திங்கள், 19 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – காலோ டுங்கார் எனும் கருப்பு மலை – ஒட்டக சவாரிஇரு மாநில பயணம் – பகுதி – 9

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஒட்டக மந்தை...
காலோ டுங்கார் செல்லும் வழியில்...

சென்ற பகுதியில் பாடண் நகரிலிருந்து கட்ச் நோக்கி சென்று கொண்டிருந்தோம் என எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். இந்தப் பகுதிக்கு செல்லும் போது தான் இதுவரை பார்த்திராத ஒரு காட்சியைப் பார்க்க முடிந்தது. அது ஒட்டக மந்தை. நூற்றுக் கணக்கில் ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தவுடன் முகேஷ்-இடம் காரை நிறுத்தச் சொன்னோம். சாதாரணமாக ஆட்டு மந்தை, மாட்டு மந்தை, கோழி/வாத்துக் கூட்டம் ஆகியவற்றை சாலை வழி அழைத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒட்டக மந்தை…. இது வரை பார்த்ததில்லை என்பதால் வண்டியை விட்டு இறங்கி சில புகைப்படங்களும் காணொளியும் எடுத்துக் கொண்டேன். அந்தப் புகைப்படங்களையும் காணொளியும் ஏற்கனவே ஒரு முறை எனது பதிவொன்றில் வெளியிட்டு இருக்கிறேன். படிக்காதவர்கள்/ பார்க்காதவர்கள் வசதிக்காக, கீழே அதன் சுட்டி தருகிறேன்.
 


ஒட்டக மந்தை...
காலோ டுங்கார் செல்லும் வழியில்...
 
எங்களுடன் வந்திருந்த கேரள நண்பர் – சென்ற பகுதியில் சொன்ன அதே நண்பர், ஒட்டக மேய்ப்பரிடம் பேட்டி கண்டார் – எத்தனை ஒட்டகம் இருக்கிறது, என்ன படித்திருக்கிறார், குழந்தைகள் எத்தனை பேர், அவர்களை படிக்க வைக்கிறாரா இல்லையா, இந்த பாலை நிலத்தில் தண்ணீருக்கு என்ன செய்வார்கள் என பலப் பல கேள்விகள்! ஒட்டக மேய்ப்பரும் பொறுமையாக பதில் சொன்னபடியே ஒட்டகங்களை சாலையைக் கடக்கச் செய்தார். அப்பா எத்தனை ஒட்டகங்கள் – மேய்ப்பருக்கு கணக்கு சரியாகத் தெரியவில்லை – நூறு, நூற்றைம்பதுக்கு மேலே என்று மட்டும் சொன்னார்.


கானல் நீர்......
காலோ டுங்கார் செல்லும் வழியில்...


நுழைவுச் சீட்டு வாங்குமிடம்...
காலோ டுங்கார் செல்லும் வழியில்...


அண்ணே, கொய்யாப்பழம் வாங்கிக்கோங்கண்ணே...
காலோ டுங்கார் செல்லும் வழியில்...
  
சாலையில் கானல் நீர் பார்க்கக் கிடைக்க, அதையும் கிளிக்கினேன் – மொபைலில். வெண் பாலைக்குச் செல்லும் சாலையில் பயணிக்க, நடுவில் சில அழகிய குடிசைகள் – அங்கே தான் நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும் – ஆளொன்றுக்கு நூறு ரூபாயும், வாகனத்திற்கு ஐம்பது ரூபாயும். நாங்கள் ஐந்து பேர், ஓட்டுனர் முகேஷ் மற்றும் வாகனம் என மொத்தம் 650/- ரூபாய் வாங்கிக் கொண்டு அதற்கான சீட்டு கொடுத்தார். குஜராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதி இருந்தார்கள். அந்த இடத்திற்கு எதிரே சில சிறு கடைகள் – பழங்கள், தேநீர் போன்றவை விற்கிறார்கள். வழியில் எந்த விதக் கடைகளும் கிடையாது. சிறுவன் ஒருவன் கொய்யாப்பழம் வாங்கிக் கொள்ள கேட்க, வாங்கிக் கொண்டோம் – கூடவே கொஞ்சம் மசாலாவும் – இங்கே மசாலா என்றால் காலா நமக்!


தண்ணீர் கொண்டு செல்லும் பெண்மணி...
கையில் கேமரா பார்த்தவுடன் முகத்தினை மூடிக்கொண்டார்!
காலோ டுங்கார் செல்லும் வழியில்...சாலையோரத்தில் சிறுவர்கள்...
காலோ டுங்கார் செல்லும் வழியில்...மலையுச்சிக்குச் செல்லும் கரடு முரடான பாதை....
காலோ டுங்கார் செல்லும் வழியில்...காலோ டுங்கார் உங்களை வரவேற்கிறது...
யப்பா என்ன வெயிட்டு....  ஒட்டகத்திற்கு உணவு எடுத்துச் செல்பவர்...
காலோ டுங்கார் செல்லும் வழியில்...


அந்தப் பக்கம் காலை வச்சிராதலே... பாகிஸ்தானுக்கு போயிடுவே!
காலோ டுங்கார்...

இப்படி பயணித்து நாங்கள் அடைந்த இடம் காலோ டுங்கார் என அழைக்கப்படும் கருப்பு மலை! கட்ச் மாவட்டத்தின் உயரமான பகுதி இந்த காலோ டுங்கார் தான். கடல் மட்டத்திலிருந்து 462 மீட்டர் உயரம். பூமியின் எல்லைக்கே வந்து விட்ட உணர்வு அங்கிருந்து அந்தப் பக்கம், தார் பாலைவனத்திற்கு அப்புறம், பாகிஸ்தான் தான்! அப்பக்கம் பாகிஸ்தான் என்பதால் இங்கே ஒரு ராணுவத் தளமும் உண்டு. என்றாலும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட வெண் பாலையைக் கடக்க வேண்டும் என்பதால் கடப்பது கடினம். சுற்றுலாப் பயணிகள் இந்த மலையுச்சி வரை வரமுடியும். பேருந்து வசதிகள் ரொம்பவே குறைவு என்பதால் தனியார் வாகனத்தினை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. இந்த மலையுச்சிக்குச் செல்ல நடந்தோ அல்லது இங்கே இருக்கும் ஒட்டகங்களின் மீது சவாரி செய்தோ வரலாம்.


மலையுச்சியிலிருந்து கீழே செல்லும் ஒட்டகங்கள்...
காலோ டுங்கார்...


இவரும் ஒரு மேய்ப்பர் - ஒட்டகம் உட்கார்ந்த பிற்கு கூட, இவரை விட உயரமாக இருந்தது!
காலோ டுங்கார்...


”அப்பா டேய்.... அப்பா....  இப்படி ஒட்டகம் பக்கத்துல நிக்க வச்சிட்டியே....”
பாவமாக நின்ற சிறுவன்...
காலோ டுங்கார்.....


ஒட்டகங்களோடு மேய்ப்பர்..
காலோ டுங்கார்...ஒட்டக மேய்ப்பர் ஒருவரோடு...
காலோ டுங்கார்...”என்னா லுக்கு...  லேடன் தெரியுமா? பின் லேடன்” என்ற வடிவேலு குரல் கேட்டது எனக்கு!
காலோ டுங்கார்...”கழுத்தை திருப்பிட மாட்டியே.....”
ஒட்டகத்துடன் அடியேன்....
காலோ டுங்கார்...சோடியா ஒரு ரவுண்டு போலாம் வரியா? எனக் கேட்கிறாரோ பின்னால் இருக்கும் இளைஞர்...
காலோ டுங்கார்...


இங்கே நிறையவே ஒட்டகங்கள் உண்டு. அத்தனை அழகிய அலங்காரங்கள் ஒட்டகத்திற்குசெ செய்கிறார்கள் – என்ன ஒன்று – ஒட்டகத்திற்கு அலங்காரம் செய்யும் மேய்ப்பர்கள் குளிப்பதில்லை போன்ற தோற்றம்! நிறைய பேர் ஒட்டக சவாரி செய்கிறார்கள். இந்த ஒட்டகங்களை மூக்கில் பெரிய கம்பி கொண்டு குத்தி அதில் தான் கயிறு சேர்த்து பிடித்துக் கொள்கிறார்கள். இந்த ஒட்டகங்கள் பற்றியும் என்னுடைய பதிவொன்றில் எழுதி இருக்கிறேன் – புகைப்படங்களும் தந்திருக்கிறேன். படிக்காதவர்கள்/ பார்க்காதவர்கள் வசதிக்காக, அந்தப் பதிவின் சுட்டி கீழே.  மூக்கின் அருகே இருக்கும் கம்பியைப் பார்த்தாலே பரிதாபமாகத் தான் இருக்கிறது.


இப்பதிவிலிருந்து சில வரிகள்….

“உட்டக், பைட்டக்” என்று ஒரு உடற்பயிற்சி – அதாங்க, கீழே அமர்ந்து மீண்டும் எழுவது – பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்பெல்லாம் இந்தத் தோப்புக்கரணம் தண்டனையாக தருவதுண்டு! பத்து முறை உட்கார்ந்து எழுந்திருப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்! நூறு முறை செய்வதென்றால் எப்படி இருக்கும்! அதுவும் ஒட்டகம் போன்று இத்தனை உயரமாக இருக்கும் ஒரு விலங்கினை மனிதன் தன் இஷ்டப்படி உட்கார வைத்து எழுப்பி விடுவது எவ்வளவு கடினமாக இருக்கும் அந்த ஒட்டகத்திற்கு! இப்படி உட்கார வைக்க ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் – அந்த வார்த்தை – “ஜூ.....”

 ஜூ…. ஜூ… என்று சொல்லிச் சொல்லி அந்த ஒட்டகம் தனது கால்களை நான்காக மடித்து மனிதர்கள் அதன் மீது கால் தூக்கிப் போட்டு உட்கார ஏதுவாய் இருக்கும் வரை ஜூ ஜூ எனச் சொல்லியபடியே இருக்கிறார்கள்! ஜூவில் [ஆங்கில Zoo] தான் மிருகங்களை அடைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்றால் இங்கேயும் ஜூ…. ஜூ…..

கா டுங்கார் பகுதியில் ஒரு கோவிலும் உண்டு – அது தத்தாத்ரேயருக்கான கோவில் – ஒரு கதையும்! ”மூன்று தலைகளுடன் இருக்கும் தத்தாத்ரேயர் பூமியில் பயணித்தபோது, இந்த கருப்பு மலைகளில் கால் பதித்தாராம். அங்கே பார்த்தால் ஒரு குள்ளநரிக் கூட்டம் பசியோடு! அதன் பசி பொறுக்காதவர், தன்னையே உண்ணும்படி நரிகளுக்குச் சொல்ல, அவையும் ஆவலுடன் சாப்பிட ஆரம்பித்தனவாம். நரிகள் சாப்பிடச் சாப்பிட தத்தாத்ரேயரின் உடல் மீண்டும் பழைய நிலைக்கே வந்து கொண்டிருந்ததாம். நான்கு-ஐந்து நூற்றாண்டுகளாக இங்கே தத்தாத்ரேயருக்கு கோவில் அமைந்திருக்கிறது எனவும், இங்கே பூஜை செய்பவர்கள் மாலை நேர ஆரத்திக்குப் பிறகு தத்தாத்ரேயருக்கு பிரசாதம் படைத்து அவற்றை நரிகளுக்காக மலைகளில் போட்டுவிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள்.

நாங்கள் கோவிலுக்குச் செல்லவில்லை. ஒட்டகங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, ஒட்டக மேய்ப்பர்களிடம் கொஞ்சம் பேசிக் கொண்டு இருந்தோம் சில மணித்துளிகள் அங்கே இருந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அங்கிருந்து நாங்கள் எங்கே சென்றோம், என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
 
தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

18 கருத்துகள்:

 1. அடடே.... ஒட்டகத்தை விட உயரமா இருக்கீங்களே வெங்கட்!

  சுவாரஸ்யமான இடம்... சுவாரஸ்யமான படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அடடே... ஒட்டகத்தை விட உயரமா இருக்கீங்களே வெங்கட்!//

   ஹா ஹா... ஒட்டகம் உட்கார்ந்து இருந்தது! :) அதுவும் காலை நாலா மடிச்சு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ஒட்டகக் கூட்டத்தைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 3. புதிய தகவல்கள் அழகான படங்களுடன்...


  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 4. எவ்வளவு ஒட்டகங்கள் அபுதாபியில்கூட இப்படி கூட்டம் பார்த்ததில்லை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய ஒட்டகங்கள் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 5. வெகு சுவாரஸ்ய பதிவு...

  கானல் நீர் காட்சி வெகு அழகு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 6. அட! ஒட்டகங்களின் இடத்திற்குப் பயணமா? அதுவும் பாகிஸ்தான் எல்லைவரை மீண்டும்...ஸ்வாரஸ்யமாக இருக்கிறது...படங்கள் ரொம்ப அழகு வெங்கட்ஜி! ஒட்டகம் க்ளோஸப் படம் இதுவரை ஒட்டகம் நேரில் பார்த்ததில்லை..

  கீதா: ஜி அந்தப் பழைய பதிவுகள் புகைப்படங்கள் எல்லாம் நினைவிருக்கு. ஒட்டகம் க்ராஸ் செய்யும் அழகு எல்லாம். மீண்டும் பாகிஸ்தான் எல்லையை எட்டிப்பார்த்துருக்கீங்களே!! தார் பாலைவனம் தெரிந்ததா மலையிலிருந்து பார்க்கும் போது?

  படங்கள் அத்தனையும் அழகு.குறிப்பாக கானல் நீர் புகைப்படம்...முதலில் நான் ஏதோ தண்ணீர் குறுக்கிடுகிறதே என்று நினைத்தேன்..அது சரி எப்படி அவ்வளவு ஒரு மாயத் தோற்றம் - ஆப்டிக்கல் இல்லுஷன் - கேமரா கண்களுக்குள்ளும் அழகா வந்திருக்கே!...ஆச்சரியம்! ரொம்ப அழகாக வந்திருக்கு ஜி. இப்படம் பொக்கிஷம் தான்!!!பத்திரமாகப் பாதுக்காக்க வேண்டிய படம்!!! அப்படி என்றால் அந்த அளவு வெயிலோ?!!!

  ஒட்டகத்தையும் புகைப்படங்களையும் கானல்நீர் படத்தையும் ரொம்ப ரசித்தோம்...தொடர்கிறோம் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கிருந்து பாலைவனம் தான் என்றாலும் உப்புப் பாலைவனம். அவ்வளவாகத் தெரியாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 7. இடங்களையும் படங்களையும் ரசித்தேன். டிரக் பின்புலத்தில் இருக்கும் ஒட்டகம், ஆரம்பத்தில், கூண்டு வண்டி மாதிரி ஒட்டக முதுகிலேயே செய்ததுபோல் தோன்றியது. ஒட்டகச் சவாரி எலும்பை உடைத்துவிடும் அல்லவா (ஆடி அசைந்து அது நடக்கும்போது நமக்கு இடுப்பு, முதுகெலும்பு வலி அதிகமாகிடுமே?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒட்டகத்தில் சவாரி செய்வது கடினமான விஷயம் தான். மேலும் கீழும் சென்று வயிற்றில் உள்ள எல்லாம் வெளியே வருவது போன்று ஆகிவிடும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 8. கானல் நீர் பார்த்திருக்கேனே தவிர புகைப்படத்தில் தெளிவாக வரும் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கானல் நீர் பார்த்தவுடன் எடுத்து விட்டேன். சிறப்பாகவே வந்திருப்பதாகத் தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. படங்கள் அழகோ அழகு.. கொய்யாப் பழம் விக்கும் அக் குட்டியைப் பார்க்க கவலையா இருக்கு.

  அதுசரி ஒட்டகங்கள் ஆடுபோலவோ? ஒன்றும் செய்யாதோ? கோபம் வராதோ அவற்றுக்கு?.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபம் வராதோ அவற்றுக்கு.... எனக்கும் டவுட்டு. அதனால தான் கொஞ்சம் முன் ஜாக்கிரதையுடன் தான் பக்கத்தில் நின்றேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....