சமீபத்தில்
“எங்கள் பிளாக்”-ல் ”நல்ல பாம்பு” என்று ஒரு பதிவினை எழுதி இருந்தார். அந்தப் பதிவில் நான் இப்படி பின்னூட்டம் அளித்திருந்தேன்.
அட நாகராஜன் உங்க வீட்டுக்கு வந்தாரா.... சொல்லவே இல்லை :) அதான் இப்ப
சொல்லிட்டேனேன்னு சொல்லப்படாது!
நெய்வேலியில்
நிறைய பாம்பு அனுபவங்கள்... கையால் பிடித்த கதையெல்லாம்
இங்கே சொன்னால் அடித்து விடுவார்கள்.... :)
இந்த பதிலைப் பார்த்துட்டு வல்லிம்மா “@ வெங்கட் உங்கள் நல்ல அனுபவங்களைச் சொல்லவும்.:)” அப்படின்னு கேட்க, ஒருத்தர் நம்ம கிட்ட கேட்டா, உடனே
சொல்லாம விட்டுடலாமா? அதான் இந்தப் பதிவு.
ஒரு நாள்
நெய்வேலியில் அதிகாலையில் எழுந்து பேஸ்டும் – பிரஷும் கையுமா வீட்டை விட்டு வெளியே
வந்தேன். வீட்டைச் சுத்தி தோட்டத்தினைப் பார்த்தபடியே பல்துலக்குவதில் இருக்கும்
ஆனந்தம் வாஷ்பேசின் முன் கண்ணாடி பார்த்து பல்துலக்கி, நம்ம மூஞ்சிய நாமே பார்த்து
பயப்படுவதில் இல்லை. அப்படியே வெளியே வந்தா ஒரு பாம்பு அடிச்சு போட்டு இருக்கு.
‘அடடா ராத்திரியோட ராத்திரியா யார் வீட்டுலயோ இதை கைமா பண்ணிட்டாங்கன்னு
நினைச்சுக்கிட்டே வீட்டுக்குள் வந்து காபியை குடித்தபடியே யார் வீட்டுலயோ ராத்திரி
பாம்பு வந்திருக்குன்னு சொன்னேன்.
சொல்லி
வாயை மூடல, அதுக்குள்ள பொட்டுன்னு பொடரில ஒரு அடி – யாருன்னு பார்த்தா எங்கப்பா!
“யார் வீட்டுலயோ அடிச்சாங்களாம்!, அப்படி என்னடா ஒரு கும்பகர்ண தூக்கம் உனக்கு?"
அப்படின்னு கேட்டார். சினிமாவுல
மட்டும்தான் Flash Back காமிக்கணுமா என்ன. நானும் மோட்டுவளைய பார்க்கறேன் – அட Flash Back சொல்லதான்!
ராத்திரி
ஐயா தூங்கிட்டேன். வீட்டுல அத்தை பாட்டி [அம்மாவோட அத்தை] மட்டும் சமையல் அறையில்
வேலை செய்து கொண்டிருக்க, அப்பா, சகோதரிகள் எல்லாரும் தூக்கத்தைத் தழுவ
முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிறிது
நேரத்தில் தங்கை நடுக்கூடத்தில் தூங்க, அப்பா, மூத்த சகோதரி படுக்கை அறையில் தூங்கி
விட்டனர். அம்மா, பெரியம்மாவோடு பன்ரூட்டி சென்றிருந்தார் – அடுத்த வாரம் நடக்க
வேண்டிய பூஜைக்கு ஏற்பாடு செய்ய.
சமையலறையில்
வேலை செய்து கொண்டிருந்த அத்தைப் பாட்டிக்கு தங்கை தூங்கிக்கொண்டிருந்த அறையில்
ஏதோ மினுமினுவென தென்பட்டிருக்கிறது. ”என்னன்னு புரியலையே” என்று யோசித்தபடியே,
சத்தமில்லாது வந்து கூடத்தில் விளக்கை போட்டுப் பார்க்க, தங்கை தலைமாட்டில் “நல்ல
பாம்பு” படமெடுத்து நின்று கொண்டிருக்கிறது. என்ன வேகம் வந்ததோ தெரியாது – தங்கையின் காலைப்
பிடித்து ஒரு இழு, அவள் நேரே சமையலறையில்...
எழுந்து உட்கார்ந்து “நான் எப்படி இங்க வந்தேன்” என முழித்துக்
கொண்டிருந்தாள்.
அத்தைப்
பாட்டி மெதுவாக அப்பாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல, பாம்பு அங்கேயே இருந்தது. “நாகராஜா, சமத்தா போயிடுப்பா, பாலும் பழமும்
கொடுக்கறேன்” என்று எங்க அப்பா நாகராஜன் பாம்பு கிட்ட டீலிங் பேச, நாக ராஜனுக்கு அந்த டீலிங் பிடித்தது போல! வாயில் கதவு இடுக்கு வழியே வெளியே வந்தது.
வந்தது நேரா அதோட வீட்டுக்குப் போகக் கூடாதோ, நேரே வராண்டால இருக்கற திண்ணைக்குக்
கீழே போய் அடைக்கலம் ஆயிடுச்சு.
தலைவருக்குப்
பின்னாடியே போகிற தொண்டர்கள் மாதிரி, அப்பா, அத்தைப் பாட்டி, சகோதரிகள் எல்லாம்
பின்னாடியே வராண்டாவுக்கு வந்து பாம்போடு பேச்சுவார்த்தை நடத்த, சத்தம் கேட்டு
பக்கத்து வீட்டு சாமிநாதன் அண்ணன் வந்து விஷயம் தெரிந்து கையில் கழி எடுத்து
பாம்பை அடித்து வெளியே போட்டு விட்டார்! இத்தனை விஷயம் நடந்து ஏரியாவே எழுந்து
பாம்பு கதை பேசிருக்கு. ஆனா ஐயா மட்டும் தூங்கிட்டே இருந்திருக்கேன். அப்படி ஒரு
கும்பகர்ண தூக்கம். அதே பாம்பு தான் நான்
காலையில் பார்த்தது! அதைக் கேட்டு அடி வாங்கியது.
அது சரி, ”கையால் பிடித்த கதையெல்லாம் இங்கே
சொன்னால் அடித்து விடுவார்கள்....
:)” அப்படின்னு சொல்லிட்டு தூங்கின கதைய சொல்றீங்க! எனக்
கேட்பவர்களுக்கு, அதெல்லாம் சப்பை மேட்டர்...
:) காலையில கேட்டு திறக்க, கை வச்சேன் ஒரு நாள் – வழக்கத்தை விட கேட்
வழவழன்னு இருக்க, என்னன்னு தடவிப்பார்த்தா, பாம்பார் கேட் மேலே தாச்சிண்டு தூச்சிண்டு
இருக்கார். தடவிக்கொடுத்தது சுகமா இருந்ததோ என்னமோ ”புஸ்... புஸ்...” சத்தம் கொடுக்க, அப்படியே
பிடிச்சு தூக்கிப் போட்டுட்டேன்! ”அப்புறம் அதிர்ச்சியில அப்படியே
சிலையா நின்னுட்டேன்” என்பது உங்களுக்கும்
எனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அதை யாருகிட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்!
இன்னும் சில பாம்பு கதைகள் என் பக்கத்தில் முன்பே
எழுதி இருக்கேன். விருப்பமிருந்தால்
அதையும் படிக்கலாம்.
வேறு சில
நெய்வேலி அனுபவங்களோடு அடுத்த ‘மனச் சுரங்கத்திலிருந்து” பகுதியில்
சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.