சனி, 4 மே, 2019

காஃபி வித் கிட்டு – ஒரு ஜோடி கால்கள் – நோடா – விளம்பரம் - பகோடா - உழைப்பாளி



காஃபி வித் கிட்டு – பகுதி – 31



அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.  அடி மேல் அடி வைத்து நடக்கும் ஒரு ஜோடி கால்களில், முன்னால் இருக்கும் கால், ”நான் முன்னே இருக்கிறேன் என பெருமிதம் கொள்வதில்லை! பின்னால் இருக்கும் காலும் பின்னால் இருக்கிறோமே என வெட்கப் படுவதில்லை” இரண்டு கால்களுக்குமே தன் நிலை மாறி மாறி தான் வரும் என்பது தெரியும். அந்தக் கால்களைப் போலவே நம் வாழ்விலும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும், போகும்! கவலை கொள்ளாமல் இருப்போம்!

படித்ததில் பிடித்தது – தேர்தலும் நோடாவும்:

சார் ! என்ன சாப்பிடுறீங்க? இட்லி ?

சீ. அது கார்போஹைட்ரேட்!

தோசை?

சீ! ஆயில்

பொங்கல்?

அது மயக்க மருந்து!!

பூரி?

சீச்சி! அது மைதா! உடம்புக்குக் கெடுதி

அப்ப உப்புமா?

அதை மனுஷன் சாப்புடுவானா?

அப்ப என்னதான் சார் ஆர்டர் பண்ணப் போறீங்க?

எல்லா உணவுமே கெடுதி! நான் பட்டினி கிடக்கப் போறேன்! வர்றேன்.

#நோட்டாவிற்கு வாக்களித்தவர் ஓட்டலுக்குச் சென்று காலை உணவு அருந்திய போது!!

இந்த வாரத்தின் ரசித்த பாடல்:

சமீபத்தில் ரசித்த ஒரு ஹிந்தி பாடல் – கேட்டுப் பாருங்களேன்.




சாப்பிட வாங்க – சூடா பகோடா:



மலைப் பிரதேசம் ஒன்றில் பயணித்த போது சாப்பிட்ட பகோடா… மேலே வெங்காயம், கொத்தமல்லி தழைகள், சாட் மசாலா தூவி மேலே இரண்டு பச்சை மிளகாய் வைத்து கொடுக்க பகோடாவும் தேநீரும்! மலைப் பிரதேசத்தில் ரொம்பவே சுவையாக இருந்தது. கடைக்காரர் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம் – அது பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்! இப்போதைக்கு பகோடா சாப்பிடுங்க! என்ன மிளகாய் தான் கொஞ்சம் காரம் அதிகம்! பார்த்து! ஒரு கடி கடிச்சுட்டு எரியுதுன்னு சொல்லக் கூடாது!

மனதைத் தொட்ட ஒரு விளம்பரம்:

சிலருக்கு, குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு - எப்போதுமே வேலை இருந்து கொண்டே இருக்கும்! அவர்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம் எனச் சொல்லும் ஒரு விளம்பரம் – உண்மையில் அப்படி பலரும் யோசிப்பதில்லை என்றாலும், ரசிக்க முடிந்தது…



இந்த வார வலைப்பூ அறிமுகம் – எண்ணத்தின் வண்ணங்கள்:

திருமதி ராதா பாலு – நான்கு வலைப்பூக்களில் அவ்வப்போது எழுதி வருகிறார். வை.கோ அவர்களின் வலைப்பூவில் இவரை பார்த்திருக்கலாம். அவரது சில பதிவுகள் வாசித்ததுண்டு. கோலங்கள், எண்ணத்தின் வண்ணங்கள், என் மன ஊஞ்சலில், அறுசுவைக் களஞ்சியம் என நான்கு வலைப்பூக்களில் எழுதுகிறார். இந்த வார அறிமுகமாக எண்ணத்தின் வண்ணங்கள் வலைப்பூவிலிருந்து ஒரு சிறுகதைக்கான இணைப்பு… படித்து ரசிக்கலாமே!


இந்த வாரத்தின் கதை மாந்தர்:



வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள், சுக-துக்கங்கள் வரலாம். ஆனாலும் வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆக வேண்டும். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குப் பாடமாக தந்து செல்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தின் வனப் பகுதி ஒன்றில் அமர்ந்து வனத்தில் கிடைக்கும் மரத்திலிருந்து ஒரு சிறிய கோடரி கொண்டு விதம் விதமான பொம்மைகளும், பொருட்களும் செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார் இந்தப் பெரியவர். பெரிதாக யாரும் வந்து விடப் போவதில்லை. விற்பனையும் அதிக அளவில் ஆவதில்லை – அன்றைய பொழுது கழிய தேவையான பணம் கிடைத்தாலே பெரிது. ஆனாலும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார் இப் பெரியவர். நிறைய விஷயங்களைச் சொல்லும் இந்த முகம் – உங்களிடம் என்ன சொன்னது – சொல்லுங்களேன் பின்னூட்டத்தில்!



என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

வெள்ளி, 3 மே, 2019

ஜார்க்கண்ட் உலா – மும்தாஜுடன் ஒரு பயணம்


 மும்தாஜுடன் ஒரு பயணம்...

சில நாட்களுக்கு முன்னர் எழுதிய தோசா ப்ளாசா பதிவில் எங்களுக்கு அமைந்த ஓட்டுனர் குல்தீப் எனும் இளைஞர் பற்றி எழுதி இருந்தேன். ரொம்பவே விளையாட்டுப் பிள்ளை – ஓடி ஓடி செல்ஃபி எடுப்பதும், வண்டியை விட்டு எங்களுடன் எல்லா இடங்களுக்கும் வருவதும் என எங்களை விட அப்பயணத்தினை அதிகமாகவே ரசித்தார். அடுத்த நாள் காலையில் ஏழரை மணிக்கு வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றார் – சரி வண்டி ஏற்பாடு செய்த நண்பரிடம் காலை பேசிக் கொள்ளலாம் என இருந்தோம்.

வியாழன், 2 மே, 2019

சாப்பிட வாங்க – மட்டர் பனீர் - சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் பூ


பனீர் – இதை நம் ஊரில் என்னவோ பன்னீர் என்று சொல்கிறார்கள்! பன்னீருக்கும் பனீருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு! வேற்று மொழி வார்த்தையை நம் மொழியில் எழுதும்போதும், பேசும்போதும் இப்படி நிறைய தடுமாற்றங்கள்!

புதன், 1 மே, 2019

அலுவலக அனுபவங்கள் – தொலைந்து போன மாலா



ஒரு பரபரப்பான வெள்ளிக்கிழமை மாலை நேரம். அந்த வாரத்தின் மீதமிருந்த எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டிய சூழலில் பிரிவிலிருந்த அனைவருமே அவரவர் இருக்கையில் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியான சூழலில் தான் மாலா தொலைந்து போனது தெரிந்தது. முதல் நாள் வரை இருந்த மாலா, வெள்ளிக்கிழமை அன்று இல்லை!