புதன், 14 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – இரவுத் தங்கலும் அசைவ உணவுக்கான தேடலும்
இரு மாநில பயணம் – பகுதி – 7

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!இரு மாநில பயணம் தொடரின் சென்ற பகுதியில் பாடண் நகரிலிருக்கும் ராணி கி வாவ் பற்றிய தகவல்களையும் அங்கே எடுத்த புகைப்படங்களையும் பார்த்தோம்.  இந்தப் பயணத்தில் இது தான் முதல் நாள். அஹமதாபாத் நகரிலிருந்து புறப்பட்ட எங்கள் குழு, அன்றைய தினத்தில் இரவு தங்குவதற்கு திட்டமிருந்த இடமும் இந்த பாடண் எனும் இடம் தான். குஜராத் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக இந்த பாடண் இருக்கிறது என்றாலும் தங்குமிடங்கள் கொஞ்சம் குறைவு தான். இணையம் மூலமாக நாங்கள் தேர்ந்தெடுத்த தங்குமிடம் ஹோட்டல் நவ்ஜீவன் என்ற இடம் – சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இடம் – தங்குமிடம், உணவகம் இரண்டுமே இங்கே இருக்கிறது.

சிறிய ஊர் என்றாலும் இரண்டு பேர் தங்கக்கூடிய அறைக்கு ஆயிரம் ரூபாய் வரை வாங்குகிறார்கள். நாங்கள் இரண்டு அறைகளை எங்களுக்காக முன்பதிவு செய்திருந்தோம். ராணி கி வாவ் சிற்பங்களை பார்த்தபிறகு நாங்கள் நேராகச் சென்ற இடம் ஹோட்டல் நவ்ஜீவன். நாங்கள் முன்பதிவு செய்திருந்த விஷயத்தினை ஹிந்தியில் சொல்ல, அவர்களும் ஹிந்தியிலேயே பதில் சொல்லி, அறை எண்களைச் சொன்னார்கள். ஹிந்தி தெரிந்திருப்பது ஒரு பெரிய Advantage! இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஹிந்தி மொழியில் பேசி நமக்குத் தேவையான விஷயங்களைச் செய்து கொள்ள முடியும். அறைக்குச் சென்று எங்கள் உடைமைகளை வைத்து விட்டு, கொஞ்சம் இளைப்பாறினோம்.

கேரளாவிலிருந்து வந்திருந்த நண்பருக்கு ஒரு பிரச்சனை – ஏர்போர்ட்டில் இறங்கிய பிறகு அவரது ஷூ காலை வாரிவிட்டது – வேறு ஒரு ஷூ வாங்கிக்கொள்ள வேண்டும் என வந்ததிலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தார். அதற்காக பாடண் நகரின் தெருக்களில் உலா வந்தோம். மாவட்டத்தின் தலைநகரம் என்றாலும் அப்படி ஒன்றும் பெரிய கடைகள் அங்கே இல்லை – சிறு கடை ஒன்றில் அவருக்குத் தேவையான ஷூ கிடைக்க அவர் வாங்கிக் கொண்டார். நாங்கள் நகரின் கடைத்தெருவையும், அங்கே இருக்கும் மனிதர்களின் நடவடிக்கைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் குழுவில் வந்திருந்த மற்றொரு கேரள நண்பர் தள்ளுவண்டியில் காய்கறி விற்பவரை பேட்டி கண்டார்!

காய்கறி விற்பவரிடம் விலை எல்லாம் எப்படி, எங்கே இருந்து வருகிறது, உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர், அவர்களை படிக்க வைக்கிறீர்களா? படிப்பு முக்கியம், குழந்தைகளுக்கு படிப்பு என்பது அத்தியாவசியம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார். காய்கறி வியாபாரியும், வியாபாரத்தை கவனித்தபடியே ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தார். நண்பருக்கு ஹிந்தி கொஞ்சம் தகராறு என்பதால் பாதி நேரம் அவருக்கு மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. நண்பரைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும் – அவரது மகள் தமிழகத்தின் மாவட்டம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்! இந்தப் பயணம் முழுவதும் இந்த மாதிரி மக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அவரும் மலையாளத்தில் சில புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார்.

அப்படியே நடந்து கடைவீதிகளில் உலா வந்தபிறகு இரவு உணவு பற்றிய பேச்சு வந்தது. குஜராத் மாநிலத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் சற்றே அதிகம் என்பதால் பெரும்பாலான உணவகங்கள் சைவ உணவகங்களாகவே இருக்கின்றன. அசைவ உணவகம் தேட வேண்டியிருக்கிறது – அதுவும் பாடண் போன்ற சிறுநகரில். சாலையோர தள்ளுவண்டி கடைகள் இருந்தாலும் அவற்றில் சாப்பிட அவர்களுக்கு இஷ்டமில்லை. எங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு பல இடங்களில் தேடியபிறகு, சரி நேரமாகிவிட்டது, நாம் தங்கியிருக்கும் ஹோட்டல் நவ்ஜீவன் நடத்தும் உணவகத்திலேயே சாப்பிடலாம் என முடிவு எடுத்த போது மணி இரவு ஒன்பது!ஹோட்டல் நவ்ஜீவனுக்கு வந்து சேர்ந்து அறைக்குச் சென்று முகம் கழுவி புத்துணர்வுடன் கீழே உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம். சப்பாத்தி, Dhதால், மிக்ஸ் வெஜ், பனீர் Bபுஜியா, ராய்த்தா மற்றும் சாலட்! ஆகியவற்றை கொண்டு வரும்படிச் சொன்னோம். கூடவே கொஞ்சம் ஊறுகாயும்! சிறிது நேரம் கழித்து நாங்கள் கேட்ட உணவு வகைகள் வந்தன.  Buffet வகை உணவு வைக்கும்போது, உணவு சூடாக இருக்க, கீழே ஒரு அமைப்பு இருக்கும் பார்த்திருக்கிறீர்களா? ஆங்கிலத்தில் Chafing Fuel என்று சொல்வார்கள். இந்தியாவில் திரவமாக இல்லாமல் கட்டியாக இருக்கும். அது போன்ற அமைப்பின் Miniature ஒன்றை Table மீது வைத்து அதன் மீது உணவுப் பாத்திரத்தை வைத்துத் தருகிறார்கள். கடைசி வரை சூடாக இருக்கும் என்பது நல்ல விஷயமாகத் தெரிந்தது.  ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

இரவு உணவு உண்ட பிறகு மீண்டும் பாடண் நகர வீதிகளில் கொஞ்சம் உலா வந்தோம். ராணி கி வாவ், கோனார்க் சூரியனார் கோவில் ஆகிய இரண்டு இடங்களிலும் பார்த்தவை, கிடைத்த அனுபவம் பற்றி பேசியபடியே கொஞ்சம் நடந்தோம். பிறகு தங்குமிடம் வந்து பயணத்தின் முதல் நாள் நல்லதாக முடிந்த மகிழ்ச்சியுடன் உறக்கத்தினைத் தழுவினோம். அடுத்த நாள் எங்கே போகப் போகிறோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை வரும் பகுதியில் சொல்கிறேன்.
   
தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

14 கருத்துகள்:

 1. கால்களில் சக்கரமா ?ஒரு நல்ல விஷயம் நான் வெஜ் உண்பவர் வெஜ்ஜும் உண்பார் ஆனால் இந்தவெஜிடேரியன்களுக்குத்தான்கஷ்டம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு அப்படி சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 2. கேரளாவில் படித்தவர்கள் அதிகம் படிக்காதவர்கள் குறைவு.
  நண்பரின் அறிவுரை நன்று.
  கேட்டு வாங்கி சாப்பிட்ட உணவு பட்டியல் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேரளாவில் படித்தவர்கள் அதிகம். உண்மை. நம் ஊரிலும் படிப்பவர்கள் அதிகம் என்றாலும் சிலர் சினிமாவிலும், அரசியலிலும் வெட்டிப் பொழுது போக்குவதிலிமே காலைத்தை ஓட்டுகிறார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. அந்த ஊரின் சிறப்பு உணவு என்னவோ?! உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குஜராத் சிறப்பு உணவு நிறையவே உண்டு. ரப்டி, தேப்லா, கிச்டி, டோக்லா என வரிசையாக பலவற்றைச் சொல்லலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. மலையாளிகள் படிப்பை முக்கியமாக கருதுபவர்கள் தொடர்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது தானே சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. சாப்பாடுப் பட்டியல் ருசிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குப் பழக்கமான பட்டியல் தானே கீதாம்மா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....