எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 2, 2018

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக?படம்: இணையத்திலிருந்து...

சாப்பிட வாங்க: கேரட் தோசை” என்ற பதிவினை போட்டுவிட்டு, சில நாட்களுக்கு பதிவுலகம் பக்கம் வரமாட்டேன் என்று எழுதிச் சென்று இன்றோடு சரியாக மூன்று வாரம் ஆகிறது! இதோ இந்த வெள்ளியில் மீண்டும் வந்து விட்டேன். இந்த இடைப்பட்ட மூன்று வாரங்களில் பதிவுலகத்தில் என்ன நடந்தது என்பது கூடத் தெரியாது! முழுக்க முழுக்க வீடு, ஓய்வு, சில நிகழ்வுகள், சந்திப்புகள் மட்டுமே. பதிவுகள் எதையும் படிக்கவில்லை. நானும் எழுதவில்லை. கடந்த முறை தமிழகம் சென்றபோதும் இப்படியே தான் – பதிவுலகம் வர விருப்பம் இல்லாமலேயே இருந்தது – இணைய இணைப்பிலும் சில பிரச்சனைகள்! இம்முறையும் அப்படியே மூன்று வாரம் ஓடி விட்டது. பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு வணக்கம் சொல்லி இன்றைய பதிவுக்குப் போகிறேன்!


பொங்கல் சமயத்தில் ஊருக்குப் போகலாம் என நினைத்தாலும் அலுவலகத்தில் தணிக்கை நடந்து கொண்டிருந்ததால் செல்ல முடியாத சூழல். பொங்கலுக்கு மூன்று நாட்கள் முன்னர் தான் அரையாண்டு தணிக்கை முடிந்தது. சரி, குறைந்த கட்டணத்தில் பயணச் சீட்டு கிடைத்தால் ஊருக்குச் செல்லலாம் என இணையத்தில் தேட, கிடைத்துவிட்டது! சரி என அலுவலகத்தில் விடுமுறைக்கு விண்ணப்பிக்க, அரை மனதோடு, ஒரு வாரம் மட்டுமே தருவேன் எனச் சொல்ல, இரண்டு வாரங்கள் கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு புறப்பட்டேன். புறப்படப்போவது தெரியாது என்பதால் எந்தவித ஆயத்தமும் செய்யவில்லை.

தமிழகம் வரும்போது எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்த சில பொருட்களை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட்டேன். அதிகாலை நேர விமானம் என்பதால் வாடகை வண்டியை வரச் சொல்லி இருந்தேன் – எப்போதும் வரும் முதியவர் – ”பழைய வண்டி 15 வருடங்கள் ஆகிவிட்டதால் மாற்றி விட்டேன் – நீங்கள் தான் முதல் சவாரி” எனச் சொல்ல, புதிய வாகனத்தில் அவருக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என மனதில் நினைத்தபடியே அவருடன் பேசிக்கொண்டே பயணித்தேன். காலை நேர தில்லி சாலைகள் பெரும்பாலும் காலியாகவே இருக்கும் – விமான நிலையம் செல்லும் ஓரிரு வாகனங்கள் தவிர சாலையில் வாகன ஓட்டம் மிகவும் குறைவு என்பதால் விரைவில் விமான நிலையம் சென்றடைந்தேன்.


படம்: இணையத்திலிருந்து...

விமான நிலையத்தில் உள்ளே நுழைந்து Automated Boarding Pass பெற்றுக்கொண்டு உடைமைகளைக் கொடுக்கச் சென்றபோது, உங்களிடம் இருக்கும் உடைமை 18 கிலோ இருக்கிறது – அதிகமுள்ள மூன்று கிலோவுக்கு 900 ரூபாய் கட்ட வேண்டும் என்றார் பொய்ப்புன்னகை பூத்த காரிகை! 7 கிலோ அளவு Cabin Luggage உண்டே என்றால், எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றார் – காலையிலேயே கழுத்தறுப்பு என நினைத்திருக்கக் கூடும்! நல்ல வேளையாக ஒரு கைப்பை இருக்க அதில் கொஞ்சம் மாற்றி வைத்து 900 ரூபாய் தண்டம் அழாமல் தப்பித்தேன்! ஆனாலும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் – Because of you there is delay! – இத்தனைக்கும் நான் அடுத்த பயணியை முன்னே அனுப்பி இருந்தேன்!

இந்த Baggage விஷயம் எப்போதுமே பிரச்சனையான ஒன்று தான் – குறிப்பாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு! இப்போதெல்லாம் உள்நாட்டு விமானங்களிலும் பிரச்சனை செய்கிறார்கள்! ஒரு வழியாக பாதுகாப்பு சோதனையையும் முடித்துக் கொண்டு உள்ளே சென்று சிறிது ஓய்வெடுத்தேன். விமானத்தில் நுழைந்தால் எனக்குக் கொடுத்த இருக்கையில் வேறொருவர் அமர்ந்திருந்தார் – “நான் என் மனைவியுடன் சேர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும் – நீங்கள் அந்தப் பக்க இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள்!” என்றார்’It seems he doesn’t believe in requesting! Taking Other’s seat forcibly is easier’ என்பது அவரது பாலிசி போலும்! அந்த மூன்று இருக்கைகளில் ஜன்னல் ஓர இருக்கையில் ஒரு வட இந்தியப் பெண், நடுவில் ஒரு தமிழ் இளைஞர். மற்ற ஓரத்தில் நான்! ஓர இருக்கையில் பிரச்சனை உண்டு – தூங்க முடியாது! வருபவர் போகிறவர் பெரும்பாலும் இடித்துக் கொண்டே செல்வார்கள்!


படம்: இணையத்திலிருந்து...

விமானத்தில் அமர்ந்த நேரத்திலிருந்தே நடுவில் இருந்த தமிழ் இளைஞர், ஜன்னல் ஓர பெண்ணைப் பற்றிய பிரஞ்யையே இல்லாது, தனது அலைபேசி மூலம் படங்கள்/காணொளி எடுப்பதில் மும்மரமாய் இருந்தார் – ஒரு காணொளி கூட ஒழுங்காக வரவில்லை – ஜன்னல் மட்டுமே தெரிந்தது! சில சமயங்களில் அப்பெண்ணின் மீது படும்படி தனது கைகளை நீட்டி, அலைபேசியை ஜன்னலில் வைத்து புகைப்படம்/காணொளி எடுத்துக் கொண்டே இருந்தார் – எடுத்ததைப் பார்ப்பதும், திருப்தியில்லாமல் மீண்டும் எடுப்பதும் தில்லியிலிருந்து சென்னை வரை தொடர்ந்தது! ஒழுங்காக அமரவே இல்லை.

நடுவே அப்பெண்ணுக்கு உணவு வர அதிலிருந்த பழரசத்தை சுவைக்க எடுத்தபோது இவர் கையை நீட்ட, பழரச அபிஷேகம் தமிழருக்கு நடந்தது – எனக்கென்னமோ வேண்டுமென்றே அப்பெண் அப்படிச் செய்தது போல தோன்றியது! அந்த அளவுக்கு தொந்தரவு தந்தாரே நம் தமிழ் இளைஞர்! அவரது அலைபேசியே எனக்கு ஓய்வு கொடு ப்ளீஸ் எனக் கதறி அணைந்து போக, என் அலைபேசியைப் பார்த்தார் – ”உங்க அலைபேசியைக் கொடுங்க, கொஞ்சம் புகைப்படம்/காணொளி எடுத்துக்கிறேன் என ஒரு வேளை கேட்பாரோ?” என்று எனக்குத் தோன்றியது! இப்படியான காட்சிகளை பார்த்தபடியே இருந்ததில் பயணத்தில் தூங்கலாம் என நினைத்த என் நினைப்பில் மண்! ”சென்னை வாடா வெண்ணை” என வரவேற்கக் காத்திருந்தது! சென்னை வந்து விட்டோம் என விமானி சொல்ல, தரையிறங்கக் காத்திருந்த பயணிகள் விட்டால் குதித்து விடுவார்கள் எனத் தோன்றியது!

பக்கத்து இருக்கை இளைஞர் தனது முதுகுப் பையை மேலிருந்து எடுத்து மாட்டிக் கொண்டார்! அப்பையிலிருந்து பாதி சாப்பிட்டு மீதி வைத்திருந்த கரும்புத் துண்டு என்னைப் பார்த்துச் சிரித்தது! – விமானத்திலும் பயணிகள் ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க இப்பல்லாம்!

ஒவ்வொரு பயணத்திலும் இப்படி யாராவது வந்து சேர, எனக்கும் நேரம் போகிறது! சென்னை வந்து பெருங்களத்தூர் வரை மின்சார இரயிலில் பயணம் – அங்கிருந்து திருச்சி வரை அரசுப் பேருந்து! ”சம்பள உயர்வு கேட்டு பேருந்துத்துறை ஊழியர்கள் ஸ்ட்ரைக் செய்து கொண்டிருக்கிறார்கள், பார்த்து வா, என்றார் அப்பா!” நல்ல வேளையாக நான் சென்னைக்கு வந்த நாளுக்கு முன் நாள் ஸ்ட்ரைக் வாப்பஸ் பெற்றிருந்தார்கள்! மாலையில் திருவரங்கம்! பொங்கலுக்கு திருச்சி வந்தாச்சு! திருச்சியில் இருந்தபோது சந்தித்த மற்ற விஷயங்கள் அவ்வப்போது பதிவாக வரலாம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லியிலிருந்து.

24 comments:

 1. வாங்க வாங்க வெங்கட்ஜி....பதிவுகள் இல்லையே என்று நினைத்தேன்....பின்னர் தெரிந்தது நீங்கள் திருச்சிக்கு வந்திருக்கிறீர்கள்...என்று..இப்போது மீண்டும் தில்லி இல்லையா...3 வார அனுபவப் பதிவுகள் நிறைய வரும் என்று நினைக்கிறோம்....

  கீதா: ஸோ பேக் to தலைநகர்....3 வாரம் நீங்கள் இல்லாதது...பதிவு போடாதது....மோதிஜிக்குப் போராடித்ததாமே!...பயணக்கட்டுரை எதுவுமே இல்லை என்று!!!!!...

  3 வாரம் குடும்பத்துடன் இருந்த புத்துனர்ச்சியி ல் பதிவுகள்..வரட்டும்...

  எனக்கும் கூட பதிவுலகம் விட்டு விலகி இருக்கலாமா என்று அவ்வப்போது தோன்றுகிறது.....அதான் எழுதுவதில் ஒரு சுணக்கம்....
  தமிழ்ப் பையன்...ம்ம்ம் என்ன சொல்ல...நல்ல காலம் அப்பெண் சத்தம் போடாமல். இருந்தாரே....

  ReplyDelete
  Replies
  1. மோதி ஜிக்கு போரடித்தது - இது கொஞ்சம் ஓவர்! :)

   மூன்று வார காலம் திருவரங்கத்தில் - மனதில் கொஞ்சம் மகிழ்ச்சி.

   பதிவுலகம் விட்டு விலகி இருப்பது - அவ்வப்போது இப்படி இருப்பதும் நல்லது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 2. சென்னை வரை விமானம். அப்புறம் சுமாரான மின்சார இரயில். அப்புறம் பாடாவதி பஸ். உங்க பயணமே ஒரு மார்க்கமாத்தான் ஆரம்பிச்சிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. என் பயணமே ஒரு மார்க்கமாத்தான் ஆரம்பிச்சுருக்கு.... :) தலைநகரிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானம் இல்லை - சென்னை வழி செல்வதில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பதால் சென்னை/கோவை வரை விமானம், பிறகு பேருந்து அல்லது இரயில். வேறு வழியில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 3. ஏன் பதிவுலகத்தை விட்டு விலகியிருக்கலாம்னு உங்குக்கு, தில்லையகத்துக்கெல்லாம் தோணுது?

  ReplyDelete
  Replies
  1. அவ்வப்போது இப்படி விலகி இருப்பதும் நன்றாகத் தான் இருக்கிறது. முன்பு போல பெரிதாக ஈர்ப்பு இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. நல்வரவு ஜி
  சென்னை இப்படியா வரவேற்றது ?

  ReplyDelete
  Replies
  1. ஏனோ எனக்கு சென்னை பிடிப்பதில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. வாருங்கள் சகோ!.. கண்டதும் மகிழ்ச்சி!

  டெல்லி 2 சென்னைப் பயணமும் கட்டுரையாகிவிட்டதோ..:)
  ரசித்தேன் + சிரித்தேன்!

  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. எங்க சுத்தினாலும் திருச்சிக்கு வரும் போது எப்போதும் ஒரு சந்தோசம் கூடவே தான் வருது....

  ReplyDelete
  Replies
  1. திருச்சிக்கு வரும்போது கிடைக்கும் சந்தோஷம் - உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 8. வல்லி அக்கா ஒரு காணொளி கொடுத்தார்கள் அதிக லக்கேஜை குறைப்பதற்கு. வாட்ஸப் குரூப்பில்.
  பார்த்து இருப்பீர்கள். அது போல செய்து கொள்ளலாம்.
  காணொளி சிரிப்பு ஆனால் அது தான் நடைமுறையாக இருக்கிறது.

  அத்தையைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த போதும், மீண்டும் கோவை போக விமானத்தில் அதிக பண்ம கொடுத்து தான் லக்கேஜை கொண்டு வந்தோம்.

  ReplyDelete
  Replies
  1. விமானத்தில் லக்கேஜ் - கொஞ்சம் கஷ்டம் தான். வல்லிம்மா அனுப்பிய காணொளி பார்த்த நினைவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
  2. என்ன காணொளி? எனக்கும் நினைவில் இல்லை! என்றாலும் நாங்க வீட்டிலேயே எடை போட்டுப் பார்த்துக் கொண்டு விடுவோம். அதிகம் எடுத்துச் செல்வதில்லை.

   Delete
  3. வீட்டிலேயே எடை போட்டு பார்த்துக் கொண்டு செல்வது நல்லது. விமான நிலையம் சென்ற பிறகு பார்ப்பதை விட நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 9. பதிவுலகம் வந்த தங்களை வருக வருக என வரவேற்கிறேன். தங்களின் விமான பயண அனுபவத்தை இரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. ம்ம்ம்ம்ம், மீண்டும் தில்லி திரும்பியாச்சா? வழக்கம்போல் பதிவுகள் வெளிவரும்! :) அங்கே வேறே என்ன செய்வது! விமானப் பயண அனுபவம் ரசிக்கும்படி இருக்கு! எங்களுக்கும் இப்படிச் சில அச்சுப்பிச்சு அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பதிவுலகத்திலிருந்து நானும் அநேகமா ஆறு மாசத்துக்கு ஒரு தரமாவது விலகி இருந்துடுவேன். மீண்டும் உள்ளே வந்தால் புதுசு புதுசாக விஷயங்கள் தோன்றும். :))))

  ReplyDelete
  Replies
  1. தலைநகர் திரும்பியாச்சு. சோ வழக்கம் போல பதிவுகள் வரும்.

   விலகி இருந்து உள்ளே வந்தால், புதுசு புதுசாக விஷயங்கள் தோன்றும். உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 11. புதுதில்லி - சென்னை விமானப்பயண அனுபவம் சுவையாக இருந்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....