எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, April 14, 2018

தண்ணீர் தேசம் – வைரமுத்து – ப்ரொஜெக்ட் மதுரைகடல் – பார்க்கப் பார்க்கத் திகட்டாத ஒரு விஷயம் – கடல்! அலுப்பு சலிப்பில்லாமல் தொடர்ந்து கரையைத் தொடும் அலைகள்! எத்தனை முறை தோற்றாலும், மீண்டும் மீண்டும் முயற்சியைத் தொடர வேண்டும் என அறிவுறுத்தும் அலைகள்! கடலும் அலைகளும் மிகவும் பிடித்த விஷயம். எத்தனை நேரம் வேண்டுமானாலும் இந்த அலைகளையும் கடலையும் பார்த்தபடியே – அதுவும் தனிமையில் – இருக்க எனக்குப் பிடிக்கும். கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, மஹாபலிபுரம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, தியு, விசாகப்பட்டினம், குஜராத், ஒடிசா என ஊர் ஊராக, மாநிலம் மாநிலமாகச் சென்று கடலைப் பார்த்திருந்தாலும், ஏனோ அலுக்காத ஒரு விஷயம் என்றால் அது கடல் – இரண்டாவது மலைகள்….. 
 

ஆனால் இந்தக் கடல் தான் தனக்குள் எத்தனை விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறது. ஆழிப் பெருங்கடல்! கடல் கொந்தளித்தால் – சுனாமி தான் – அந்தக் குணத்தினையும் மனிதர்களுக்குக் காண்பித்து ஒரு ஆட்டம் ஆடிய கடலை மறக்க முடியுமா…. அப்படியே கடலில் ஒரு பயணம் – நீண்ட பயணம் சென்று வர ஆசை உண்டு. சின்னச் சின்னதாய் கப்பல்களில் வலம் வந்திருந்தாலும், நீண்ட பயணம் செல்லும் ஆசையுண்டு - பார்க்கலாம் எப்போது அப்படியான வாய்ப்பு கிடைக்கிறது என! இப்போது கடலை மய்யமாகக் [கமலின் மய்யம் அல்ல!] கொண்ட ஒரு புத்தக வாசிப்பு பற்றிப் பார்க்கலாம்!

சமீபத்தில் மடிக்கணினியில் பிரச்சனை ஏற்பட்டபோது, இரண்டு வாரங்கள் திறன்பேசி மூலம் தான் இணைய உலா – கொஞ்சம் மட்டுப்படுத்தப்பட்ட இணைய உலா! புத்தகங்கள் சில படித்தேன் – இணைய வழி மின்னூலாக/PDF கோப்புகளாகவும் சில புத்தகங்களை தரவிறக்கம் செய்து படிக்க முடிந்தது. அப்படி தரவிறக்கம் செய்த ஒரு புத்தகம் – வைரமுத்து அவர்களின் தண்ணீர் தேசம் – Project Madurai தளத்திலிருந்து – இந்தத் தளத்தில் நிறைய புத்தகங்கள் உண்டு. சில வருடங்களாகவே இந்தப் பக்கத்தில் இருக்கும் சில புத்தகங்களை தரவிறக்கம் செய்து வாசித்ததுண்டு என்றாலும், நடுவில் இங்கே செல்ல முடியவில்லை. இப்போது மீண்டும் ஒரு முறை!

தண்ணீர் தேசம் – விகடனில் வெளி வந்த போதே சில பகுதிகளைப் படித்திருந்தாலும், தொடர்ந்து முழுமையாக படிக்க இயலவில்லை. ஒரு முறை நூலகத்தில் எடுத்துப் படித்தாலும் அப்படிப் படித்தது பல வருடங்களுக்கு முன்னர்! அதனால் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் எனத் தோன்றியதால் இப்போது தரவிறக்கம் செய்து படித்தேன். இந்த நூலுக்காக கடலுக்குள் சென்று சில நாட்கள் தங்கி இருந்ததாகவும், பல புத்தகங்களைப் படித்து அறிவியல் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டதாகவும் தனது நன்றியுரையில் குறிப்பிட்டு இருப்பார். நிறைய குறிப்புகளும், தகவல்களும் கவிதை நாயகன் கலைவண்ணன் மூலம் சொல்லி இருப்பார்!

காதல், கடல் மீதான மோகம், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் போராட்டங்கள், அவர்களது உழைப்பு, கடலைக் காதலிக்கும் நாயகன், கடல் என்றாலே பயப்படும் நாயகி, மீன் பிடிக்கப் போகும் விசைப்படகில் பிரச்சனை வர பத்து நாட்களாக நடுக்கடலில் மாட்டிக்கொள்ளும் மீனவர்களும், கதையின் நாயகனும் நாயகியும், நடுக்கடலில் உண்ண உணவு, குடிக்கத் தண்ணீர் என எதுவுமே இல்லாமல் மாட்டிக் கொண்டு கழித்த சில நாட்கள் என விறுவிறுப்பாகச் செல்லும் கவிதை நடையிலான கதை. முதலிலேயே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும்போது ஒரு விறுவிறுப்பு இருக்கத்தான் செய்தது. நிறைய வரிகளை இங்கே எடுத்துக் காட்டலாம் என்றாலும், எனக்குப் பிடித்தவற்றில் சில வரிகள் மட்டும் இங்கே…..

தண்ணீர் பயம் தவிர்.
சொட்டச் சொட்ட நனை.
கிட்டத்தட்ட குளி.
நீரின் பெருமை நிறையப்பேர்
அறியவில்லை. காதலி பெருமை
பிரிவில். மனைவி பெருமை
மறைவில். தண்ணீரின் பெருமை
பஞ்சத்தில். அல்லது
வெள்ளத்தில்.

பணம் ஒரு விசித்திரமான
மாயமான். அது தன்னைத்
துரத்துபவனுக்குக்
குட்டி போட்டுவிட்டு
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
குட்டிகளில் திருப்தியடையாத
மனிதன் தாய்மானைப் பிடிக்கும்
வேட்டையில் தவிக்கத் தவிக்க
ஓடிச் செத்துப் போகிறான்.

மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்
இருந்தும் மிச்சமுள்ள பூமி,
தாகத்தால் தவிக்கிறதே….
அதைப்போல –
அமிர்தப் பாத்திரமாய் நீ
அருகிருந்தும் தாகப்பட்ட மனசு
தவியாய்த் தவிக்கிறதே….

கண்ணுக்கெட்டிய மட்டும்
கடலோ கடல்.
இது வியப்பின் விசாலம்.
பூமாதேவியின் திரவச் சேலை.
ஏ தமிழா.
உன் புலமைகண்டு
புல்லரிக்கிறேன்.
இதன் பரப்பை வியந்தாய்.
பரவை என்றாய். ஆழம்
நுழைந்தாய். ஆழி என்றாய்.
ஆற்று நீர், ஊற்று நீர் –
மழைநீர் மூன்றால் ஆனதென்று
முந்நீர் என்றாய்…

வாழ்நாளில் 66,000 லிட்டர்
தண்ணீர் குடித்தான்.
ஆயுளில் மூன்றில் ஒருபங்கு
தூங்கினான்.
நான்குகோடி முறை
இமைத்தான்.
நாலரை லட்சம் டன்
ரத்தத்தை இதயத்தால்
இறைக்க வைத்தான்.
35 ஆயிரம் கிலோ உணவு –
அதாவது எடையில் இந்திய
யானைகள் ஏழு தின்றான்.
மரித்துப் போனான்.
இதற்குத்தானா மனிதப் பிறவி?

நிலாவின் வட்டமுகத்தை – வளைந்த கொடியின்
வளைவு நெளிவுகளை – புல்லின் மெல்லிய
அதிர்வுகளை – நாணலின் மென்மையை –
பூக்களின் மலர்ச்சியை – மானின் பார்வையை –
உதயசூரியனின் உற்சாகத்தை – மேகத்தின்
கண்ணீரை – காற்றின் அசைவை – முயலின்
அச்சத்தை – மயிலின் கர்வத்தை – தேனின்
இனிமையை – புலியின் கொடூரத்தை –
நெருப்பின் வெம்மையை – பனியின்
தன்மையை – குயிலின் கூவலை – கொக்கின்
வஞ்சகத்தை – கிளியின் இதயத்தை –
சக்கரவாகத்தின் கற்பை ஒட்டுமொத்தமாய்ச்
சேர்த்துப் பெண் படைத்தானாம் பிரம்மன்.

இப்படி நிறைய எடுத்துக் காட்டலாம்! மேலே சொன்ன ப்ரொஜெக்ட் மதுரை தளத்தில் இருக்கும் PDF கோப்பில் 231 பக்கங்கள். ஒரே நாளில் படித்து முடித்தேன் என்றாலும், படித்த நாள் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு கவிதை வரிகள் மனதில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தன.  ஒரே ஒரு விஷயம் – இந்தப் புத்தகத்தில் நிறைய பிழைகள் – குறில் நெடில் பிழைகள். ஆரம்ப காலத்தில் தட்டச்சு செய்ததாலோ என்னமோ இவற்றைச் சரியாக பிழை திருத்தம் செய்யவில்லை என்று தோன்றுகிறது. பிழைகள் இருந்தாலும், ஒரு நல்ல புத்தகத்தினைப் படித்த திருப்தி எனக்குள்!

நான் ரசித்த சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. மீண்டும் வேறு ஒரு புத்தக வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

28 comments:

 1. குட்மார்னிங் வெங்கட். பிடிஎப் வடிவத்தில் புத்தகம் படிக்கும் பொறுமை எனக்கு இருந்ததில்லை. நிறைய புத்தகங்கள் அப்படி சேமிப்பில் வைத்திருந்தாலும்!

  ReplyDelete
  Replies
  1. முன்பகல் வணக்கம்! :)

   பிடிஎஃப் வடிவத்தில் படிப்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனாலும் இப்போதெல்லாம் இந்த வடிவத்தில் தான் படிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. வைரமுத்துவின் வரிகள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். வசீகர வார்த்தைகளின் சொந்தக்காரர். காதல் ஓவியம் உட்பட இவரின் நிறைய நிறைய பாடல்களின் வரிகள் மனதில் இருந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் இவர் சர்ச்சையில் மாட்டிக்கொண்டாலும் ரசிக்கத்தக்க புலமை கொண்டவர்.

  ReplyDelete
  Replies
  1. நிறைய பாடல்கள் சிறப்பாகவே இருக்கும்.

   சர்ச்சைகள் - என்ன சொல்ல.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. வியப்பின் விசாலம், பூமாதேவியின் திரவச்சேலை..

  இதிலும் வியக்க வைக்கிறார். ஆனால் அவர் கவிதைகளை ரசிக்கும் அளவு அவர் கதைகளை என்னால் ரசிக்க முடியவில்லை. இடையில் வரும் இது போன்ற வார்த்தை ஜாலங்களை ரசிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. கதைகள் படித்ததில்லை. சில கவிதைப் புத்தகங்கள் வாசித்ததுண்டு.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. நல்ல மதிப்பீடு. இதுவரை வாசித்ததில்லை. வாசிப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்தா வாசியுங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. நல்ல விமர்சனம்; நூலை படிக்க வேண்டும் என்ற உணர்வைத் தந்தது. மேற்கோள் வரிகளும் அருமை. மேலே நண்பர் ஶ்ரீராம் சொன்னதைப் போல "பிடிஎப் வடிவத்தில் புத்தகம் படிக்கும் பொறுமை" எனக்கும் இல்லை. புத்தகமாக வாங்கித்தான் படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
  2. பி.டி.எஃப் வடிவத்தில் படிப்பதில் சில சிரமங்கள் உண்டுதான்....

   தற்போது புத்தகங்கள் வாங்குவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன் - பராமரிப்பில் சில சிரமங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
  3. தங்களது வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 7. வைரமுத்துவின் கதைகள் கவிதைகள்பலவும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் முன்பெல்லாம் ஆவியில் படித்ததுண்டு இப்போதுஇல்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 8. வைரமுத்துவைப் படிக்கும் அளவுக்குப் பொறுமை எல்லாம் இல்லை! மற்றபடி உங்கள் விமரிசனம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. பொறுமை இல்லை! ஹாஹா.... சரி தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 9. துளசி: அருமையான புத்தகம் என்று தோன்றுகிறது. உங்கல் விமர்சனம் சிறப்பாக இருக்கிறது. எடுத்துக் காட்டிய வரிகள் அருமை. வைரமுத்துவின் வரிகளை சினிமாப்பாடல்களில் ரசித்ததுண்டு. உங்கள் கருத்துகளையும் ரசித்தேன் ஜி.

  கீதா: கடலும் அலைகளும் மிகவும் பிடித்த விஷயம். எத்தனை நேரம் வேண்டுமானாலும் இந்த அலைகளையும் கடலையும் பார்த்தபடியே – அதுவும் தனிமையில் – இருக்க எனக்குப் பிடிக்கும். கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, மஹாபலிபுரம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, தியு, விசாகப்பட்டினம், குஜராத், ஒடிசா என ஊர் ஊராக, மாநிலம் மாநிலமாகச் சென்று கடலைப் பார்த்திருந்தாலும், ஏனோ அலுக்காத ஒரு விஷயம் என்றால் அது கடல் – இரண்டாவது மலைகள்….. // ஆஹா ஜி நானும்....இரண்டுமே போட்டிப் போட்டுக் கொண்டு ரசிக்க வைப்பவை..

  நானும் கடல் பயணம் செய்திருதாலும் அது மிகச் சிறியது அதுவும் சிறியவயதில் அப்புறம் திருவனந்தபுரத்தில் இருந்த போது கோவளம் பீச்சில்....மீனவர்கள் செல்லும் படகில் சென்று அமைதியான தண்ணீரின் அடியில் இருக்கும் சிவப்பு பவளப்பாறைகளையும் கடல்பாசிகளையும கடலின் அடியையும் கண்டதுண்டு. படகில் செல்லுவதுரொம்ப த்ரில்லிங்க். படகில் தண்ணீர் ஏறும் படகு அப்படியும் இப்படியும் சரியும்....அலைகளுக்கு ஏற்ப ஏறி இறங்கும்..என்றாலும் நானும் மகனும் ரொம்ப ரசித்தோம்..

  என்றாலும் நெடுந்தூரப் பயணம் செல்ல ஆசை உண்டு...

  புத்தகம் பற்றிச் சொன்னமைக்கு மிக்க நன்றி. நானும் கணினியில்தான் வாசிக்கிறேன் பிடிக்கவில்லை என்றாலும்...புத்தகம் வாங்குவதில்லை...இந்தத் தளத்தையும் குறித்துக் கொண்டுவிட்டேன். தளஅறிமுகத்திற்கும் மிக்க நன்றி ஜி. சென்று வாசிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. கடலில் நெடுந்தூரப் பயணம் - நிறைவேறாத ஆசை.... பார்க்கலாம் எப்போது நிறைவேறுகிறது என.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. மேலே உள்ள கடல் படம் diu தானே முன்பு நீங்கள் இதே கரையின் வேறொரு காட்சி பகிர்ந்த நினைவு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. முதலில் கொடுத்த படம் தியு படம் தான். வருகின்ற சில பதிவுகளிலும் இப்படம் வரலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 11. தலைப்புப் பார்த்ததும் ஓடோடி வந்தேன்.. என் மொபைலில் இறக்கி வைத்திருந்தேன் தண்ணீர் தேசம்... அடிக்கடி படிச்சுப் பார்ப்பதுண்டு, இப்போ மொபைலில் இல்லை. அழகிய கவிதை. வைரமுத்து அங்கிள் வாய் திறந்தாலே.. நான் வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பேன்:)..

  ReplyDelete
  Replies
  1. வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பீர்களா? மகிழ்ச்சி. அவருடைய சில கவிதைப் புத்தகங்கள் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரது துணைவியார் பொன்மணி வைரமுத்து அவர்களின் கவிதைகளும் நன்றாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 12. உங்கள் விமரிசனம் மிக அருமை. மதுரை ப்ராஜெக்டில்\
  சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன். கொஞ்சம் சிரமம் தான். ஆனாலும் நான் கீதா கட்சி .கவிதைகளைப் படிப்பது சிரமமே. நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 13. கவிதைப் பகிர்வு அருமை.
  கடல் பயணம் இனிமையாக இருக்கும்.
  கொஞ்ச துர பயணமே மகிழ்வைத்தரும்.
  நீண்ட பயணம் என்றால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....