எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, April 11, 2014

ஃப்ரூட் சாலட் – 88 – தூக்கு தண்டனை - மரம் வளர்ப்போம்.... - காளிஇந்த வார செய்தி:


படம்: இணையத்திலிருந்து...

மத்தியில் சமாஜ்வாதி கட்சி அங்கம் வகுக்கும் அரசு ஆட்சிக்கு வந்தால், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் வாக்குறுதி அளித்தார்.

பாலியல் பலாத்காரத்துக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கருத்து, தேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மொரதாபாத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முலாயம் சிங், "ஆண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தவறு செய்வார்கள். அதனால் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது சரியல்ல" என்றார்.

மும்பையில் பெண் புகைப்பட நிருபர் மற்றும் டெலிபோன் ஆபரேட்டர் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதை மேற்கோள்காட்டிய அவர், "பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

இந்த சட்டத் திருத்தங்களின் மூலம், பாலியல் வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தவறான தகவல்களைத் தெரிவிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆணும் பெண்ணும் காதலில் விழுகிறார்கள். தங்களுக்குள் வேற்றுமை வரும்போது பிரிந்து செல்கிறார்கள். அவர்களது நட்பு முறியும்போது, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அந்தப் பெண் புகார் அளிக்கிறார். இதனால் இச்சட்டத்தில் மாற்றம் வேண்டும்" என்றார் முலாயம் சிங்.
-          தி இந்து...... 

செய்தியைப் படிக்கும் போதே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது. தண்டனையே தரக்கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போல! என்ன அரசியலோ! பாழாய்ப்போன அரசியல்.

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:

மேடு பள்ளம் இல்லாத சாலை ஒரு நல்ல ஓட்டுனரை உருவாக்குவதில்லை. மேக மூட்டம் இல்லாத ஆகாயம் ஒரு நல்ல விமானியை உருவாக்குவதில்லை. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதில்லை.  வாழ்க்கை ஒரு சவால்.  சவாலை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவோம்.

இந்த வார ரசித்த காணொளி:

தமிழகத்தின் பல நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபடும்போது சாலை ஓரங்களில் இருந்த பல மரங்களை வெட்டி அடுப்பெரிக்கும் விறகாகப் பயன்படுத்தி விட்டார்கள். இன்னொரு மரம் அங்கே வளர்க்க எத்தனை வருடங்களாகும்.... :( இந்த காணொளியைப் பாருங்கள் – வெளி நாடுகளில் மரங்களை என்ன செய்கிறார்கள் என? 
ராஜா காது கழுதைக் காது:

எல்லோரும் ஏனோ நான் காதைத் தீட்டி வைத்துக் கொண்டே இருப்பதாக கருதுவதால், இரண்டொரு வாரமாக இப்பகுதி வெளியிடவில்லை! :) நான் சும்மா இருந்தாலும் சில செய்திகள் தானாகவே வந்து விழுகிறது. என்ன செய்வது!

சில நாட்கள் முன்னர் ஒரு கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே மதிய உணவுக்காக அனைவரும் அமர்ந்திருந்தோம். பக்கத்தில் ஒரு மேடையில் பாட்டி, பேத்தி, குழந்தைகள் என நிறைய பேர். பேத்தி ஏதோ கேட்க, பாட்டி சத்தமாகச் சொன்னது!

ஏண்டி கழுதை, தடிமாடு... இதை என்ன வீடுன்னு நினைச்சியா? ஒழுங்கா இரு! இல்லைன்னா இங்கே இருந்து ஓடிப்போயிடு!

பொது இடத்தில் ஏன் அப்படி திட்டினார்? அப்படி என்னதான் அவரின் பேத்தி கேட்டு விட்டார்? எல்லோரும் பார்ப்பதைக் கவனித்த அப்பெண் அங்கிருந்து தலையைக் குனிந்தபடியே நகர்ந்தார். கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது எனக்கு.

ஒரு புகைப்படம்:

சமீபத்தில் தான் வசந்த நவராத்திரி இங்கே முடிந்தது. பக்கத்தில் இருக்கும் காளி கோவிலில் இந்த நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.  அங்கே எடுத்த ஒரு புகைப்படம் இந்த வார புகைப்படமாக!ஒரு கவிதை:

முகப் புத்தகத்தில் தான் இக்கவிதையைப் படித்தேன். இன்றைய பெண் குழந்தைகளில் பலரின் நிலை சொல்லும் கவிதை. நிலை இப்படி இருக்க, அரசியல்வாதிகள் சொல்லும் கருத்துகள் வேறு விதமாக இருக்கிறது! :(


எங்கே போவேன்?அப்பான்னு நினச்சேன்
அசிங்கமாய்த் தொட்டான்

சகோதரன்னு பழகினேன்
சங்கடப்படுதினான்..
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்...

உறவுகள் அனைத்தும்
உறவாடவே அழைக்கின்றது..
பாதுகாப்பை நாடி
பள்ளிக்குச் சென்றேன்
ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண் குறையுமென்றான்..

நட்புக் கரமொன்று
நண்பனாய்த் தலைகோதி
தூங்கென்றான்
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
மயங்கித் தூங்கையில்
கைபேசியில் படமெடுத்தான்..
அவனும் ஆண்தானே!

கதறி அழ
கடவுளைச் சரணடைந்தேன்
ஆறுதலாய்த் தொட்டுத்தடவி
ஆண்டவன் துணையென்றான்
சாமியாரும்...!

அலறி அடித்து ஓடுகின்றேன்
எங்கேபோவேன்?

சமத்துவம் வந்ததென
சத்தமாய்க் கூவுகின்றனர்

பெண்ணை
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும் நாள்
எந்நாளோ?

பாவிகளின் பாலியல்
வன்முறை எப்போது ஓயுமோ?

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 comments:

 1. இங்கு இப்படித்தான் மரங்களை வெட்டுவதே கிடையாது. அப்படியே அவசியம் ஏற்பட்டாலும் செலவு அதிகமானாலும் வேருடன் பிடுங்கப்பட்டு வேறோர் இடத்துக்கு இடம் பெயர்ந்துவிடுகிறது. நம்ம ஊர்ல ரோடு போடணுமா, ஸ்ட்ரைக் பன்ணணுமா 'வெட்டு மரத்தை' என்பதாகத்தான் இருக்கிற‌து.

  காளியைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போனால் தூக்கம் வராது போலிருக்கே. முகப்புத்தக இற்றை, குறுஞ்செய்தி எல்லாமும் நன்றாக உள்ளன.

  பெண்ணை பெண்ணாய் மதிக்கும் காலம் எப்போ வருமோ தெரியலயே! இதுல அரசியல் தலைகளின் குறுக்கீடுவேறு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 2. ///பெண்ணை
  பெண்ணாய் பாராமல்
  மனிதராய் பார்க்கும் நாள்
  எந்நாளோ?///
  மனதை கனக்கச் செய்யும் வரிகள் ஐயா
  காணொளிக் காட்சி மனதில் ஏக்கத்தை ஏற்படுத்துகிறது ஐயா
  அவர்கள் எங்கே, நாமெங்கே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. Replies
  1. தமிழ் மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. முலாயம் டௌன்! டௌன்!

  இற்றை - பாஸிட்டிவ்!

  கு.செ. நல்ல தத்துவம்.

  மர இடமாற்றம் அருமை. எப்படிச் செய்வார்கள் இதை என்று நானும் யோசித்ததுண்டு. இன்று கிடைத்தது பதிலொன்று!

  பாவம் பேத்தி! (ரா.கா.க.கா)
  பு.ப அழகு.

  கவிதை - முலாயமிடம் சொல்லுங்கள்!  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. இந்த வார பழக்கலவையும் அருமை. அதுவும் “எங்கே போவேன்?” என்ற கவிதை மனதைத் தொட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. பாழாய்ப் போய் பல காலம் ஆகி விட்டதே...

  அப்படியே அலேக்கா தூக்கி இன்னொரு இடத்தில் எவ்வளவு அழகாக நட்டு பராமரிக்கிறார்கள்... !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. எங்கே போவேன் கவிதையை முலாயம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துவிடலாம் !
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. எப்படி மாற்றங்கள் நிகழும் இது போன்ற தலைவர்கள் இருக்கும் வரை?

  மனதைத் தொடும் கவிதை. எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. நல்ல படைப்பு.

  மரங்களை வேறிடத்தில் நடுவது நம் நாட்டிலும் கடைப் பிடிக்கப்பட்டிருந்தால் எத்தனை ஆயிரம் மரங்களைக் காப்பாற்றியிருக்கலாம். பெங்களூரில் சோலை போல இருந்த பல சாலைகள் இப்போது மெட்ரோ மற்றும் பாலங்களுக்காக பலநூறு வயதான மரங்களை இழந்து நிற்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 9. ரா.ஈ. பத்மநாபன்April 11, 2014 at 10:23 AM

  //என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா?//

  ரசித்தோம் என்று சொன்னால் அது பொய்யோ! உ.பி. அரசியல் வியாதியின் பேச்சும், நெஞ்சைக் குத்தும் முகப்புத்தகக் கவிதையும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 10. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதில்லை. வாழ்க்கை ஒரு சவால். சவாலை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவோம- அருமை

  மரம் நடுவது மகிழ்ச்சி அளித்தது..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 12. கவிதை மனதை சங்கடப்படுத்துகிறது. அரசியல்வாதிகளுக்கு படிப்பறிவு கட்டாயமாக்கணும். அட்லீஸ்ட் 10th.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 13. மரத்தை வேருடன் எடுத்து அப்படியே வேறிடத்தில் நட்டு... ஆஹா! நல்ல திட்டமா இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 14. முலாயம் சிங்கின் பேத்தல் பேச்சையெல்லாம் எதற்கு வெளியிட வேண்டும் சார்? மரங்களை வெட்டி படுகுழியில் தள்ளி விட்டார்கள் நம்மவர்கள் கவிதை தென்றல் என்னும் தளத்தில் கீதா என்பவர் எழுதியது. முகப்புத்தகத்திலும் பார்த்தேன்! கவிதை வந்த தள முகவரி http://velunatchiyar.blogspot.in/2014/04/blog-post_8.html

  ReplyDelete
  Replies
  1. மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி சுரேஷ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 15. எங்கே போவேன்?.. - கவிதை மனதை சுடுகின்றது..
  மொழி அறியா - மூடர்களுக்கும் மூர்க்கர்களுக்கும் இதனை அனுப்ப வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 16. இவர்களின் வீட்டில் இருக்கும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருந்தால், இப்படி ஒரு கருத்தை சொல்லுவார்களா???

  அந்த கவிதை மனதை உருக்கிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 17. மனத்தை உருக்கும் கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .
  ஒரு சின்னச் சந்தேகம் அரசியல்வாதிகளுக்கு இதயம் உண்டா இல்லையா ?..
  7

  ReplyDelete
  Replies
  1. சந்தேகம்: இருப்பதாகத் தோன்றவில்லை... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 18. முலாயம் சிங் யாதவ்,"ஆண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தவறு செய்வார்கள். அதனால் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது சரியல்ல" - இதை அவர் வீட்டுப் பெண்களுக்குச் செய்யும் போதும் சொல்லுவாரா?இந்தாளுக்கு நாக்கில் சனி!!!
  இங்கும் மரங்கள் இனி முடியாது எனும்நிலையிலே வெட்டபடும், மற்றும் படி இப்படியாக இடம் மாற்றி விடுவார்கள் இந்த பொறி ஒரு அருமையாக இயங்குகிறது. மனிதனுக்கும் நோவில்லை, மரத்துக்கும் நோவில்லை.
  // பெண்ணை
  பெண்ணாய் பாராமல்
  மனிதராய் பார்க்கும் நாள்
  எந்நாளோ?
  //
  நம் நாடுகளில் இது நடக்கும் போல் தெரியவில்லை.
  கலவை அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

   Delete
 19. கவிதை .............................சொல்ல வார்த்தையில்லை .....நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலை.

   Delete
 20. முலாயம் சிங் பேசியதை டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் திருப்பி திருப்பிப் போட்டு செவிகளைக் கிழித்துக் கொண்டிருக்கிறார்களே!
  கடைசியில் கவிதையைப் படித்தவிட்டு, அந்தப் பெண்ணிற்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அழுகை மனதை தொடுகிறது.
  இந்த வாரக் கலவை மனதை வருத்துகிறது. (பாட்டியின் திட்டும் சேர்ந்து)

  ReplyDelete
  Replies
  1. இன்றைய பழக்கலவை மனதை வருத்திவிட்டது..... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 21. முலாயம் சிங் யாதவ் தனது வாலிப காலத்தில் எப்படி இருந்தார் என்பதை பின்னோக்கி விசாரிக்க வேண்டும்.

  இந்த வார ப்ரூட் சாலட் பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 22. கவிதையும் காணொளியும் மிக அருமை! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 23. அருமையான பகிர்வுகள்! இறுதிக் கவிதை ஹைலைட்...இனிய ஃப்ரூட் சாலடின் ஊடே இருக்கும் ஒரு கசப்பான உண்மை! முதல் முலாயம் சிங்கின் பேச்சுற்கும், இதற்கும் எத்தனை இடைவெளி பாருங்கள்! முரண்பாடு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 24. மரங்களை மீள்-நடுவது மிகவும் வியப்போடு, ஆதங்கத்தோடு பார்த்த விஷயம். எனினும், எல்லா மரங்களையும் இப்படி மீள்-நடுவது முடியாதாம். ஆணிவேர் உள்ள மரங்களை மட்டுமே செய்யமுடியுமாம் என்று கேள்விப்பட்டேன். சல்லிவேர்- பக்கவாட்டு வேர்களால் ஜீவித்திருக்கும் மரங்களை இப்படிச் செய்ய முடியாதாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா...

   Delete
 25. அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 26. கவிதை அருமை சார்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

   Delete
 27. ஆத்தி என் கவிதையை இப்ப தான் பார்க்கிறேன் சகோ...மிக்க நன்றி.கலவை சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கவிதையை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....