புதன், 12 ஜூன், 2013

பிரம்ம சரோவர் [ரத்த பூமி பகுதி 2]


சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று சில படங்களை ரத்த பூமி – ஒரு புகைப்பட முன்னோட்டம் என்ற தலைப்பில் வெளியிட்டு அடுத்த பயணத் தொடர் புதன் கிழமை ஆரம்பிக்கப் போவதாக எழுதியிருந்தேன். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமல்லவா....  இதோ பயணத் தொடரின் இரண்டாம் பகுதி.



பிரம்ம சரோவர் – ஒரு காட்சி

ஒரு நாள் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஏப்ரல் 6-7 தேதிகளில் குருக்ஷேத்திரம் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு உன் பெயரையும் கொடுத்துவிட்டேன் என தகவல் சொன்னார். சரி இன்னொரு முறை போயிட்டு தான் வருவோமே, அதுவும் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி இருக்கப் போவதால், சற்றே நிதானமாக பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கலாம் எனத் தோன்றியது.

வெள்ளிக்கிழமை இரவே தில்லியிலிருந்து நான்கு பேருந்துகளில் குருக்ஷேத்திரப் பயணம் தொடங்கியது. நான்கு பேருந்துகள் எனில் எங்கள் குழுவில் எத்தனை பேர்கள் இருப்பார்கள் என நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள், ஏன்னா கணக்குடன் எனக்குப் பிணக்கு! இரவு 10 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி இரண்டு மூன்று இடங்களிலிருந்து வேறு சிலரை ஏற்றிக் கொண்டு தில்லி எல்லையை அடைவதற்குள் 11.45 மணி. இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் தான் எல்லையைக் கடப்பது இந்த பேருந்து ஓட்டுனர்களுக்குப் பழக்கம் – ஏனெனில் இரவு பன்னிரெண்டு மணியிலிருந்து தான் நாள் கணக்கு தொடங்கும். 11.45 எனில் இரண்டு நாட்களுக்கு வரி வாங்கி விடுவார்கள். அப்படி இப்படி என தில்லி எல்லையைக் கடக்கும் போது இரவு 12.30 மணி. அந்த நடு இரவிலும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு “உறங்கா நகரம்” எனத் தோன்றியது.

தில்லியிலிருந்து குருக்ஷேத்திரம் கிட்டத்தட்ட 160 கிலோ மீட்டர். தில்லியிலிருந்து பாக்பத், சோனிபத், பானிபத், கர்னால் போன்ற இடங்களைக் கடந்து சென்றால் இரண்டரை முதல் மூன்றரை மணி நேரத்தில் நீங்கள் குருக்ஷேத்திரத்தினை அடைய முடியும்.  தொந்தரவில்லாது சுகமான பயணம் முடிந்து காலை 4 மணிக்கு குருக்ஷேத்திரம் சென்றடைந்தோம்.


 ஜாட் மஹா சபா – விடுதியின் ஒரு பகுதி


குருக்ஷேத்திர நகரம் முழுவதும் பல தங்கும் விடுதிகள், சத்திரங்கள் என பரவியிருக்கிறது. அதுவும் சிறிய விடுதிகள் அல்ல, பெரிய பெரிய விடுதிகள். ஒரே இடத்தில் 200-300 அறைகள் கொண்ட விடுதிகள் கூட உண்டு. கொடுக்கும் காசுக்கேற்ப அறைகள் கிடைக்கும் – 300 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை அறைகள் இருக்கின்றன.  ”ஜாட் மஹா சபா” என்ற ஒரு அமைப்பு இப்படி ஒரு மிகப் பெரிய தங்கும் விடுதியைக் கட்டி வைத்திருக்கிறது. பிரம்ம சரோவருக்கு மிக அருகிலேயே இருப்பதால் இங்கே தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள் பயணத்தினை ஏற்பாடு செய்திருந்தவர்கள். சற்றே இளைப்பாறிவிட்டு பிரம்ம சரோவரில் குளிக்க, காலார நடந்து சென்றோம்.

குருக்ஷேத்திரம் – கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த மஹாபாரதப் போர் நடந்த இடம், கிருஷ்ணர் கீதோபதேசம் உரைத்த இடம், அர்ஜுனனுக்கும், பீஷ்மருக்கும் விஸ்வரூபம் காண்பித்த இடம் எனப் பல இடங்களை தன்னுள் கொண்ட ஊர். புராணங்களில் இடம் பெற்ற இந்த ஊர் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. பிரம்ம தேவர் குருக்ஷேத்திரத்திலிருந்து தான் ஒரு பெரிய யாகத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலையே தொடங்கினார் என சில புராணக் கதைகளும் இருக்கின்றன.

வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து போனபடியே இருக்கும் இடம் இது. அதுவும் மௌனி அமாவாசை [ஜனவரி – ஃபிப்ரவரி மாதங்களில், அதாவது தை மாதத்தில் வரும் அமாவாசை நாள்] மற்றும் சூரிய கிரகண நாட்களில் இங்கே லட்சக்கணக்கில் வந்து தங்கி, பிரம்ம சரோவரில் குளித்து தங்களது பாபங்களைப் போக்கிக் கொள்வதற்காக வருகிறார்கள். தெரியாது செய்த பாபங்களைத் தான் போக்கிக் கொள்ள முடியுமே தவிர, தெரிந்தே பல பாபங்கள் கணக்கில் வராது! இந்த பிரம்ம சரோவரில் குளிப்பது அஸ்வமேத யாகம் செய்த பலன் தரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

பிரம்ம சரோவர் – கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் முன்னோர்களான ”குரு” எனும் அரசனால் உருவாக்கப்பட்டது. படைப்புக் கடவுளான பிரம்மா தனது முதல் யாகத்தினை இங்கே தான் செய்தார் எனச் சொல்லப்படுகிறது.  இது ஒரு மிகப் பெரிய குளம். 1800 அடி நீளமும் 1400 அடி அகலமும் கொண்டது இந்த பிரம்ம சரோவர்.  குருக்ஷேத்திரக் குளம், சமந்த பஞ்சகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இக்குளத்தில் இருக்கும் தண்ணீர் சரஸ்வதி நதியிலிருந்து உருவாக்கப்பட்டது என்ற கதையும் உண்டு.



வாழ்க்கையில் மட்டுமல்ல,,,,
குளத்திலும் வழுக்கி விழுந்து விடக்கூடாது

எந்த நேரத்திலும் இங்கே குளித்தபடி இருக்கிறார்கள். நாங்கள் சென்ற காலையிலும் நிறைய மக்கள் – குளத்தினைச் சுற்றிலும் படித்துறைகள் இருப்பதால் நிதானமாக குளிக்கலாம். என்ன கொஞ்சம் கவனமாக இறங்க வேண்டும் – படிகள் முழுவதும் பாசி. ஆங்காங்கே வழுக்கி விழும் ஆபத்து இருக்கிறது என எழுதி வைத்திருக்கிறார்கள். தண்ணீரில் இறங்கும்போது ஏப்ரல் மாத கோடையிலும் தண்ணீர் ஜில்லென்று சுகமாக இருக்கிறது. சுகமான ஒரு குளியல்.....  காவேரி நதியில் குளித்த அனுபவம் நினைவுக்கு வந்தது. அகண்ட காவேரி தற்போது வறண்ட காவேரியாக மாறி இருப்பதை நினைத்து வருத்தம் தான் மிஞ்சியது.

பிரம்ம சரோவர் பற்றிய மேலும் சில விவரங்கள், அங்கே கண்ட காட்சிகளோடு ரத்த பூமி தொடரின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 10 ஜூன், 2013

கஸ்தூரி பாட்டி


ஒரு சில பேரை பார்த்தாலே பிடிச்சு போகிற மாதிரி இருக்கும். சிலரைப் பார்க்கும்போதே ஒரு வெறுப்பு மனசுல தோணும். இது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவான விஷயம் தானே. அப்படி முதல் தடவை பார்க்கும்போதே பிடிக்காத ஒரு மனுஷி தான் இந்த கஸ்தூரி பாட்டி. இதுக்கும் அவங்க யாரு, என்ன, சொந்தமா, பந்தமா ஒண்ணுமே தெரியாது. இதுக்கு முன்னாடி பார்த்ததும் இல்லை. ஆனா ஏனோ பார்த்த உடனே பிடிக்காது போனது.

எங்க பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்திலே இருக்காங்க இந்த கஸ்தூரி பாட்டி. கணவன் சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட, குழந்தைகள் இல்லாத பாட்டி ஒரு தனிக்கட்டை! சொத்துபத்துன்னு பெரிசா ஒண்ணும் இல்லை. கஸ்தூரி பாட்டியோட புருஷன் ஒரு ஆசாரி. மர வேலை பார்த்து தான் அவங்களோட பொழப்பை ஓட்டிட்டு இருந்தாங்க. கிடைக்கிற காசுல ஒண்ணும் பெரிசா சேர்த்து வைக்க முடியல. அன்னாடங்காய்ச்சி பொழப்பு தான்.

தனக்குன்னு புள்ளை குட்டி இல்லைன்னாலும், தம்பி, மைத்துனன், அக்கா, தங்கச்சின்னு உறவு முறை எல்லாம் உண்டு. அவங்களும் புள்ள குட்டிகளோட நல்லா இருக்காங்க. அவங்களோட வந்துடச் சொன்னாலும் ஏனோ கஸ்தூரி பாட்டிக்கு அது சரியா படல. அதனால “என் உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் நான் உழைச்சு தான் சாப்பிடுவேன்னு” ரொம்ப பிடிவாதமா இருக்கா.

அரசாங்கம் மாசா மாசம் ஆயிரம் ரூபாய் முதியோர் ஓய்வூதியம் தருது. அதுதான் முக்கிய வருமானம். அக்கம் பக்கத்து வீடுகள்ல வாச தெளிச்சு கோலம் போடுறது, துணி தோய்க்கிறது, வயல்ல களை புடுங்க போறது, மாங்கா தோப்பு, வாழைத்தோப்புகள்ல வேலை செய்யறதுன்னு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கா கஸ்தூரி பாட்டி! செய்யற வேலைகள்ல அப்படி ஒரு சுத்தம். யாரும் ஒரு குறை சொல்லிடக் கூடாதுன்னு வேலைல ஒரு முனைப்பு உண்டு.

அரிசி மில் ஒன்றில் கூட்டி பெருக்கற வேலையும் செய்யறதுல ஏதோ மாசத்துக்கு 100-200ன்னு கிடைக்குது. அங்கேயே இருக்கற சின்ன மூலைல தன்னோட பாத்திரம் பண்டம், துணிமணி எல்லாம் வச்சுக்கிட்டு இருக்கும். பெரிசா ஒண்ணும் இல்ல மொத்தமா ஒரு சாக்கு மூட்டைல கட்டற அளவு தான் சாமான்செட்டல்லாம். அந்த மூலைலயே கொஞ்சமா மண் எடுத்து வந்து தானே மொழுகி செஞ்சு வச்சிருக்கிற விறகடுப்பு. யாரு கிட்டயும் சோத்துக்குப் போய் நிக்கக்கூடாதுன்னு தனி ஆளுக்கு சமைச்சு சாப்பிடுற ஆளு கஸ்தூரி பாட்டி.

வயசுன்னு பார்த்தா எப்படியும் 65-70 இருக்கும். ஆனா இப்பவும், காலைல நாலு-நாலரைக்கா எழுந்து வீட்டு வாசல்ல [அந்த மூலைதான் பாட்டியைப் பொறுத்தவரைக்கும் வீடு] தண்ணி தெளிச்சு, கோலம் போட்டுட்டு, எங்க பெரியம்மா வீட்டுலயும் வாசல் தெளிச்சு கோலம் போட்டுடுவாங்க பாட்டி. ஏதோ கொடுக்கற வேலையெல்லாம் செஞ்சுட்டு போவாங்க. யாருகிட்டயும் எதுவும் சாப்பிட வாங்கிக்காத பாட்டி குழம்பு, ரசம் வாங்கிக்கறது எங்க பெரியம்மா கிட்ட மட்டும்தான்.

பாட்டிக்கு சாயங்கால வேளைல பொழுது போகணுமே. அதனால பெரியம்மா வீட்டுக்கு வந்து ஒரு ஓரமா உட்கார்ந்து டி.வி.ல போடற ஒரு சீரியல் விடாம பார்ப்பாங்க. கரண்ட் இல்லைன்னா ”கரண்ட் காரன் கட்டைல போக, இப்படி நல்ல நேரத்துல புடுங்கிட்டானே”ன்னு ஒரு திட்டு வேற! சீரியல் பார்ப்பாங்கன்னு தானே சொன்னேன். ஏன்னா அவங்களுக்கு சுத்தமா காது கேக்காது. ‘காது காது’ன்னா ‘லேது லேது’ன்னு சொல்றவங்க!

”நாங்க பேசறதெல்லாம் கேட்கலையே, சீரியல இப்படி விழுந்து விழுந்து பார்க்கறயே பாட்டி”ன்னு கேட்டா பொக்கை வாயில் ஒரு சிரிப்பு. கொஞ்ச நேரம் கழிச்சு சொல்வாங்க “நான் பேசறது எனக்கு நல்லாத்தானே கேட்குது, அப்புறம் நீங்க எல்லாரும் எனக்கு காது கேட்கலை”ன்னு பொய் சொல்றீங்க! கஸ்தூரி பாட்டி போட்டாங்களே ஒரு போடு.

அட ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். கஸ்தூரி பாட்டிங்கறது அவங்களோட உண்மையான பேர் இல்ல. நாங்க வைச்ச பேருதான். தொடர்ந்து “கஸ்தூரி” சீரியல் நேரத்துக்கு கரெக்டா பெரியம்மா வீட்டுக்கு வந்து பார்த்ததனால என்னோட துணைவி அவங்களுக்கு வெச்ச பேரு தான் கஸ்தூரி பாட்டி. அவங்களோட உண்மையான பேரு என்னன்னு நானும் இது வரைக்கும் கேட்கல, அவங்களும் சொல்லல!

பெரிய சம்பாத்தியம்னு ஒண்ணும் இல்லைன்னாலும், கிடைக்கிற காசுல, செலவு போக கொஞ்சம் பணம் சேர்த்து வச்சுருக்காங்க கஸ்தூரி பாட்டி. எதுக்குன்னு கேட்டா சொல்றாங்க, ”செத்தா செலவுக்கு வேணுமே, இருக்கும்போதே யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிற நான், செத்து யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது இல்லையா?”.  உண்மை தான்.

உருவம் பார்த்து யாரும் நல்லவங்களா, கெட்டவங்களான்னு முடிவு பண்ணக்கூடாது. எல்லார் கிட்டயும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும்னு புரிய வைச்ச பாட்டி கஸ்தூரி பாட்டி.... அதான் திருவள்ளுவர் அன்னிக்கே சொல்லி இருக்காரே....

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

படித்துப் புரியாதது அனுபவத்தில் தானே புரிகிறது!



இவங்க தான் கஸ்தூரி பாட்டி. என் மகள் ரோஷ்ணி அவங்கள புகைப்படம் எடுக்கணும்னு தானே எடுத்த படம்!

என்ன நண்பர்களே, பதிவினைப் படித்து ரசித்தீர்களா....  மீண்டும் வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 9 ஜூன், 2013

ரத்த பூமி – ஒரு புகைப்பட முன்னோட்டம்




மஹா கும்பமேளா பயணம் பற்றிய தொடர் முடிந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. அடுத்த பயணம் பற்றிய பதிவுகள் எதுவும் இல்லையா என சில நண்பர்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் [நிஜம்மாதாங்க! நம்புங்க….  இல்லைன்னா அளுதுருவேன்!]. அடுத்த பயணத்தொடரின் முன்னோட்டமாக இந்த ஞாயிறன்று சில படங்களோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

தொடர்ந்து சில ஞாயிறுகளாக படங்களும் வெளியிடுவதில்லை. பதிவுகள் எழுத முடியாத அளவில் பிடுங்க வேண்டிய ஆணிகள் அதிகமாகிவிட்டது! அதுவும் நான் ஆணி பிடுங்க, பிடுங்க, பக்கத்திலேயே வேறொருவர் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறார்! முதல்ல அவர் கையில் இருக்கற ஆணிகளையும், சுத்தியலையும் பிடுங்க வேண்டும்! சரி போதும் சொந்த புலம்பல்கள்! இன்றைய படங்களைப் பாருங்கள்…..  எந்த இடம், சென்று பார்த்தது என்னன்ன என்பதை வரும் புதன் கிழமை அன்று தொடங்கும் பயணத்தொடரில் சொல்கிறேன். அதுவரைக்கும் பொறுமையோடு காத்திருக்கணும் சரியா!












படங்கள் எங்கே எடுத்தது? ”ரத்த பூமி எனத் தலைப்பில் சொல்லிவிட்டு போட்டிருக்கும் படங்கள் பார்த்தால் அப்படி தோன்றவில்லையே?” எனக் கேட்போருக்கு, சற்றே காத்திருங்கள்!

வேறொரு புகைப்படப் பகிர்வில் அடுத்த ஞாயிறன்று உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.