வியாழன், 26 ஏப்ரல், 2012

அடர் பனியும் அதன் விளைவுகளும்



[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 1]


சில மாதங்களுக்கு முன் ”மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற தலைப்பில் நான் அங்கு உள்ள குவாலியர், ஷிவ்புரி, ஓர்ச்சா மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ஜான்சி போன்ற இடங்களுக்குச் சென்று வந்ததைப் பற்றிய பயணக் குறிப்புகளை 27 பகுதிகளாக எழுதியது எனது வலைப்பூவினைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். 

அதை முடிக்கும் போது சீக்கிரமே இன்னுமொரு பயணத் தொடரினை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.  இந்தத் தொடரிலிருந்து உங்களை மீண்டும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்.  கூடவே வருவீர்கள் தானே?

இம் முறை நான் சென்றது ஜபல்பூர் மற்றும் பா[B]ந்தவ்கர் என்ற இரண்டு இடங்களுக்கு. அலுவலகப் பணிகளுக்கென ஒரு மாதம் பயிற்சி வகுப்புகள் இருந்தது. அதன் நடுவில் நான்கு நாட்கள் நேரடியாக சில கிராமங்களுக்குச் சென்று நலத்திட்டங்கள் எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவும், இந்திய தேசத்தின் இயற்கை மற்றும் வனங்களின் வளத்தை பார்க்கவும் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

11-ஆம் தேதி [ஜனவரி] அன்று மாலை 04.00 மணிக்கு தில்லியின் ‘ஹஸ்ரத் நிசாமுதீன்” ரயில் நிலையத்திலிருந்து ஜபல்பூர் வரை செல்லும் ‘மஹா கௌஷல்’ விரைவு வண்டியில் நாங்கள் அனைவரும் [மொத்தம் 35 பேர்] செல்ல முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ரயில் நிலையம் செல்வதற்கு முன் மதியம் சுமார் 02.30 மணிக்கு தொலைபேசியில் ரயில் சரியான நேரத்திற்குக் கிளம்புகிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள அழைத்தபோது இரவு 09.00 மணிக்குத் தான் கிளம்பும் என்றார்கள். [கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னைப் பயணத்தின் போதும் இப்படித்தான் நீண்ட நேரம் கழித்தே கிளம்பியது…  நமக்கு அப்படி ஒரு ராசி!] அதன் பிறகு அப்படியே தள்ளிப் போடப்பட்டு 11.00 மணிக்குத்தான் கிளம்பும் எனத் தெரிந்தது.

தில்லி மற்றும் வட இந்திய நகரங்களில் பெரும்பாலும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இருக்கும் அடர்பனியும், பனிமூட்டமும் விமான, ரயில் போக்குவரத்தினை ரொம்பவே பாதிக்கும். எத்தனை விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டாலும்  இயற்கையின் முன் நாம் எல்லோரும் தோற்றே விடுகிறோமோ என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். அது உண்மைதான் என்று நினைக்கும்படி செய்தது அன்றைய நிகழ்வு.

மாற்றப்பட்ட பயண நேரம் நிறைய விஷயங்களை மாற்றியது. வகுப்பிலிருந்தே நேராக ரயில் நிலையம் செல்ல வேண்டுமென காலையிலேயே பெட்டியுடன் எல்லோரும் வகுப்புக்குச் சென்றோம். நேரம் மாறியதால் திரும்பவும் வீட்டிற்கு வந்து இரவு மீண்டும் கிளம்பி ரயில் நிலையம் சென்றேன். சற்றேறக் குறைய எட்டு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியதால் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு நல்ல விஷயமும் இருந்தது. 

அது என்ன நல்ல விஷயம் என்று கடைசியில் சொல்கிறேன்…  :) இந்தப் பயணத்தின் போது நான் எடுத்த சில புகைப்படங்களை கீழே கொடுத்துள்ளேன் ஒரு முன்னோட்டமாக…








என்ன புகைப்படங்களைப் பார்த்து ரசித்தீர்களா? நன்றி. அதெல்லாம் சரி அந்த நல்ல விஷயம் என்ன என்பதை மேலும் காலம் தாழ்த்தாது சொல்லி விடுகிறேன். எங்கள் அனைவருக்குமே 3-AC-இல் தான் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். நேரம் கடந்து வண்டி புறப்பட்டதாலோ என்னவோ, முன்பதிவு செய்த நிறைய பேர் தங்களது பயணத்தினை இரத்து செய்துவிட்டதால் என்னுடைய பயணச்சீட்டினைச் சேர்த்து 8 பேர்களுடைய பயணச்சீட்டு 2-AC – க்கு மேம்படுத்தப்பட்டது.

பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது “Do you want to be upgraded?” என்று கேட்டு ஒரு வரி இருக்கும். ஒவ்வொரு முறையும் அதை TICK செய்தாலும் இதுவரை நடந்ததே இல்லை…  :( 

ஆனால் இம் முறை மேம்படுத்தப்பட்டதால், 2-AC-இல் நானும் மற்ற 7 நபர்களும் பயணம் செய்தோம். சுகமான பயணம்.  மத்தியப் பிரதேச சுற்றுலா துறையினர் தான் இந்தப் பயணத்தினை ஏற்பாடு செய்தார்கள். சென்ற பயணத்தின் போது எங்களுடன் வந்த திரு ரோஹித் பட்நாகர் அவர்களே இந்த முறையும் வந்தார். பயணத்தின் போது வேளாவேளைக்கு தேவையான உணவு, தண்ணீர், தேநீர் என எல்லாவற்றிற்கும் முன்னேற்பாடு செய்திருந்தார். நல்ல படியாக பயணம் முடிந்து 12-ஆம் தேதி மாலை 07.00 மணி அளவில் ஜபல்பூர் சென்றடைந்தோம். 2-AC-இல் பயணம் செய்தாலும் பயண முடிவில் ஒரு விஷயம் நடந்தது! அது...

அடுத்த பகுதியில்...

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


பின்குறிப்பு-1: 20.04.2012 வெள்ளி அன்று வல்லமையில் வெளிவந்தது.


பின்குறிப்பு-2: இது எனது 250-வது பதிவு. இத்தனை பதிவுகளுக்கும் வருகை புரிந்து, கருத்தளித்து, என்னை தொடர்ந்து ஆதரிக்கும் வலையுலக நட்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!



திங்கள், 23 ஏப்ரல், 2012

விகடன் வலையோசையில் - என் வலைப்பூ

அன்புள்ள வலையுலக நண்பர்களுக்கு,

எனது வலைப்பூவினை சென்ற வார [18.04.2012] ஆனந்த விகடன் - “என் விகடன்” [புதுச்சேரி] புத்தகத்தில் வலையோசை பகுதியில் அறிமுகம் செய்து எனது வலைப்பூவிலிருந்து இரண்டு இடுகைகளையும் பிரசுரித்திருக்கிறார்கள்.


உங்களுடன் இந்த இனிய செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி.

கீழே அந்த பக்கத்தினை போட்டு இருக்கிறேன்.


மீண்டும் சந்திப்போம்...



நட்புடன்



வெங்கட்.
புது தில்லி.


ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

அப்பா...





”எத்தனை தடவை ஒரே கேள்வியைக் கேப்பீங்க? கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?” என வயதான அப்பாவைப் பார்த்து நீங்கள் கேட்டதுண்டா? அப்ப இந்த காணொளியைப் பாருங்க! [சிலர் முன்பே இந்த காணொளியைப் பார்த்திருக்க முடியும்! ரிஷபன் சாருடைய வலைப்பூவில்.]




தன்னுடைய மகனின் கனவினை/ஆசையைத் தீர்த்து வைக்க, ஒரு அப்பா என்னவெல்லாம் செய்வார் என உங்களால் உணர முடியுமா? பாருங்களேன் இந்த காணொளியை!


”சரி இன்னிக்கு எதுக்கு இப்படி அப்பா பற்றிய காணொளிகள் போடறீங்க?” என்ற கேள்விக்கு பதில்....

இன்று எனது அப்பாவிற்கு 74-ஆவது பிறந்த நாள். தனது குழந்தைகளின் நலனுக்காக தன்னுடைய பல கனவுகளை மண் தோண்டி புதைத்துவிட்டு குழந்தைகளுக்காகவே தனது வாழ்நாளினைக் கழித்த அப்பாவுக்கு, நீண்ட ஆயுளையும் மன மகிழ்ச்சியையும் எல்லாம் வல்லவன் அளிக்கட்டும்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா!

வெங்கட்
புது தில்லி


புதன், 18 ஏப்ரல், 2012

வல்லவனுக்கு கேரட்டும் புல்லாங்குழல்….


நம்ம காய்கறி வாங்க மார்க்கெட் போனா பல காய்கறி வாங்கிட்டு வருவோம். வீட்டுக்கு வந்து அதை வைத்து சமையல் செய்வோம் இல்லைன்னா பச்சையா சாப்பிடுவோம். ஆனா இவங்களைப் பாருங்க காய்கறிகளை வைத்து அற்புதமான இசை தருகிறார்கள்.

The Vegetable Orchestra என்பது வியன்னாவில் இருக்கும் ஒரு இசைக்குழு. 1998 – ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு இதுவரை மூன்று இசை ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

திரு ஆர்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வலைப்பூவில் இந்தக் குழுவினரின் ஒரு காணொளி பார்த்தவுடன் இணையத்தில் இவர்களைப் பற்றிய விவரங்களைத் தேடினேன். இவர்களைப் போலவே நிறைய குழுவினர் இப்போது காய்கறிகளை வைத்து இசை விருந்து தருகிறார்கள். நான் பார்த்ததை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இப்பகிர்வு.

இந்த வித்தியாசமான இசையைக் கேட்டு இன்புறுங்கள்.


மற்றுமொரு காணொளி உங்கள் பார்வைக்கு!


என்ன நண்பர்களே வித்தியாசமான இசையை ரசித்தீர்களா?

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



வெள்ளி, 13 ஏப்ரல், 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்



அறுசுவையும் கலந்த மாங்காய் பச்சடி எடுத்துக்கொள்ளுங்கள்......




அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நந்தன வருடம் நல்லவற்றை அள்ளி அள்ளித் தரட்டும்.


நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்

புது தில்லி