திங்கள், 17 ஜனவரி, 2022

கதம்பம் - சினிமா - பயணம் - விழிப்புணர்வு - நூல் மதிப்புரை - கோலங்கள் - மின்னூல் அட்டைப்படம் - போகி ஸ்பெஷல்

  

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

இந்த உலகில் மனிதனின் தேவைக்குப் போதுமான அளவு வளமுள்ளது; அவனின் பேராசை அளவுக்கு வளங்கள் இங்கில்லை - மஹாத்மா காந்தி.

 

******

 

சினிமா - அழியாத கோலங்கள்:


 

எழுத்தாளர் கெளரிசங்கருக்கு அவர் எழுதிய 'மோகனப் புன்னகை' என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படுகிறது. அதை பெறுவதற்காக டெல்லிக்கு கிளம்புகிறார். அவருக்கான பயண ஏற்பாடுகளை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்ளும் மனைவி சீதா! இருவருக்குமிடையே  அன்பால் பிணைக்கப்பட்ட பந்தம்!

 

வாழ்க்கையே வெறுத்து உடல்நிலை மோசமான நிலையில் படுக்கையில் இருக்கும் மோகனா! சட்டென்று தன்னை சீர்படுத்திக் கொண்டு, விதவிதமான உணவுகளை சமைத்து வைத்து காத்திருக்கிறாள். சாகித்ய அகாடமி வாங்கிய கையோடு அங்கே வருகிறார் எழுத்தாளர் கெளரிசங்கர்.

 

கல்லூரி நாட்களுக்குப் பிறகான 24 வருடக் கதைகளை இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கல்லூரியில் உதித்த காதலை வெளியே சொல்ல தயங்கியதால் விடுபட்டு போன தங்கள் வாழ்வை எண்ணி சிந்திக்கின்றனர். 

தன்னை எழுத வைத்த மோகனாவின் '24 மணிநேரமாவது என்னோடு இருக்கணும்' என்ற ஆசையை இத்தனை வருடங்கள் கழித்து நிறைவேற்றிய சந்தோஷம் கெளரிசங்கருக்கு. 24 வருடங்கள் கழித்தும் தன்னை சந்திக்க வந்தவரை நினைத்து மகிழ்ச்சி கொண்டாள் மோகனா!

 

இந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட இல்லை. மாரடைப்பில் கெளரிசங்கர் மடிய, செய்வதறியாது சிலையாகிப் போனாள் மோகனா. அவரவருக்கு தெரிந்த விதத்தில், புரிந்த விதத்தில் இந்த பரிசுத்தமான நேசத்தை கதைகளாகப் பேச தவித்துப் போனாள் மோகனா.

 

இந்த நிலையில் தான் அங்கே வந்தாள் சீதா. தன் கணவனின் மரணத்தை தாண்டி இவர்களிடையேயான பந்தத்தை எப்படி எடுத்துக் கொண்டாள் என்பது தான் கதை! பிரகாஷ்ராஜ், ரேவதி, வீடு அர்ச்சனா இவர்களின் நடிப்பில் வெளியான 1:30 மணிநேர திரைப்படத்தை நேற்று எதேச்சையாக பார்க்க நேர்ந்தது.

 

சலசலப்பு இல்லாத அமைதியான ஓடை போல் நகர்ந்த கதை. மனதை விட்டு நீங்க நெடுநேரமானது. வாய்ப்பு கிடைத்தால் பாருங்களேன்.

 

******

 

அவரும் நானும் - பயணங்கள்: 

சமீபத்தில் ஒரு இரவு என்னிடம் பேசிக் கொண்டிருந்த  டெல்லித்தோழி, சமீபத்தில் தன் கணவருடன் சென்று வந்த வைஷ்ணவ் தேவி மற்றும் டல்ஹெளசி பயணத்தைப் பற்றி சிலாகித்து சொல்லிக் கொண்டிருந்தார்.

 

ஓஹோ! ஓஹோ! என்று மட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

 

இந்த இடத்தில் என்னவராக இருந்திருந்தால்...!!

 

எப்போ போயிட்டு வந்தீங்க?

 

எங்க தங்கினீங்க?

 

எப்போ தரிசனம் செய்ய முடிந்தது?

 

ஸ்னோ ஃபால் இருந்ததா?

 

நான் முதன்முறையா போன போது இப்படியெல்லாம் இருந்தது!

 

இதுவரைக்கும் நான் மூணு தடவ போயிருக்கேன்! 16 கிமீ நடக்கணும்! தேவி நம்மள கூப்பிடாம போக முடியாது!

 

ஜெய் மாதா தி! ஜெய் மாதா தி!ன்னு சொல்லிண்டே போவாங்க!

 

திரும்பப் போகணும்! 

 

என்று அந்த உரையாடல் கேள்விகளும், அனுபவ பேச்சுமாய் இருந்திருக்கும் என்று யோசிப்பது கூட அவரைப் பற்றிய என்னுடைய புரிதல் தான் இல்லையா!

 

******

 

தீநுண்மி - விழிப்புணர்வு: 

 

முகக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவர்!

 

கடைகளில் தென்பட்ட கும்பல்!

 

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின் கோவிலுக்கு கும்பல் கும்பலாக செல்லும் சுற்றுலாவாசிகள்!

 

இதை எல்லாம் பார்க்கும் போது

 

தனி மனித இடைவெளியா?? அப்படின்னா! ! கொரோனாவா!?

 

அதெல்லாம் எங்க சொந்தபந்தம் மாதிரிங்க! ஒண்ணா மண்ணா பழகிக்கிட்டு இருக்கோம்! நாங்க பார்த்துக்கறோம்! நீங்க கவலைப்படாதீங்கன்னு சொல்வது போல தான் இருந்தது!

 

ஆனால்! உண்மை அதுவல்லவே! அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம். கூடிய விரைவில் நோய்த்தொற்றை வேரறுப்போம்! 

 

******

 

அவரும் நானும் - ரிஷபன் ஜி மதிப்புரை 

'அவரும் நானும்' தொடரை மின்னூலாக்கலாம் என்ற எண்ணத்தோடு அதற்கான எடிட்டிங் வேலையில் ஈடுபட்டுள்ளேன். மிகுந்த தயக்கத்துடன் தான்  நூலுக்கான மதிப்புரை எழுதித் தர இயலுமா என்று இருவரைக் கேட்டிருந்தேன்.

 

அதில் ஒருவர் தான் நம் ரிஷபன் சார். ஆயிரம் சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருந்தாலும் எந்த பகட்டும் இல்லாத, பழக மிகவும் எளிமையான மனிதர். இந்த பத்து வருடங்களில் ஒரே ஊரில் இருந்ததில் பார்த்திருக்கிறேன். மிகுந்த ஆர்வத்தோடு அழகான மதிப்புரையை எழுதித் தந்து 'இது போதுமா!' என்று கேட்டார்!

 

இதோ அந்த மதிப்புரையிலிருந்து சில வரிகள் மட்டும் இங்கே..

 

அவரும் நானும்! 

 

நான் குருஜியாய் மதிக்கிற ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது என் ஆன்மீக அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். புன்னகையோடு கேட்டவர் கடைசியாகச் சொன்னார். எல்லார்கிட்டேயும் சொல்லிகிட்டு இருக்காதீங்க. என்னையும் சேர்த்து. பகவானுக்கும் உங்களுக்கும் உள்ள அந்தரங்கம் இது. ரொம்ப இதைப் பத்தி பேசிகிட்டுருந்தா அனுபவங்கள் குறைஞ்சுரும்

 

மணமானதிலிருந்து ஒவ்வொரு கால கட்டத்திலும் நிகழ்ந்தவை, இவரது உணர்வுகள், இருவருக்கும் படிப்படியாய் வளர்ந்த புரிதல்.. இது ஓர் அழகான கையேடு புது மணமக்களுக்குத் தரக் கூடிய பரிசாய். தெற்கிலிருந்து வடக்கில் குடித்தனம் வைத்த புது சூழலில் அவரது அனுபவங்கள், அவற்றை ஏற்றுக் கொண்ட விதம் எல்லாமே அனுபவ பாடங்கள்.

 

வெங்கட்டை அப்படியே படம் பிடித்த எழுத்து. தராசுத் தட்டு அதன் நியாயத்திலிருந்து மீறவில்லை. அவர் அப்படித்தான் என்று கேமிராவில் படம் பிடித்த எழுத்தை நான் மிகவும் சிலாகிக்கிறேன்.....

 

ரிஷபன்

 

விரைவில் 'அவரும் நானும்' தொடரை மின்னூல் வடிவில் காணலாம்.  அழகான மதிப்புரை எழுதித் தந்த ரிஷபன் சாருக்கு என் அன்பான நன்றிகள்.

 

******

 

மார்கழி - கோலங்கள் - நான்காம் ஐந்து: 

மார்கழி மாதத்தின் நான்காம் ஐந்து நாட்கள் எங்கள் வீட்டில் மகள் போட்ட கோலங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு!  

 

******

 

அவரும் நானும் - மின்னூல் - அட்டைப்படம்:


 

ஒரு கதையை கேட்கத் துவங்கும் போது அதிலிருக்கும் கதாப்பாத்திரங்களுக்கு கற்பனையில் நாமே ஒரு  முகத்தை உருவகப்படுத்திக் கொண்டு கதைக்குள் செல்வோம். பத்திரிக்கைகளில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு ஓவியர் தீட்டிய வண்ணமயமான முகத்தை மனதில் கொண்டு வாசிக்கத் துவங்குவோம்.

 

'அவரும் நானும்' தொடரில் வரும் இரு கதாப்பாத்திரங்களுக்கும் ஒரு  உருவத்தைக் கொடுத்தால், உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வாசிக்கப் போகும் வாசகருக்கு அது சுவாரசியத்தைத் தரும் என நினைத்தேன்!

 

என்னமோ நல்லா இருக்கும்னு தோனறது! இப்படி Caricature மாதிரி போடலாமா? ஒண்ணும் பிரச்சினை இல்லையேஎன்று வழக்கம் போல அவரிடம் பர்மிஷன் கேட்டுக் கொண்டேன்..🙂

 

இப்படி பண்ணனும்னு சொல்ற! அதுக்கேத்த மாதிரி உங்கிட்ட ஒழுங்கா ஒரு ஃபோட்டோக் கூட இல்லையா?? வேற ஏதாவது அனுப்பும்மா! இந்த பேக்ரவுண்ட் ஓகேவா?? பார்த்து சொல்லு! 

 

இது தம்பியிடமிருந்து..🙂

 

அம்மா! உனக்கு எல்லாத்திலயும் பிங்க் தான் வேணுமா! அதில என்ன இருக்கோ அது தானம்மா போட முடியும்! இந்த அட்டை ஓகேவான்னு பார்த்து சொல்லு! என்று முறைத்தாள் மகள்..🙂

 

இப்படி எல்லாரையும் தொல்லை செய்து புத்தகத்துக்கான அட்டை தயாராகி விட்டது! என்னமோ ஒரே ஒருவர் தான் வாசிக்கப் போகிறார் என்றாலும் இதற்காக மெனக்கெடணும் என்று தோன்றியது..🙂

 

அவரும் நானும் மின்னூல் விரைவில்....

 

******

 

போகிப் பண்டிகை - உணவுகள்:


 

போகிப் பண்டிகை!

 

இந்த நாளில் எதிர்மறையான எண்ணங்களை எல்லாம் விடுத்து நல்லதை மட்டும் நினைவில் கொள்வோம்.

 

இன்றைய தினத்துக்காக கடலைப்பருப்பு போளியும், பால் பாயசமும், முப்பருப்பு வடையும் செய்து நிவேதனம் செய்தேன்.

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

34 கருத்துகள்:

 1. எல்லாமே பேஸ்புக்கிலும் படித்தேன் என்றாலும் சுவையான கதம்பம்.  அழியாத கோலங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.  அவரும் நானும் மின்னூலுக்கு வாழ்த்துகள்.  மின்னூல் பற்றிய தயார்க்குறிப்புகள் சுவாரஸ்யம்.  திரு ரிஷபன் எழுதி இருக்கும் முன்னுரை அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. ஆதி அருமையான படம். பார்த்துவிட்டு என் மனது ரொம்ப நேரம் அதிலேயே இருந்தது. கதை அப்படியான கதை. கதை ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் எடுத்த விதத்தில் மட்டும் கொஞ்சம் சிறு ஏமாற்றம். கடைசி பார்ட் எடுத்த விதம் கொஞ்சம் ட்ரமாட்டிக்காக இருந்தது போல் தோன்றியது. மற்றபடி கதை அழுத்தமான கதை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழியாத கோலங்கள் படம் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்தமைக்கு நன்றி கீதா ஜி.

   நீக்கு
 3. அவரும்,நானும் மின்நூல் சிறப்புற வாழ்த்துகள்.

  கோலங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

  கொரோனா பயம் மக்களிடம் இல்லை என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரும் நானும் மின்னூல் விரைவில் வெளிவரும் கில்லர்ஜி. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. கொரோனா குறித்த பயம் மக்களிடம் இல்லவே இல்லை தான். பலர் இதுவும் கடந்து போகும் என நினைக்கலாம்.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  வாசகம் அருமை. கதம்ப பதிவும் நன்றாக உள்ளது. அழியாத கோலங்கள் படத்தை பற்றிய விமர்சனம் படம் பார்க்கச் சொல்கிறது.

  தோழியுடன் பயணம் பற்றிய "அவரும் நானும்.." புரிதல் பேச்சுகளை ரசித்தேன். வெங்கட் சகோதரரின் அந்தப் பதிவை படித்த நினைவு வந்தது.

  தீநுண்மி பற்றி விழிப்புடன் யாரும் இருப்பதில்லையோ எனத் தோன்றுகிறது. நாம் கவனமுடன் இருப்போம்.

  அவரும் நானும் மின்னூலுக்கு வாழ்த்துகள். ரிஷபன் சகோதரரின் சிறப்பான மதிப்புரையும், அழகான அட்டைப்பட தேர்வும் நன்றாக உள்ளது. விரைவில் வெளிவர இருக்கும் மின்னூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  தங்கள் மகள் ரோஷ்ணியின் கலர் கோலங்கள் அனைத்தும் கண்ணுக்கு நிறைவாய் உள்ளது. அவருக்கு வாழ்த்துகள்.

  போகியன்று செய்த பருப்பு போளி, பாயாசம், வடை அனைத்தும் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது.

  இன்றைய கதம்ப பகிர்வு அனைத்தையும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   கதம்பம் பதிவின் அனைத்து பகுதிகள் குறித்த தங்களது கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 5. நோய்த் தொற்று என்ன சொல்ல? மக்களுக்குப் பழகிவிட்டது. அதுவும் இப்போது புதிய வேரியஷனுக்கு அத்தனை பாதிப்பு இல்லை

  வைஷ்ணவ தேவி கோயில் பயணம் குறித்த வெங்கட்ஜி யின் உரையாடல் ஹாஹா நானும் அப்படியேதன. நான் போய்வந்த இடம் என்றால் உற்சாக்த்தில் பேசத் தொடங்கிவிடுவேன். போகாத இடம் என்றால் கூர்ந்து கேட்டுத் தெரிந்து கொள்வது வழக்கம். நெட்டிலும் உடனே பார்த்து தெரிந்து கொண்டுவிடுவது உண்டு!!

  //என்று அந்த உரையாடல் கேள்விகளும், அனுபவ பேச்சுமாய் இருந்திருக்கும் என்று யோசிப்பது கூட அவரைப் பற்றிய என்னுடைய புரிதல் தான் இல்லையா!//

  நிச்சயமாக! அதனால்தான் நீங்கள் அவருடைய பயணத்தைக் குறைவாக நினைப்பதில்லை. அவரது ஆர்வத்தை மதிக்கின்றீர்கள். வெங்கட்ஜியும் உங்கள் ஆர்வங்களை மதிக்கிறார். இதுதான் மிக மிக அவசியமான ஒன்று நல்ல புரிதல் உள்ள குடும்பத்திற்கு. பெர்சனல் விருப்பங்கள்/ஸ்பேஸ் மதிக்கப்படுதல். அதை நல்ல மனதோடு அட்ஜஸ்ட் செய்துகொள்ளல்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நோய்த்தொற்று குறித்த பயம் பலரிடமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது கீதா ஜி. பயணங்கள் எனக்குப் பிடித்தவையாக இருந்தாலும் பல சமயங்களில் பயணங்கள் முடிவதில்லை. நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? எவ்வளவு பயணிக்க முடிகிறதோ அவ்வளவு பயணிக்க வேண்டியது தான். பெரிதாக ஏமாற்றம் எனக்கு இல்லை.

   நீக்கு
 6. ரிஷபன் அண்ணாவின் மதிப்புரை செம. மிக அழகாக எழுதியுள்ளார். அவரது எழுத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன!!!! ஆதி! வாழ்த்துகள் பாராட்டுகள்!

  கோலங்கள் அழகாக இருக்கின்றன, போகி மெனு ஸ்ஸ்ஸ்ஸ் ஈர்க்கிறது!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரிஷபன் ஜி எழுதுவதற்கு சொல்லவா வேண்டும். அவர் எழுத்தினை ரசிக்கும் எண்ணற்றவர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியே....

   கோலங்கள் மற்றும் போகி மெனு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

   நீக்கு
 7. இன்றைய பகுதி நன்று.

  ரிஷபன் அவர்கள் எழுதியதில் முதல் பாரா மனதைத் தாக்கியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 8. முகநூலில் படித்தேன், மீண்டும் இங்கு படித்து மகிழ்ந்தேன்.
  அழியாத கோலங்கள் நானும் பார்த்தேன்.
  மகள் போட்ட கோலங்கள் அழகு.

  உங்கள் மின்னூல் அட்டை படம், அதற்கு ரிஷபன் சார் மதிப்புரை அருமை . வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகநூலிலும் இங்கேயும் பதிவின் வழி சொன்ன விஷயங்களை படித்து ரசித்தமைக்கு நன்றி கோமதி அம்மா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 10. கோலங்கள் அழகு. வாழ்த்துகள் . வழக்கம் போல் பல்சுவைப் பதிவு, நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி நாகேந்திர பாரதி. மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 11. அழியாத கோலங்கள்
  அவசியம் பார்ப்பேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 12. மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள். சிறப்பான மதிப்புரையை வழங்கியுள்ளார் திரு ரிஷபன். கோலங்கள் நேர்த்தியும் அழகும்! திரை விமர்சனம் அருமை.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் விரைவில் வெளிவரும் ராமலக்ஷ்மி. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 13. அவரும் நானும்....வாழ்த்துகள்.
  அழியாத கோலங்கள்..மனதை நெருடியது. இவ்வாறான சந்திப்புகளை எதிர்நோக்குபவர்களின் மனநிலையைக் கணிக்கவே முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 14. அன்பின் ஆதி,
  கதம்பம் மிகச் சிறப்பு. ஒரிஜினல் கதம்ப மாலை போல
  வெகு சிறப்பு.

  வெங்கட் அவர்களின் பயணங்களின் சுவையை உணர்ந்தவர்கள்
  நீங்கள் சொல்வதை அப்படியே
  ஆமாம் என்று ஏற்றுக் கொள்வார்கள்.

  அவரும் நானும் அட்டை மிக அழகு. இறைவன் உங்கள் இருவரையும் ஒரு சேர வைத்து

  நீங்கள் மிக சௌக்கியமாக வாழ வேண்டும்.
  குழந்தை ரோஷ்ணியின் வண்ணக் கோலங்கள் மிக மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா. மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 15. நீங்கள் சொல்லும் படம் முன்பே பார்த்து ரசித்திருக்கிறேன்.
  உங்கள் விமர்சனம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழியாத கோலங்கள் திரைப்படம் நீங்களும் பார்த்து ரசித்த ஒன்று என்பது அறிந்து மகிழ்ச்சி வல்லிம்மா.

   நீக்கு
 16. அழியாத கோலங்கள் பட விமர்சனம் அருமை. மார்கழி கோலங்கள் கலர்புலாக இருக்கின்றது. மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது மேலான கருத்துரை கண்டு மகிழ்ச்சி ராமசாமி ஜி. தொடர்ந்த தங்களது வருகைக்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 17. அழியாத கோலங்கள் படம் பார்திருக்கிறேன். கோலங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....