சனி, 22 ஜூன், 2019

காஃபி வித் கிட்டு – மெஹந்தி – பேயுடன் நேர்காணல் – குருக்ஷேத்திரா - கோடை



காஃபி வித் கிட்டு – பகுதி – 35

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் இந்த வேளையில் நல்லதொரு செய்தி சொல்லும் படத்துடன் இந்தப் பதிவினை ஆரம்பிக்கலாம்!
 

வட இந்திய கல்யாண நிகழ்வுகள் - மெஹந்தி:



வட இந்திய திருமணங்களில் கணேஷ் பூஜா, ஹல்தி, மெஹந்தி, சிந்தூர், பராத், அங்குட்டி கேலா, விதாய் என பல விஷயங்கள் உண்டு. அந்த நிகழ்வுகள் அனைத்தையும் பெண்ணின் கைகளில் மருதாணி கொண்டு அழகாக வரைந்திருக்கிறார்கள். பாருங்களேன்.

படித்ததில் பிடித்தது – பேயோடு ஒரு பேட்டி:  


சில நாட்கள் முன்னர் மருதன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது – தமிழ் இந்து நாளிதழின் இணைய தளத்தில் இந்த கட்டுரையைப் படித்தேன். மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது அந்தக் கட்டுரை – பேய்களுக்கு தான் எவ்வளவு கஷ்டம்! கீழுள்ள சுட்டியைச் சொடுக்கி, படித்துப் பாருங்களேன்!


ரசித்த காணொளி: முத்தச்சிகளின் அன்பு

என்ன ஒரு வாத்ஸல்யம் இந்த முத்தச்சிகள் இருவருக்கும்! பாருங்களேன்.


சமீபத்திய ஒரு நாள் பயணம்:


குருக்ஷேத்திரத்தில் திருப்பதி பாலாஜி கோவில்... 


குருக்ஷேத்திரம் - ப்ரஹ்ம சரோவர்.... 

சென்ற சனிக்கிழமை அன்று ஒரு நாள் பயணமாக, எங்கள் பகுதி நண்பர்களுடன் குருக்ஷேத்திரா சென்று வந்தோம். திருமலா திருப்பதி தேவஸ்தானம் குருக்ஷேத்திரா நகரில் அருமையான வெங்கடாஜலபதி கோவிலை அமைத்திருக்கிறார்கள். அங்கே இந்த ஆண்டு முதலாம் பிரஹ்மோத்ஸவம் என்பதால் இந்தப் பயணம். கோவில் மிகப் பிரமாதமாக கட்டி இருக்கிறார்கள். நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு, கீதோபதேசம் நடந்த இடம், அம்புப் படுக்கையில் பீஷ்மர் உயிர்விடக் காத்திருந்த நர்காதாரி என்ற இடம், கிருஷ்ணர் ஸ்தாபித்த ஸ்தானேஷ்வர், சக்தி பீடங்களில் ஒன்றான பத்ரகாளி கோவில் போன்ற இடங்களுக்கும் சென்று வந்தோம். ஏற்கனவே பார்த்த இடங்கள் என்றாலும், பிரம்ஹோத்ஸவத்தில் கலந்து கொண்டதோடு இந்தப் புனிதத் தலங்களுக்கும் மீண்டும் சென்று வந்ததில் மகிழ்ச்சி.     கடுமையான கோடை என்றாலும் பிரம்ஹ சரோவரில் நீண்ட நேர குளியல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி தந்தது. படங்கள் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

இதே ஜூன் மாதத்தில் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு பதிவு – சர்வேஷ்வர் மஹாதேவ் [ரத்த பூமி-பகுதி 3] – பிரம்ஹ சரோவர் குருக்ஷேத்திரா சென்ற போது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஒரு பயணத் தொடர்.  படிக்காதவர்கள் படித்து ரசிக்கலாமே!

இந்த வாரத்தின் புகைப்படம்:


குருக்ஷேத்திரத்தில் எருமைக் குளியல்... 

என்ன அருமையான குளியல்! அடிக்கும் வெயிலுக்கு இப்படி ஏதாவது ஒரு நீர்நிலையில் நாள் முழுவதும் இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் இல்லையா! நான் கூட இந்த எருமை போல சில மணித்துளிகள் பிரம்ஹ சரோவரில் கிடந்தேன்! அம்மா என் சிறு வயதில் திட்டும் வார்த்தையான “தில்லி எருமை” ஏனோ நினைவுக்கு வந்தது! ஹாஹா…

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

46 கருத்துகள்:

  1. தில்லி எருமை. உருவத்திற்க்கும் அடைமொழிக்கும் சம்பந்தம் இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் ஐயா.

      உருவத்திற்கான பெயர் அல்ல! அது சோம்பேறித்தனத்திற்கானது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. எருமைக்குளியல் அருமை ஜி
    முத்தச்சிகளை இரசித்தேன் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எருமைக் குளியல் - ஹாஹா.... இங்கே அடிக்கும் வெயிலுக்கு அப்படியே குளத்திற்குள் கிடந்து விடலாம் எனத் தோன்றுகிறது கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அடடா! இந்தப் பேய் அந்தப் பேய்தானா? வேறே பேயா? இதைப் பார்த்துட்டுத் தான் அந்தப் பேய் தனக்குத் துணை கிடைச்சதுனு போயிடுத்து போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் கீதாம்மா...

      அந்தப் பேயும் இந்தப் பேயும் வேறு வேறு தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மிச்சத்தையும் பேயோடு சேர்ந்து படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... பேயுடன் சேர்ந்து படிச்சாச்சா கீதாம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பேய்க்குக் கூட சமூக நீதி, உணர்வு எல்லாம் இருக்கு. வருங்காலத்தைக் குறித்த கவலை இருக்கு! மனிதர்களாகிய நாம் பேயைப் பார்த்தாவது அதிலும் இந்தக் குட்டிப் பேயைப் பார்த்தாவது திருந்தணும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய்க்குக் கூட சமூக நீதி, உணர்வு எல்லாம் இருக்கு! அதே தான். மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. முத்தச்சிகளின் அன்பு வாட்ஸப், வாடாத ஆப்னு எல்லாத்திலேயும் கண்டு கொண்டே இருக்கிறேன். குருக்ஷேத்திரத்தில் இந்தக் கோயில் வந்திருப்பது இப்போத் தான் தெரியும். இன்னொரு முறை பார்க்கக் கிடைக்குமா தெரியலை! பிரம்ம சரோவரில் தண்ணீர் நிறைந்திருப்பதைப் பார்க்கையில் நம்ம ஊர்னா மக்கள் எவ்வளவு பாழாக்கி இருப்பாங்கனு நினைக்காமல் இருக்க முடியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தச்சிகளின் அன்பு - முகநூல் முதல் எல்லா இடங்களிலும் சமீப நாட்களில் வந்து கொண்டே இருந்தது.

      பிரம்ம சரோவர் - எப்போதுமே - கடும் கோடையிலும் கூட இங்கே தண்ணீர் இருந்து கொண்டே தான் இருக்கும். தண்ணீர் இல்லாமல் பார்த்ததே இல்லை. நம் ஊர் பற்றி என்ன சொல்ல! வருத்தம் தான் மிஞ்சுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சாதாரண நம்ம நாட்டு எருமைகளை விட தில்லி எருமைகள் எனச் சொல்லப்படும்/அழைக்கப்படும் வடநாட்டு எருமைகள் உருவம், பருமன், பால் கறக்கும் திறன் எல்லாத்திலேயும் அதிகம் இல்லையோ? அதுக்காகத் தான் சொல்லுவாங்களோனு நான் நினைச்சேன். சோம்பேறித் தனம் எல்லா எருமைகளுக்குமே பொதுவானது தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை கீதாம்மா... இங்கே இருக்கும் எருமைகள் அளவிலும் பெரியவை. அவை கொடுக்கும் பாலும் அளவு அதிகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பாலின் ருசினு பார்த்தால் உயரமான பருத்த கருத்த தில்லி எருமைகளை விட கொஞ்சம் குட்டையாகவும் நிறத்தில் வெளுத்தும் காணப்படும் மடி சிறுத்த நம் நாட்டு எருமைகளின் பால் ருசி அதிகம். வெண்ணெயும் நிறைய வரும்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே கிடைக்கும் பால் பெரும்பாலும் எருமைப் பால் தான். எனக்கென்னமோ நம் ஊர் பாலை விட இங்கே கிடைக்கும் பால் தான் பிடித்திருக்கிறது! தமிழகத்தில் இருந்ததை விட நான் அதிக வருடங்கள் இங்கேயே இருந்து விட்டதால் இருக்கலாம் கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இடைவெளி விட்டு ஒரு பதிவு...

    தொடர்ந்து பதிவெழுதுங்கள் வெங்கட். வாழ்க்கை தரும் இரண்டாவது வாய்ப்புப்படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். மீண்டும் இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. தொடர்ந்து எழுத வேண்டும்.... பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அப்பாடா...இரண்டு கைகளில்தான் எவ்வளவு ஓவியங்கள்.. அசாத்தியத் திறமை.

    பேயின் பேட்டி படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை எத்தனை திறமைசாலிகள் இங்கே.... மெஹந்தி ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. ரசித்த காணொளி ஃபேஸ்புக்கில் நானும் பார்த்தேன்.. குருக்ஷேத்திரம் சென்று வந்தீர்களா? புகைப்படம் நன்றாய் இருக்கிறது. பழைய பதிவைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருக்ஷேத்திரா ஒரு நாள் பயணம் - காலை புறப்பட்டு, நள்ளிரவு வீடு திரும்பினோம். நண்பர்கள் குழாவுடன் பயணம் ஸ்ரீராம். பழைய பதிவும் படித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இடைவெளியுடன் வந்த காஃபி என்றாலும் அந்த சுவை மாறவேயில்லை.

    இரண்டாவது சான்ஸை தவறவிட கூடாதென்று அறிவுறுத்தும் படம் அருமை.

    மெஹந்தி கைகள் கலை வண்ணங்களின் தொகுப்பு. வரைந்தவரின் பொறுமைக்கும் திறமைக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    பேயுடன் பேட்டி மிகவும் அருமை. அந்த பேய்களுக்கு இருக்கும் உதார குணங்கள், பக்குவங்கள் மனிதர்களுக்கு வரவே வராது எனத் தோன்றுகிறது.

    குருஷேத்ரா படங்கள் அழகு. அடிக்கும் வெய்யிலுக்கு எருமைக்குளியல் பொறாமையை உண்டாக்குகிறது. பதிவு மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு பகுதியையும் ரசித்து உங்கள் கருத்து சொன்னதில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கை ஓவியங்கள் பிரமாதம்.பேய் பேட்டி ரசிக்கும்படி மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் வைத்தது.குருக்ஷேத்ரா படங்கள் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய் பேட்டி உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. முத்தச்சிகளின் அன்பு காணொளி அருமை.
    கையில் மருதாணி ஓவியம் அழகு.
    பேய் சொல்லும் நீதி அருமை.
    குருஷேத்ராவில் நாங்கள் போன போது இல்லையே இப்போது புதிதாக் கட்டி இருக்கிறார்கள் போலும்!
    வெயிலின் கொடுமையை போக்க குளியல் போடும் எருமைகள் கொடுத்து வைத்த எருமை என்று சொல்ல வேண்டும். இங்கு உள்ள எருமைகள் குளிக்க குட்டை இல்லை.

    குருக்ஷேத்திரம் - ப்ரஹ்ம சரோவர்.... இவைகளை குடும்பத்துடன் தரிசனம் செய்த மகிழ்ச்சியான காலங்கள் வந்து போகுது மனகண்ணில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமலா திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் தான் இந்த கோவிலை குருக்ஷேத்திரத்தில் அமைத்தார்கள். பெரிய கோவிலாக அமைந்திருக்கிறது. பிரம்ம சரோவர் அருகிலேயே இருக்கிறது கோவில் கோமதிம்மா.

      பழைய நினைவுகள் - ம்ம்ம்... என்ன சொல்ல! நினைவுகள் நீங்குவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. இனிய பதிவு.. அழகிய படங்கள்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. குருஷேத்திராவில் ஒரு பாலாஜி கோயில். இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் தான் இக்கோவில் கட்டப்பட்டது முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. எருமைக் குளியல்
    கையில் மருதாணி அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  18. /வட இந்திய திருமணங்களில் கணேஷ் பூஜா, ஹல்தி, மெஹந்தி, சிந்தூர், பராத், அங்குட்டி கேலா, விதாய் என பல விஷயங்கள் உண்டு. அந்த நிகழ்வுகள் அனைத்தையும் பெண்ணின் கைகளில் மருதாணி கொண்டு அழகாக வரைந்திருக்கிறார்கள். பாருங்களேன்.நல்ல ரசனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  19. அன்பு வெங்கட்,
    வெய்யில் எல்லோரையும் சுருட்டிப் போடும் இன்னாட்களில்
    அழகான பதிவுடன் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    பேய் பேட்டி சூப்பர்.
    தில்லி எருமை ஏன் இவ்வளவு திட்டு வாங்குகிறதோ.
    அசைய மாட்டெங்கிறியே தில்லி எருமையாட்டம் என்பது மாமியார் சொல்லும் வார்த்தைகள்.ஹாஹா.

    தில்லி பால் ரொம்பப் பிரசித்தம்.எங்கள் மாமி அனைத்து வருட
    விடுமுறைகளுக்கும் ஒரு பெரிய சம்புடம் நிறைய பால்கோவா
    கொண்டுவருவார்கள்.

    குருக்ஷேத்திரம் கோவில் அனைத்தும் அருமை.
    நீங்கள் போய் வந்ததும் நன்று.
    என் தோழி ஒரு மலையாளப் பெண் அவள் முத்தஸ்ஸி என்று சொல்வாள்.
    மீண்டும் படித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தஸ்ஸி - ஹாஹா.... நெய்வேலியில் எங்களுக்கு அடுத்த வீட்டில் மலையாளிகள் தான். பல வருட பந்தம். இன்றைக்கும் அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு உண்டு. அங்கே அவர்கள் வீட்டுக்கு வரும் முத்தச்சி தான் எங்களுக்குத் தெரிந்த முதல் முத்தச்சி! சிறுவர்களாக இருந்த எங்களை அழைத்து பாசத்துடன் கலந்த தின்பண்டங்கள் தருவார்.

      தில்லி எருமை ஏன் இவ்வளவு திட்டு வாங்குகிறதோ? ஹாஹா.... தில்லி எருமையாட்டம் அசைய மாட்டேங்கிறியே! ஹாஹா. அதே தான் வல்லிம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. குருஷேத்திர பயணம் அருமையான பயணம். கைப்பிடித்து அழைத்து சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இப்பயணத்தில் உடன் வந்ததில் மகிழ்ச்சி பத்மநாபன் அண்ணாச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  21. வாழ்க்கை தரும் இரண்டாவது வாய்ப்பு படம் அருமை.

    முத்தச்சிகளின் அன்பு மெய்சிலிர்க்க வைத்தது. மனம் நிறைந்து.

    அனைத்தும் அருமை வெங்கட்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  22. முதல் படம் வாசகம் வாழ்க்கை தரும் இரண்டாவது வாய்ப்பு இதைத்தான் செகன்ட் இன்னிங்க்ஸ்னு சொல்லறாகங்க போல எல்லாத்துக்கும் பொருந்தும் இல்லையா. ஜி. வாய்ப்பை நழுவவிடக் கூடாதுதான்...இதை வேறு வகையிலும் கூடச் சொல்லுவாங்களே இறைவன் நமக்கு வாய்ப்புகள், தீர்வுகள் சாய்ஸஸ் எல்லாம் காட்டுவார் நாம் தான் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு எடுத்துக் கொள்ளத் தவறுகிறோம் நம் புத்திக்கண் சரியாக இல்லை என்றால் என்று...

    மெஹந்தி பார்ட்டி இப்போது இங்கும் நம் ஊர்க் கல்யாணங்களிலும் புகுந்துவிட்டது. அதைச் செய்பவர்களுக்கு நல்ல ஒரு தொழில் தான். பாவம் அவர்களும் பிழைக்க வேண்டாமா..

    முத்தச்சிகள் செம க்யூட். மிகவும் ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செகண்ட் இன்னிங்க்ஸ்! சரியாகச் சொன்னீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது பலருக்கும் சாத்தியப்படுவதில்லை கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  23. பேயோடு பேட்டி செம ஸ்வாரஸ்யம். அருமையான பேய்!! என்ன ஒரு சமூக விழிப்புணர்வு!! பேய்களுக்கு இருப்பது கூட இந்த மனிதர்களுக்கு இல்லையே...

    ஆஹா குருஷேத்திரம் ப்ரம்மசரோவர் அழகு. அங்கு நீர் எப்போதும் இருக்கும் என்றும் கேள்விப்பட்டதுண்டு. படங்கள் அழகு. அங்கும் திருப்பதி கோயில்!! எல்லாமே சூப்பர்ஜி

    பழைய பதிவு பார்க்கிறேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய் உடனான பேட்டி - உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. நல்ல கற்பனை இது இல்லையா கீதாஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....