சனி, 28 செப்டம்பர், 2019

காஃபி வித் கிட்டு – பேனர் – கனவுக் கன்னி – ஆமை வாழ்வு - ஏலம்




காஃபி வித் கிட்டு – பகுதி – 47

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

பேசித் தீருங்கள்; பேசியே வளர்க்காதீர்கள். நடப்பதை பாருங்கள்; நடந்ததை கிளறாதீர்கள். உரியவர்களிடம் சொல்லுங்கள்; ஊரெல்லாம் சொல்லாதீர்கள். உறுதி காட்டுங்கள்; பிடிவாதம் பிடிக்காதீர்கள். விவரங்கள் சொல்லுங்கள்; வீண்வார்த்தை சொல்லாதீர்கள். தீர்வை விரும்புங்கள்; தர்க்கம் விரும்பாதீர்கள். – புத்தர்.

இந்த வாரத்தின் செய்தி – பேனர்/போஸ்டர் மோகம்:

பேனர்/போஸ்டர்/கட் அவுட் ஆகியவற்றை அரசியல்வியாதிகளுக்கும், நடிகர்களுக்கும் வைப்பது நம் ஊரில் அதிகரித்துக் கொண்டே போகிறது. என்னதான் அப்படி ஒரு மோகமோ இவை மீது. நடிகர்களுக்கு 100 அடி கட் அவுட் வைத்து அதற்கு பால் அபிஷேகம், பூ மாரி பொழிதல் என ஒரு பக்கம். சில நொடிகள் அந்த ஊர் வழியே செல்லப் போகும் அரசியல் கட்சித் தலைவருக்கு வழியெங்கும் கொடிகள், போஸ்டர்கள், வருக வருக என அழைக்கும் வளைவுகள் என அமர்க்களப்படுத்தும் அடிப்பொடிகள்! என்றைக்கு மாறும் இந்த மோகம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.  ஒரு விஷயம் இங்கே சொல்ல வேண்டும். நம் ஊர் மக்கள் இப்படி மோகம் கொண்டு அலைவதைப் பார்த்த அதே சமயத்தில் இங்கே இருக்கும் மக்கள் – குறிப்பாக தில்லி மக்கள் இப்படி சினிமா போஸ்டர்கள் கட் அவுட்கள் என எந்த நடிகருக்கும் சாலைகளில் வைப்பதில்லை! தியேட்டர் அருகே கூட ஒன்றிரண்டு போஸ்டர்கள் இருக்காது – தியேட்டர் சுவரில் அன்றைக்கு என்ன படம் என்பதை டிஜிட்டல் போஸ்டர்களாக திரைகளில் பார்க்க முடியும் அவ்வளவு தான்.

அரசியல் கட்சிகளின் பேனர்கள், வாழ்த்துகள் ஆகியவை கூட வைத்தாலும் மக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் இருக்காது. அப்படி வைக்கப்படும் பதாகைகளை நகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஊர் முழுவதும் வைக்கப்படுவது இல்லை. நம் ஊருக்கு வரும்போது பார்த்தால், வாழ்வு, சாவு என எதற்கும் ஃப்ளெக்ஸ் பேனர்கள், பெரிய பெரிய போஸ்டர்கள், கட் அவுட்கள் என அமர்க்களம். அதுவும் அதை வைப்பவர்கள் ஏனோ தானோ என்று வைத்துவிட, கீழே விழுந்து விபத்துகள். கட் அவுட் மீது ஏறி பால் அபிஷேகம் செய்கிறேன் பேர்வழி என கீழே விழுந்து எலும்பை முறித்துக் கொண்டவர்களும் உயிர் விட்டவர்களும் நம் ஊரில் மட்டுமே! சுபஸ்ரீ மரணத்திற்குப் பிறகு பெரும்பாலான சினிமா நடிகர்களும், அரசியல் கட்சிகளும் பேனர் வைக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் – இது எத்தனை மணி நேரம் நிலைத்திருக்கும் என்பதை பார்க்கத் தானே போகிறோம். எத்தனை எத்தனை சுபஸ்ரீக்கள் செத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை.  ஏனிந்த மோகமோ?

இந்த வாரத்தின் விளம்பரம்:

ஒரு ஹோம் மேக்கராக இருப்பது சுலபமல்ல! வேலைக்குப் போகாதவர்கள், நாள் முழுவதும் சும்மாவே இருப்பதாகச் சொல்வது எவ்வளவு தவறு என்பதைச் சொல்லும் ஒரு விளம்பரம் – பாருங்களேன்…



படித்ததில் பிடித்தது – கவிதை:

யார் எழுதிய கவிதை என்பது தெரியவில்லை. ஆனால் படித்ததும் பிடித்தது.  எழுதியவருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். படித்துப் பாருங்களேன்…

பிரசவ அறை வாசலில்
"பெண் குழந்தை"
என்றதும்
அதுவரை
என் கண்ணில் இருந்த
ஈரம் ஏனோ
மெதுவாய் இதயத்தில்
இறங்கியது...

அவள்
கொலுசொலியிலும்
புன்னகையிலும்
வரும் இசை போல
இதுவரை எந்த
இசையமைப்பாளரும்
இசை அமைத்ததில்லை...

வீட்டில்
அதுவரை இருந்த
என் அதிகாரம்
குறைந்து போனது
அவள் பேச
ஆரம்பித்த பிறகு...

"அப்பாவுக்கு முத்தம்"
என நான் கெஞ்சும்
தோரணையில்
கேட்டால்
ஒரு முத்தம் கொடுத்துவிட்டு
ஏதோ எனக்கு
சொத்தெழுதி வைத்த
புன்னகை வீசி செல்வாள்...

என்னுடன் தினமும்
விளையாடிய
என் ரோஜாப்பூ,
பூப்பெய்த நாளில்
கதவோரம் நின்று
என்னை பார்த்த
பார்வையில் இருக்கிறதடா
உலகின் அத்தனை
பிரிவினைவாதமும்...

அவள்
பாதுகாப்பாய் வீடு
திரும்பும் வரை
உயிரற்ற உடலாய்
காத்திருந்த நொடிகளில்,
செத்து பிழைக்கும்
நான்… தினம் தினம்
அவளை பிரசவித்தேன்...

இரு முறை தாய் வாசம்
தெரியவேண்டுமெனில்,
பெண் பிள்ளை
பெற்றெடுங்கள்...

மகள்களின்
நேசிப்பெனும் சிறையில்
விடுதலை இல்லை
ஆயுள் தண்டனை மட்டுமே...

மகளில்லாத
தந்தையர்களே,
சகோதரியில்லாத
ஆண் மகனே,
எங்கேனும் தனியாய்
பெண்ணைக் கண்டால்
சுதந்திரமாய் செல்ல விடுங்கள்…
தந்தைகள் காத்திருக்கிறோம்
அவள் வருகைக்காக…

இந்த வாரத்தின் ரசித்த பாடல்: ஹிந்தி பாடல்!

Dream Girl – அதாங்க தலைப்பில் இருக்கும் கனவுக் கன்னி - என்ற புதிய ஹிந்தி திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் இந்த வாரத்தின் ரசித்த பாடலாக! கேட்டுப் பாருங்களேன்.




இந்த வாரத்தின் ஸ்வாரஸ்ய கேள்வி பதில்:

கேள்வி: வாழ்க்கையில் எப்போதும் பரபரப்பாக இருப்பவருக்கு உங்கள் அறிவுரை என்ன?

பதில்:  ஒரு குட்டிக் கதை – இருப்பது மட்டுமா வாழ்வு?

ஆமைகள் இரண்டு சந்தித்துக் கொண்டன. ”வரவர உலகம் மோசமாகி விட்டது. ஏன் தான் இப்படி அவசரகதியாய் ஆகிவிட்டார்களோ? இப்படி தலைதெறிக்க ஓடுகிறார்களே, எல்லோரும் முட்டி மோதி விழப் போகிறார்கள்” என்றது ஒன்று. ”ஆமாம், இப்படி அவசரப்பட்டு என்ன சாதிக்கிறார்கள். அல்பாயுசில் போய்விடுகிறார்கள். நம்மைப் போல் முன்னூறு, நானூறு ஆண்டுகள் வாழ முடிகிறதா, இவர்களால். நிதானமாக இருந்தால் தானே நீடிக்கும் ஆயுள்?”

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2013-ஆம் ஆண்டு “மனச் சுரங்கத்திலிருந்து” என்ற தலைப்பில் நெய்வேலி நினைவுகளை எழுதியபோது எழுதிய ஒரு பதிவு – இதே நாளில் எழுதி இருக்கிறேன். இனிமையான நினைவுகள் நெய்வேலியின் சந்தையில் போடப்படும் வாழைப்பழ ஏலம் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் படிக்கலாமே!


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. உங்களுக்குப் பிடித்த வாசகமும் பிடித்த கவிதையும் எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு வெங்கட். இரண்டும் சுப்பர்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை... மகிழ்ச்சி மணிமேகலை ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இன்றைய கதம்பம் அருமை.

    சொன்னா ஆச்சர்யம்தான். இந்த வியாதி, சிறிமா கட்அவுட், 2017ல் பஹ்ரைனுக்கு வந்துவிட்டது. நல்லவேளை தியேட்டர் வாசல்ல மோகன்லாலுக்கு கட்அவுட் வைத்தார்கள். ஏற்கனவே தமிழர்கள் முதல் நாள் படம் பார்க்கவிடாமல் விசிலடிப்பாங்க. இன்னும் என்ன விபரீதம் வரப்போகுதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விபரீதம் தான் நெல்லைத் தமிழன். தனிமனித ஒழுக்கம் நிறைய தேவை... ஆனால் எப்போது மாறுவார்களோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. புத்தரின் பொன்மொழியும், கவிதையும் அருமை ஜி காணொளி பாடல் கேட்டேன்.

    ஆமையாக பிறக்கலாமோ என்று தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    பொன்மொழி சிறப்பு.

    பேனர் கலாச்சாரம் ஒழிக...

    விளம்பரம் ரசித்தேன்.

    கவிதை ஈர்த்தது.

    ட்ரீம் கர்ள்  -  ஹேமா போலவோ, கிஷோர் போலவோ வருமா!!!

    ஆமைப்பேச்சு -  புன்னகை.

    சந்தை நினைவுகள் மறுபடி வந்தன எனக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பேனர் கலாசாரம் இன்று நேற்றல்ல எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தமிழகத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது. இனிமேலாவது ஒழிந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  6. புத்தர் வாசகம் மிக அருமை, கடைபிடித்தால் நலம்.
    பேனர் கலாசாரம் உண்மையில் ஒழிந்தால் நல்லது தான்.
    விளம்பரம் மிக அருமை. தந்தை பாடும் கவிதை மிக மிக அருமை.

    பாடல் பகிர்வும் அருமை.
    ஆமை சொல்வது சரிதான், எதற்கு இந்த ஓட்டம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. நமது ஊரில் மட்டும் இந்த விளம்பர மோகம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இந்தி இசை ரசிக்கும்படி இருந்தது. ஆமைகளிடமிருந்து நாம் நிறைய கற்றுகொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பர மோகம்... என்ன சொல்ல? இங்கே ரொம்பவும் அதிகம் தான் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஆமைகளைப் பற்றிப் படித்தபோது எனக்குத் தோன்றிய செய்தி.

    மனிதன் பிறக்கும்போதே இத்தனை மூச்சுக்காற்றுகள் என்று எழுதப்பட்டுவிடுகின்றன (ஒரு உதாரணத்துக்கு). அதை மெதுவாக விடும்போது ஆயுள் அதிகரிக்கிறது. ஒரு நிமிடத்துக்கு 12க்கு மேல் நாம் மூச்சு இழுக்கிறோம் (சிலர் 20க்கு மேல்). ஆமைகள் 3-4 தடவைகள்தாம். எவ்வளவுக்கு எவ்வளவு மூச்சு இழுப்பது குறைகிறதோ (அது சுலபம். மூச்சை ஆழ்ந்து இழுத்து மெதுவா விடுவது ப்ராக்டிஸில் வந்துவிடும்) அவ்வளவுக்கவ்வளவு உடல் நலம், ஆயுள் அதிகம். அதனால்தான் ஆமை மட்டுமல்ல, யோகிகளும் நூறாண்டைக் கடந்து வாழ்வது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூச்சுப் பயிற்சி பற்றி இப்பொழுது நல்ல விழிப்புணர்வு வந்து இருக்கிறது. ஆரம்ப நாட்களில் கொஞ்சும் கஷ்டமாகத் தெரிந்தாலும் பழகப் பழகச் சுலபம் தான். யோகிகள்- உண்மை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இந்த வார ‘காஃபி வித் கிட்டு’ வில் வெளியிட்டுள்ள தாங்கள் இரசித்த புத்தரின் வைர வரிகளும், பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்ற வாதம் தவறு என்பதை கவிதைபோல் சொல்லும் காணொளியும், பெண் குழந்தை பற்றிய கவிதையும், ஆச்சரியப்படுத்திய கேள்வி பதிலும் அருமை. ஒரே நேரத்தில் பற்சுவை விருந்து படைத்துவிட்டீர்கள். பாராட்டுகள்!

    நெய்வேலியின் ஏலச் சந்தை..... யையும் படித்து இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. >>> பேசித் தீருங்கள்; பேசியே வளர்க்காதீர்கள்...<<<

    புத்தரின் பொன்மொழியும் மகள்களுக்கான கவிதையும் அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள்களுக்கான கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் மிக அருமை. புத்தரின் வாசகங்கள் ஒவ்வொன்றும் கருத்துடையவை.

    பேனர் கொடுமையும், பாலுற்றும் வைபவமும் எப்போது தீர்ப் போகிறதோ? காத்திருப்போம். தலைநகரில் அதிகம் இல்லாதது மகிழ்ச்சிக்குரியது

    மகளுக்கான கவிதை அமர்க்களம். எழுதியவருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    காணோளி ரசித்தேன். கதம்பம் இனிமையாக மணந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. தமிழ்நாடு தாண்டினாலே பேனர்களோ, கட் அவுட்டுகளொ பார்க்கவே முடியாது. அரசியல் கட்சிக்கொடிக்கம்பங்களைக் கூடப் பார்க்க முடியாது. தமிழர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதை இதிலும் நிரூபிப்பார்களே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல் கொடிகள், கொடிக்கம்பம் போன்றவை ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே பார்க்க முடியும் கீதாம்மா. இங்கே பல இடங்களில்.... கூடவே அடிதடியும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. கவிதை அருமை. உணர்ந்து எழுதி இருக்கிறார் கவிஞர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. புத்தர் பொன்மொழி மிக அவசியம். அரைத்தமாவையே அரைப்பவர்கள்தான் நம்மூரில் அதிகம்.
    பானர் கலாச்சாரம்,சுவரொட்டி எல்லாம் நம் ஊரைவிட்டுப் போகுமா தெரியவில்லை. பெண்ணைப்பெற்றவள் கவிதை ஆழமானது எழுதியவருக்கு என்ன பரிசு கொடுப்பது வாழ்த்தைத் தவிர.

    நெய்வேலி சந்தை அருமை. ஏலம் பிரமாதம்.
    மொத்தத்தில் காஃபி வித் கிட்டு அருமை.

    ட்ரீம் கேர்ள் பாட்டு அருமை.இப்பாடி எல்லாம் சினிமாவில் தான் செலவு செய்யமுடியும்:)



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரைத்த மாவையே அரைப்பவர்கள்... ஹாஹா.... அதே தான் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. கவிதை மனதைதொட்டது.

    பனர்களின் ஆபத்தை உணருமா தமிழகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....