எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, April 13, 2018

குஜராத் போகலாம் வாங்க – சோம்நாத் – கடலும் கோவிலும்
இரு மாநில பயணம் – பகுதி – 25

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சோம்நாத் கோவில் - சூரியாஸ்தமன வேளையில்....

த்வாரகாதீஷ் நகரில் கிருஷ்ணரை தரிசித்த பிறகு போர்பந்தர் வழியாக வந்து சேர்ந்த இடம் முதலாம் ஜோதிர்லிங்க ஸ்தலமான சோம்நாத். மாலை நேரத்தில் வந்து சேர்ந்து வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தினை நிறுத்தி சற்றே நடந்து செல்ல வேண்டியிருக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் என்பதால் கேமரா, மொபைல் போன்றவற்றிற்கு அனுமதி இல்லை. எல்லாவற்றையும் வாகனத்திலேயே வைத்து விட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும். வாகன நிறுத்தத்திலிருந்து நடந்து வந்து பாதுகாப்புச் சோதனைகளை முடித்துக் கொண்டு கோவில் வளாகத்திற்குள் நுழைந்தோம். நல்ல பெரிய கோவில் இது.வாகன நிறுத்தத்திலிருந்து சோம்நாத் கோவில் நோக்கி நடந்த போது...

எப்போதும் இங்கே பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் கோவில் உள்ளே நடக்கும் பூஜை/இறைவனின் வழிபாடுகள் ஆகிய அனைத்தையும் வெளியே இருக்கும் பிரம்மாண்ட LCD திரையிலும் காணும்படியான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகம் செய்திருக்கிறது. இது ஒரு நல்ல விஷயம். என்ன தான் நேரடியாக கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறோம் என்றாலும், கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில் சில விநாடிகள் கூட உள்ளே இருக்க முடிவதில்லை – குறிப்பாக திருப்பதி போன்ற கோவில்களில் பக்தர்களை இழுத்து வெளியே வீசி விடுகிறார்கள். இந்தக் கோவிலிலும் கூட்டம் இருந்தால் மக்களை நகர்ந்து கொண்டே இருக்கச் சொல்வார்கள். இப்படி வெளியே பெரிய திரைகள் இருப்பதால், கோவில் உள்ளே நின்று நிதானித்து இறைவனின் திருமேனியைத் தரிசிக்க முடியாதவர்கள், இந்தத் திரை வழியே, நேரடி ஒளிபரப்பில் நிதானமாகத் தரிசனம் செய்து கொள்ளலாம்.


சோம்நாத் கோவில் - கோபுரம்....

நாங்க சென்ற போது பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை என்பதால், நின்று நிதானித்து நிம்மதியாக தரிசனம் செய்து கொள்ள முடிந்தது. கோவிலுக்குள் இருக்கும் வேலைப்பாடுகள், சிற்பங்கள் ஆகியவற்றையும் நிதானமாகப் பார்க்க முடிந்தது. சென்ற முறை நாங்கள் சென்றபோது கூட்டம் அதிகம் என்பதால் உடனேயே வெளியே வந்து விட்டோம். இந்த முறை நிம்மதியான தரிசனம். சில நிமிடங்கள் மனதொன்றிப் பிரார்த்திக்க முடிந்தது. கோவிலுக்குச் செல்வதே நிம்மதியைத் தேடித் தானே. அதிலும் பார்க்கமுடியாதபடி கூட்டம், தள்ளு முள்ளு என்றால் போகாமலேயே இருந்து விடலாமே! கூட்டம் அதிகம் இருக்கும் கோவில்களுக்குச் செல்வதையே பெரும்பாலும் தவிர்த்து விடுவதை நான் கடைபிடிக்கிறேன்.


சோம்நாத் கோவில் - வளாகத்திற்கு வெளியே இருந்து....

கோவில் அமைந்திருக்கும் இடம் கடற்கரை. ஆனால் கோவில் வழியே கடற்கரைக்குச் செல்ல முடியாது. கடற்கரைக் காட்சிகளை கோவில் வளாகத்திற்குள்ளே இருந்து கண்டு ரசிக்க முடியும். கோவிலுக்குள் சுற்றி வந்து கடற்கரைக் காட்சிகளைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம். எங்கே பார்த்தாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். பெரிய வளாகம் என்பதால் ஆங்காங்கே பக்தர்கள் நின்று கொண்டு கடற்கரைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான காட்சிகளைப் பார்த்துக் கொண்டே கோவிலை வலம் வந்தோம். வலம் வந்த பிறகு வெளியே வந்து, வாகன நிறுத்துமிடம் சென்று கேமராக்களைக் கொண்டு வந்தோம் – வெளியே நின்று சில புகைப்படங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமே.


சோம்நாத் கோவில் - வளாகத்திற்கு வெளியே நண்பர்களோடு....

சூரியன் அஸ்தமிக்கும் சமயம் – கடற்கரையில் மிகச் சிறப்பாக இருந்தது. கோவிலுக்குள் இருந்ததால் பார்க்க மட்டுமே முடிந்தது. சூரிய அஸ்தமனக் காட்சிகளை படம் எடுக்க முடியவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம். கோவில் வெளியே இருந்து சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கோவில் வெளியே இருந்த கடைகள், அவற்றில் விற்கும் பொருட்கள் ஆகியவற்றை பார்த்தபடியே நடந்தோம். கடை ஒன்றில் இளநீர் விற்க, அனைவரும் இளநீர் பருகினோம். பக்கத்திலே இருந்த நடைபாதையில் மூதாட்டி ஒருவர் பெண்களுக்கான தோடு, கம்மல், ஜிமிக்கி ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தார். சரி அவரிடம் ஏதாவது வாங்குவோம் என அவர் கடைக்குச் சென்றேன்.
சோம்நாத் கோவில் - இரு வேறு படங்கள்....

கட்ச் பகுதியில் பார்த்த மாதிரியே நிறைய அலங்காரப் பொருட்கள். அங்கே இருந்ததை விட அதிகமாகவே வைத்திருந்தார். சுற்றுலா/ வழிபாட்டுத் தலம் என்பதால் இங்கே நிறைய விற்பனை ஆகும் என நினைக்கிறேன். மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தால் விஷயங்கள் சொல்வார் என எதிர்பார்த்து, “அம்மாஜி, வியாபாரம் எல்லாம் எப்படிப் போகுது?” எனப் பேச ஆரம்பித்தால், அத்தனை வரவேற்பு இல்லை அவரிடம்! சரி வந்த வேலையைக் கவனிப்போம் என மகளுக்காக, அவரிடம் சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். வெகு சிலர் மட்டுமே “பட்டனைத் தட்டி விட்டால் போதும்” நிற்காமல் பேசிக்கொண்டே இருப்பார்கள் – நமக்கும் விஷயங்கள் கிடைக்கும். மூதாட்டி அப்படியானவர் இல்லை! அதனால் நமக்கும் விஷயம் ஒன்றும் கிடைக்கவில்லை!


 சோம்நாத் கோவில் - வளாகத்திற்கு வெளியே இருந்து....

அன்றைய இரவு சோம்நாத் நகரில் தங்குவதாக எங்கள் திட்டத்தில் இல்லை. அங்கிருந்து சுமார் 85 கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு இடத்திற்குச் சென்று அங்கே தங்குவதாகத் திட்டம். சோம்நாத் நகரிலிருந்து 06.45 மணிக்குப் புறப்பட்டோம். சரியாகச் சென்றிருந்தால் 08.00 மணிக்குள் எங்கள் இலக்கை அடைந்திருகலாம். ஆனால் திட்டமிட்டபடி செல்ல முடிந்ததா? பயணித்தபோது சந்தித்தது என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

28 comments:

 1. படங்கள் ஒவ்வொன்றும் உள்ளம் கவர்கின்றன ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. குட்மார்னிங் வெங்கட்...

  சோம்நாத் பார்க்கவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் எங்கே?

  ReplyDelete
  Replies
  1. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

   உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. /இழுத்து வெளியே வீசி விடுகிறார்கள்.//

  // கூட்டம், தள்ளு முள்ளு என்றால் போகாமலேயே இருந்து விடலாமே! //

  ஹா... ஹா... ஹா... உண்மை. கீதாக்கா தளத்தில் உங்கள் திருப்பதி கமெண்ட் பார்த்தேன். எனக்கும் அதே எண்ணங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. கூட்டம் பார்க்கும்போது/கேட்கும் போது கொஞ்சம் அலர்ஜியாகத் தான் இருக்கிறது. போலவே காசு கொடுத்து/சிபாரிசு செய்து போவது எனக்குப் பிடிப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. Nice pictures. I liked particularly temple in silhouette pics. I think this is the temple featuring in 'moonstone' novel... Am I right?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். இந்த கோவிலே சந்திரன் [சோம்!] சம்பந்தப்பட்ட கோவில் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 5. வணக்கம் சகோதரரே

  கோவில் தரிசனம் மிகவும் நன்றாக இருக்கிறது. படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக உள்ளது. தங்களால் கோபுரதரிசனம் இன்று காலையில் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி. தொடருங்கள் நாங்களும் உடன் வருகிறோம்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன்.

   Delete
 6. காலை வணக்கம் வெங்கட்ஜி!

  முதல் படமே அட்டகாசமா இருக்கு இதோ பதிவு முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மாலை வணக்கம் கீதா ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 7. துளசி: சோம்நாத் கோயில் என் லிஸ்டில் இருக்கிறது. ஜோதிர்லிங்கக் கோயில்கள் என் லிஸ்டில் உண்டு ஆனால் எப்போது போகமுடியும் என்று தெரியவில்லை அதுவும் சோம்நாத் எல்லாம் எப்போது என்று தெரியவில்லை...படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. கோயிலை மட்டுமேனும் (உள்பகுதி இல்லை எனினும்) உங்கள் பதிவின் மூலம் பார்க்கக் கிடைத்ததே அதுவே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ஜி. மிக்க நன்றி

  கீதா: கடற்கரைக் கோயில்! பார்க்க வேண்டும். படங்கள் எல்லாம் வழக்கம் போல் ரொம்ப அழகாக இருக்கிறது ஜி...

  நானும் கூட்டம் அதிகமுள்ள கோயிலுக்குச் செல்வதே இல்லை. வீட்டில் யார் சென்றாலும் கூடியவரை தவிர்த்துவிடுவேன். அப்படியே பயணம் செய்ய வேண்டும் என்றாலும் கோயிலுக்குள் கூட்டத்தில் செல்லாமல் வெளியில் இருந்து புகைபப்டங்கள் எடுத்துக் கொண்டு சுற்றி ஏங்கேனும் ஏதேனும் யாரும் கண்டு கொள்ளாத சன்னதிகள் இருக்கா என்று பார்த்து அங்கு வணங்கிவிட்டு வருவது வழக்கமாக இருக்கு...காரணம் நீங்கள் சொல்லியிருப்பதுதான்....அமைதியான தரிசனம்...

  அடுத்த பகுதிக்குச் செல்லத் தாமதமானதற்கான காரணம் அறிய ஆவல்..தொடர்கிறோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஜ்யோதிர்லிங்க கோவில்கள் சென்று வர வேண்டும் எனும் உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. அழகிய படங்கள் தொடர்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. போனதடவை போன போது கூட்டம் என்றால் ஏதாவ்து விழா சமயமா?
  இப்போது கூட்டம் இல்லையென்றால் எந்தமாதம் கூட்டம் இல்லாமல் இருக்கும் போன்ற விவரங்கள் கிடைத்தால் தரிசனம் செய்ய போகும் அன்பர்களுக்கு வசதியாக இருக்கும்.
  நான் ஒரு முறை காசிக்கு ஆடி மாதம் திங்கள் கிழமை போய் விட்டேன் பயங்க்கர கூட்டம், சாமி தரிசனம் மிகவும் கஷ்டமாய் போய் விட்டது. ஆடி மாதம் திங்கள் கிழமை அம்மன் தாய் வீடு செல்லும் விழாவாம், ஊரே விழக்கோலம் கொண்டு இருந்தது.

  படங்கள் எல்லாம் மிக அழகு.

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலும் எல்லா நாட்களிலுமே இங்கே கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதனால் கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்யக் கிடைப்பது உங்கள் அதிர்ஷ்டம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 11. நேரில் ரசிப்பதை விட புகைப்படங்களில் அதிகம் ரசிக்க முடிகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 12. அந்த ஜிப்பாவை மாத்துங்க சகோ. பார்க்க வடநாட்டாவர் போலவே இருக்கீங்க.

  படம்லாம் பளிச். சோம்நாத் நாயகன் எப்ப என்னை கூப்பிடுவார்ன்னு பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. அந்த ஜிப்பா ஒரு நாள் மட்டுமே போட்டிருந்தேன் - அந்த ஒரு நாள் பயணித்த போது எடுத்த கட்டுரைகள் அனைத்திலும் அதே உடையுடன் தான் படம் வரும்! வேறு வழியில்லை - படம் போடாமல் விட்டுவிடுகிறேன் - பார்க்க பயமாக இருந்தால்.... :)

   சோம்நாத் விரைவில் செல்லும் வாய்ப்பு கிடைக்கட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 13. //குறிப்பாக திருப்பதி போன்ற கோவில்களில் பக்தர்களை இழுத்து வெளியே வீசி விடுகிறார்கள். // நாங்க போனது மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன சேவை என்றாலும் பொதுவாக இப்போதெல்லாம் தள்ளுவதில்லை என்றே சொல்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இப்போதெல்லாம் தள்ளுவதில்லை.... இருக்கலாம். நான் திருப்பதி சென்று இருபத்தி எட்டு வருடங்களாகிவிட்டன. 1989-90ல் அப்பாவுடன் சென்றது தான் கடைசி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 14. சோம்நாத், துவாரகாவெல்லாம் நினைச்சப்போப் போய்ப் பார்த்தாச்சு என்றாலும் மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆவலைத் தூண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் - உண்மை. சில இடங்கள் அப்படித்தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....