சனி, 28 டிசம்பர், 2019

காஃபி வித் கிட்டு – பண்பு – ஆரஞ்சு அலர்ட் – இடைவெளி – கேள்விக்கென்ன பதில் – பெண் குழந்தை


காஃபி வித் கிட்டு – பகுதி 51


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

ஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டுமே அதீதமாக மதிப்பிட்டதை, அநேகமாக எனது மிகப் பெரிய தவறென்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம்எலன் மஸ்க் (தென் ஆப்பிரிக்காவினைச் சேர்ந்த தொழிலதிபர் – என்னை விட ஒரே ஒரு நாள் சிறியவர் இவர்.  இவரது இன்றைய சொத்து மதிப்பு பல பில்லியன் டாலர்கள்!)  

இந்த வாரத்தின் ஜில்ஜில் செய்தி – ஆரஞ்சு அலர்ட்:



புதுடில்லி : கடந்த 118 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தலைநகர் டில்லியில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தல் மிகக் கடுமையான குளிர் நிலவி வருகிறது. 100 ஆண்டுகளில் 2வது முறையாக தற்போது மிக கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் அதிகபட்சமாக 19.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே வெப்பநிலை இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதியில் 19 டிகிரி என்ற அளவிலேயே வெப்பநிலை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அப்படி நடந்தால் 1901 ம் ஆண்டு பதிவான 17.3 டிகிரிக்கு பிறகு 2வது முறையாக இந்த ஆண்டு டிசம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகும். தற்போதைய குளிரான நிலையே அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் எனவும், புத்தாண்டன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜன.,3 வரை தரைப்பகுதிகளில் மழையுடன் குளிரும், மலைப் பிரதேசங்களில் பனிப்பொழிவும் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. வடஇந்தியாவில் இரவு நேரங்களில் வெப்பநிலை வெகுவாக குறைந்து, டில்லி, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும். காலை மற்றும் இரவு நேரங்களில் மிக கடுமையான குளிர் நிலவும் என்பதால் டில்லி, பஞ்சாப், அரியானா, மேற்கு உ.பி., உள்ளிட்ட பகுதிகளுக்கு டிச., 29 வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது – தினமலர் நாளிதழிலிருந்து...

சில வருடங்களாகவே குளிர் குறைந்து வந்தது. எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து இந்த வருடம் அதிகரித்து விட்டது என்றே தோன்றுகிறது. சில நாட்களாகவே தண்ணீரில் கை வைத்தாலே கைவலிக்கிறது! அந்த அளவிற்குக் குளிர் இருக்கிறது! ஆனாலும் இந்தக் குளிரும் நன்றாகவே இருக்கிறது – கோடைக்கு இது எவ்வளவோ மேல் என்று தான், நான் இப்போதும் சொல்வேன்! So enjoying the chill chill delhi winter!

இந்த வாரத்தின் தகவல் – இடைவெளி ஏன்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையம் பக்கம் வந்தாலும், முன்பு மாதிரி தினம் ஒரு பதிவு வெளியிடுவதும், நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதும் இன்னும் இயலவில்லை! குளிர் நாட்களில் வேலைகளை முடித்து அலுவலகம் சென்று வருவதும், வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலைகளை முடிக்கவே நிறைய நேரம் ஆகிவிடுகிறது. எழுதுவதற்கும் படிப்பதற்கும் தேவையான சூழல் இன்னும் சரியாக வரவைல்லை! வரும் நாட்களிலாவது இது சாத்தியாமாகும் என நம்புகிறேன். நண்பர்களின்பதிவுகளைப் படிக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு! விரைவில் வந்து விடுவேன் நண்பர்களே! என் பக்கத்திலும் பதிவுகளும் தொடர்ந்து வெளியிடலாம் – அந்தமான் சென்று வந்தது பற்றி இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை! விரைவில் ஆரம்பித்து விடலாம்!

ராஜா காது கழுதைக் காது – எதிர்புறத்தில் கடை…

 நேற்று தில்லி மெட்ரோவில் பயணித்தபோது, அதே பெட்டியில் எனது அருகே மூன்று இளைஞிகளும் ஒரு இளைஞனும் பேசிக் கொண்டே பயணித்தார்கள் – அந்த இளைஞன் ஏதோ பார்ட்டி தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் அந்தப் பெண்கள்! ”Dominos போறோம் அங்கே சாப்பிட்டதுக்கு அப்புறம் எதிர்த்தா மாதிரியே சரக்குக் கடைக்கு போறோம், ஆளுக்குக் கொஞ்சம் சரக்கு அடிக்கிறோம்! வீட்டுக்குப் போறோம்!, எல்லா செலவும் உன்னோடது சரியா?” என அந்தப் பெண்களில் ஒருவர் இளைஞரிடம் சொல்ல சந்தோஷமாக வந்தது “சரி” எனும் பதில்! சரக்கு அடிப்பது ஆண்களின் உரிமை மட்டும் அல்ல என்று சொல்லிக் கொண்டு அடுத்த பகுதிக்குச் செல்வோம்!

இந்த வாரத்தின் விளம்பரம் – நல்ல ஆரம்பம்:

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் நிலை ஒரு பக்கத்தில் நினைவுக்கு வந்து வருத்தினாலும், நல்லதொரு ஆரம்பம் என்ற அடைமொழியுடன் வெளிவந்த பிக் பஜார் விளம்பரம் ஒன்று இந்த வாரத்தில் ரசித்த விளம்பரமாக… பாருங்களேன்!



இந்த வாரத்தின் கேள்வி:

கோரா கேள்வி பதில் பற்றி முன்பு ஒரு சமயத்தில் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். சில மாதங்களாக அந்தத் தளத்தில் அவ்வப்போது எதையாவது வாசிப்பதுண்டு. ஒரே ஒரு முறை கிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் வலைப்பதிவர் உண்டா என்று கேள்வி வந்தபோது, திரு ஏகாந்தன் அவர்களின் தளம் பற்றி பதில் அளித்திருந்தேன். அதிலிருந்து பதில் கேட்டு ஏதாவது கேள்விகள் எனது மின்னஞ்சலுக்கு வந்த வண்ணமே இருக்கிறது. சமீபத்தில் அப்படி வந்த ஒரு கேள்வி – ”உங்களுக்கு அம்மொழி தெரியாது என நினைத்து யாராவது உங்களிடம் வம்பு செய்த அனுபவம் உண்டா? அந்த சுவாரஸ்யத்தை எப்படி உடைத்தீர்கள்?” இந்தக் கேள்விக்கு நான் இதுவரை பதில் அளிக்கவில்லை! உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? உங்கள் ஸ்வார்ரஸ்ய பதிலை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

இதே நாளில் 2012-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – ஃப்ரூட் சாலட் தொடரின் 27-ஆம் பகுதி! இப்போதைய காஃபி வித் கிட்டு போலவே அப்போது ஃப்ரூட் சாலட் எழுதிக் கொண்டிருந்தேன். இன்றைக்கும் அந்த ஃப்ரூட் சாலட் பகுதியில் எழுதிய விஷயங்கள் ஸ்வாரஸ்யமாகவே இருந்தன! நீங்களும் படித்துப் பார்க்கலாமே! பதிவிற்கான சுட்டி கீழே!


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

22 கருத்துகள்:

  1. அன்பின் வணக்கம்...

    தங்களது பதிவுகளின் பக்கம் வந்து மிக நாளாயிற்று...

    இங்கும் குளிர் அதிகமாகத் தான் இருக்கிறது...

    பாரத நாட்டின் எல்லைகளைக் காக்கும் வீரர்களை நினைத்துக் கொள்கிறேன் - இவ்வேளையில்....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஜி. தங்கள் வருகை மகிழ்ச்சி அளித்தது.

      நானும் பதிவுலகம் பக்கம் வருவது வெகுவாக குறைந்திருக்கிறது. இனிமேலாவது வர முடியும் என நினைக்கிறேன்.

      பாரத நாட்டின் எல்லைகளைக் காக்கும் வீரர்களின் நிலை - மோசமானது தான். சீன எல்லையில் பத்து பன்னிரெண்டு அடி பனியில் நின்று கொண்டே இருக்கும் நிலை பற்றி அறிந்திருக்கிறேன். இரண்டு அடி பனியிலேயே எங்களால் நிற்க முடியவில்லை. வீரர்கள் தந்த தேநீர் அம்ருதமாக இருந்தது அப்போது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. டெல்லியில் குளிர் அதிகமென்று செய்திகளில் கண்டேன்.
    அதனால்தான் பெண்களும் தண்ணி அடிக்கிறார்கள் போலும்.

    காணொளி நல்ல யோசனையே ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர் அதிகம் தான் கில்லர்ஜி - அதனால் தான் :))

      காணொளி உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அனைத்தும் அருமை...

    அந்தமான் பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

    வம்பு செய்பவர்களிடம் ஒரு சிறு புன்னகை மட்டுமே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான் பயணம் பற்றி விரைவில் எழுதுவேன் தனபாலன்.

      வம்பு செய்தவர்களிடம் சிறு புன்னகை மட்டுமே! நல்ல கொள்கை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அனைத்தும் அருமை.பட்டாக்கா மிக மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பத்திரிகைகளிலும் செய்திகளிலும் தில்லிக் குளிர் பற்றிக் கேள்விப் பட்டோம். இங்கேயும் குளிர், மழை, வெயில் என மாறி மாறி வந்துட்டுப் போகுது! பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் கூட முன்னெல்லாம் குடிப்பதை ரகசியமாகச் செய்து வந்தார்கள். இப்போக் குடும்பத்தோடு போறாங்க போல! இதை எல்லாம் பார்க்கவும், படிக்கவும் மனதுக்கு வருத்தமாக இருக்கு! ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியா முழுவதுமே குளிர் அதிகமாகத் தான் இருக்கிறது கீதாம்மா...

      குடிப்பதிலும் நிறைய முன்னேற்றம் - ஒன்றும் சொல்வதிற்கில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. உண்மைதான் திறமை இருந்தும் பண்பு இல்லை எனில்.. பலனில்லை.

    ஓ அங்கு குளிர் அதிகமோ.. இப்போ எங்கும் காலநிலை மாறுதலாகவே இருக்குது. இங்கு இம்முறை வழமையை விடக் குளிர் குறைவு.. பொதுவாக இக்காலத்தில் மனஸ் இல்தான் இருக்கும் வெதர், ஆனா இப்போ 3 கிழமையாக + லயே இருக்குது.

    இப்போ புரியுதோ.. குளிர் எனில் எந்த வேலையையும் செய்ய மனம் வராது, பேசாமல் ப்போர்த்துக் கொண்டு படுத்திருக்கவே மனம் விரும்பும்.

    //”Dominos போறோம் அங்கே சாப்பிட்டதுக்கு அப்புறம் எதிர்த்தா மாதிரியே சரக்குக் கடைக்கு போறோம், ஆளுக்குக் கொஞ்சம் சரக்கு அடிக்கிறோம்!//

    என்ன கொடுமை இது.. காலம் எங்கே போய்க் கொண்டிருக்கிறதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதிச் சிகரம் - ஆஹா புதிய பட்டப்பெயர்! நீங்க நடத்துங்க அதிரா....

      ஆமாம் இரண்டு மாதத்திற்கு இங்கே குளிர் தான் - டிசம்பர்-ஜனவரி!

      காலம் எங்கே போய்க் கொண்டிருக்கிறதோ - எங்கே போகிறது என்பது புரியாத புதிர் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதற்கான சந்தர்ப்பம் எனக்கு அமையவில்லை.. ஆனா ஒன்று நினைவுக்கு வருகிறது,.

    சமாதானப் படையாக இந்திய இராணுவம் இலங்கை வந்திருந்தபோது, ஸ்கூல் யூனிஃபோமுடன், பஸ்ஸால இறங்கி ஒரு இடத்தில் நின்றோம், வெயிலாக இருந்தது, அப்போ அங்கு இந்திய ஆமியின் ட்றக் நின்றது, அதனுள் இருவர் மட்டுமே சீக்கியர்போல இருந்தார்கள்.. அப்போ அவர்களுக்கு என்ன புரியப்போகுதென நினைச்சு, நாம் கதைட்த்ஹோம்.. இவர்கள் என்ன பாஷை பேசுகிறார்கள் எனத் தெரிவதே இல்லையே என, உடனே ட்றக்கிலிருந்தவர் சிரிச்சுக்கொண்டு சொன்னார்.. “எனக்குத் தமிழ் தெரியும்” என ஹா ஹா ஹா சிரிச்சபடியே நகர்ந்து விட்ட்டோம்:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பல சமயங்களில் இப்படிப் பேசி மாட்டிக் கொண்டால் சிரித்தபடியே நகர்ந்து விடுவது தான் நல்லது அதிரா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அனைத்தையும் ரசித்தேன்.  குளிர் சீக்கிரம் விலகட்டும்.  மழைநாளில் வேயைத்தேடி அலைகின்றாய்...   வெயில் நாளில் மழை தேடி அலைகின்றாய் என்கிற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.  மொழி தெரியாது என்று பேசும் எதிராளிகளிடம் நான் அவர்கள் பேசுவதை அறிந்ததாகவே காட்டிக்கொள்ள மாட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணதாசன் எதைப் பற்றிதான் எழுதவில்லை - நல்லதொரு பாடலாசிரியர்.

      மொழி தெரியாது என்று பேசும் எதிராளிகளிடம் அவர்கள் பேசுவதை அறிந்ததாக காண்பிக்காமல் இருப்பதும் நல்ல யுக்தி தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. உங்கள் தளத்தில் குயீன் வெப் சீரிஸ் விளம்பரம் கீழே என் கண்களுக்குத் தெரிந்ததே...   எங்கள் தளத்திலும் இது போன்ற விளம்பரங்கள் கண்ணில் படுகின்றனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் - நீங்கள் உங்கள் Blogger கணக்கில் Adsense நிறுவியிருந்தால் மட்டுமே உங்கள் தளத்தில் இப்படியான விளம்பரங்கள் தெரியும். உங்கள் தேடுதல்களைப் பொறுத்து இந்த விளம்பரங்கள் மாறும் ஸ்ரீராம். எனது தளத்திலும், அனுப்ரேம் தளத்திலும், பரிவை சே. குமார் தளத்திலும் இப்படி விளம்பரங்கள் வருவதைக் கவனிக்கலாம்!

      ஏதோ ஒரு சோதனை முயற்சியாக இந்த Adsense நிறுவினேன். பெரிதாக பலன் ஒன்றும் இல்லை என்றாலும் இன்னும் விட்டு வைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பட்டாசு விளம்பரம் அருமை. சிந்திக்க வைக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பிறருக்கு நம் மொழி தெரியாது நினைத்துப் பேசி பெற்ற நுபவம் நினைவுக்கு வருகிறது. . புது தில்லிக்கு சென்ற புதிதில் கரோல் பாகில் உள்ள சரஸ்வதி மார்க் அருகில் உள்ள பதம் சிங் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஹரியானா கைத்தறி கடையில் ஒரு படுக்கை விரிப்பு வாங்க நானும் என் நண்பரும் சென்றிருந்தோம். என் நண்பருக்கு இந்தி நன்றாகத் தெரியுமாகையால் ‘இரண்டு படுக்கை அளவுக்கு விரிப்பு இருக்கிறதா?’ என இந்தியில் கேட்டதற்குஅங்கு இருந்த விற்பனையாளர் விரிப்பு ஒன்றை காட்டினார்.

    நான் என் நண்பரிடம் ‘இது இரண்டு படுக்கை அளவுக்கு சரியாக இருக்காது போல் இருக்கிறதே. இந்த ஆள் நம்மை ஏமாற்றுகிறான்.’ என்று தமிழில் சொன்னேன். உடனே அவர் தமிழில் ‘சார்.அப்படியெல்லாம் ஏமாற்றமாட்டேன். வேண்டுமானால் அளந்து காட்டுகிறேன்.’ என்று சொன்னதும் எங்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. . எப்படி அவருக்கு தமிழ் தெரியும் எனக் கேட்டதற்கு விற்பனைக்காக சேலத்தில் மூன்று ஆண்டுகள் கடை போட்டதாகவும் அங்கு தமிழ் பேச கற்றுக்கொண்டதாக சொன்னார். இனிமேல் எதிரே இருக்கும் வேற்று மொழி பேசுவோருக்கு நாம் பேசுவது புரியுமா எனத்தெரியாமல் தமிழில் பேசக்கூடாது என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டாசு விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

      உங்கள் தில்லி அனுபவங்களையும் இங்கே பகிர்ந்ததற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. டெல்லி குளிர் படிக்கும் பொழுதும் குளிருதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....