செவ்வாய், 4 ஜனவரி, 2022

அவரும் நானும் - தொடர் - பகுதி இருபத்தி மூன்று


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

SMILE - BECAUSE IT MAKES YOU ATTRACTIVE, IT LIFTS YOUR MOOD, IT RELIEVES STRESS AND IT HELPS YOU STAY POSITIVE.

 

******
 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று

பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு

பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு 

பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது பகுதி இருபது 

பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு

 

சென்ற பகுதியில் திருவரங்க நாட்களில் அவருடன் கடந்த பொழுதுகளைப் பற்றி சற்று பகிர்ந்து கொண்டிருந்தேன். உடல்நிலையும், குடும்பச் சூழலும் இருவரையும் திசைக்கொரு புறமாக  பிரித்தாலும்,  அதையே நினைத்துக் கொண்டிருக்காமல் துணிவுடன் நாங்கள்  அடுத்த கட்டத்துக்கு சென்ற விபரங்களை தான் இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன்.

 

திருவரங்கம் வந்தது முதல் அன்றாடம் மகள் பள்ளிக்குச் சென்று வருவதும், மாலை அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று ரங்கநாயகித் தாயாரையும், சக்கரத்தாழ்வாரையும் தரிசித்து விட்டு அங்கே மணல்வெளியில் மகளை விளையாட விட்டு வீடு திரும்புவதும் என் வாடிக்கையாயிற்று.

 

2010ல் அவர் எனக்காக ஒரு வலைப்பூ (blog) உருவாக்கித் தர மடிக்கணினியில் தட்டச்சு செய்து என்னுடைய அனுபவங்கள், சமையல் குறிப்புகள், வாசிப்பனுபவங்கள் என்று பதிவு செய்யத் துவங்கியிருந்தேன். அடுக்கடுக்காக என் சிந்தனையில் உருவான துளிகளை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

 

அவரே என் உலகமாக சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்த என்னால் இங்கு தனித்து ஏதேனும் செய்ய இயலுமா என்று தான் நினைத்தேன்! அவர் தந்த ஊக்கத்தால் சில மாதங்களுக்குப் பின் திருவரங்கத்து இற்றைகளை என் வலைப்பூவில் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். இங்கு சந்தித்த மனிதர்கள், பெற்ற அனுபவங்கள், கோவில், சமையல் என்று அனைத்தையும் எழுத்தாக்கினேன்.

 

அப்போது பக்கத்து வீட்டில்  வசித்த தோழி  ஒருவரின் உதவியால் துவங்கிய புத்தக வாசிப்பும், ஒவ்வொரு புத்தகமும்  வாசித்த பின் அந்த அனுபவங்களை எழுதுவதும் சாத்தியமாயிற்று. நூலகத்தில் எடுத்தும், இரவல் வாங்கியும் என் வாசிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். நூற்றுக்கணக்கான புத்தகங்களும், விரிவடைந்த எழுத்தாளர் பட்டியலும் என்னை மேம்படுத்திக் கொள்ள மிகவும் உதவியது.

 

அவரும் தன் பயணங்களை தொடர ஆரம்பித்தார். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வர வாய்ப்பு அமைந்தது. எங்கே சென்றாலும் அங்கேயிருந்து அவ்வப்போது அலைபேசியில் அழைத்து, தான் பார்த்து ரசித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வார். 

 

அங்கு எடுத்த புகைப்படங்களையும், தனக்கு கிடைத்த அனுபவங்களையும் பயணக் கட்டுரைகளாக எழுதி தன்னுடைய வலைப்பூவில் பகிர்ந்திடுவார். அவை பின்பு பல மின் புத்தகங்களாக உருவெடுத்தது. பயணம் என்றால் எல்லோரின் நினைவுக்கு வரும்  நபராக மாறி தனித்துவம் பெற்றார்.

 

மகள் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் சென்று வளர்ந்ததைப் போல காலத்தின் கட்டாயத்தால் ஆளுக்கொரு புறமாக இருந்த நாங்கள் இருவரும் எங்களுக்கான தனித்திறமைகளாலும், விருப்பங்களாலும் ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டு எங்களை மேம்படுத்திக் கொண்டோம்.

 

நான் அவரிடம் பேசலாம் என மனதில் நினைக்கும் நேரம் அவரிடமிருந்து வரும் அழைப்பும், இருவரும் ஒன்று போலவே சிந்திப்பதும், என்ன பேசினாலும் அவரோடு சம்பந்தப்படுத்தி பேசுவதும் என எங்களின் புரிதல் நாளுக்கு நாள் அதிகமாகியதே தவிர குறையவில்லை..🙂 

 

இன்னும் பல கதைகளை என் மனதில் ஒளித்து வைத்துள்ளேன். அவை அடுத்தடுத்த பகுதிகளில்..

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

14 கருத்துகள்:

 1. நீங்கள் இருவரும் இணைந்து ஒரே இடத்தில் இருக்கும் நாள் எப்போது என்று இவற்றைப் படிக்கும் எங்களுக்கு தோன்றுகிறதே, நீங்கள் இருவரும் எப்படி இதைக் கடக்கிறீர்கள்.  இதைச் சொல்லி உற்சாகத்தைக் குறைக்கக் கூடாது என்று தோன்றினாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  காலம் சீக்கிரம் கனியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனி என்ன இருக்கிறது என் வாழ்வில்! என்று தான் பலநாட்கள் தோன்றுகிறது..விரைவில் நிலை மாறும் என்ற நம்பிக்கையில் கடக்கிறது ஒவ்வொரு நாளும்!

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. உங்கள் இருவரின் புரிதலை பற்றி அழகாக சொல்லி வருகிறீர்கள். உங்கள் இருவருக்கும் எழுதும் ஆற்றல் ஒன்றாகவே கிடைத்திருப்பதும், அதை நீங்கள் இருவருமே நன்றாக பயன்படுத்தி வந்திருப்பதும் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இறைவனின் அருள் உங்களுக்கு ஒன்று போலவே கிடைத்துள்ளது எண்ணி பெருமையும் அடைகிறேன்.

  மகளுடன் தனித்திருந்தாலும், சகோதரரின் ஆலோசனைகளை நீங்கள் கேட்பதும், உங்களின் ஆசைகளை சகோதரர் நிறைவேற்றி வைப்பதுமாக நீங்கள் இருவரும் ஒரு ஆதர்சன தம்பதிகளாக வாழ்ந்து வருகிறீர்கள். இன்னமும் நிறைய வருடங்கள் இவ்விதமே சிறப்பாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து வர இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

   நீக்கு
 3. புத்தக வாசிப்பு பல எண்ணங்களை தடுக்கிறது... நல்லதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க தனபாலன் சகோ.

   நீக்கு
 4. நாங்கள் இருவரும் எங்களுக்கான தனித்திறமைகளாலும், விருப்பங்களாலும் ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டு எங்களை மேம்படுத்திக் கொண்டோம்.//

  இது மிக மிக அவசியமான ஒரு விஷயம் ஒரு குடும்பத்திற்கு. நல்ல விஷயமும் கூட ஒரு ஆரோக்கியமான உறவு.

  புத்தக வாசிப்பு அருமை ஆதி.

  நீங்கள் இருவரும் விரும்புவது நடக்க வேண்டும். நடக்கும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 5. வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் ஒன்று போலவே சிந்திப்பதும் புரிதலும் உங்கள் வாழ்க்கையை இனிதாக கொண்டு செல்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். புரிதலில் தான் வாழ்க்கை நகர்கிறது.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

   நீக்கு
 6. புரிதல்கள் சரியாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க கில்லர்ஜி சார்.

   நீக்கு
 7. அன்பின் ஆதி ,
  நலமுடன் இருங்கள்.
  ஒரு ஔதுவிதமான தாம்பத்யத்தைத் தொடர்ந்து
  மனம் தளராமல் நடத்தவே நல்ல மன உறுதி வேண்டும்.

  அதை இறைவன் இப்போது போல எப்பொழுதும் கொடுக்க வேண்டும்.

  வாழ்வின் சில பொறுப்புகளுக்குக் கணவரின்
  துணை மிக அவசியமாகிறது.
  அது உங்கள் இருவருக்கும் கடவுள் அருளால்
  கிடைக்க வேண்டும்.
  கிடைக்கும் என் ஆசிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "வாழ்வின் சில பொறுப்புகளுக்குக் கணவரின்
   துணை மிக அவசியமாகிறது."

   ஆமாம் அம்மா. உண்மை தான். தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....