திங்கள், 7 டிசம்பர், 2020

சென்னைக்கு ஒரு பயணம் - 1 - ஊபர் ஆட்டோவுக்கு ஜே!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. அதைப் பற்றிய பயம் தான் மனதைக் கலக்கி, அறிவைக் குழப்பி, நம் நிலையை மாற்றச் செய்கிறது.


*****தில்லியில் கடந்த முப்பது வருடங்களாக நட்பில் இருக்கும் ஒருவருக்கு (நான் வேலைக்குச் சேரும் முதல் நாளிலிருந்தே இவருடன் பழக்கம்!) அறுபது வயது முடிந்து சஷ்டி அப்த பூர்த்தி! மே மாதமே நடந்திருக்க வேண்டியது! ஆனால் தீநுண்மி காரணமாக மே மாதம் நடக்கவில்லை.  அப்போதும், தில்லியிலிருந்து நண்பர்கள் குழாமாக சென்னைக்கு விமானத்தில் முன்பதிவு செய்திருந்தோம்.  பிறகு ஏற்பட்டவை நம் எல்லோருக்கும் தெரிந்தது தானே.  ஆகஸ்ட்டில் வைத்துக் கொள்ளலாம், செப்டம்பரில்… என மாற்றி மாற்றி கடைசியாக நவம்பர் முதல் வாரத்தில் முடிவானது.  மீண்டும் தில்லி நண்பர்கள் குழாம் திட்டமிட்டு முன்பதிவு செய்தார்கள்.  நான் மட்டும் முன்னதாகவே புறப்பட்டு விட்டேன்.  தமிழகத்திலிருந்து திரும்பியதும், நிகழ்வு முடிந்து சில நாட்கள் கழித்தே!


சஷ்டி அப்த பூர்த்தி இரண்டு நாட்களாக நடைபெறுகிறது என்பதால் திருச்சியிலிருந்து இரவு இரயில் மூலம் சென்னைக்குப் புறப்பட்டேன். இரவு பதினோறு மணிக்கு தான் திருச்சி இரயில் நிலையத்தில் இரயில் - மதுரையிலிருந்து வர வேண்டும்.  ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு ஊபர் ஆட்டோ மூலம் இரயில் நிலையத்திற்குச் சென்று விட்டேன்.  வாயிலிலேயே எந்த இரயிலுக்கு என்று கேட்டே அனுமதித்தார்கள்.  எப்போதும் மக்கள் ஆயிரக் கணக்கில் இருக்கும் இரயில் நிலையம் தூங்கி வழிந்தது - மொத்தமாகவே 200 பேர் இருந்தால் அதிகம்.  முதல் வகுப்பு பயணிகள் தங்குமிடத்திற்குச் சென்று காத்திருக்கலாம் என்று செல்ல, அங்கே மொத்தமாகவே நான்கு பேர் - என்னையும் சேர்த்து! அழகான ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள் - வேறு ஏதோ ஒரு இரயில் வர, மற்ற மூவரும் சென்று விட, அந்த தங்குமிடத்தில் நான் மட்டுமே இருந்தேன்! தனியாக இருக்கப் பிடிக்காமல், எனது இரயில் வரப் போகும் நான்காவது நடைமேடைக்குச் சென்றேன் - நல்ல வேளை அங்கே சிலர் இரயிலுக்குக் காத்திருந்தார்கள். 

சில மணித்துளி காத்திருந்த பிறகு, இரயிலும் வந்து சேர்ந்தது. பாதிக்கு மேல் படுக்கைகள் காலியாகவே இருந்தது. ஒரு மூதாட்டியும் அவரது குடும்பத்தினரும் இரவு முழுவதும் பேசிக் கொண்டே வந்ததால் உறங்குவதில் சிரமம்.  குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் இப்போது கம்பளியோ, வெள்ளை நிற படுக்கை விரிப்போ தருவதில்லை. தீநுண்மி காலத்தில் இதனை நிறுத்தி விட்டார்கள். நல்ல வேளையாக நான் ஒரு போர்வை எடுத்துச் சென்றிருந்ததால் அதிக குளிர் இல்லாமல் Upper Berth-ல் படுத்துக் கொண்டிருந்தேன்.  எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கி அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டியாயிற்று! தாம்பரம் வருவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போதே கீழ் படுக்கையில் இருந்தவர் எழுந்ததோடு, தனது அலைபேசியில் சத்தமாக இறைத் துதிகளை ஒலிக்க வைத்து எல்லோரையும் எழுப்பி விட்டார்!  தனக்குப் பிடித்ததை தான் மட்டுமே ரசிக்க வேண்டும் என்பதை நம் மக்கள் எப்போது தான் புரிந்து கொள்வார்களோ! நானும் எழுந்து மாம்பலத்தில் இறங்க தயாரானேன்!


மாம்பலம் இரயில் நிலையத்தில் காலை ஐந்து மணிக்கு என்னை இறக்கி விட்ட பிறகு புறப்பட்டது பாண்டியன் கோவிட் ஸ்பெஷல்! வெளியே வந்து சுடச் சுட ஒரு தேநீர் அருந்தியபடியே ஆழ்வார்பேட் செல்ல ஊபர் வழி ஆட்டோ பார்க்க 70 ரூபாய் காண்பித்தது! தேநீர் அருந்தி முடித்த போது ஒரு ஆட்டோ அந்த வழி வந்தது.  ஓட்டுனர் காலையிலேயே குளித்து ஆட்டோவிற்கு பூஜையெல்லாம் முடித்து ஊதுவத்தி மணத்துடன் வந்து சேர்ந்தார்.  எங்கே போக வேண்டும் எனக் கேட்க, சொன்னேன்! 120 ரூபாய் கொடுங்க சாமி என்றார் - அவசரமா ஆஸ்பத்திரி போய்ட்டு இருக்கேன் - பையனுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்கான் - பணம் கட்டணும் - உங்களை இறக்கி விட்டுட்டு போவேன் என்று சொன்னார்.  நீங்க கொடுக்கற பணமும் அதுக்கு உதவும் என்றார்.  


என்ன சொல்வது என்று புரியவில்லை!  அவர் சொல்வது உண்மை என எனக்குத் தோன்றவில்லை. சரி நிறைய யோசிக்க வேண்டாம் - நான் கொடுக்கும் கட்டணம் அவருக்கு அவசர காலத்தில் பயன்படுமாக இருந்தால் நல்லதே என்று உள்ளே அமர்ந்தேன் - அவர் சொன்ன கட்டணம் அதிகமாக இருந்தாலும்! வழி முழுக்க பேசிக் கொண்டு வந்தார் - இரண்டு நாட்களுக்கு முன்னர் மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது, ஆஸ்பத்திரியில் பணம் தண்ணீராகச் செலவாகிறது - தினம் தினம் பணம் கட்ட வேண்டியிருக்கிறது - மனைவியின் தாலியை அடமானம் வைத்து தான் இன்றைக்கு பணம் கொண்டு சொல்கிறேன் என்றெல்லாம் சொல்ல, காலை வேளையிலேயே ஒருவருடைய கடினமான சூழலைக் கேட்டுக் கொண்டபடியே பயணித்துக் கொண்டிருந்தேன்.  ஊர் உலகத்தில் இருக்கும் அனைவருக்குமே ஏதோ ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது - யாருக்குத் தான் பிரச்சனை இல்லை - ஆனால், அவரவருக்கு அவரவர் பிரச்சனையே மிகப் பெரியதாக தெரிகிறது.  


மண்டபத்தின் அருகில் இறங்கிக் கொண்டு உள்ளே செல்ல சுடச் சுட காஃபியுடன் எனது அன்றைய நாள் ஆரம்பித்தது.  மண்டபத்திலேயே அறை இருக்கிறது என்பதால் நான் வெளியே தங்கவில்லை.  காஃபியில் ஆரம்பித்த உணவுப் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது!  இரண்டு நாட்களும் விதம் விதமாக சுவையான உணவு!  சமையல் கலைஞர்களும் தலைநகரிலிருந்து தான்! தலைநகரில் மட்டுமல்ல தமிழகத்திலும், சுவையான சமையலுக்கு பெயர் போன திரு அய்யப்பன் குழுவினரின் சமையல்.  அட்டகாசமான விருந்து சாப்பாடு தான் இரண்டு நாளும்!  விழா பற்றியும் வேறு சில தகவல்களும் சென்னைப் பயணம் - பகுதி இரண்டில் சொல்கிறேன்! 


நண்பர்களே, இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட பதிவு உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

 

நட்புடன் 

 

 

வெங்கட் நாகராஜ் 

புது தில்லி


படங்கள்: இரயில் நிலையத்தில் ஓய்வறையில் இருந்த ஓவியங்கள் - அலைபேசியில் எடுத்தவை.

18 கருத்துகள்:

 1. மாம்பலத்திலிருந்து ஆழ்வார்பேட்டைக்கு 120 ரூபாய் ஊபர், ஓலா இல்லாத ஆட்டோக்கள் கேட்பது ஓரளவுக்கு நியாயமான கட்டணம்தான்! சஷ்டியப்த பூர்த்தி வைபவத்துக்கு நல்ல ஏற்பாடுகள் செய்திருந்திருப்பார் போலும் உங்கள் நண்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார் அந்த நண்பர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. சஷ்டி பூர்த்தி விழாவின் நிகழ்வுகளை மேலும் காண ஆவல் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்கிறேன் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. காலம்பர வந்தேன், 2 முறை, ஆனால் கருத்துச் சொல்ல முடியலை. நல்ல விவரணை. ரயில் நிலையத்தின் இந்த ஓவியங்கள் தினமலர் திருச்சிப் பதிப்பிலும் போட்டிருந்தார்கள். 120 ரூபாய் அதிகம் தான் என்றாலும் அந்தக் காலை வேளையில் அதற்குக் குறைஞ்சு யாரும் வரமாட்டாங்க என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் - காலை நேரத்தில் அதிகம் தான் வாங்குவார்கள் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. சஷ்டியப்தபூர்த்திக்கு நல்ல ஏற்பாடு போலிருக்கு.

  ஊபர், ஓலா இவைகள் வந்ததால் எது நியாயமான கட்டணம் என்பது நமக்குத் தெரிகிறது.

  //சத்தமாக இறைத் துதிகளை ஒலிக்க வைத்து எல்லோரையும் எழுப்பி விட்டார்! // - எனக்கு மிகவும் எரிச்சலூட்டுவது இத்தகைய செயல்கள். நடைப்பயிற்சி செய்பவர்களும் இந்த மாதிரி அலறவைத்துக்கொண்டு அடுத்தவர்களைத் தொந்தரவு செய்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் போறாங்க.

  ஏசி வகுப்பில் பிரயாணம் - தீநுண்மி காலத்தில் - கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. இரயில் நிலையத்தில் ஓய்வறையில் இருந்த ஓவியங்கள் மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 6. உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. அதைப் பற்றிய பயம் தான் மனதைக் கலக்கி, அறிவைக் குழப்பி, நம் நிலையை மாற்றச் செய்கிறது.
  அருமை
  அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. அணுபவங்கள் அருமை.
  உபர் காரர் உண்மையைே சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

   நீக்கு
 8. தொடக்க வாசகம் அருமை..அட, உண்ட என்று தோன்றியது. ஓவியங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....