செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – மோதேரா சூரியனார் கோவில் – தங்கத்தில் சிலை வடித்து….


இரு மாநில பயணம் – பகுதி – 5

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபமும் குட மண்டபமும்....


மொதேரா சூரியனார் கோவில் - சூர்ய குண்ட் - ஒரு பார்வை.... 


மொதேரா சூரியனார் கோவில் - குட மண்டபத்தில் இராமயணக் காட்சி ஒன்று - வானர சேனை.... 


மொதேரா சூரியனார் கோவில் - குட மண்டபத்தின் வெளிப்புறத்தில் - 12 ஆதித்யர்களில் ஒரு சிற்பம்....

சென்ற பகுதியில் மொதேரா கோவில் பற்றியும் அருங்காட்சியகம் பற்றியும் வேறு சில தகவல்களைப் பார்த்தோம். இப்பகுதியிலும் தொடர்ந்து மொதேரா சூரியனார் கோவில் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். சூரியனார் கோவிலில் இருந்த சிலை பற்றி சில கதைகள் உண்டு. சூரியனின் சிலை முழுவதும் தங்கத்தினால் செய்யப்பட்டது என்றும் அச்சிலையில் பதித்திருந்த வைரக்கற்கள் ஜொலிப்பதனால் கோவிலே பிரகாசமாக இருந்ததாகவும் செவிவழி செய்திகள் சொல்கின்றன. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்திருக்க, அத்தேரினை அருணன் வழி செலுத்தும் வடிவத்தில் அச்சிலை அமைக்கப்பட்டிருந்ததாகவும், கோவில் அமைக்கப்பட்ட நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு கோவில் சிதைக்கப்பட, சிலையும் காணாமல் போனது!


மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபத்தில் சிற்பத் தூண்கள்....


மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபம் - வெளிப்புறத்திலிருந்து.... 


மொதேரா சூரியனார் கோவில் - குட மண்டபம் - பக்கவாட்டுப் பார்வை....


மொதேரா சூரியனார் கோவில் - குட மண்டபத்தின் உட்புறத் தூண் ஒன்றில் சிற்பங்கள்....

சிலை தவிர, சிலைக்குக் கீழேயும் தங்கக் காசுகள் நிரம்பி இருந்ததாகவும், அது தவிர கோவில் கர்பக்கிரகம் அமைந்திருந்த குட மண்டபாவின் கீழ் வழியே சோலங்கி ராஜாவின் அரண்மனை அமைந்திருந்த பாடண் நகருக்குச் செல்லும் ரகசிய சுரங்கப் பாதை அமைந்திருந்தது என்றும் சொல்கிறார்கள். எண் கோண வடிவத்தில் அமைந்திருக்கும் குடமண்டபாவில் உள்ளே அமைக்கப்பட்ட சூரியனார் சிலை தவிர வெளிப்புறத்திலும் பன்னிரெண்டு ஆதித்யர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சூரியனுக்கும் தாமரை மலருக்கும் தொடர்பு உண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக இக்கோவிலின் அடிப்பகுதி கவிழ்த்து வைக்கப்பட்ட தாமரை மலர் போல அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேலாக யானைகளின் வரிசை கோவிலின் சுற்றுப்புறம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது.


மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபம் - வேறொரு கோணத்தில்..... 


மொதேரா சூரியனார் கோவில் - சூர்ய குண்ட் படிகளில் அமைந்த கோவில்களில் பெரிய ஒன்று....


மொதேரா சூரியனார் கோவில் - சூர்ய குண்ட் படிகளில் அமைந்த கோவில்களில் சில....


மொதேரா சூரியனார் கோவில் - அழிவின் விளிம்பில் இருக்கும் சிற்பம்....


அதற்கும் மேலாக ஒரு வரிசையாக, மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரையான காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில சிற்பங்கள் Erotica வகையைச் சார்ந்தவை. இவை தவிர விதம் விதமான இசைக்கருவிகள் வாசிக்கும் நபர்களின் சிற்பங்கள், த்வதஷ் கௌரி என அழைக்கப்படும் 12 பார்வதிகளின் சிலைகள், 12 ஆதித்யா [சூரியனின் 12 வடிவங்கள்] என சிற்பங்கள் பலப்பலவாக அணிவகுத்து நிற்கின்றன.  கோவிலுக்குள்ளேயே சுற்றி வர வழியும் உண்டு. குட மண்டபா என அழைக்கப்படும் இடத்தில் இருக்கும் சிற்பங்கள் அனைத்துமே மிகவும் அருமையானவை.  ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துப் பார்க்க வேண்டுமெனில் ஒரு நாளாவது இந்த இடத்தில் தேவை.


மொதேரா சூரியனார் கோவில் - சூர்ய குண்ட் படிகளில் அமைந்த கோவில்களில் சில....


மொதேரா சூரியனார் கோவில் - சூர்ய குண்ட் படிகளில் அமைந்த கோவில்களில் சில - வேறு கோணத்தில்....


மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபத்தின் மேற்கூரை....
சபா மண்டபா: எண்கோண வடிவத்தில் அமைக்கப்பட்ட இந்த மண்டபமும் மிகவும் அழகிய சிற்பங்களைக் கொண்டவை. வெளியே இரண்டு பெரிய தூண்களும் உள்ளே 52 தூண்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 52 தூண்கள், 52 வாரங்களைக் குறிப்பவை எனச் சொல்கிறார்கள். இந்தத் தூண்களில், ராமாயணம், மஹாபாரதம், கிருஷ்ண லீலா போன்ற காப்பியங்களிலிருந்து காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன. நிறைய சிற்பங்கள் சிதைக்கப்பட்டும், சில காலத்தினால் அழிந்தும் போயிருந்தாலும் மீதமிருக்கும் சிற்பங்களையும் பாதுகாத்து வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அரசாங்கமும், தொல்லியல் துறையும் முதல் கடமை கொண்டவை என்றாலும், இங்கே வரும் மக்களும் தங்கள் கைகால்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் – கண்டதை எழுதாமல் இருக்க வேண்டும்!


மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபத்தின் உள்ளே ஒரு சிற்பம்....மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபத்தின் உள்ளே ஒரு சிற்பம்....


மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபத்தின் உள்ளே ஒரு சிற்பம்....

சூர்ய குண்ட்: மொதேரா சூரியனார் கோவிலின் ஒரு பகுதியாக இருக்கும் சூர்ய குண்ட் ஒரு அழகிய குளம் – பிரமிட் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவியல் அமைப்புகள் பிரமிக்க வைப்பவை. இதைக் குளம் என்று சொல்வதை விட படிக்கிணறு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட இக்குளத்தின் நான்கு புறங்களிலும் படிகள், ஒவ்வொரு பக்கத்திலும் சிறிய பெரிய கோவில் கோபுரங்கள் என அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.  நான்கு பக்கத்திலும் இருக்கும் நான்கு பெரிய கோபுர வடிவங்களின் கீழே பிள்ளையார், விஷ்ணு, நடராஜர் [ஷிவன்] மற்றும் ஷீத்லாமாதா ஆகியோரின் சிலைகள் உண்டு. மற்ற சின்னச் சின்ன கோவில்களிலும் பல்வேறு தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. நான்கு பக்கங்களிலும் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கை 108!


மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபத்தின் உள்ளே ஒரு சிற்பம் - இசைக் கலைஞர்கள்.... 


மொதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபத்தின் உள்ளே ஒரு சிற்பம்....


மொதேரா சூரியனார் கோவில் - குட மண்டபத்தின் வெளிப்புறத்தில் - தாமரை வடிவமும், யானைச் சிற்பங்களும்....

இக்கோவில் அமைந்திருக்கும் பகுதிக்குப் பின் புறத்தில் புஷ்பவதி நதி – இப்போது சிறு கால்வாய் போலவே இருக்கிறது! அக்காலத்தில் நதியாக இருந்திருக்கலாம். மேலும் இந்தக் கோவில் பற்றிச் சொல்லும்போது, ராவணனைக் கொன்றதால் பெற்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமபிரான் இங்கே யாகங்கள் நடத்தியதாகவும், இங்கே சீதாபூர் என்ற கிராமத்தினை நிறுவியதாகவும் செவிவழிக் கதைகள் சொல்கிறார்கள். குஜராத் மாநிலத்திற்குச் சென்றால் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களில் இந்த மொதேரா சூரியனார் கோவிலும் ஒன்று. அம்தாவாத் [அஹமதாபாத்] நகரிலிருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இவ்விடத்திற்கு பேருந்து மற்றும் இரயில் வசதிகள் உண்டு.  நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய இடம் – குறிப்பாக இங்கே இருக்கும் சிற்பங்களுக்காக…..


மொதேரா சூரியனார் கோவில் - குட மண்டபத்தின் வெளிப்புறத்தில் - யானைச் சிற்பங்கள் - ஒரு கிட்டப்பார்வை....மொதேரா சூரியனார் கோவில் - குட மண்டபத்தின் வெளிப்புறச் சிற்பங்கள் - ஒரு பார்வை....மொதேரா சூரியனார் கோவில் - குட மண்டபத்தின் வெளிப்புறச் சிற்பங்கள் - மற்றொரு பக்கத்திலிருந்து....

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக இங்கே இருந்த பின் நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்

புதுதில்லி.

20 கருத்துகள்:

 1. ஒன்றரை மணி நேரம் தானா? ஒன்றரை நாளாவது செலவிட்டிருப்பீர்கள் என்றல்லவோ நினைத்தேன். படங்கள் அருமை! நாங்கள் பார்க்காமல் தவற விட்டவற்றில் இதுவும் ஒன்று. அழியும் நிலையில் காணப்படும் சிற்பங்கள் மனதை வேதனைப் படுத்துகிறது. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்றரை நாள் இருக்க ஆசை தான் - அன்று திட்டமிட்டிருந்த இரண்டாம் இடம் மாலை ஆறு மணிக்கு மூடி விடுவார்கள் என்பதால் புறப்பட்டோம்.

   அழியும் நிலையும் காணப்படும் சிற்பங்கள் - வேதனை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 2. ஒவ்வொரு படமும் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. அற்புதமான படங்களுடன் தகவல்கள்! அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 4. கலைப் பொக்கிஷம்...
  காப்பாற்றுவதற்கு அங்கேயும் ஆளில்லையோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலைப் பொக்கிஷம் - சரியாகச் சொன்னீர்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 5. படங்கள் அழகு அண்ணா... என்ன ஒரு கலை நயம்.. எல்லாம் பொக்கிஷங்கள்.
  இப்போது பொக்கிஷங்களைப் போற்றிப் பாதுகாக்க யாருமில்லை என்பதை மீனாட்சியும் சொல்லிவிட்டாள்.
  பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொக்கிஷங்களை போற்றிப் பாதுகாக்க யாருமில்லை - அனைவருக்கும் பணம் சேர்ப்பது மட்டுமே விருப்பமாக இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 6. அருமையான சிற்பங்கள். காணவேண்டிய இடம். இதையெல்லாம் செய்த சிற்பிகளும், அவர்களை ஆதரித்த அரசர்களும் மாண்டாலும், காலம் அவர்களை நமக்கு நினைவுபடுத்துகிறது.

  ஒரே தலையை ஐந்து மனிதர்களுக்கு வைத்த அற்புதமான சிற்பம் சிதைவுற்றிருந்தாலும் சிற்பியின் கற்பனையைச் சொல்லுகிறது. விதானச் சிற்பங்கள் அட்டஹாசம்.

  தலைப்பில் 'இரு மா'நில பயனம்' என்று வந்துள்ளது. பயணம் என்று மாற்றிவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயனம் - பயணம் - மாற்றி விட்டேன் நெ.த. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. வணக்கம் சகோ!

  சிதைந்து போயுள்ளன சிற்பங்கள் என்றீர்கள் ஆனாலும் பிரமிக்க வைக்கின்றன!
  காலத்திற்கும் காக்க வேண்டிய அரிய பொக்கிஷம் எல்லாம்!

  பகிர்விற்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 8. அழகிய படங்கள் ரசித்தேன் சில முன்பு வந்தது போல் நினைவு...

  தொடர்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில படங்கள் வெளியிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. ரொம்ப அழகாக இருக்கின்றன படங்களும் தகவல்களும். உங்கள் மூலம் சுற்றிப் பார்க்கிறேன் வெங்கட்ஜி!

  கீதா: என்ன அழகு வடிவங்கள். எப்படி இப்படி வடித்திருக்கிறார்கள். அமேஸிங்க்!!! அதுவும் அந்தச் சூரியகுன்ட் படிகளில் அமைந்திருக்கும் சிறிய கோயில்கள் அழகு!! அந்த மேற்கூரையும் செம!!! ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருக்கின்றன...கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று மொதேரா...ஆமாம் ஜி நிச்சயமாக 1/2 நாள் தேவைப்படும். நீங்களும் கிடைத்த நேரத்தில் நிறையவே சிறைப்பிடித்துள்ளீர்கள்!!! நம் இந்தியாவின் தொல்பொருள் கலைநயம் உங்கள் படங்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக உதவும்...வருடமும் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வருடமும் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்// படம் எடுக்கப்பட்ட நாள் தானாகவே வரும்படிச் செய்யும் வசதி உண்டு. ஆனால் அப்படி வைத்துக் கொள்ளவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 10. சபா மண்டப தூண்கள், சபா மண்டப மேற் கூறை மற்றும்
  அனைத்து படங்களும் அருமை, அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....