புதன், 20 டிசம்பர், 2017

டல்ஹவுசியிலிருந்து தரம்ஷாலா – ஓட்டுனரின் வருத்தம் - பயணத்தின் முடிவு



இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 22

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரண்டாம் தலைநகரம் என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


தரம்ஷாலா - எங்கெங்கும் வீடுகள்...

Bபலேய் மாதா மந்திரில் குடிகொண்டிருக்கும் Bபத்ரகாளியை தரிசனம் செய்த பிறகு புறப்பட்டோம். மீண்டும் CHசமேரா அணைக்கட்டு வழியாகவே பயணித்து டல்ஹவுஸி வரை வந்தோம். தரம்ஷாலவிலிருந்து வாகனத்தினை அமர்த்திக் கொண்ட போது, எங்களை டல்ஹவுஸியில் விட்டுவிட்டு வாகனத்தினை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று தான் வாகன ஓட்டுனரிடமும்/வாகனம் தந்த நிறுவனத்திடமும் சொல்லி இருந்தோம். டல்ஹவுஸியிலிருந்தே தலைநகர் தில்லி திரும்புவதாக எங்கள் திட்டம் இருந்தது. ஆனால் தலைநகர் திரும்புவதற்கான பேருந்திற்கு முன்பதிவு செய்திருக்கவில்லை. கஜ்ஜியாரிலிருந்த போது இணையம் வழியாக முன்பதிவு செய்யலாம் என பார்த்தபோது பேருந்துகள் அத்தனை வசதியாக இல்லை – அங்கிருந்து புறப்படும் பேருந்துகள் குறைவு என்பதால் திட்டத்தினை மாற்ற வேண்டியிருந்தது.



பைன் மரக் காட்டுக்குள் தேவாலயம்...

எங்களுக்கு வாகனம் அளித்த சர்தார்ஜியிடம் பேச, அவர் கவலை வேண்டாம், நீங்கள் தரம்ஷாலாவிலிருந்தே வாகனம் முன்பதிவு செய்து கொள்ளலாம் – நானே முன்பதிவு செய்து விடுகிறேன், நீங்கள் கொண்டு சென்ற அதே வண்டியில் தரம்ஷாலா வந்துவிடுங்கள் என்று சொல்ல, ஓட்டுனரிடம் அப்படியே சொல்லி விட்டோம். அதில் அவருக்குக் கொஞ்சம் மனவருத்தம்! ஏன் மனவருத்தம் இருக்க வேண்டும்? என்பதற்கான பதில் அவரிடமிருந்தே கிடைத்தது.  எங்களை டல்ஹவுசியில் இறக்கி விட்ட பிறகு, தரம்ஷாலா வரை காலியாகத் தான் வண்டி போகும் என்பதால், வழியில் பயணிகளை ஏற்றி இறக்கி, அவர்களிடம் வசூலிக்கலாம் என நினைத்திருந்தாராம் – அப்படி வசூலிக்கும் தொகை முழுவதும் அவருக்குச் சேரும் – வாகனம் தந்த சர்தார்ஜிக்குப் போகாது! அப்படி கிடைக்கவிடாமல் நாங்கள் பயணிக்க, அதற்கான கட்டணம் சர்தார்ஜிக்குத் தான் போகும் என்பதால் கொஞ்சம் வருத்தம்!


தேயிலைத் தோட்டம்...

அந்த வருத்தத்திலும் எங்களுக்குக் கொஞ்சம் நன்மை இருந்தது. டல்ஹவுசியிலிருந்து தரம்ஷாலா வந்து சேர குறைவான நேரமே எடுத்துக் கொண்டார். வழியில் திரும்பவும் அதே மாமா – Bபாஞ்சா உணவகத்தில் சாப்பிட்டோம். எங்களைப் பார்த்தவுடன் உணவக உரிமையாளர், புன்னகைத்து, பயணம் எப்படி இருந்தது, எங்கெல்லாம் சுற்றிப் பார்த்தீர்கள் என விசாரித்தார். அவருக்கு பதில் சொன்னபடியே உணவினை சாப்பிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். சீரான வேகத்தில் வாகனத்தினை செலுத்திய ஓட்டுனர் மாலையில் எங்களுக்கு தில்லி திரும்பும் பேருந்து புறப்படுவதற்கு முன்னதாகவே தரம்ஷாலா வரை கொண்டு சேர்த்தார். வாகனத்திற்கான கட்டணத்தினையும் கொடுத்து சில நிமிடங்கள் வரை அங்கேயே காத்திருந்தோம். வாகனம் தந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் – அண்ணன் – தம்பி – சர்தார்ஜிகள்! அவர்களது கடையும் வீடும் ஒரே இடத்தில் இருப்பதால், வீட்டிலிருந்து எங்களுக்குத் தேநீரும் சிற்றுண்டியும் வந்தன.


ஜோத் மலைச்சிகரத்தில்...

ஓட்டுனருக்கும் கணிசமான தொகையை அன்பளிப்பாகத் தர அவருக்கும் திருப்தி. தில்லி திரும்ப எங்களுக்காக முன்பதிவு செய்திருந்த பேருந்து மெக்லாட்கஞ்ச்-லிருந்து வர, ஓட்டுனரே எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வந்து வாகனத்தில் ஏற்றிக் கொடுத்தார். அவருக்கும், வாகனம் தந்த சர்தார்ஜிக்கும் நன்றியைச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம். எப்போது தரம்ஷாலா வந்தாலும் எங்களிடம் வாகனம் எடுத்துக் கொள்ளுங்கள், எங்களது தங்குமிடமும் உண்டு என்பதால் அங்கேயே தங்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் எங்களை அனுப்பி வைக்க தரம்ஷாலாவிலிருந்து தில்லி நோக்கிய பயணத்தினைத் துவங்கினோம். தில்லியிலிருந்து சென்றது போலவே, திரும்பியதும் லக்ஷ்மி ஹாலிடேஸ்-ன் வோல்வோ பேருந்து தான். நல்ல வேகத்தில் வண்டியைச் செலுத்தி, இரவு முழுவதும் நாங்கள் உறங்க, விழித்த போது அதிகாலை – தலைநகர் தில்லியை வந்தடைந்திருந்தது பேருந்து!


இந்தியாவின் மினி ஸ்விஸ் - கஜ்ஜியார்...

தலைநகர் தில்லியின் ISBT வந்து சேர்ந்த பிறகு, அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து நான் வீட்டிற்கும், நண்பர்கள் தலைநகரின் ஜந்தர் மந்தர் பகுதியிலிருக்கும் கேரளா ஹவுஸிற்கும் திரும்பினோம். இந்த பயணத்தில் நாம் பார்த்த இடங்கள் – தரம்ஷாலா, மெக்லாட்கஞ்ச், ஜோத், சம்பா, கஜ்ஜியார், டல்ஹவுஸி மற்றும் அதன் அருகே இருந்த பல இடங்கள்! அனைத்துமே அழகான இடங்கள் தான் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த இடம் என்றால் அது கஜ்ஜியார் தான். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் அங்கே சென்று வாருங்கள்.


CHசமேரா ஏரி...
  
மூன்று நாட்கள் பயணத்தில் நான் பார்த்த இடங்கள், எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் புகைப்படங்களில் சிலவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. இந்தப் பயணத்தில் நான் கண்டவற்றை உங்களோடு பயணக் கட்டுரைகளாக பகிர்ந்து கொண்டது உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  தொடரின் பகுதிகளை நீங்கள் படிக்காமல் விட்டிருக்கலாம். அப்படி விடுபட்ட பகுதிகளை படிக்க நினைத்தால் பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல வலது பக்கம் Drop Down Menu இருக்கிறது. அதில் தொடரின் அனைத்து பகுதிகளுக்குமான சுட்டிகள் இருக்கின்றன. அவற்றைச் சுட்டி நீங்கள் விடுபட்ட பகுதிகளை படிக்க முடியும்.


ஆபத்தான பாதை என்றாலும் பயணம் நல்லது!...
இந்தப் பயணம் சென்ற சில மாதங்களுக்குப் பிறகு தான் கட்டுரையாக எழுதி இருக்கிறேன் என்றாலும் முடிந்த அளவிற்கு எல்லா விஷயங்களையும் தந்திருக்கிறேன்.  இப்பயணக் கட்டுரைகள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். முடிந்தால், விரைவில் இக்கட்டுரைகளையும் தொகுத்து மின்னூலாக வெளியிட முயற்சிக்கிறேன். பயணத்தில் என்னுடன் பயணித்த கேரள நண்பர் பிரமோத் மற்றும் அவரது நண்பர்களுக்கும், எங்கள் பயணத்தில் பல்வேறு உதவிகளைச் செய்த ஓட்டுனர், தங்குமிட உரிமையாளர்கள், சிப்பந்திகள், வாகன நிறுவனத்தின் உரிமையாளர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்பயணக் கட்டுரைத் தொடரில் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 


பனி படர்ந்த சிகரங்களும், ஒரு கிராமத்து மலைப் பாதையும்...
  
பயணம் நமக்கு பல பாடங்களைத் தருகிறது. பல்வேறு புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வழி செய்கிறது. ஆதலினால் தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

26 கருத்துகள்:

  1. மலைச்சிகரவீடு ஸூப்பர்.

    எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் ஒருமுறை பகிர்ந்து கொள்கிறேன். டிராப்டவுன் லிஸ்ட் அல்லது பதிவுகளின் வரிசையில் நாம் படிக்காத பதிவுகள் இருந்தால் அவற்றைத் தனி நிறத்தில் காட்டும். பார்த்த, படித்த பதிவுகள் வேறு நிறத்தில் இருக்கும். அதை வைத்து விடுபட்ட பகுதிகளைக் கண்டுபிடித்து விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் இதை நான் அவதானித்ததே இல்லை இதுவரை:).. இப்போதான் பார்க்கிறேன் பல பதிவுகள் இங்கு நான் படிக்கத் தவறியிருக்கிறேன்ன் ஹா ஹா ஹா... நல்லவேளை நீங்கள் இதைப் பகிர்ந்தது ஸ்ரீராம்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      ட்ராப் டவுன் லிஸ்ட் பற்றி இங்கே சொன்னது நல்ல விஷயம். தெரியாதவர்களுக்கு உதவும்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      ஸ்ரீராம் தந்த குறிப்பு உங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சி. நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. ஒரு குழந்தையை சந்தோஷப்படுத்துவது போல பாராட்டுகிறீர்கள் அதிரா... நன்றி.

      நீக்கு
    5. தட்டிக் கொடுப்பது நம் எல்லோருக்குமே பிடித்திருக்கிறது இல்லையா ஸ்ரீராம். :)

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மலைப்பாதைகள் வியக்க வைக்கின்றன ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      மலைப்பாதைகள் சில இடங்களில் பிரமிக்க வைத்தன சில இடங்களில் பயமுறுத்தின.

      நீக்கு
  3. ஆபத்தான பயணம் என்றாலும் இனிமையான பயணம்..
    அழகான படங்களை தளத்தில் வழங்கியமைக்கு நன்றி..

    வழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபத்து இருக்கும் இடத்தில் இனிமையும் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. வெங்கட்ஜி விட்ட பதிவுகளையும் பார்த்து விட்டேன். அரையாண்டுத் தேர்வுகள் நடப்பதால் பதிவுகள் எனக்கு வந்தாலும் வாசிப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. படங்கள் எல்லாம் மிக அழ்காக இருக்கின்றன. உங்கள் வழியாகப் பல இடங்களையும் பார்த்துவிட்டேன்!! தொடர்கிறோம் வெங்கட்ஜி. மிக்க நன்றி பல இடங்களையும் எங்களுக்குக் காட்டுவதற்கு, அறிமுகப்படுத்துவதற்கு..

    கீதா: வெங்கட்ஜி உங்களுக்குக் கஜ்ஜியார் பிடித்திருக்கா...உங்கள் பதிவிலிருந்து அனைத்துப் பகுதிகளும் பிடித்திருந்தாலும் கஜ்ஜியாரும், சமேராவும் மிகவும் பிடித்துவிட்டது. நாங்கள் பார்க்கவில்லை..இந்த இடங்கள். குறித்துக் கொண்டுவிட்டேன். ஹிமாச்சலில் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாகத்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும். அத்தனை இடங்கள் இருக்கின்றன...மிகவும் ரசித்தேன் ஜி. படங்கள் எல்லாம் அத்தனை அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாது. பகிர்விற்கு மிக்க நன்றிஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்வு நேரத்தில் பதிவுகள் படிப்பதில் சிரமம் தான்.

      கஜ்ஜியாரும் சமேரா ஏரியும் ரொம்பவே பிடித்தன. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு அழகு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  5. உங்களின் அழகிய பயணத்தின் வாயிலாக நாங்களும் இயற்கை அன்னையின் அழகை ரசித்தோம்....

    ரசிக்க கொடுத்தமைக்கு நன்றிகள் பல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  6. மலைப்பாதைகளைப் பார்க்கும்போது உண்மையில் மலைப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப்பாதை - மலைப்பைத் தரும் பாதை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. பயணம்தந்த திருப்தி மகிழ்ச்சி பதிவில் தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் என்றாலே எனக்கு எப்போதும் மகிழ்ச்சி தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  8. பயணம் செய்த இடங்கள் அனைத்தும் அருமை. தேவாலயத்தின் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்ததுமே, தொடரின் இறுதிக்கு வந்துவிட்டது தெரிந்தது. நல்ல இடங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு Recap-ஆக முன்னரே வெளியிட்ட படங்களும் சேர்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. மிக அருமையான இடங்கள்.. இந்தியாவிலயோ இருக்கு இவை எல்லாம் என எண்ண வைக்கின்றன... இவற்றை எல்லாம் பார்க்காமல், எதுக்கு மக்கள் வெளிநாட்டில தான் என்னமோ இருக்கு என சுற்றுலா வருகின்றனரோ??.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவில் இப்படி பல இடங்கள் இருக்கையில் வெளிநாடு - ஒன்றும் சொல்வதிற்கில்லை! நம் ஊரில் இப்படி இடங்கள் இருப்பதை யாரும் சொல்வதுமில்லை, தெரிந்து கொள்ளும் ஆர்வமும் நம்மிடம் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  10. அழகிய பயணத்தை சிறப்புடன் தெளிவான குறிப்புகளுடன் அருமையான புகைப்படங்களுடன் பகிர்ந்துவருவதற்க்கு , படிப்பதர்கு மிகவும் சுவாரசியமாய் கொடுப்பதர்கும் வாழ்த்துக்கள் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  11. மலைப்பாதைகள் செம...
    படமும் பகிர்வு அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப்பாதைகள் உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....