எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 3, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 14

ஜூலை மாதம் [தலை நகரிலிருந்துபகுதி 13] 30-ஆம் தேதி அன்று தொடரும்…. போட்ட பிறகு தலை நகரிலிருந்து தொடரை தொடரவேயில்லை! தொடர்ந்தால் தானே தொடர். இதோ தொடரின் அடுத்த பகுதி.
பார்க்க வேண்டிய இடம்: ஜந்தர்-மந்தர் கிரகங்களின் நிலையைத் துல்லியமாக அறிந்து கொள்ள அமைக்கப்பட்ட யந்திரங்கள் உள்ள ஒரு இடம் இது. மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் அவர்களால் அமைக்கப்பட்ட ஜந்தர் மந்தர், தில்லியைத் தவிர ஜெய்ப்பூர், மதுரா, உஜ்ஜைன், வாரணாசி ஆகிய இடங்களில் உள்ளது. தில்லியில் பிரதான சாலைகளில் ஒன்றான பாராளுமன்ற சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜந்தர் மந்தரில் சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களின் போக்கையும், நேரத்தையும் கண்டுபிடிக்க உதவும் யந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முக்கிய மூன்று யந்திரங்கள்சாம்ராட் யந்த்ரா [90 அடி உயரம்], ஜெயப்ரகாஷ் யந்த்ரா மற்றும் மிஷ்ர யந்த்ரா ஆகியவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்தியர்கள் அறிவியல் ரீதியாய் முன்னேற்றம் கண்டிருந்தனர் என்பதற்கு இந்த யந்திரங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
இங்குள்ள இந்த யந்த்ரங்கள் பிரபலமோ இல்லையோ தில்லியில் இது அமைந்திருக்கும் இடம் பல விதங்களில் பிரபலம். பாராளுமன்றம் நடக்கும்போதெல்லாம் இங்கிருந்துதான் பல விதமான போராட்டங்களை தொடங்குகின்றனர். ஜந்தர்-மந்தர் உள்ளே செல்ல ஐந்து ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றனர். தற்போது ஜந்தர்-மந்தர் உள்ளே உள்ள காலியிடத்தில் சூரிய ஒளியைச் சேமிக்கும் பலகைகள் அமைத்து அதில் சேகரிக்கும் சக்தியை வைத்து மாலை நேரங்களில் அந்த பகுதியை ஒளியூட்டுகிறார்கள். இது ஒரு நல்ல ஏற்பாடு.
புகைப்படம் தில்லி நண்பர் திரு மோகன்குமார் கருணாகரன் அவர்களால் எடுக்கப்பட்டது. கூடுதல் தகவல்: பிட் புகைப்பட வலைப்பூவினால் குழுப்போட்டியில் இரண்டாம் பரிசு தரப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.


சாப்பிட வாங்க: குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. அங்கங்கே தோலுடன் கூடிய வேர்க்கடலை, வறுத்த வேர்க்கடலை, வேர்க்கடலை கேக் போன்றவை விற்கும் தள்ளு வண்டி கடைகளும் தென்பட ஆரம்பித்து விடும். இந்த காலத்தில் கிடைக்கும் வேறு சில உணவு வகைகள்கஜக், ரேவ்டி என்று அழைக்கப்படும் எள்ளு மிட்டாய். நம் ஊர் போல எள்ளுருண்டையாய் இல்லாமல், தட்டையாய்த் தட்டி விற்பார்கள். அங்கங்கே வெல்லமும் விற்பார்கள். குளிருக்கு வெல்லத்தை அப்படியே சாப்பிடுவார்கள்உடலுக்குச் சூடு தரும் என்பதால். மேலும் இந்த சீசனில்தான் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் மசாலா பொடி சேர்த்து சிறிய தொன்னைகளில் விற்பார்கள்.

ஹிந்தி பாடம்: குளிர்காலத்தில் வட இந்தியாவில் நிறைய பழங்கள் கிடைக்கும். ஹிந்தியில் சில பழங்களுக்கான பெயர்களைப் பார்க்கலாமா? ஆப்பிள்சேப்; வாழைப்பழம்கேலா; ஆரஞ்சுசந்த்ரா; திராட்சைஅங்கூர்; பப்பாளிபபிதா; அன்னாசிப் பழம்அன்னாஸ்; மாதுளைஅனார்; சீதாப்பழம் [Custard Apple] – ஷரிஃபா; பேரிச்சைகஜுர்.
இன்னும் வரும்….

31 comments:

 1. இந்த மாதிரி பல விஷயங்களில் நாம் முன்னோடிகள் வெங்கட். அதை சொன்னால் இங்கு இருக்கும் சிலரே ஒத்துக் கொள்ளுவது இல்லை. நல்ல தகவல்கள்.

  ReplyDelete
 2. சீத்தாப்பழத்தை இங்கே 'சீதாஃபல்'ன்னே சொல்லுவோம்.

  ReplyDelete
 3. அமைதிச்சாரல் ,சீத்தாஃபல் ந்னா இங்க தர்பூசணின்னு நினைக்கிறேன்..

  சக்கரவள்ளி கிழங்கு சூபரா இருக்கும்..

  ReplyDelete
 4. டில்லி குளிர் ஆளைக்கொல்லும்.

  ReplyDelete
 5. டெல்லி பார்க்காத எங்களுக்கு இந்த தகவல்கள் டெல்லியை நேரில் பார்க்கும் விதமாக அமைத்துள்ளீர்கள்... படங்களும் அருமை.. பிரிண்ட் எடுத்து வைத்து கொள்கிறேன்..
  மிகவும் உபயோகமாக இருக்கும் ...
  நன்றியும் தொடர வாழ்த்துக்களும்...

  ReplyDelete
 6. ஹிந்தி பாடத்திற்கு நன்றி.

  //பப்பாளி – பபிதா//
  இந்தப் பேர்ல ஒரு நடிகை இருந்தாங்க போலிருக்கே!!! ;-)

  தலை நகரப் பதிவு தலை சிறந்த பதிவு..

  ReplyDelete
 7. மீண்டும் தலைநகர் பகுதி.. சுவாரசியமாய்..

  ReplyDelete
 8. பரங்கிக்காய் தான் இங்க சீதாஃபல்னு சொல்லுவாங்க.

  ReplyDelete
 9. ஆமா .. பூசணிக்காய்ன்னு நினைச்சிக்கிட்ட்டே தர்பூசணின்னு வேற அடிச்சிருக்கேன்..:( குளிரில் கை தான் நடுக்குதுன்னா .. மூளையும் ஃப்ரீஸ் ஆகிடுச்சு போலயே எனக்கு :)))

  ReplyDelete
 10. தங்கள் தளத்திற்கு வந்து விட்டேன் வெங்கட் . பதிவு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வெரி இண்ட்ரெஸ்டிங். ரொம்ப வருஷம் முன்னாடி ஜந்தர்-மந்தர் ஆல் இந்தியா டூர் போனப்ப பார்த்தது.சாப்பிட வாங்க ஐட்டம் எல்லாம் நமக்கு பிடித்ததாக இருக்கே.நல்ல பகிர்வு.

  ReplyDelete
 12. Brought back memories of our New Delhi trip. Thank you.

  ReplyDelete
 13. @@ LK: உண்மைதான் கார்த்திக். பலருக்கு இது புரிவதில்லை. கருத்திற்கு நன்றி.

  @@ அமைதிச்சாரல்: இங்கே சீதாஃபல் என்று சொன்னால் பரங்கிக்காயைக் கொடுத்து விடுவார்கள்.

  @@ முத்துலெட்சுமி: வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி.

  @@ Dr. P Kandaswamy, PhD: இப்போதெல்லாம் அந்த அளவு குளிர் இல்லை அய்யா. சாதாரணமாகத் தான் இருக்கிறது – கொல்லும் அளவுக்கு இல்லை : )

  @@ பத்மநாபன்: தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

  @@ RVS: நன்றி. நடிகை பேரெல்லாம் நமக்கு சரியா நியாபகம் இருக்குமே : )))

  @@ ரிஷபன்: மிக்க நன்றி.

  @@ தேவராஜ் விட்டலன்: மிக்க நன்றி விட்டலன். உங்கள் கணபதி வாத்தியார் பதிவு படித்தேன். நல்ல பகிர்வு.

  @@ ஆசியா ஓமர்: தலைநகரிலிருந்து தொடரில் இது 14-வது பகுதி. முதல் 13 பகுதிகள் நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்களேன்.

  @@ சித்ரா: மிக்க நன்றி. நாம் சென்ற இடங்களைப் பற்றி பிறகு படிக்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது அல்லவா?

  ReplyDelete
 14. நல்ல பல தகவல்கள் வெங்கட்.தில்லிக்கு நான் சென்ற போதெல்லாம், "உன்னை விழுங்கி விடுகிறேன் பார்"ன்னு ஊரே என்னை உலுக்குற மாதிரி இருக்கும்.
  ஒரு முறை பிளாட்பாரத்தில் பழைய புத்தகக் கடையில் அற்புதமான புத்தகங்களை ரொம்ப மலிவாய் வாங்கினேன்..மீண்டும் சந்திப்போம்..

  ReplyDelete
 15. பதினான்காவது பகுதியா...?! விரைவில் அனைத்தையும் படித்துவிடுகிறேன். தகவல்கள் மிக அருமை. ஹிந்தி பாடம் உட்பட... நண்பர் மோகன்குமாருக்கு வாழ்த்துகள். நம்ம பக்கம் பரங்கிக் காயும், பூசணிக் காயும் வேறு வேறு ஆயிற்றே... அங்கு இரண்டுக்கும் ஒரே பெயரா ?

  ReplyDelete
 16. @@ மோகன்ஜி: வருகைக்கு மிக்க நன்றி. தில்லியில் ஞாயிற்றுக் கிழமைகளில், அசஃப் அலி ரோட் என்ற ஒரு தெரு முழுக்க பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. பல நல்ல ஆங்கில மற்றும் ஹிந்தி புத்தகங்கள் கிடைக்கும்.

  @@ நிலாமகள்: நன்றி சகோ. பரங்கிக்காய்க்கும் பூசணிக்காய்க்கும் வேறு பெயர் தான். ஹிந்தியில் ”பேட்டா” [Peta] என்று பூசணியையும் சீதாஃபல் என்று பரங்கியையும் அழைக்கின்றனர்.

  ReplyDelete
 17. நம்ம பேரில் டில்லியில் ஒருத்தர் இருக்காரா? ரைட்டு

  ReplyDelete
 18. @@ மோகன் குமார்: வருகைக்கு நன்றி மோகன்.

  ReplyDelete
 19. அசத்தலானப் பதிவு நண்பரே ஒரு ரியல் சுற்றுலா சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது தங்களின் பதிவு . புகைப்படங்களும் தகுந்த குறிப்புகளும் ரசிக்கவைக்கிறது . தொடரட்டும் தங்களின் பயணம்

  ReplyDelete
 20. சர்க்கரைவள்ளி கிழங்கு மசால் போட்டு சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

  அடுத்தமுறை டெல்லி வரும் போது ஜந்தர்-மந்தர் பார்க்க வேண்டும்.

  ஜெய்பூர் ஜந்தர்-மந்தர் தான் பார்த்து இருக்கிறேன்.

  ReplyDelete
 21. @@ பனித்துளி சங்கர்: மிக்க நன்றி நண்பரே.

  @@ கோமதி அரசு: வாங்கம்மா, தில்லி வரும்போது ஜந்தர்-மந்தரையும் பாருங்க. வரவுக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றி.

  ReplyDelete
 22. எல்லாமே சுவாரஸ்யமான தகவல்கள்! தில்லியைப் பற்றிய த‌கவல்கள் தெரிந்து கொள்ள‌ இனி உங்களின் வலப்பூவிற்கு வந்தால் போதுமென நினைக்கிறேன்! ஜந்தர்‍ மந்தர் புகைப்படம் மிக அழகு!

  ReplyDelete
 23. @@ மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. வருகிற பிப்ரவரியில் டில்லி வரும் உத்தேசம் உள்ளது... மிகவும் ப்ரயோஜனமான பதிவு. நன்றி...

  ReplyDelete
 25. @@ லக்ஷ்மிநாராயணன்: வருகைக்கு நன்றி. தில்லிக்கு வருகிறீர்களா? நல்லது. முடிந்தால் சந்திப்போம்…

  ReplyDelete
 26. ஜந்தர் மந்தர்.. அருமையான இடம். நம்ம சமாச்சாரம் அப்படிங்கிறதால எனக்கு பிடிச்ச இடமும் கூட...

  ReplyDelete
 27. @@ ஸ்வாமி ஓம்கார்: தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நல்ல இடம். ஆனால் இப்போது அதற்கு கூட்டமே வருவதில்லை. :)

  ReplyDelete
 28. ரொம்ப நாளா வாசிக்க நினைத்தும் தட்டிக் கொண்டே இருந்த எழுத்து ஒங்களோடதும். இன்னிக்கு வந்துட்டேன். இனிமேல் தொடர்வேன் வெங்கட்நாகராஜ்.

  போன வருஷம் நான் டெல்லி வர்றதுக்கு முன்னாடி நீங்க எழுதியிருக்கணும். அல்லது இதப் படிச்சப்பறம் இப்போ வெரைக்கிற குளிர்ல வந்துருக்கணும்.

  ம்.எல்லாம் நாம நினச்ச படியா நடக்குது.

  ReplyDelete
 29. @@ சுந்தர்ஜி: மிக்க நன்றி. நிறைய வலைப்பூக்களில் தங்களின் கருத்துரைகள் படிக்கும்போது எனக்கும் தோன்றும், உங்களது வலைப்பக்கத்திற்கும் வரவேண்டும் என. ஏனோ இதுவரை வரவில்லை. இன்று பார்க்கிறேன். தங்களது முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 30. 14 டிகிரியாமே அது கூடட்டும் அங்கே வரும் திட்டம் இருக்கு. அப்போ உங்க கட்டுரைகள் உதவியாய் இருக்கும்.

  ReplyDelete
 31. @@ புதுகைத் தென்றல்: ஃபிப்ரவரி - மார்ச் மாதங்களும், செப்டம்பர்-நவம்பர் மாதங்களுக் தில்லி வர சிறந்த சமயம். வாருங்கள் முடிந்தால் மற்ற தில்லி பதிவர் நண்பர்களுடன் சந்திக்கலாம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....