வியாழன், 17 மே, 2018

தென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்
பயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்குப் பிடிக்கும். வலையுலகில் பயணம் பற்றி எழுதுபவர்கள் என்று எடுத்துக் கொண்டால் துளசிதளம் வலைப்பூவில் எழுதும் துளசி டீச்சர் கண்டிப்பாக நினைவுக்கு வருவார். அதே போல், சுபாஷினி ட்ரெம்மல் அவர்களும். முன்பெல்லாம் வலைப்பூவில் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்த இவர் இப்போது எழுதுகிறாரா என்பது தெரியவில்லை. அப்படி வலைபூவில் எழுதிய ஒரு பயணத் தொடர் WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் மின்புத்தகமாகவும் கிடைக்கிறது. மொத்தமே 34 பக்கங்கள் தான், என்பதால் சுலபமாக படித்து முடிக்கலாம்.


இந்தியாவின் சில பகுதிகள் மட்டுமே பயணித்து இருக்கும் எனக்கு, வெளி நாடுகள் பயணிக்க வாய்ப்பில்லை. அதனால் பல நாடுகள் பற்றி படித்தாவது தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடமுடியுமா? சமீபத்தில் தான் இந்த மின்புத்தகத்தினைப் படித்தேன். நான் படித்த மின்புத்தகத்திலிருந்து, சில வரிகள் மட்டும் இங்கே ஒரு முன்னோட்டமாக..... மின்புத்தகத்தினை தரவிறக்கம் செய்து படித்திட உங்களுடைய ஆவலைத் தூண்டுவதற்காக....

கொரியாவிற்கான பயணம், அதுவும் அவர்கள் இனத்து மக்களுடன் பேசும் முதல் உரையாடலே இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டுமா என்று மனதுக்குள்ளேயே நொந்து கொண்டேன். அவளது பேச்சும் குரலும் ஆத்திரத்தை உண்டாக்கி இருந்தது. கொரிய மக்களே இப்படித்தான் அநாகரிமாக நடந்து கொள்வார்களா என்ற கேள்வி மனத்தில் தோன்றி கொஞ்சம் பயத்தையும் உண்டாக்கி விட்டது.

[சில இடங்களில் முதல் அனுபவம் இப்படி இருந்தாலும் மற்ற அனுபவங்கள் நல்லதாகவே அமைவதுண்டு – வெங்கட்].   

தென் கொரியாவின் 70 சதவித நிலப்பரப்பு மலைப்பாங்கானது. அதனால் எல்லா இடங்களிலும் இயற்கை அழகு நிறைந்த மலைகளைக் காண முடிகின்றது. தலைநகரான சியோலிலும் இதே நிலை தான். சியோல் நகரத்திலேயே மலைப்பகுதிகள் ஏராளமாக இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக மலையேற்றம் செல்வதற்கான வசதிகளையெல்லாம் சிறப்பாக செய்து வைத்திருக்கின்றனர்.

[70 சதவீதம் மலைப்பாங்கான பகுதி – வாவ் எப்படி இருந்திருக்கும் அந்த அனுபவம் – வெங்கட்].

உலகின் மிகப்பெரிய Indoor Theme Park சியோலில் தான் இருக்கின்றது. Lotte World Theme Park – மிகப் பிரம்மாண்டமான வகையில் வடிவமைக்கப்பட்ட இடம் இது. பேய் வீட்டிற்குள் சென்று பயங்கரமான அனுபவத்தைப் பெறுவது, சிந்துபாத்தோடு சேர்ந்து கொண்டு புதையல் தேடுவது இப்படி பல விளையாட்டுகள் விளையாடும்போது மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

[இப்படியான விளையாட்டுகள் நம்முள் இருக்கும் குழந்தைமையை வெளிக்கொண்டு வரக்கூடியவை! எனக்கும் இப்படி அனுபவங்கள் பெற ஆசையுண்டு! – வெங்கட்].

உணவுக் கடைகளுக்கும் இங்கே பஞ்சமில்லை. அதிகமாகக் கொரிய வகை உணவுகள் தான் கிடைத்தாலும், மற்ற வகை உணவுகளும் இங்கே கிடைக்கின்றன. சைவ உணவுக்காரர்களுக்கு இங்கே திண்டாட்டம் தான். கொரியர்களுக்குச் சைவ உணவு பற்றிய அவ்வளவான பிரக்ஞை கிடையாது என்றே நினைக்கத் தோன்றுகிறது. எந்த உணவிலும் கடல் உணவு வகைகளை சேர்க்காமல் தயாரிப்பது அவர்களுக்கு முடியாத ஒன்று போல தோன்றுகிறது.


[சைவ உணவு உண்பவர்களுக்கு இது கொஞ்சம் பிரச்சனையான விஷயம் தான் – வட கிழக்கு மாநிலங்களில் கொஞ்சம் கஷ்டப்பட்டது உண்டு! – வெங்கட்].

வர்த்தக மையத்தில் பல மூலைகளில் பொது தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த தொலைபேசிகளுடனேயே சேர்ந்தார் போல இணைய வசதி அமைந்த கணினியும் இருக்கின்றது. பொது மக்கள் இந்த சேவையை எந்தக் கட்டணமுமில்லாமல் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

[நம் ஊராக இருந்தால் தொலைபேசியை களவாண்டிருப்பார்கள் – வெங்கட்].

ஒரு கொரிய பெயர் எப்போதும் குடும்பப் பெயருடன் தான் தொடங்கும். திருமணமான பிறகும் பெண்கள் தங்கள் குடும்பப் பெயரை மாற்றிக் கொள்வதில்லை. அவர்கள் தங்களுடைய குடும்பப் பெயரையே வைத்திருக்கின்றனர். ஆனால் பிறக்கின்ற குழந்தைகளுக்குத் தந்தையின் குடும்பப் பெயரையே முதற்பெயராக வைக்கின்றனர்.

[பெண்கள் தங்கள் குடும்பப் பெயரை திருமனத்திற்குப் பிறகும் தொடர்வது நல்ல விஷயம் – வெங்கட்].

குளிர் காலங்களில் எல்லா விதமான காய்கறிகளும் பயிரிடப்படுவது கிடையாது. தென் கொரியாவில் குளிர் -12 டிகிரி வரை செல்வதால் காய்கறி பயிரிடப்படும் இடங்களெல்லாம் பணியில் உறைந்து விடும். அதனால் தென்கொரியாவில் கோடை அல்லது இலையுதிர் காலங்களிலேயே காய்கறிகளை பதனிடும் வேலையைத் தொடங்கி விடுகின்றார்கள். காய்கறிகளை மாத்திரம் அல்ல, மீன், பல வகை கடல் வாழ் உணவு வகைகள், இறைச்சி போன்றவற்றையும் இப்படி செய்து வைத்து விடுகிறார்கள். உப்புக்கண்டம் போடுவது என்று சொல்வார்களே, அப்படித்தான். இதனை கோரிய மொழியில் Gimjang என்று அழைக்கின்றார்கள்.

[பனியில் உறையும் நிலம் – எவ்வளவு கஷ்டம் – வெங்கட்].

ஒரு கொரியருக்கு முக்கியமாக மதிய, இரவு உணவுகளில் கிம்ச்சி இல்லாமல் சாப்பிடுவது என்பதுநினைத்தும் கூட பார்க்க முடியாத விஷயம்.

[கிம்ச்சி – புதியதொரு உணவு – எப்படி இருக்குமோ?  – வெங்கட்].

தென் கொரியாவின் சியோல் மற்றும் ஜேஜு தீவுகளில் சில நாட்கள் இருந்த பொது தனக்குக் கிடைத்த அனுபவங்களை சுருங்கச் சொல்லி இருக்கிறார் சுபாஷினி. சில புதிய விஷயங்களை இந்த மின் புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. நீங்களும் புத்தகத்தினைத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

மீண்டும் வேறு ஒரு புத்தக வாசிப்பனுபவத்துடன் மீண்டும் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து......


26 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். பயணம் பற்றிய புத்தகங்களை விரும்பி வாசிப்பீர்கள் என்பதில் ஆச்சர்யமில்லை. பழைய பயனாக கட்டுரைகள் வாசித்திருக்கிறீர்களோ? மணியன், பரணீதரன் ஆகியோர் எழுதியது? அப்புறம் பிலோ இருதயநாத்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம். பயணக் கட்டுரை ஆசிரியர்களில் மணியன் அவர்களுடையது நிறைய படித்திருக்கிறேன். பரணீதரனும். ஆனால் ஃபிலோ இருதயநாத் படித்ததில்லை. நூலகத்தில்/இணையத்தில் தேட வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. லிங்க் க்ளிக் செய்ததும் இங்கேயே திறந்து விட்டது. நீங்கள் சொல்லி இருக்கும் புத்தகத்தைத் தேடவேண்டும். பிறகுதான் பார்க்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. நூலின் தகவல்கள் எல்லாமே சொல்லி விட்டதுபோல் இருக்கிறது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. கொரியாவைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுவித்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. கொரியப் பயணம்... சுவையாத்தான் இருக்கும் (சைவர்களுக்கு அல்ல).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. பயணக் கட்டுரை நன்றாக் ஐருக்கிறது.
  இடை இடையே உங்கள் கருத்தும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 8. இதைப் படிக்கும் போது வரும் நினவைத் தடுக்க முடியவில்லை நீலகிரியில்நாங்கள் வெல்லிங்டனில் வசித்தோம் வீட்டைச்சுற்றி நிறைய இடம் அங்கு உருளை காபேஜ் போன்றவை படகர்களுக்கு குத்தகைக்கு விட்டு பயிரிடுவோம் சிலநாட்களில் பனி பெய்து தரையே வெள்ளையாகக்காண்பிக்கும் அதை படகர்கள் கண்டப்பனி என்பார்கள் அது பெய்தால் பயிர்கள்நெருப்பில் இட்டதுபோல்கரிந்து வாடிவிடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. கண்டப்பனி - கேட்டதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 9. புதிய விஷயங்களத் தெரிந்து கொள்ள முடிந்தது...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 10. புதிய அறிமுகம் ஜி! ஸ்வாரஸ்யமாக இருகக்கும் போல் இருக்கிறது. பகிர்விற்கு மிக்க நன்றி

  கீதா: ஆஹா! பயணம் என்றாலே எனக்கு அலுக்காத ஒன்று. பல பயணங்கள் என்னிடம் அப்போது புகைப்படம் எடுக்க முடியாததால் எழுத இயலவில்லை.

  வெங்கட்ஜி நானும் பயணக் கட்டுரைகள் என்றால் வாசித்துவிடுவேன். மணியன், பரணீதரன்...ஒரு சில வாசித்திருக்கிறேன். ஆனால் முழுவதும் அல்ல தொடராக வரும் போது யார் வீட்டிற்கேனும் போகும் போது...அது போலத்தான் சமீபத்தில் ப்ரியா கல்யாணராமனின் சில பகுதிகள்...

  திருச்சியைச் சேர்ந்த ட்ரெக்கெர்ஸ் க்ளப் நிறைய அரேன் செய்கிறார்கல் பயிற்சியும் கொடுக்கிறார்கல் என்று வாசித்த நினைவு.

  தென் கொரியா மலைப்பாங்கான ஊர் ஆம். சாப்பாடு ஒன்றுதான் பிரச்சனை. விமான நிலையமே மலையை ஒட்டித்தான் மிக மிக அழகாக ரம்மியமாக இருக்கும். இதுவும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்கணும் என்று நினைப்பதுண்டு. ஆனால் எங்கு இங்கிருக்கும் பல ஊர்களுக்கே செல்ல முடியவில்லை இப்போது.

  உங்கள் கருத்து ப்ராக்கட்ட்டில் நன்றாக இருக்கிறது. புத்தகம் தரமிறக்கி வாசித்துவிடுகிறேன் ஜி பகிர்விற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   திருச்சியைச் சேர்ந்த ட்ரெக்கர்ஸ் க்ளப் - அவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் உதவியாக இருக்கும்.

   நீக்கு
 11. வாழ்த்துகள் சுபா மா. பயணம் இனித்திருக்கும். அறிமுகத்துகு மிக நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 12. தென் கொரியா குறித்துத் தெரிந்து கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இருந்தது நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 13. சுபா மின் தமிழ் குழுமத்தின் நிறுவனர். எப்போதும் சுறுசுறுப்பு. இவர் பற்றி முன்னர் வலைச்சரத்தில் கூடப் பகிர்ந்திருக்கேன். நெருங்கிய தோழி சுமார் பத்து வருடங்களாக. நேரில் பல முறை சந்தித்துள்ளேன். இப்போத் திருச்சி வந்ததும் சந்திக்க முடியவில்லை. எனினும் அவ்வப்போது தொடர்பில் இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....