புதன், 2 டிசம்பர், 2020

நேரம் சரியாக: மனித முன்னேற்றத்தின் மந்திரச் சாவி - இரா. அரவிந்த்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


முட்டாள் பழிவாங்க துடிப்பான்! புத்திசாலி மன்னித்து விடுவான்!! அதிபுத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான்!!!


******


இந்த நாளில் நாம் பார்க்கப் போவது ஒரு புத்தக அறிமுகம். அறிமுகம் செய்யப் போவது நண்பர் இரா. அரவிந்த்.  வாருங்கள் அவரது அறிமுகத்தினைப் படிக்கலாம்! ஓவர் டு அரவிந்த்! - வெங்கட் நாகராஜ், புது தில்லி! 

******

'விஞ்ஞானம் என்றால் என்ன?' எனக் கேட்டால், நம்மில் பலர், புதிய கண்டுபிடிப்புகளைச் செய்பவர்கள் என்போம். 


நாம் யார் எனத் தொடங்கி, நம்மையும், நம் சுற்றத்தாரையும், நாம் வாழும் பூமி தொடங்கி பிரபஞ்சம் முழுமையையும் அறியும் துடிப்பு மிகுந்த ஒவ்வொருவரையும் ஒரு விஞ்ஞானி என சொல்லலாம். 


'என்னடா! விஞ்ஞானிகளைப் பற்றி ஆரம்பித்து தத்துவவாதிகளைப் பற்றிய விளக்கத்தைக்  கொடுக்கிறாய்?' எனும் உங்கள் எண்ணம் மிகச் சரியானதே. 


ஏனெனில், ஒரு காலத்தில், தத்துவவாதிகளாக அறியப்பட்டவர்களிடமிருந்தே விஞ்ஞானம் பிறந்தது என்பதே வரலாற்று உண்மையாகும். 


இப்படி அனைத்தையும் கேள்வி கேட்டுப் புரிந்துகொள்ள முயலும் அதி உற்சாக மனிதர்களே, நாம் இன்று அடைந்துள்ள பல முன்னேற்றங்களுக்குக் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


மனித சமூகம் அடைந்த பல முன்னேற்றங்களில் நேர அளவீட்டின் இன்றியமையா பங்கை எளிமையாக உணரச் செய்வதே கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் திரு ரவி நடராஜன் அவர்கள் எழுதியிருக்கும் 'நேரம் சரியாக' எனும் நூல். 


'நேரம் எல்லாம் ஒரு விஷயமா? கடிகாரத்தையோ, கைப்பேசியையோ பார்த்தால் தெரியப்போகிறதே?' என்று நினைத்தால், ஒரு நொடியையே பத்து பில்லியன் பங்குகளாகப் பிரித்து அளக்கும் நோபல் பரிசு வென்ற ஆராய்ச்சிக் குழு பற்றி அறிகையில் நேர அளவீட்டின் இன்றியமையாமையை உணர்ந்து திகைக்கிறோம். 


மனிதன் ஏன் நேரம் என்ற ஒன்றை உருவாக்கினான் என்ற அடிப்படைக் கேள்வியிலிருந்து தொடங்கி பல ஆச்சரியமான தகவல்களை அளிக்கிறது இந்நூல். 


2012 இல் நோபல் பரிசு வென்ற டேவிட் வைன்லேண்ட், ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார், “கடந்த 10 நூற்றாண்டுகளாக, நேரத்தின் துல்லிய அளவீடல் கூடக் கூட, புதிய பயன்பாடுகள் தோன்றிக் கொண்டே வந்துள்ளன. அடுத்த துல்லிய அளவீட்டிற்காக எந்த பயன்பாடு காத்திருக்கிறதோ!”. 


அவர் கூற்றிற்கேற்ப, நேரத்தை நிழலின் நீளத்தைக் கொண்டு அளக்கத் தொடங்கிய மனித சமூகம், எண்ணெய் எரித்தல், தண்ணீரைக் கலன்களில் பாய்ச்சுதல், கண்ணாடிகளில் மணல் இரங்கச் செய்தல், உலோகச் சுருள், ஊசல் முறை எந்திரம் தொடங்கி இன்றைய அணுக் கடிகாரம் வரை படிப்படியாக நேர அளவீட்டின் துல்லியத்தை அதிகரிக்க அதிகரிக்க, புதுப்புது  கண்டுபிடிப்புகளும் பயன்பாடுகளும் உருவாவதை ஆச்சரியத்தோடு உணரலாம். 


இரவு பகல் மாற்றத்தை அறிந்து வாழ்வை வடிவமைக்க நேர அளவீட்டை உருவாக்கிய முன்னோர், அதன் துல்லியம் பெருக பெருக, வழிபாடு, விவசாயம், வியாபாரம், கடற்பயணம், படையெடுப்பு, வான் ஆய்வு, அணு ஆராய்ச்சி என அனைத்திற்கும் பயன்படும் நவீன கருவிகளை உருவாக்கும் விந்திய மிகு வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும்.


இத்தகைய நவீன தொழில்நுட்பக் கருவிகள், அறிஞர்கள், போர்த் தளபதிகள் போன்றோருக்குப் பயன்படுவதோடு நில்லாமல், சாமான்யர் பயன்படுத்தும் மின்சாரம் முதல் ஜி.பி.எஸ் வரை சென்று அடைந்திருப்பது அனைவரும் இதன் இன்றியமையாமையைக் குறித்து அறிந்திருப்பதை உணர்த்துகிறது. 


தற்போது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு ஒரு நொடி என்ற நேர அளவீட்டுத் துல்லியத்தை அடைந்துள்ள  நாம், அணு பௌதிகம் மூலம்,  துல்லியத்தை மேலும் பத்து மடங்கு அதிகரிக்கும் இலக்கைக் கொண்டிருப்பது, மனித சமூகம் வெகு சீக்கிரம் அடையவிருக்கும் அதி அசுர அறிவியல் வளர்ச்சியையே சுட்டுகிறது. 


இதன் மூலம், நம் முன் விஸ்வரூபமாய் நிற்கும் பருவநிலை மாற்றங்கள், இயற்கைச் சீரழிவு, தண்ணீர் தட்டுப்பாடு, நோய்த் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு நாம் முற்றிலும் எதிர்பாராத இடங்களிலிருந்து தீர்வுகள் வந்தாலும் வியப்பதற்கில்லை.


இவ்வனைத்தையும் எளிமையாக விளக்குவதோடு, நவீன வாசகர்கள் காட்சி வடிவிலும் வசதியாகப் புரிந்து கொள்ளும் வகையில் பொருத்தமான யூட்டியூப் காணொளிகளையும், அறிஞர்களின் முக்கிய உறைகளின் சுட்டிகளையும் தந்திருப்பதன் மூலம், மாணாக்கரின் அறிவியல் தாகத்தைத் தூண்டி மேலும் இதன் சமகால முன்னேற்றங்களைத் தொடரும் உத்வேகத்தையும் அளித்துள்ளார் ஆசிரியர். 


விஞ்ஞானத்தின் பயன்பாட்டிற்கேற்ப ஆசிரியர் ஆங்காங்கு உருவாக்கி உபயோகிக்கும் தமிழ்க் கலைச்சொற்கள், தமிழ் மட்டும் வாசிக்கும் வாசகர்களிடமும் நவீன அறிவியலைக் கொண்டு சேர்ப்பதோடு நம் தாய்மொழியிலேயே அனைத்தையும் கற்று புரிந்துகொள்ளும் சாத்தியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


இவ்வாறு மனித முன்னேற்றத்தின் மந்திரச் சாவியாய் திகழும் துல்லிய நேர அளவீடு குறித்து மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள நூலைக் கீழ்காணும் சுட்டியில் இலவசமாகவே தரவிறக்கம் செய்து படிக்கலாம். 


இந்நூலோடு, அறிவியல் சிந்தனைகள் குறித்த ‘விஞ்ஞானச் சிந்தனையின் வளர்ச்சி’ என்ற நூலையும், நவீன அணு ஆராய்ச்சி குறித்த ஆசிரியரின் ‘விஞ்ஞான முட்டி மோதல்’ என்ற நூலையும், “மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?” என்ற நூலையும் சேர்த்து வாசிப்பது அறிவியல் குறித்த முழு புரிதலை கொடுக்கவல்லது. 


இந்நான்கு நூல்களும் இலவசமாகக் கீழ்காணும் ‘freetamilebooks’ தளத்தில் கிடைப்பதோடு ஆசிரியரின் இதர அறிவியல் கட்டுரைகளும் ‘சொல்வனம்’ வலைத்தளத்தில் தொடர்ந்து பதியப்படுகிறது. 


free tamil ebooks சுட்டி : 


நேரம் சரியாக....


ஆசிரியரின் அனைத்து கட்டுரைகளும் அடங்கிய சொல்வனம் வலைத்தளச் சுட்டி 


சொல்வனம்


நட்புடன்,


இரா. அரவிந்த்


10 கருத்துகள்:

 1. வாசகம் :   பழி வாங்கத் துடிப்பதில்லை என்றாலும் மன்னித்து விடுவது உண்டு.  வேறு வழி?!!!   ஆனால் மறப்பதில்லை.  அதிபுத்திசாலி இல்லை என்றாலும் நம் நிம்மதிக்காக அந்த இடத்தை விட்டு விலகி விடுவதும் உண்டு!

  புத்தகம் நல்ல அறிமுகம்.   தரவிறக்கிக் கொண்டேன்.  எப்போது படிப்பேனோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
   நூலை முடியும்போது வாசியுங்கள்.

   நீக்கு
 2. அருமையான நூல் மதிப்புரை. ஆசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் சார்.

   நீக்கு
 3. நல்ல புத்தகம். வித்தியாசமாகவும் இருக்கிறது. தரவிறக்கம் செய்து கொண்டேன்.

  அரவிந்த் அழகா சொல்லிருக்கீங்க. வாழ்த்துகள். மிக்க நன்றி

  வாசகம் அருமை வெங்கட்ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. அருமையான அறிமுகம். சிறப்பான கட்டுரை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....