான் வேண்டும் . பகிர்தலுக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிக்கும் பழக்கம் இப்போதெல்லாம் குறைந்து விட்டது எழில்....

   முன்பெல்லாம் ஒவ்வொரு இரவும் ஏதாவது படிக்காது தூங்குவதில்லை. நடுவில் படிக்கவே இல்லை... இப்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. கோமதியின் காதலன் பார்த்துள்ளேன்... புத்தகம் - இன்று தான் தெரியும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. அறிய நூல்கள் பற்றிய விமர்சனம் மகிழ்வை தருகிறது நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோவை மு சரளா.

   நீக்கு
 8. தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு மட்டும்தான் நான் படித்திருக்கிறேன். சுவாரசியமான புத்தக அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. கோமதியின் காதலன் படம் பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது.
  இந்த பட பாடல் என்று அப்போது தெரியாது, சீர்காழி கோவிந்தராஜன் பாடும் ’நீலவானில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே’ பாடல் அம்மா எழுதி வைத்து இருந்தார்கள்.

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் முழுவதும் பார்த்துவிட்டு மீண்டும் கருத்திட்டமைக்கு நன்றி கோமதிம்மா....

   நேற்று ஒரு சில பாடல்களைத் தேடிக் கேட்டேன்....

   நீக்கு
 10. படிக்கத்தூண்டும் விமர்சனம் பகிர்வுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 11. திரும்பவும் நாவல்களைப் படிக்க வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிங்க அண்ணாச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].

   நீக்கு
 12. துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம் இருக்கிறது, படித்திருக்கிறேன். இதுவும் இருக்கிற நினைவு. யூ டியூப் லின்க்கும் தந்திருப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 13. சுவாரசியமான பகிர்வு. பகிர்வுக்கு நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
 14. கோமதியின் காதலன்' என்றதும் முதலில் நினைவுக்கு வருவது 'வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே..' என்ற இனிய பாடல்தான்! அப்போதே பாராட்டுப் பெற்ற படம். 'தேவனி'ன் கதையா அது? மிகப் பிரபல எழுத்தாளர் அப்போது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார். நேற்று கூகிள் மூலம் தேடி சில பாடல்களைக் கேட்டேன்.... சிறப்பாக இருந்தது பாடல்கள்.

   நீக்கு
 15. சுவாரஸ்யமான நாவலை சுவையான தகவல்களுடன் பதிவிட்டுள்ளீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுரை அழகு.

   நீக்கு
 16. வெங்கட்!தேவனின் ”ஜஸ்டிஸ் ஜகன்னாதன்”படித்திருக்கிறீர்களா?அருமை!புத்தகச் சந்தையில் கிடைக்கவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன்.. மீண்டும் படிக்க வேண்டும்..

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   நீக்கு
 17. மறக்க முடியாத தேவன்! கோமதியின் காதலன் தொடர்கதையைப் பிய்த்து, பைண்ட் செய்து எங்கள் வீட்டில் வைத்திருந்தார்கள். கதை படிக்குமளவு பொறுமையில்லாதபோதும் ஓவியங்களுக்காக எடுத்து அவ்வப்போது புரட்டியதுண்டு. பழைய நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி வெங்கட்ஜீ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... விகடனில் படங்களோடு படித்தீர்களா நீங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை ஜி!

   நீக்கு
 18. உங்கள் பதிவு புத்தகத்தைப் படிக்கத் தூண்டுகிறது.
  youtube ல் பார்க்க வேண்டும் .
  நன்றி பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடியும்போது நாவலைப் படியுங்கள். யூவில் பாருங்கள்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே....

   நீக்கு


 19. தொடராக வந்தபோது படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 20. அழகான விமர்சனம். படத்தைப் பார்த்துட்டு வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 21. இந்தக் கதையை ஆனந்த விகடனில் தொடர் கதையாக வாசித்துள்ளேன். மறந்து விட்டது.
  மீட்டலிற்கு நன்றி. படத்தின் பெயர் என்ன? சினிமாவல் வந்தது என்கிறீர்கள்.
  அது எனக்குத் தெரியாது. மிக்க நன்றி. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படத்தின் பெயரும் ‘கோமதியின் காதலன்’ தான்.....

   லிங்க் கொடுத்திருக்கிறேனே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!.

   நீக்கு
 22. தில்லி தமிழ் சங்கத்தின் நூலகம் (கிளை) முன்பு கரோல்பார்க் (WEA)-இலும் இருந்தது. பிறகு மூடிவிட்டார்கள் என்று நினைவு. இப்பொழுது சங்கத்தைத் தவிர வேறு இடத்தில் கிளைகள் ஏதாவது இருக்கிறதா?

  [ஏற்கனவே மத்தியச் செயலகத்திலிருந்து எடுத்த புத்தகங்கள் எங்களைப் படித்து முடித்து எப்பொழுதுத் திரும்ப கொடுக்கப் போகிறாய் என்று குரல் கொடுக்கின்றன.]

  பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்ச் சங்கம் தவிர வேறு எங்கும் கிளைகள் இல்லை சீனு. ஏராளமான புத்தகங்கள் இங்கே இருக்கின்றன. படிக்கும் ஆர்வம் இருந்தால் தொடர்ந்து படிக்க வாய்ப்பு இருக்கிறது சீனு! நானும் நான்கு புத்தகங்கள் எடுத்து வந்தால் ஒரு மாதம் ஆகிறது படித்து முடிக்க/வேறு புத்தகங்கள் எடுக்க!

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிடா சீனு [வேங்கட ஸ்ரீநிவாசன்]

   நீக்கு
 23. ஆரம்பத்தில் கேள்விப் பட்ட பெயராக இருக்கின்றதே என நினைத்தேன்.

  அறிந்துகொண்டேன் தகவல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 24. அருமையான பகிர்வு. வெள்ளித்திரை இணைப்புக்கும் நன்றி:)!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 25. எனக்கு சினிமாவாகப் பார்ப்பதைவிட
  கதையைப் படிக்கத்தான் பிடிக்கும்.
  அதில் தான் அந்த எழுத்தாளனில் உள்ள உணர்வு
  உண்மையில் பிரதிபலிக்கும்.

  எப்படியாவது தேடி படித்துவிடுகிறேன்.
  தகவலுக்கும் அருமையான விமர்சனத்திற்கும்
  மிக்க நன்றி நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல கதைகள் சினிமாவாக எடுக்கப் படும்போது சொல்ல வந்த விஷயமே மாறிவிடுவதுண்டு. எனக்கும் புத்தகங்கள் படிக்கவே விருப்பம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.

   நீக்கு
 26. உங்கள் பதிவை பார்த்து உடனே லைப்ரரியில் இருந்து அந்த புத்தகம் எடுத்து வந்து படித்தேன்.நான் அவரது லக்ஷ்மி கடாஷம் படித்திருந்தேன், உண்மையாகவே விறு விருப்பாக போனது. "ஹே" என்ற வார்த்தை எனக்கும் வந்துவிடுமோ என்று பயந்து விட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ’ஹே’ நீங்களும் படித்து விட்டீர்களா! :)

   மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கீதா.

   நீக்கு
 27. ;))))) புத்தக விமர்சனம் அருமை. பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....