செவ்வாய், 16 ஜூன், 2015

சாப்பிட வாங்க: சான்வி!





ஆங்கிலத்தில் Sandwich என்பதைத் தான் தவறுதலாக தமிழில் சான்விஎன்று எழுதி விட்டேனோ என்று குழம்ப வேண்டாம் நண்பர்களே.  இன்று நாம் பார்க்கப் போகும் ஒரு இனிப்பின் பெயர் தான் இந்த சான்வி. இதற்குபர்வல் கி மிட்டாய்என்ற பெயரும் உண்டு. இந்த இனிப்பு பெரும்பாலும் பீஹார்/ஜார்க்கண்ட் மாநிலத்தில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகை. 

எங்கள் அலுவலகத்தில் பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு இளைஞர் சில மாதங்களுக்கு முன்னர் சேர்ந்திருக்கிறார். அவரது அன்னை கிராமத்திலிருந்து இந்த வாரம் தில்லிக்கு மகனைப் பார்ப்பதற்காக வந்தார். அப்படி வரும்போது கிராமத்திலிருந்து செய்து எடுத்து வந்திருந்த இனிப்பு தான் இந்த சான்வி எனப்படும் பர்வல் கி மிட்டாய். நிறையவே எடுத்து வந்திருந்த காரணத்தினால் அலுவலகத்திற்கும் கொண்டு வந்து எங்களுக்கும் கொடுத்தார். பார்க்கும்போது “எப்படி இருக்குமோ? என்ற எண்ணம் இருந்தாலும் சாப்பிட்ட பிறகு இன்னும் ஒன்று கிடைக்குமா? என்ற கேள்வி மனதிற்குள் பிராண்டியது!



முதலில் பர்வல் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்! இது ஒரு காய்கறி. தமிழகத்தில் இந்த காய்கறி கிடைப்பதாகத் தெரியவில்லை. புடலங்காய், பாவக்காய் போன்று இதுவும் “Gourd” வகையைச் சார்ந்தது. பார்க்க, கோவைக்காய்க்கு பெரியக்கா மாதிரி இருக்கும்! இந்த காய்கறியை சப்ஜி/பொரியலாக சமைத்துச் சாப்பிடுவதுண்டு.  ஆனால் இதிலும் இனிப்பு செய்யலாம் என்பது இப்போது தான் தெரிந்தது! சரி எப்படிச் செய்ய வேண்டும் என பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

பர்வல் – 250 கிராம் [தோலெடுத்து, குறுக்கே வெட்டி [துண்டு பட்டுவிடாமல்], உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
கோயா/மாவா – 1 கப்
சர்க்கரை – 1½ கப்
பச்சை ஏலக்காய் பொடி – ¼ ஸ்பூன்.
பாதாம் – 10 [உடைத்தது]
பிஸ்தா – 10 [உடைத்தது]
பால் பவுடர் – 2 ஸ்பூன்.
ஆப்பசோடா -  1 சிட்டிகை
குங்குமப்பூ – சில இதழ்கள்.
Silver Warq – அலங்காரம் தேவையெனில்!

எப்படிச் செய்யணும் மாமு?

முதலில் பர்வல் உள்ளே வைத்து Stuff செய்ய கோயாவை மிதமான சூட்டில் வதக்க வேண்டும். மிருதுவாக ஆனதும் அதில் அரை கப் சர்க்கரையைச் சேர்த்து வதக்கவும்.

மீதி இருக்கும் சர்க்கரையில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் மெல்லிய பாகாக செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வதங்கிய கோயாவில் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி அதில் உடைத்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா ஆகியவற்றை கலக்கவும். அதில் பால் பவுடரையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.

ஒரு வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஆப்ப சோடா சிறிதளவு சேர்த்து வெட்டி வைத்திருக்கும் பர்வல்களை வேக வைக்கவும். இரண்டு மூன்று நிமிடங்களில் வெந்து விடும். பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு, அவற்றை தயாரித்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு சூடு செய்யவும். நன்கு வெந்த பிறகு அவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.

பிறகு தயாரித்து வைத்திருக்கும் கோயாவினை வெட்டி வைத்திருக்கும் பகுதிகளில் Stuff செய்யவும்.  ஒவ்வொரு பர்வல் மீதும் குங்குமப் பூவினைத் தூவி, தேவையெனில் Silver Warq கொண்டு அலங்கரிக்கலாம். அதன் பிறகு நன்கு குளிர வைத்து [Fridge-ல்] வைத்து சாப்பிட்டுப் பாருங்கள்! வாவ்! என்னவொரு சுவை!என்று நிச்சயம் நீங்களும் சொல்வீர்கள். 

பர்வல் கிடைக்கவில்லையே என்று சொல்லக் கூடாது. கிடைக்கும்போது செய்து பாருங்கள்! இல்லையெனில் பீஹார் பக்கமாகச் செல்லும்போது மறக்காமல் இந்த சான்வி என்று அழைக்கப்படும் பர்வல் கி மிட்டாய் நிச்சயம் சாப்பிட்டுப் பாருங்கள்!

அடுத்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் வேறு ஒரு அனுபவம் பற்றிப் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

திங்கள், 15 ஜூன், 2015

பைஜ்னாத் [அ] வைத்யநாதன்!



தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 20

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

 பயணித்த சாலை..... ஆஹா என்னவொரு அழகு

சென்ற பகுதியில் சொன்னது போல Dhauladhar Zoo பார்த்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்திற்குச் சென்றோம். அந்த இடம் ஒரு புராதனமான சிவன் கோவில்.  [B]பைஜ்னாத் மந்திர் என அழைக்கப்படும் அக்கோவில் Dhauladhar Zoo-விலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  மிருகக் காட்சி சாலையில் இருந்த மிருகங்களைப் பார்த்து விட்டு, அவை சிறையில் அடைபட்டிருக்கும் நிலை பற்றிய எண்ணங்களுடனே பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் கண்ட அருமையான காட்சிகள் சிலவற்றை கண் பார்த்தாலும் மனம் இன்னும் அந்த மிருகங்களையே நினைத்துக் கொண்டிருந்தது.

 பிரசாதம் விற்கும் பெரியவர்

அவற்றுக்கு ஏன் இந்நிலை என்ற எண்ணத்துடனேயே கோவிலை சென்றடைந்தோம். கோவில் வாசலிலேயே ஒரு பெரியவர் தள்ளாத வயதிலும் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நமது ஊர் போல, வடக்கில் இருக்கும் கோவில்களில் பிரசாதங்கள் இருப்பதில்லை. சர்க்கரை மிட்டாய்கள், உலர் பழங்கள் போன்றவை தான் பெரும்பாலும் ஆண்டவனுக்கு படைப்பார்கள். எந்த இடத்தில் என்ன கிடைக்கிறதோ அதையே ஆண்டவனுக்குப் படைப்பது தானே நல்லது.  அந்த பெரியவரும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை மிட்டாய் பிரசாதங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.


 தலைக்கு வைக்கும் குஞ்சலமோ இல்லை எனில் [dh]துப்பட்டாவோ!

பெரும்பாலும் நான் கோவிலுக்குச் செல்லும் போது எந்த விதமான பிரசாதமோ, அர்ச்சனை தட்டுகளோ வாங்குவதில்லை.  என்னுடன் வருபவர்கள் வாங்கி அர்ச்சனை செய்வது மட்டும் தான். ஏனோ இந்தப் பெரியவரிடம் வாங்க வேண்டும் எனத் தோன்றவே ஒரு சர்க்கரை மிட்டாய் பை ஒன்றை பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டேன்.  அவருக்கு விற்பனை ஆன மகிழ்ச்சி, எனக்கு ஏதோ ஒரு பெரியவருக்கு உதவி செய்த திருப்தி.

 மலையடிவாரத்தில் இப்படி ஒரு வீடு அமைந்து விட்டால்!

மேலே நடந்து கோவிலின் அருகே சென்றோம். பக்தர்கள் அதிக அளவில் இல்லை என்றாலும் அப்போது தான் வந்திருந்த பேருந்து ஒன்றிலிருந்து சில பள்ளிச் சிறுவர்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அனைவரையும் அழைத்து வந்த ஆசிரியர்கள் ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்க நாங்கள் முன்னேறினோம்.

 எத்தனை பெரிய கல்லாக இருந்தாலும் உருட்டிக்கொண்டே சென்று விடுவேன்.....  ஆனாலும் இப்போது தண்ணீர் கொஞ்சமாகவே இருக்கும் ஒரு ஆறு!

உள்ளே நுழையுமுன்னர் அக்கோவில் பற்றிய தகவல்களை பார்க்கலாம். பிந்துகா எனும் நதிக்கரையில் அமைந்திருக்கிறது இக்கோவில். ராஜா ஜெயச்சந்திரா என்பவர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்றாலும் 1783-ஆம் ஆண்டு கோவிலில் சில புனரமைப்பு வேலைகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் கிடைத்ததாக தெரிகிறது.

 கோவில் வெளிப்புறத்திலிருந்து எடுத்த ஒரு புகைப்படம்.

மலைகளின் அழகு ஒரு பக்கத்தில் இருக்க, கோவிலின் சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்களின் அழகு உங்களை நிச்சயம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு இருக்கும். சிவபெருமான் தான் இங்கே முக்கிய தெய்வம் என்றாலும் சுற்றுச் சுவர்களில் மற்ற தெய்வங்களுக்கும் இங்கே சிற்பங்கள் உண்டு.  இக்கோவிலில் வீற்றிருக்கும் லிங்க வடிவமான சிவபெருமானுக்கும் ஒரு கதை சொல்கிறார்கள். 

 அழகிய சிலை ஒன்று - என்னவொரு ஒய்யாரப் படுக்கை!

சிவபெருமானின் மிகச் சிறந்த பக்தனான ராவணன் கைலாச பர்வதத்தில் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தது மட்டுமன்றி,  ஒரு பெரிய யாகமும் செய்தாராம். சிவ பெருமானின் அருளைப் பெற தனது பத்து தலைகளையும் கொய்து யாகக் குண்டத்தில் போட்டு விட்டாராம். அவரது தவத்திலும், அவர் செய்த யாகத்திலும் மகிழ்ந்த சிவபெருமான் ராவணுனுக்கு தலைகளை மீண்டும் வரச் செய்தது மட்டுமின்றி, யாராலும் அழிக்க முடியாத வரங்களையும் கொடுத்தாராம்.

 சிதிலமடைந்த சிவன் -  பார்வதி சிலையொன்று.

அது மட்டும் போதாது என்று சொல்லி, சிவபெருமானையும் தன்னுடனேயே இலங்கைக்கு அழைத்துச் செல்ல விரும்பினாராம் ராவணன். அவனது வேண்டுகோளுக்கு இணங்கிய சிவபெருமான் லிங்க ரூபம் கொள்ள, ராவணன் அதனை எடுத்துக் கொண்டுச் சென்று கொண்டிருந்தாராம். வழியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டியிருந்ததால் இப்போதைய பைஜ்னாத் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் கீழே வைத்து விடாதே என்று சொல்லிக் கொடுத்துச் செல்ல, சிவலிங்கத்தின் பாரம் தாங்காது அங்கேயே வைத்துவிட்டாராம் அந்த இளைஞர்.

 ஒரு செங்கல் அளவு இருக்கும் இக்கல்லில் எத்தனை நுணுக்கமான வேலைப்பாடு....

அந்த சிவலிங்கத்தினை எடுத்துச் செல்ல முடியாததால் அங்கேயே கோவில் அமைத்ததாகவும் ஒரு கதை உண்டு.  பின்னர் வந்த மன்னர்களால் புனரமைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். மிகவும் பழமையான கோவில் என்பதை நீங்கள் பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடியும். பிரம்மாண்டமான இக்கோவில் தற்போது தொல்பொருள் இலாக்காவின் வசம் இருக்கிறது.


 இதுவும் ஒரு சிறிய அளவு கல்தான். அதில் எத்தனை நகாசு வேலைகள்

பொதுவாகவே வடக்கில் தசரா திருவிழா சமயத்தில் “ராம் லீலாகொண்டாடுவார்கள்.  அப்போது ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேக்நாத் ஆகிய மூவரின் உருவ பொம்மைகளை எரித்து ராவண தகனம் என்று கொண்டாடுவார்கள்.  ராவணனின் சிவபக்தியை மெச்சும் இந்த ஊரில் ராவண தகனம் கொண்டாடப்படுவதில்லையாம்.

 சிதிலமடைந்த மற்றொரு சிலை

கோவிலில் இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.  சில சிற்பங்களை பார்க்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், காலத்தின் பிடியில் சிக்கி அழிந்த நிலையில் இருக்கும் பல சிற்பங்களைப் பார்க்கும் போது அவற்றை பாதுகாத்து வைக்க தவறிவிட்டார்களே என்றும் தோன்றியது.  சில சிற்பங்களின் பகுதிகள் உடைந்த நிலையில் இருப்பதைப் பார்க்கவே மனதை ஏதோ செய்தது.

 கோவில் இன்னுமொரு தோற்றம்

சிவபெருமானை தரிசனம் செய்து பிரகாரத்தில் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து ரசிக்கலாம் என்று பிரகாரத்தில் வலம் வந்தோம். அப்பப்பா எத்தனை சிற்பங்கள், பிள்ளையார், முருகர், ஹரிஹரன், பிரம்மா என நிறைய சிற்பங்கள்.  ஒவ்வொரு சிற்பங்களும் நுணுக்கமான முறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அக்கால சிற்பிகளின் திறமை நம்மை வியக்கச் செய்யும் வகையில் இருக்கிறது. 

 வழியில் பார்த்த ஒரு பூ!

அங்கே இருக்கும் சிற்பங்கள், அவை பற்றிய தகவல்கள் மட்டுமே ஒரு பகுதியில் எழுத வேண்டிய அளவிற்கு இருக்கின்றன.  எடுத்த புகைப்படங்களும் உண்டு.  ஆகையால் அடுத்த பகுதியில் அச்சிற்பங்களையும் அவற்றின் தகவல்களையும் சொல்கிறேன்.  நீண்ட இடைவெளி இல்லாது நாளை மறு நாளே வெளியிட்டு விட எண்ணம். பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 12 ஜூன், 2015

ஃப்ரூட் சாலட் – 136 – ரயில் பெட்டிகளில் சோலார் – காதணி – புகைப்படம் இப்படியும் எடுக்கலாம்!



இந்த வார செய்தி:

ரயில் பெட்டிகளின் மேல் புறத்தில் Solar Panel அமைத்து மின்சாரம் தயாரிக்கும் Pilot Project பற்றிய தகவல் சமீபத்தில் படித்தேன். ரயில் பெட்டிகளின் மேல்புற பரப்பளவான 40 சதுர மீட்டரில் சுமார் 18 Solar Panel அமைக்க முடியும். சோதனை முன்னோட்டமாக ஒரு பெட்டியில் 12 Panel-கள் அமைத்து நாளொன்றுக்கு 17 Unit மின்சாரம் வரை சேகரித்திருக்கிறார்கள்.

நமது நாட்டில் ரயில்கள் கணக்கிலடங்காத அளவில் இருக்கிறது. டீசலில் இயங்கும் இந்த ரயில்களின் மேல்புறத்தில் Solar Panel-கள் அமைத்து அந்த ரயிலில் இருக்கும் அனைத்து பெட்டிகளின் மின்சாரத் தேவையை சமாளிக்க முடியும் என்று சொல்கிறார்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் இந்த திட்டம் உதவும் என்றும் சொல்கிறார்கள்.

நல்ல திட்டமாகத் தான் தெரிகிறது. முதலில் கொஞ்சம் அதிகம் செலவானாலும் பயனுள்ள திட்டமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.  Pilot Project முடிவுகளை இன்னும் கொஞ்சம் அதிக அளவில் சோதனை செய்த பின் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

தவறு செய்யாத மனிதனும் இல்லை. தவறு செய்யாதவன் மனிதனும் இல்லை. ஆனால் தவறு என்று தெரிந்தும் அதை மீண்டும் செய்பவன் மனிதனே இல்லை!

இந்த வார குறுஞ்செய்தி:

உங்களின் கோபத்திற்காக வேறு யாராலும் தண்டிக்கப்பட மாட்டீர்கள். உங்கள் கோபமே உங்களை தண்டித்துவிடும்.

இந்த வார காணொளி:

நீ எல்லாம் என்னய்யா Photographer? இங்கே பாருய்யா... எப்படியெல்லாம் ஃபோட்டோ புடிக்கிறாரு! என்று புகைப்படம் எடுக்கும் அனைவரையும் கேட்கலாம்!


படித்ததில் பிடித்தது:

உயிரின் எல்லா மொழியும் அறிந்தவனை
அன்று தான் சந்தித்தேன்
பூச்சிகளோடு பேசத்தொடங்கி
நாய்களை நண்பனைப்போல் பாவித்து
செல்லப்பூனைக்கு சினேகப்பெயர் வைத்து
கிளிகளோடு கொஞ்சி விளையாடி
என்னிடம் வந்தவன்
புன்னகைக்கு சில்லறையற்றவனைப்போல்
முகம் கடுத்தான்
மிருககாட்சி சாலையொன்றை
செலவின்றி பார்த்ததற்காய்
சந்தோஷப்பட்டுக்கொண்டது
மனம்...

     www.penmai.com தளத்தில் படித்த கவிதை.

இந்த வார உழைப்பாளி:


கொஞ்சம் பழைய செய்தி என்றாலும் இன்று தான் என் கண்ணில் பட்டது. ஒடிசா மாநிலத்தில் இருக்கும் [B]பாரிபாடா மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் இப்பெண், தனது படிப்புச் செலவுகளை சமாளிக்க ஆட்டோ ஓட்டுகிறாராம்.  தன் படிப்புக்காக உழைக்கும் இந்தப் பெண்ணிற்கு  ஒரு பூங்கொத்து.

Daughter Roshni’s Corner:

ரோஷ்ணி சமீபத்தில் செய்த பேப்பர் காதணிகள்!!




மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.