சனி, 3 பிப்ரவரி, 2018

பேருந்து கட்டண உயர்வு - என்னால குடிக்காம இருக்க முடியாது....


தமிழகம் வந்திருந்த போது தான் பேருந்து கட்டணங்களை Overnight-ல் இரண்டு மடங்காக உயர்த்தி இருந்தது தமிழக அரசு. கட்டண உயர்வு அமலுக்கு வந்த அடுத்த நாள் திருவரங்கத்திலிருந்து திருப்பராய்த்துறை வரை செல்ல வேண்டியிருந்தது. அப்போது பேருந்தில் கேட்ட சில சம்பாஷணைகள் இன்றைய பதிவாக….


முன்பு பன்னிரெண்டு ரூபாயில் திருவரங்கத்திலிருந்து திருப்பராய்த்துறை சென்ற எனக்கு, கட்டண உயர்வுக்குப் பிறகு 24-25 ரூபாய் ஆனது [சாதாரண கட்டணம், LSS கட்டணம் என வேறுபடுகிறது].  சென்று வர ஐம்பது ரூபாய் ஆகிவிட்டது! முன்பு 25 ரூபாய் வரை தான் ஆகும்.  திருவரங்கத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு 9/10 ரூபாய் வாங்கிய கண்டக்டரிடம் ஒரு பெண்மணி, “டவுன் பஸ்-க்குக் கூடவா கட்டண உயர்வு?” என்று கேட்க, கண்டக்டர் சொன்ன பதில் – “என் கிட்ட கேட்கறீங்களேம்மா, கொடுக்க மாட்டேன் என்று என்னிக்காவது சாலையில் இறங்கி போராட்டம் செய்யறீங்களா? கட்டணம் உயர்த்தியது அரசு! இரண்டு நாள் ஆச்சு, ஒன்றிரண்டு இடங்கள் தவிர எங்கியுமே போராட்டம் செய்ய மாட்டேங்கறாங்களே மக்கள்? என் கிட்ட கேட்டு என்ன பிரயோஜனம்?” சொல்லுங்க என்றார்!  திருப்பராய்த்துறை பேருந்தில் பெரும்பாலும் கிராம மக்கள் மற்றும் முக்கொம்பு செல்லும் காதலர்கள் மட்டுமே! காதலர்களுக்கு கட்டண உயர்வு பற்றிய கவலை இல்லை! கிராம மக்கள் தான் பாவம்! கட்டண உயர்வு பற்றி ரொம்பவே ஆதங்கம் அவர்களுக்கு! அப்படி சந்தித்த ஒரு நபர் – ஒல்லியான தேகம், இரவு வேலைக்குச் சென்று வருகிறாராம் – ஏதோ உணவகத்தில் அடுப்படி வேலை! திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் – மூவருமே படிக்கிறார்கள். அவர் சம்பாத்தியத்தில் ஐந்து பேர் சாப்பிட வேண்டும். மூன்று பெண் குழந்தைகளும் பள்ளிக்குப் பேருந்தில் சென்று படிக்க வேண்டும். பேருந்துக் கட்டணம் ஏறியதால் செலவை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற கவலை அவருக்கு. அவர் சொன்ன ஒரு வரி தான் இப்பகுதியின் தலைப்பு!”நாலு பேரும் சேர்ந்து பேருந்தில் பயணிக்க ஆகும் செலவு அதிகமாகிடுச்சு! சொல்றேன்னு கோச்சுக்காதீங்க சார்,  தினம் தினம் சரக்கு அடிக்காம என்னால இருக்க முடியாது! அடிச்சாதான் வேலை செஞ்ச களைப்பு போகும்! அதனால அதை நிச்சயம் நிறுத்த முடியாது. பேசாம பெண்களின் படிப்பை நிறுத்திடலாம்னு யோசிக்கிறேன்” பெண்கல்வி, பெண்களின் முன்னேற்றம் என என்னதான் பேசினாலும், கிராமத்துப் பெண்களின் நிலை இன்னமும் அப்படியே அடிமட்டத்தில் தான் இருக்கிறது! பேருந்துக் கட்டணம் உயர்கிறதா, செலவை சமாளிக்க பெண்களின் படிப்பை நிறுத்தலாம்னு யோசிக்கும் தகப்பன்! இறங்கும்போதும் கோச்சுக்காதீங்க சார் என்றபடியே இறங்கினார்.அவர் இறங்கிய நிறுத்தத்தில் மூன்று பேர் ஏறிக்கொண்டார்கள் – வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் பளபளா – கல்யாணத்துக்குப் போகிறார்களாம்! பயணச் சீட்டு வாங்கியதிலிருந்து பேச ஆரம்பித்தார்கள். மூவரில் இருவர் திமுக, ஒரு பெரியவர் மட்டும் அதிமுக! திமுக-காரர்கள், அதிமுக பெரியவரை சீண்டினார்கள் – “நாங்க ஆட்சில இல்லை! எங்க ஆட்சி இருந்திருந்தா இப்படி கட்டணத்தினை உயர்த்தி இருக்க மாட்டோம்! இப்ப எங்களால ஒண்ணும் செய்ய முடியாது! நீங்க தான் ஆளுங்கட்சில இருக்கீங்க – நீங்க தான் ஏதாவது செய்து, கட்டணத்தினை குறைக்க வேண்டும்” என்று சொல்ல! பெரியவர் சொன்ன பதில் – “அம்மாவோட எங்க ஆட்சி போச்சு! அம்மா இருந்திருந்தா இப்படி எல்லாம் நடக்குமா? அவங்களோட அதிமுக ஆட்சி போயிடுச்சு! அம்மா இருக்க வரைக்கும் ஒழுங்கா இருந்த கட்சிக்காரங்க கொள்ளை அடிச்சுட்டு இருக்காங்க!, அம்மா மாதிரி வராது பா!” என்றார்….நடத்துனர்தான் பாவம் – கணக்கு வழக்கில் திண்டாடினார் – நான் நூறு ரூபாய் கொடுத்து திருப்பராய்த்துறைக்கு மூன்று சீட்டு தரக் கேட்டேன் – இரண்டு ரூபாய் கேட்டார், அதையும் வாங்கிக் கொண்டு பயணச் சீட்டும், எழுபது ரூபாயும் தந்தார். வாங்கி உள்ளே வைத்த பிறகு தான் கணக்கு ஏதோ சரியில்லையே - மூன்று டிக்கெட் முப்பத்தி ரெண்டு ரூபாய்க்கு என்றால் கணக்கு சரியில்லையே! என பயணச்சீட்டை மீண்டும் பாரத்தேன் –சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பராய்த்துறைக்கு ஒரு ஆளுக்கான கட்டணம் 14 ரூபாய்! மூன்று பேருக்கு 42 ரூபாய். பத்து ரூபாய் அதிகமாக திருப்பிக் கொடுத்திருக்கிறார்!என்னருகில் வந்தபோது பேச்சுக் கொடுத்தேன் – “டிக்கெட் எவ்வளவு, நீங்க எவ்வளவு திருப்பிக் கொடுத்தீங்க? கணக்கு பார்க்கும்போது குறைந்தால் என்ன செய்வீங்க, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லரை தராமல் வைத்துக் கொள்ளும் வழக்கம் உண்டா?” என்று கேட்டு, அதிகமாகக் கொடுத்த பத்து ரூபாயை திருபிக் கொடுத்தேன். நன்றி சொல்லி, “நீங்க திருப்பிக் கொடுத்துட்டீங்க, பலர் கொடுப்பதில்லை. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லரை கொடுக்காமல் விட மாட்டாங்க! சில்லரை கொடுத்தே ஆக வேண்டியிருக்கிறது. குறைந்தால் எங்கள் கைகாசு தான் போட வேண்டியிருக்கிறது. முன்பு கிடைத்த படிகாசும் இப்போது குறைத்து விட்டார்கள்!” என்று தனது சோகக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு சில போராட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு கண்துடைப்பாக ஒரு ரூபாய் வரை கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது அரசாங்கத்தால்! நிர்வாகம் செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், தங்களது சுய முன்னேற்றத்தினை மட்டுமே கணக்கில் வைத்திருந்தால் நிறுவனத்தினை சரிவர நிர்வாகம் செய்ய முடியாது – அரசு பேருந்துத் துறையும் அப்படியே! பல ஆண்டுகளாக நிர்வாகம் சரியில்லை. பேருந்துத் துறையில் நடக்கும் ஊழல்களும் தில்லுமுல்லுகளும் ஏராளம் – வேலையில் சேர்வதற்கு லஞ்சம், பேருந்துகள் வாங்குவதில், பராமரிப்பதில் என எப்படியெல்லாம் காசு அடிக்க முடியும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் நஷ்டத்தில் இயங்காமல் என்ன செய்யும். பெரும்பாலான அரசுப் பேருந்து நிறுவனங்கள் நட்டத்தில் தான் இயங்குகின்றன – இந்தியத் தலைநகரத்தின் DTC கூட அப்படித்தான்.

மக்களின் கஷ்டங்களைப் பற்றிய கவலை நமக்கெதற்கு என அரசாங்கமும் இருக்கிறது. செலவு சாஸ்தியாயிடுச்சு, பேசாம பெண்களின் படிப்பை நிறுத்திடுவோம்னு நினைக்கும் தகப்பன்கள் பலர் இங்கே இருக்கிறார்கள் – ஏனெனில் பேருந்தில் பார்த்த தகப்பன் சொல்வது போல – “என்னால குடிக்காம இருக்க முடியாது……
  
மீண்டும் ச[சி]ந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லியிலிருந்து.

டிஸ்கி: இப்போதெல்லாம் இப்படியான பிரச்சனைகளை வைத்து மீம்ஸ் என்ற பெயரில் படங்கள் போடுவது அதிகமாக இருக்கிறது. அப்படி பார்த்த சில மீம்ஸ்களை பதிவில் இணைத்திருக்கிறேன் – அனைத்தும் இணையத்திலிருந்து தான்…. மீம்ஸ் உருவாக்கியவர்களுக்கு நன்றி. 

10 கருத்துகள்:

 1. வெங்கட்ஜி அதை என் கேக்கறீங்க.....டபுள் ரே ட் ரொம்பவே ஓவர் தான்...கட்டுப்பிடி ஆகலை....இப்ப 2 வீலரும் பஸ் கட்டணமும் கிட்டத்தட்ட ஒரே போலத்தான் இருக்கு....நீங்க சொல்றா மாதிரி யாரும் போராட்டம் பண்ணல...நாமும் அதில் அடக்கம் தானே...டிக்கெட் விலை அதிகம் ஆனா அதே லோட லோட. பிரேக் சத்தம் போடும் பேருந்து தான்.....பேசாம ஹெலிகாப்டர் வாங்கிடலாம்...ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹெலிகாப்டர் வாங்கி விடலாம் - ஹாஹா... உண்மை. நல்ல வசதி. நம்ம வீட்டு மொட்டை மாடியிலேயே இறங்கிக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. ///பேருந்துக் கட்டணம் உயர்கிறதா, செலவை சமாளிக்க பெண்களின் படிப்பை நிறுத்தலாம்னு யோசிக்கும் தகப்பன்///

  தமிழ் நாட்டின் தகப்பன்கள் புத்தி இதுதான் வேதனைப்படுவதைவிட வேறென்ன செய்ய இயலும் ஜி ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்நாட்டின் தகப்பன்கள் - இப்படியும் சிலர்! என்ன சொல்ல.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 3. >>> செலவு சாஸ்தியாயிடுச்சு, பேசாம பெண்களின் படிப்பை நிறுத்திடுவோம்னு நினைக்கும் தகப்பன்கள் பலர் இங்கே இருக்கிறார்கள்..<<<

  அந்த நிலைக்கு பலரையும் தள்ளி விடுவது அரசாங்கம் தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசாங்கமும் காரணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 5. பேரூந்துக் கட்டணம் உயர்வில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி பஸ்ஸில் வேலைக்குச் சென்று வீடு திரும்புவர்கள். இவர் பெண்களின் படிப்பை நிறுத்துவேன் என்கிறார். இது போல எத்தனை பேர் எதையெல்லாம் நிறுத்தினார்களோ? மக்களுக்கு பொருமையும் சகிப்புத்தன்மையும் இருக்கும் விலையேற்றங்கள் தொடர்கதைதானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....