எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 21, 2018

குஜராத் போகலாம் வாங்க – ஹோட்கா கிராமம் – மண்குடிசையில் தங்கலாம் – மதிய உணவு
இரு மாநில பயணம் – பகுதி – 10

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


[B]பூங்கா என அழைக்கப்படும் மண்குடிசை
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....

வெண்பாலைக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தபோதே அங்கேயுள்ள கிராமத்து வீட்டில் தங்கும் உணர்வு கிடைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம். அதனால் ஹோட்கா எனும் கிராமத்தில் இருக்கும் “Rann Visamo Village Stay” எனும் இடத்தில் தான் முன்பதிவு செய்திருந்தோம். Rann [રણ] எனும் குஜராத்தி சொல்லிற்கு பாலை என்ற பொருள். விசாமோ [વિસામો] என்ற குஜராத்தி சொல்லிற்கு Relax என்ற அர்த்தம். ஹோட்கா எனும் கிராமத்தில் இருக்கும் இந்த கிராமத்தில் ஹாயாக இருக்கலாம் – இந்த இடத்தில் [B]பூங்கா என அழைக்கப்படும் வட்ட வடிவ மண் குடிசைகளில் தங்க வசதிகள் உண்டு.சாலையின் இருபக்கத்திலும் உப்பு - நிலமே உவர்ப்பு நிலம் தான்!
காலோ டுங்காரிலிருந்து ஹோட்கா கிராமத்திற்கு....


எங்கள் பயணத்திட்டப்படி, மதிய உணவிற்கு அங்கே சென்று சேர்ந்து விடுவோம் என சொல்லி இருந்தோம். எங்களுக்காக மதிய உணவு தயாராக இருக்க, நாங்களோ காலோ டுங்காரில் ஒட்டகங்களோடு உறவாடிக்கொண்டிருந்தோம்! எங்கள் அலைபேசிக்கு தங்குமிட உரிமையாளர் திரும்பத் திரும்ப அழைத்தபடியே இருந்தார். ஹோட்கா வில்லேஜ் என கேட்டுக் கேட்டு நாங்கள் பயணிக்க, கூடவே கூகிள் மேப் துணை தேட நாங்கள் சென்ற வழி பதினைந்து கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் பாதை. முகேஷ்-இடம் கேட்டால், சென்று சேர்ந்த பிறகு சொன்னார் “இந்த இடம்னா நேர் வழியே இருக்கே?” என! அட சாம்பிராணி இதைத்தானே இத்தனை நேரமா சொல்லிக்கொண்டு இருந்தோம் என நினைத்தபடி தங்குமிடத்தினை அடைந்தோம்.


மதிய உணவு - கட்ச் பாரம்பரிய உணவு....
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....

காலை எட்டு மணிக்கு பூரி சாப்பிட்டது. நாங்கள் காலோ டுங்காரிலிருந்து புறப்பட்டபோதே மணி ஒன்றரை. 15 கிலோமீட்டர் சுற்றி வந்ததில் சுமார் ஒன்றே கால் மணி நேரம் ஆகிவிட, இரண்டே முக்கால் மணிக்கு தான் தங்குமிடம் சென்று சேர்ந்தோம். தங்குமிட உரிமையாளரும் அங்கே பணிபுரிபவர்களும் சொந்தக்காரர்கள் – ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் – அண்ணன், தம்பி, சகோதரிகள், அவர்களது குழந்தைகள் என அனைவருமே உழைப்பாளிகள் – இந்த கிராமத்தில் இருப்பவர்கள் மேக்வால் எனும் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள். அனைவரும் திறமைசாலிகள் – Embroidery, Leather work, Clay art என பல திறமைகள் கொண்டவர்கள். நாங்கள் உள்ளே நுழைந்ததுமே அந்த இடத்தின் அழகு எங்களை மிகவும் கவர்ந்தது.


தங்குமிடத்தில் உணவகம்....
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....

தங்குமிடத்தில் பெயர் எழுதுவது, அடையாள அட்டை கொடுப்பது போன்றவற்றை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் முதலில் சாப்பிட வாருங்கள் என அழைக்க சாப்பிட உள்ள இடத்திற்குச் சென்றோம் – அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கிறது. பக்கத்திலேயே சமையலறை. சுடச் சுட சப்பாத்தி வர தட்டில் வரிசையாக விதம் விதமான சப்ஜி வந்தது. பலவற்றின் பெயர் கூட தெரியாது எனினும் சுவையாக இருந்தது. ஒரு கிண்ணத்தில் நெய், தனியாக வெண்ணை, வெல்லம், ஊறுகாய், இரண்டு விதமான சப்ஜி, தால், பாஸ்மதி அரிசி சாதம், சப்பாத்தி என ஒவ்வொன்றும் நல்ல சுவை.  வெண்ணை, நெய் எல்லாம் பார்த்தபோது கொஞ்சம் பயமாக இருந்தது – சப்ஜி காரமாக இருக்குமோ என. ஆனால் சரியாக இருந்தது. கூடவே எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு છાશ - அதாவது மோர்!


மண்ணில் சுவர் - ஓட்டு வீடு... - Traditional Cottage
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....
  
திருப்தியாக உணவை உண்ட பிறகு தங்குமிடத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் எங்கள் பெயர்களை பதிவு செய்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றோம். எங்கள் உடைமைகளை ஏற்கனவே நாங்கள் உணவு உண்ட போது அங்கே வைத்திருந்தார்கள். நாங்கள் ஐந்து பேர் – இரண்டு காட்டேஜ்கள் முன்பதிவு செய்திருந்தோம். அறைக்குள் சென்றால் அப்படி ஒரு அழகான வேலைப்பாடுகள் – அறை முழுவதுமே – கட்டிலுக்கு பதில் ஒரு பெரிய மண்மேடு, அதில் களிமண்ணால் பூசி, அதன் மேலே மெத்தை போட்டு வைத்திருக்கிறார்கள். சுவர் முழுவதும் அழகிய வேலைப்பாடுகள் – தண்ணீர் வைக்க ஒரு பானை – எதைப் பார்த்தாலும் அதில் ஏதாவது ஒரு வேலைப்பாடு! அவர்களது திறமை பிரமிக்க வைத்தது.


பூட்டுகிறேனா இல்லை திறக்கிறேனா?
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....

களிமண்ணில் கண்ணாடி ஒட்டி இப்படி அலங்கரிப்பது, துணிகளில் அலங்கரிப்பது போன்ற அவர்களது வேலைகள் எல்லாம் முன்பு அவர்கள் வீட்டுப் பெண்கள் செய்து கொண்டிருந்தார்களாம். இப்போதெல்லாம் ஆண்களும் இந்த வேலைகளைத் தெரிந்து கொண்டு இவர்களது திறமையை பலருக்கும் தெரியப்படுத்துகிறார்கள். வருடம் முழுவதும் ஏதாவது ஒரு மாநிலத்திற்கோ, வெளிநாட்டிற்கோ எதாவது Exhibition சமயத்தில் சென்று தங்கள் கைகளால் அலங்கரித்த பொருட்களை விற்பனையும் செய்கிறார்கள். அறை முழுவதும் இருந்தவற்றை புகைப்படம் எடுத்துக் கொண்டு சற்றே இளைப்பாறினோம். மாலை நேரத்தில் வெளியே புறப்பட வேண்டும்.


மண்குடிசைக்குள் களிமண் கொண்டு பூசி இயற்கை வண்ணம் கொண்டு அலங்காரம் - கண்ணாடிகளும் பதித்திருக்கிறார்கள்...
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....


விடுதியின் உரிமையாளர்களில் ஒருவர்...
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....


சுவர் அலங்காரம்......
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....


சுவர் அலங்காரம்......
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....


மண் மேடையில் மெத்தை......
படுக்கை விரிப்பு கூட பெண்களின் கைவேலையோடு.... 
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்....


மண் பானையில் தண்ணீர்......
ரண் விசாமோ கிராமிய விடுதி - கட்ச்.... 

கட்ச் பகுதிக்குச் சென்றால் இந்த மாதிரி இடங்களில் தங்க வசதி நிறையவே இருக்கிறது. பாலைவனத்திற்கு அருகிலேயே சின்னச் சின்ன கிராமங்கள் – டோர்டோ, ஹோட்கா போன்று நிறைய கிராமங்கள். அவற்றில் இப்படியான பல தங்குமிடங்கள் அமைத்திருக்கிறார்கள். வெட்ட வெளியில் இப்படி தங்குவது நல்ல ஒரு அனுபவம். அப்படிச் சென்றால் நாங்கள் தங்கிய Rann Visamo Village Stay-விலோ அல்லது அப்படியான மற்ற இடங்களிலோ தங்கலாம். நாங்கள் தங்கிய இடத்திற்கு முன்பதிவு செய்து கொள்ள, அல்லது அவர்களைத் தொடர்பு கொள்ள கீழுள்ள இணைய முகவரியில் தகவல்கள் உண்டு.


கொஞ்சம் இளைப்பாறிய பிறகு எங்கே சென்றோம், என்ன பார்த்தோம் என்பவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

20 comments:

 1. ஆகா...

  இப்படியான வீடுகளில் தானே நம் முன்னோர்கள் வாழ்ந்திருந்தார்கள்...

  இன்றைக்கு இத்தகைய வீடுகளில் தங்குவது சுற்றுலாவின் ஒரு அங்கமாகி விட்டது...

  இதுதான் காலக்கொடுமை என்பது!..

  ReplyDelete
  Replies
  1. இத்தகைய வீடுகளில் தங்குவது சுற்றுலாவின் அங்கமாகி இருப்பது கொடுமை தான். ஆனால் அவர்களாவது இதைப் பாதுகாக்கிறார்களே என்ற நிம்மதியும் இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 2. மிக அழகிய கலை வேலைப்பாடுகள்....வியக்கவைக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 3. படங்களும் பகிர்வும் அருமை.

  தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 4. அருமையாக இருக்கிறதே வெங்கட்ஜி! இடமும் தங்கும் இடமும், கலையும்...நல்லதொரு பயணம்..தொடர்கிறோம்.

  கீதா: ஜி வீட்டுக்குள் அவ்வளவு அழகு!! எல்லாமே கலைநயத்துடன் இருக்கே...தொடர்புத் தகவல்களுக்கு மிக்க நன்றி ஜி. குறித்துக் கொண்டுவிட்டேன்.

  சாப்பாடு பார்க்கவே அழகா இருக்கு. கட்ச் ரெசிப்பிஸ் ரொம்ப நல்லாருக்கும் சில நெட்டில் பார்த்துச் செய்ததுண்டு.

  டைனிங்க் என்ன கலை நயம்...அழகோ அழகு!!! அனைத்துப் படங்களும் செம..நல்ல அனுபவம் ஜி!! இல்லையா? .தொடர்கிறோம்

  ட்ரைபல் ஹட்டில் கூட மண்ணால் மேடை அமைத்து அதன் மேல்தான் பெட்...போட்டிருந்தார்கள்..

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பக்கம் செல்லும் வாய்ப்பிருந்தால் இது போன்ற இடங்களில் தாராளமாகத் தங்கலாம்.

   கட்ச் உணவு - நன்றாகவே இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நன்றாகக் கவரும் விதத்தில் இருக்கிறது...

  ஹட் களிமண் என்பதால் குளிர்ச்சியாக இருந்ததா ஜி..அதுவும் பாலைவனப்பகுதியாச்சே...இரவில் இதமாக இருந்ததா?

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நிறைய வெளிநாட்டவர்கள் வருகிறார்கள். நம்மவர்கள் வருகையும் இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது.

   மண் குடிசைகள் என்பதால் நன்றாகவே இருந்தன. குளிருக்கு இதமாய் ரஜாய் வைக்கப்பட்டிருந்தன என்பதால் தப்பித்தோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 6. தங்குமிடம் மிக அருமையாக இருக்கிறது. கைவேலைப்பாடுகளை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. கண்கவர் காட்சிகள். எளிமையில் அழகு, கலைவண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. எளிமை, அழகு, கலைவண்ணம் - மூன்றும் சேர்ந்தது தான் இந்த இடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. குடிசை படமே அட்டகாசம் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. வணக்கம் சகோதரரே

  தங்கியுருந்த வீடும் வீட்டினுள் கலைவேலைப்பாடுடன் படங்களும், கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. மண் மேடை படுக்கை விரிப்புகளின் அலங்காரம் அற்பதமாயிருந்தது.அங்கெல்லாம் செல்லம் வாய்ப்பு கிடைத்தால் தங்களின் தகவல் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. படுக்கை விரிப்புகளின் அலங்காரம் - எல்லாம் பெண்களின் கைவண்ணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 10. அருமையான குடில்.கலைவேலைப்பாடு வியக்க வைக்கிறது.
  மண்பானையும், டம்ளாரும் அழகு.
  படுக்கை விரிப்புகள் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....