திங்கள், 5 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – மோதேரா சூரியனார் கோவில் - கல்லிலே கலைவண்ணம்


இரு மாநில பயணம் – பகுதி – 4

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மோதேரா சூரியனார் கோவில் - குட மண்டபாவும் சபா மண்டபாவும் - பக்கவாட்டிலிருந்து....

இந்தப் பயணத்தொடரை எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே தமிழகப் பயணம் வாய்த்ததால் தொடரவில்லை. எனவே ஒரு முன்னோட்டமாக தொடரின் முதல் மூன்று பதிவுகளின் சுட்டி கீழே….மோதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபா....

இரு மாநில பயணம் தொடரின் முதல் மூன்று பகுதிகளையும் படிக்காதவர்கள், படித்ததை மறந்தவர்கள், மேலே உள்ள சுட்டிகள் மூலம் படிக்கலாம்! இப்போது நான்காம் பகுதிக்குச் செல்வோம். மதிய உணவினை விருந்தாவன் தோட்டத்தில் முடித்துக் கொண்டு அஹமதாபாத்/காந்திநகரிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மொதேரா எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கே என்ன விசேஷம் என்றால் அங்கே தான் சோலங்கி மஹாராஜாக்கள் கட்டிய சூரியனார் கோவில் இருக்கின்றது. மிகவும் அழகான கட்டிடக் கலையைக் காண அங்கே செல்லலாம். சூரியனார் கோவில் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தமிழகத்தில் இருக்கும் சூரியனார் கோவிலும், ஒடிசா மாநிலத்தில் இருக்கும் கோனார்க் கோவிலும் தான்.


மோதேரா சூரியனார் கோவில் - சூர்யகுண்ட்....

இருந்தாலும், மத்தியப் பிரதேசத்திலும் குஜராத்திலும் கூட சூரியனார் கோவில்கள் உண்டு. ஏற்கனவே மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் சூரியனார் கோவில்கள் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் வசதிக்காக அவ்விரண்டு பதிவுகளின் சுட்டிகள் கீழே.
மோதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபாவின் வெளியே இரு பெரும் சிற்பத் தூண்கள்....

ஒவ்வொரு சூரியனார் கோவிலும் ஒவ்வொரு விதம். மொதேரா கோவில் பற்றி இப்போது பார்க்கலாம். பாடண் எனப்படும் பட்டணத்தினை தலைநகராகக் கொண்டு வந்த சோலங்கி மஹாராஜாவான பீம்தேவ் என்பவரால் 1026-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் மிகவும் அழகிய சிற்பங்களைக் கொண்டது. தற்போது இங்கே இருப்பது அழிவின் மிச்சங்கள் மட்டுமே என்றாலும் அழகாகவே இருக்கின்றன எனும்போது அமைக்கப்பட்டபோது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கும்போதே மனதுக்குள் ஒரு உணர்வு – அப்படியே ஏதாவது கால இயந்திரத்தில் பின்னோக்கிப் பயணித்து 1026-ஆம் ஆண்டுக்குச் சென்று விட மாட்டோமா என்ற உணர்வு!


மோதேரா சூரியனார் கோவில் - பிள்ளையார் - அருங்காட்சியகத்திலிருந்து....


மோதேரா சூரியனார் கோவில் - இடிபாடுகள் மிகுந்த தூணில் நளினமான பெண் சிலை - அருங்காட்சியகத்திலிருந்து....

சோலங்கி மஹாராஜாக்கள் சூரியனின் வழித்தோன்றல்கள் – அதாவது சூரிய வம்சத்தினர் என்பதால் சூரியனுக்குக் கோவில் கட்டி இருக்கிறார்கள். இரவும் பகலும் சமமான நேரம் கொண்ட நாட்களான 21 மார்ச் மற்றும் 21 செப்டம்பர் ஆகிய தினங்களில் சூரியனின் முதல் கிரணங்கள், இக்கோவிலில் இருந்த சூரியனாரின் சிலையின் மீது படும்படி அமைத்திருந்தார்களாம் – இப்போது கோவிலில் சூரியனார் சிலையே இல்லை – இடிபாடுகளுடன் சிற்பங்களும் கோவிலும் மட்டுமே இருக்கின்றன. சிலையை யார் எடுத்துக் கொண்டு போனார்கள் என்பதற்கான ஒரு வரலாறும் இல்லை. இருக்கும் இடிபாடுகளைப் பார்க்கும்போது மனதில் வலி தோன்றினாலும், இதுவே இவ்வளவு அழகாய் இருக்கிறதே, சேதங்களற்ற கோவிலும், சிற்பங்களும் எவ்வளவு அழகாய் இருந்திருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.


மோதேரா சூரியனார் கோவில் - தூணின் பகுதி ஒன்று - அருங்காட்சியகத்திலிருந்து.... 


மோதேரா சூரியனார் கோவில் - தூணின் பகுதி ஒன்று - அப்சரஸ் பெண்களின் வரிசை - அருங்காட்சியகத்திலிருந்து.... 

கோவில் அமைந்திருக்கும் பகுதிக்கு உள்ளே நுழைந்ததுமே ஒரு அருங்காட்சியகம் அமைத்து இருக்கிறார்கள். அங்கே இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பல சிற்பங்களும், கோவில் பற்றிய தகவல்களும் பார்க்க முடிகிறது. சிற்பங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கோவிலை நோக்கி நகர்ந்தோம். சூரியனார் கோவில் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது – [G]குட மண்டபா, ச[B]பா மண்டபா மற்றும் சூர்ய குண்ட்[d] – மூன்றுமே தனித்தனியாக தொடர்ந்து அமைக்கப்பட்டிருக்கிறது. குட மண்டபா என்பதில் தான் சூரியனார் சிலை அமைக்கப்பட்டிருந்த கர்பக்கிரஹம். சபா மண்டபா நிகழ்ச்சிகளை நடத்தும் இடம் மற்றும் சூர்ய குண்ட் எதிரே அமைக்கப்பட்ட குளம். ஒவ்வொன்றுமே மிகச் சிறப்பான சிற்பங்களை தன்னகத்தே கொண்டவை.  


மோதேரா சூரியனார் கோவில் - தூணின் பகுதி ஒன்று - அருங்காட்சியகத்திலிருந்து.... 


மோதேரா சூரியனார் கோவில் - தூணின் பகுதி ஒன்று - அருங்காட்சியகத்திலிருந்து.... 

அருங்காட்சியகத்தினைப் பார்த்து உள்ளே சென்றபோது அங்கே இருந்த வழிகாட்டி ஒருவர் எங்களிடம் பேசினார். கோவில் பற்றிய தகவல்களை சொல்லுவதாகவும் அதற்கு அரசாங்கம் விதித்திருக்கும் கட்டணத்தினைக் கொடுத்தால் போதும் என்றும் சொல்ல, அவரை கூடவே அழைத்துக் கொண்டு சென்றோம். காலையிலிருந்து அங்கேயே இருப்பதாகவும், நாங்கள் தான் முதன் முதலில் அவருக்கு வாய்ப்பு தந்ததாகவும், இன்றைக்கு நீங்கள் கொடுக்கும் பணம் தான் முதல் ஊதியம் என்றும் சொன்னபடியே எங்களுடன் நடந்தார். உண்மையோ, பொய்யோ என்பது தெரியாது என்றாலும், பல வழிகாட்டிகளின் நிலை அது தான். சில ஏமாற்றுப் பேர்வழிகள் இருந்தாலும், பலர் சரியான வருமானம் கிடைக்காமல் இருக்கிறார்கள் என்பது உண்மை.


மோதேரா சூரியனார் கோவில் - இட்லிகளைக் கோர்த்து வைத்தாற்போல் ஒரு பகுதி - அருங்காட்சியகத்திலிருந்து.... 


மோதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபாவின் உட்பகுதி.... 


மோதேரா சூரியனார் கோவில் - சபா மண்டபா - உட்பகுதியில் இருந்த தூண் ஒன்றில் சிற்பங்கள்.... 

கோவில் பற்றியும் சிற்பங்கள் பற்றியும் ஒரே பதிவில் சொல்லி விட முடியாது என்பதும் உண்மை. இப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள் அருங்காட்சியகத்தில் இருந்த சில சிற்பங்களின் படங்கள் தவிர கோவிலின் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே.  மற்ற படங்கள் வரும் பகுதியில் தர முயற்சிக்கிறேன். இங்கே நான் எடுத்த மொத்த படங்களின் எண்ணிக்கை – 59. நண்பர் எடுத்தவை 83! அனைத்தும் ஒரே பதிவில் தருவது இயலாதது. முடிந்தால் என்னுடைய ஃப்ளிக்கர் பக்கத்தில் சேமித்து அதன் சுட்டியை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

மொதேரா சூரியனார் கோவில் பற்றிய மற்ற செய்திகள், தகவல்கள், அனுபவங்கள் அடுத்த பதிவாக…..

தொடர்ந்து பயணிப்போம்…
 
நட்புடன்

வெங்கட்

புதுதில்லி.

22 கருத்துகள்:

 1. அரசியல்வாதிகளின் ஆதிக்கமே வரலாற்று காவியங்கள் அழிவு.

  தொடர்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. >>> இரவும் பகலும் சமமான நேரம் கொண்ட நாட்களான 21 மார்ச் மற்றும் 21 செப்டம்பர் ஆகிய தினங்களில் சூரியனின் முதல் கிரணங்கள், இக்கோவிலில் இருந்த சூரியனாரின் சிலையின் மீது படும்படி அமைத்திருந்தார்களாம் – இப்போது கோவிலில் சூரியனார் சிலையே இல்லை..<<<

  அத்தனை உயர்ந்த தொழிற்நுட்பம் இருந்ததால் தான்
  இப்படி ஒரு கலைக்கோயிலைப் படைக்க முடிந்தது..

  ஆனால் அவற்றையெல்லாம் அழித்ததோடு
  அல்லது அழித்தவர்களுக்குத் துணை போனதோடு நமது வேலை முடிந்தது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 4. சிற்பங்கள் மிக அருமையா இருக்கு. அருமையான சிற்பிகள். காலவெள்ளம் கொண்டுபோனதன் மிச்சம்தான் காணக்கிடைக்கிறது போலும்.

  'இட்லிகளைக் கோர்த்துவைத்தாற்போல்' - என்ன தைரியமாக இப்படிச் சொல்லிட்டீங்க :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலவெள்ளம் கொண்டுபோனதன் மிச்சம் - உண்மை. எத்தனை அருமையான சிற்பிகள் இங்கே இருந்திருக்கிறார்கள் என நினைக்கும்போதே மனதில் ஒரு வித மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே!

  கலை நுட்பம் மனதைக் கொள்ளைகொள்கிறது.
  அத்தனையும் மிகச் சிறப்பு!

  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 6. சிற்பங்கள் கருங்கற்களால் ஆனதா காஞ்சீ வரம் கைலாச நாதர் கோவில் கற்கள் போலத் தெரிந்தது ஆனால் அவை கருங்கற்கள் அல்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 7. சூரியனார் கோயில் சூரியனார் இல்லாமல்....என்ன வேதனை இல்லையா..சிற்பங்கள் அனைத்தும் சிதைந்து வருவது போல் இருந்தாலும் காணக் கண் கோடி வேண்டும். அருமையாக இருக்கிறது படங்களூம் தகவல்களும். தொடர்கிறோம்.

  கீதா: அக்கருத்துடன், இட்லி ஹா ஹா ஹா நல்ல கற்பனை....முதல் படம் நீங்கள் போட்டிக்குத் தந்திருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் எனது கெஸ் தவறாக இருந்தது என்று நினைவு. படங்கள் அழகோ அழகு...தொடர்கிறோம் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூரியனார் இல்லாமல் சூரியனார் கோவில் - அது தான் வலி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 8. அழகிய படங்கள். அவற்றைப் பார்க்கும்போது எப்போது அங்கு செல்வோம் என்ற ஆசையைத் தோற்றுவிக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போது அங்கே செல்வோம் என்ற ஆசை - நிச்சயம் சென்று வாருங்கள் ஸ்ரீராம். நல்ல இடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. நம் நாட்டுச் சிற்பக்கலைக்கு ஈடு இணை இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம். ஆனாலும் எத்தனையோ பொக்கிஷங்களை இழந்துவிட்டோம். இப்போதோ நம் அறியாமையால் மேலும் இழந்து வருகிறோம். சூரியனாரின் சிலையை யார் தூக்கிப் போனார்களோ என்பதை நினைத்தால் மனம் வேதனையில் ஆழ்கிறது. இப்போது நினைத்தால் நம்மால் இதில் கால் வாசி கூட செய்ய இயலாது. ஆனாலும் தெரிந்தே நாம் நம்முடைய புராதனங்களைச் சீரழித்து வருகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிற்பக்கலைக்கு ஈடு இணை இல்லை என்பது சத்தியம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 10. இட்லிகள் எல்லாம் எண்ணெய், மி.பொடி தடவியது தானே! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிளகாய் பொடி தடவியது தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 11. மொதேரா சூரியன் கோவில்பற்றிய வருணனை, புகைப்படங்கள் மிகவும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....